TNPSC Thervupettagam

ஜகஜீவன் ராமை உருவாக்கிய பெரியார்

June 28 , 2023 537 days 429 0
  • பாட்னாவில் 1925-ஆம் ஆண்டு நடைபெற்ற மகாசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய பண்டித மதன் மோகன் மாளவியாவிடம் ஒருவர், தன்னோடு அழைத்து வந்திருந்த சிறுவனைக் காட்டி "இவன் மெட்ரிகுலேஷன் முடித்து விட்டான். மேலே படிக்க விரும்புகிறான். வசதி இல்லை, நீங்கள்தான் உதவவேண்டும்' என்று கூறினார். மாளவியா அவரிடம் "நாளைக்கு இவனை அழைத்து வாருங்கள். என் மகன் கோவிந்தோடு சேர்ந்து படிக்கட்டும்' என்றார்.
  • மறுநாள் அவர் சிறுவனோடு வந்தார். மாளவியா, அந்தச் சிறுவனை காசி இந்து பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். அந்தச் சிறுவன், உயர்கல்வி முடித்து பின்னாளில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராகி மத்திய அமைச்சராகி, நிறைவாக இந்திய நாட்டின் துணை பிரதமராகவும் உயர்ந்தார். அவர்தான் பாபு ஜகஜீவன் ராம்.
  • துரோணாச்சாரியார் உதித்த பாரத்வாஜ கோத்திரத்தில் தோன்றிய அலகாபாத் பிராமணர் பண்டித மதன் மோகன் மாளவியா என்னும் பெரியார்தான் பாபுவை உயர்த்திய பெரியார்.
  • மாளவியா, பள்ளிப் பருவத்திலேயே சம்ஸ்கிருதம், ஹிந்தி, உருது, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றிருந்தார். தன் தந்தையிடம் வேதங்களைக் கற்றுணர்ந்தார். சுலோகங்களை மனனம் செய்து பழகினார். இவரது குடும்பம் பெரியது; வசிப்பிடமோ மிகச்சிறியது.
  • படிப்பதற்கு இட வசதி இல்லாமையால் அருகில் உள்ள லாலா சோகன்லால் தோட்டத்தில் காலை மாலை வேளைகளில் படிப்பதையும் யோகாசனம் செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டார். கல்லூரி நாள்களில் மனனப் போட்டி, பேச்சுப் போட்டி, நாடகத்தில் நடிப்பது போன்றவற்றில் பங்குபெற்று எல்லாவற்றிலும் முதல் பரிசு வென்றார்.
  • கல்லூரிப் படிப்பு முடிந்ததும் 1877-இல் "ஹிந்தி உத்ரின் சபா' என்ற அமைப்பைத் தொடங்கினார்; 1880-இல் "ஹிந்து சமாஜ்' அமைப்பையும் நிறுவினார்; 1881-இல் "சுதேசி' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். இலக்கிய விவாத அரங்குகளில் உரையாற்றலானார். "பிரதீப்' என்ற பத்திரிகையில் 1880 முதல் 1884 வரை கட்டுரைகள் எழுதினார்.
  • இவர் 22 வயதில் ஆற்றலாளராக விளங்குவதைக் கண்ட இவரது முன்னாள் ஆசிரியர் பண்டிட் ஆதித்யராம் பட்டாசார்யா இவரை மேலும் உயர்த்த எண்ணி 1886-இல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டாவது மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார். அம்மாநாட்டில் எந்த வித முன்தயாரிப்பும் இன்றி இவர் பேச பணிக்கப்பட்டார். இவரது பொருளமைந்த உரையைக் கேட்ட தாதாபாய் நெளரோஜி "பாரத மாதாவின் சொற்கள் இந்த இளைஞர் வாயில் எதிரொலிப்பதைக் காண்கிறேன்' என்றார். காங்கிரஸின் நிறுவனர் ஏ.ஓ. ஹ்யூம் இவரின் உரையைக் கேட்டு மகிழ்ந்தார்.
  • அடுத்த ஆண்டு (1887) சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் இவரது எழுச்சி மிகு உரையைக் கேட்டு ஏ.ஓ. ஹ்யூம் "மொத்த காங்கிரஸின் குரலாக இந்த ஒருவரின் தனிப்பேச்சு எதிரிகளின் விமர்சனங்களைப் புறந்தள்ளும்' என்று பாராட்டினார். இப்படி தொடங்கிய காங்கிரஸுடனான மாளவியாவின் இணைப்பு அவர் இறக்கும் வரை (60 ஆண்டுகள்) நீடித்தது.
  • மாளவியாவின் ஆளுமைப் பண்பால், அவர் நான்கு முறை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்தியர்கள் முன்னைய நாள் விழுமியங்களை மீட்டெடுக்கவும், இந்நாளின் விஞ்ஞான கோட்பாடுகளைக் கற்றுணரவுமான ஒரு கல்வியை நடைமுறைப்படுத்த விரும்பினார்.
