TNPSC Thervupettagam

ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கட்டும் ஹாங்காங்

September 17 , 2019 1951 days 1122 0
  • ஹாங்காங் நாட்டின் அனைத்து மக்களும் ஓரணியில் திரண்டு, தாய் நிலப்பகுதியான சீனாவின் மறைமுகக் கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து, முழு ஜனநாயக உரிமைகளைக் கோரி மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடிவருகின்றனர்.
  • ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டால் அவர்களைக் கைதுசெய்து சீனாவிடம் ஒப்படைக்கும் சட்ட முன்வடிவு கைவிடப்படுவதாக ஹாங்காங் நகரின் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்த பிறகும் கிளர்ச்சியாளர்கள் ஓய்வதாக இல்லை.

ஒரே நாடு - இரண்டு நிர்வாக அமைப்பு

  • இதுமட்டுமல்லாமல் தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை அனைவருக்கும் வேண்டுமென்று கிளர்ச்சியாளர்கள் கோருகின்றனர். ‘ஒரே நாடு - இரண்டு நிர்வாக அமைப்பு’ என்ற சீனக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர்.
  • முன்பு இருந்ததுபோல் ‘தீவு நாடாக’ இருந்த நிலையே நீடிக்க வேண்டும், அரசியல் உரிமைகள் எந்த வகையிலும் குறைக்கப்படக் கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.
  • கிளர்ச்சிக்காரர்களின் கோரிக்கைகளையும் ஏற்க முடியாமல், தாய் நிலப் பகுதியான சீன ஆட்சியாளர்கள் சொல்லும்படி அடக்குமுறைகளைக் கையாளவும் தெரியாமல் திணறுகிறார் கேரி லாம்.
  • இந்தக் கிளர்ச்சியை ஹாங்காங் அரசு கையாண்ட விதம், இடையில் காவல் துறையினர் மேற்கொண்ட அத்துமீறல்கள் ஆகியவை குறித்து நீதி விசாரணை அவசியம் என்று மேலும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர் போராட்டக்காரர்கள்.
  • ஹாங்காங் இளைஞர்கள் தாங்கள் நடத்தும் ஜனநாயகக் கிளர்ச்சியைத் ‘தண்ணீர் புரட்சி’ என்கின்றனர். இந்தக் கிளர்ச்சிக்கு ‘தலைவர்’ என்று யாரும் கிடையாது. ஆங்காங்கே கும்பலில் இருப்பவர்களிலேயே ஒருவர், அடுத்தது என்ன என்று தீர்மானித்து வழிநடத்துகிறார். எனவே, காவல் துறையால் கிளர்ச்சித் தலைவர்களையும் முன்கூட்டியே திட்டமிட்டுக் கைதுசெய்ய முடிவதில்லை.
  • இதற்கிடையில், ஹாங்காங்கின் வடக்கு முனையில் ஜனநாயக ஆதரவாளர்களுக்கும் சீனாவின் பூஜியான் மாநிலத்திலிருந்து வந்து குடியேறியவர்களுக்கும் கைகலப்பு கைகலப்பு நடந்தது.
  • ஜனநாயக ஆதரவாளர்களைக் கரப்பான்பூச்சிகள் என்று சீனாவிலிருந்து வந்தவர்கள் வசைபாடுவதும் நடந்தேறுகிறது. கிளர்ச்சியாளர்களை இரும்பு நாற்காலிகளாலும் கழிகளாலும் தாக்கியிருக்கிறார்கள்.
  • ஹாங்காங் போலீஸார் தலையிட்டு இரண்டு தரப்பினரையும் பிரித்திருக்கிறார்கள். சீன ஆதரவாளர்கள் கிளர்ச்சிக்காரர்களை மட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் போன்றோரையும் குறிவைத்துத் தாக்குகிறார்கள்.

தனி அந்தஸ்து

  • 2047-ல் ஹாங்காங்குக்கு இப்போதுள்ள தனி அந்தஸ்தும் போய்விடும். பிறகு, அது சீன நாட்டின் அதிகாரபூர்வ பகுதியாகிவிடும். ஹாங்காங்கர்கள் விரும்புகிற வகையில் முழு ஜனநாயக உரிமைகளைத் தருவதற்கு சீனா சம்மதிக்காது. சம்மதித்தால், தைவானும் இதே பாணியில் கிளர்ச்சியில் இறங்கலாம்.
  • பொருளாதாரம், தொழில்நுட்பம், ராணுவ உத்தி ஆகியவற்றில் சீனாவின் ஆதிக்கத்தை உலகில் நிலைநாட்ட அதிபர் ஜி ஜின்பிங் தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
  • இந்நிலையில், ஹாங்காங்கில் அரசு எதிர்ப்புக் கிளர்ச்சி நீடிப்பது சீனாவுக்குப் பின்னடைவையே ஏற்படுத்தும். எனவே, விரைந்து சமரசத் தீர்வு காண்பது சீனா, ஹாங்காங் இரண்டின் எதிர்காலத்துக்கும் நல்லது. ஜனநாயகத்துக்கான இந்தப் போராட்