  • "துயரம், சுரண்டல், அடிமைத்தனம், அநீதி, சமூக ஏற்றத்தாழ்வு, சக மனித துரோகம், ஜாதி மத மோதல் போன்ற சாபக்கேடுகளில் இருந்து மக்கள் முழுமையாக விடுபட வேண்டும். இந்தியா பன்முகத்தன்மையுடையது. இந்நாடு ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்ஸிகள் என அனைவர்க்கும் சொந்தமானது. எந்த ஒரு பிரிவினரும் மற்றொரு பிரிவினரை அடக்கும் போக்கு கூடாது.
  • இப்படி நாம் ஒற்றுமையாக நாட்டின் விடுதலைக்காக உழைப்போமெனில் 1930-இல் நாடு சுதந்திரம் பெற்று விடும்' என்று ஆருடம் கணித்தார்.
  • 1918-இல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை முன்னெடுத்தார். பெண்கள் துணிந்து சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் பங்கெடுக்க வேண்டும். அதுநாள்வரை நாடு முன்னேற வழி இல்லை. பெண்கள் கல்வி கற்க எல்லா வசதிகளையும் செய்தாக வேண்டும். பெண்கள், குடும்பத்தின், நாட்டின் மையப்புள்ளியாவர். இதற்காகவே காசி இந்து பல்கலைக்கழகத்தில் பெண்களுக்காக ஒரு கல்லூரியை உருவாக்கினார்.
  • அந்நாளில் அரசுத் துறைகளில் பணி கிடைக்க 1877-ஆம் ஆண்டு அரசாணைப்படி, உருது அல்லது பெர்சிய மொழி தெரிந்திருக்க வேண்டும். இதனால் ஹிந்தி பேசும் பெரும்பான்மையான மக்கள் வேலைவாய்ப்பின்றித் தவித்தனர். 1897-இல் வழக்குரைஞரான மாளவியா, நூறு பக்க அறிக்கையொன்றைத் தயாரித்து தான் உடல்நலம் இல்லாத நிலையில் கூட இரண்டு மணிநேரம் நீதிமன்றத்தில் நின்று வழக்கு விவரத்தை எடுத்துரைத்தார். 1900-இல் உருது, பெர்சிய மொழிகளோடு தேவநாகரி லிபியையும் பயன்படுத்தி பணியில் சேரலாம் என்ற தீர்ப்பினைப் பெற்றார்.
  • பட்டியலின மக்களின் நலனுக்காக அளவற்ற உதவிகளை மனமுவந்து நல்கினார். இது குறித்து கிரிதர் லால் குறிப்பிடும்போது, "நான் மத்திய அரசு அமைச்சர், தர்மபிரகாஷ் நாடாளுமன்ற உறுப்பினர். எங்களைப் போன்ற நூற்றுக்கணக்கான ஹரிஜனங்கள் மாளவியாஜி உதவியால்தான் உயர்ந்தோம்' என்று குறிப்பிடுகிறார்.
  • இவர் நடத்தி வந்த "சரஸ்வதி மந்திர்' நிலையத்தில் எந்தவித ஜாதி வேற்றுமையையும் காண முடியாது. ஏழை பணக்காரர் என்ற பாகுபாட்டை ஒரு போதும் கண்டதில்லை. மாளவியாவின் மனோதர்மம் சனாதன தர்மம் வழி கொண்டதாக இருந்தது.
  • பட்டியலின சமூகத்தினர் பலர் கட்டாய மதமாற்றத்தால் துன்பப்பட்டு இருப்பதைக் கண்டு அதனை களைய பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார் மாளவியா. கட்டாய மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை கங்கையில் நீராடச் செய்து வேத மந்திரங்களை சொல்லச் சொல்லி ஹோமம் வளர்த்து அவர்களை வணங்கச் செய்து தாய் மதத்தில் இணைத்தார். இதனால் ஹிந்து மக்களில் சிலர் இவரை அவமானப்படுத்தினார்கள்.
  • 1929-இல் கல்கத்தாவில் கங்கைக் கரையில் பாதிக்கப்பட்டவர்களோடு தானும் நீராடி மந்திரங்களை சொல்லச் சொல்லி சடங்கினை நடத்திக் கொண்டிருந்தபோது, இவர் மீது சேற்றை வாரி வீசினர். யாகத்திற்கான பொருள்களை சேதப்படுத்தினார்கள். ஒருவன் கத்தியொன்றை இவர் மீது வீசினான். ஆனாலும் சற்றும் பொறுமை இழக்காது பணியை தொடர்ந்தார்.
  • 1918-இல் ஹரித்துவாரில் சனாதன தர்மசபை மூலம் 2,000 துப்புரவுத் தொழிலாளர்களுக்குப் புதிய ஆடைகள் வழங்கினார். 1932-இல் மஹா சிவராத்திரியன்று 500 ஹரிஜனங்களுக்கு கங்கைக் கரையில் மந்திர தீட்சையளித்து அவர்களோடு உணவருந்தினார். 1923-இல் காசியில் நடந்த ஹிந்து மகாசபைக் கூட்டத்தில் "ஹரிஜன மக்கள் கல்வி கற்கவும், பொதுக் கிணற்றில் நீர் எடுக்கவும், கோயில்களில் மற்றவர்களோடு சேர்ந்து வழிபாடு செய்யவும் உரிமையுடையவர்கள்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
  • 1938-இல் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவில் சங்கராச்சாரியரோடு விவாதிக்கையில் வேத நூல்களை மேற்கோள் காட்டி ஹிந்து மதத்தில் தீண்டாமை இல்லை என்பதை மாளவியா நிறுவினார். 1932-இல் டாக்டர் அம்பேத்கர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, பம்பாயில் உள்ள வேத பண்டிதர் நாகப்பா சாஸ்திரியை அம்பேத்கருக்கு சம்ஸ்கிருதம் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.
  • மாளவியாவின் புகழ் பெற்ற சாதனையாக, காசி இந்து பல்கலைக்கழகத்தை தோற்றுவித்ததை குறிப்பிடலாம். 1904 அக்டோபரில் முக்கிய பிரமுகர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், "நான் தொடங்க நினைக்கும் பல்கலைக்கழகம் மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில் இருக்கும். இது, வேதம், இதிகாசம், புராணம், அர்த்தசாஸ்திரம், சிற்பம், ஓவியம், இசை, இலக்கியம், ஆயுர்வேதம், வேளாண்மை, பொறியியல், விஞ்ஞானம், சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் போன்றவற்றைக் கற்பிக்கும் கூடமாக இருக்கும்' என்று குறிப்பிட்டு நிதிதிரட்டும் பணியில் இறங்கினார்.
  • ஒரு நாள் துறவி ஒருவர் தந்த ரூ.101-ஐ எடுத்துக்கொண்டு காசியில் உள்ள விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று இறைவன் திருமுன்பு, தனது திட்ட அறிக்கையையும் தான் கொண்டு சென்ற பணத்தையும் வைத்து மனமுருக வேண்டினார். அதுநாள் முதற்கொண்டு தான் செல்லுமிடங்களிலெல்லாம் தான் சந்திக்கும் எல்லாரிடமும் பல்கலைக்கழகம் பற்றியே பேசினார். நைனிடாலில் தங்கியிருந்தபோது இவரிடம் ஒருவர், "உங்களது சொந்த ஊரில் ஒரு சிறிய பள்ளிக்கூடம்கூட கட்டமுடியாத நீங்கள் எப்படி பல்கலைக்கழகம் கட்டுவதைப் பற்றிப் பேசமுடியும்' என்று கேள்வி கேட்டார்.
  • ஆனால் 1939 ஆகஸ்ட் 20-ஆம் நாள் இவர் காசி இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியில் இருந்து ஓய்வுபெறும் நாள் வரை நன்கொடையாக பெற்ற தொகை ரூ. ஒரு கோடியே 55 லட்சம். தருவதாக வாக்களித்தவர்களின் தொகை ரூ.25 லட்சம். இதில் யாசகம் எடுத்து உண்ணும் ஒருவர் தந்த ரூபாய் ஒன்று. 80 வயது மூதாட்டி தந்த ரூபாய் ஒன்று, மெயில் ரன்னர் தந்த இரண்டு அணா, பிரிட்டிஷ் இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கை ஆட்சி செய்த மன்னர்கள் பலரின் நன்கொடை, பம்பாய் வணிகர் இரண்டொருவர் தந்த தொகை எல்லாம் அடங்கும்.
  • 1,360 ஏக்கர் நிலப்பரப்பில் உலகையே வியப்பில் ஆழ்த்தும் பிரம்மாண்டமானதொரு பல்கலைக் கழகம் நூறு ஆண்டுகளைக் கடந்து பல லட்சம் அறிஞர்களை உருவாக்கி புகழ்பெற்று வருவது இவரின் அரிய முயற்சியால்தான். மாதம் ஒரு லட்சம் வருமானம் உள்ள வழக்குரைஞர் தொழிலை விட்டு விட்டு பிறர் நலனுக்காக நிதி கேட்பதால் இவரை காந்தியடிகள் "நோபில் பெகர்' (மரியாதைக்குரிய யாசகர்) என்று குறிப்பிட்டார்.
  • நல்ல மாணவராய், சிறந்த ஆசிரியராய், புகழாய்ந்த மூன்று பத்திரிகைகளின் ஆசிரியராய் விளங்கி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராய் நான்கு முறை பணியாற்றி ஏழை குழந்தை கட்கு தந்தையாய், பெரியாரினும் பெரியராய் வாழ்ந்த இவரை சீர்திருத்தப் பெரியார் என்றல்லாமல் வேறென்ன சொல்லி அழைக்க முடியும்?

நன்றி: தினமணி (28  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories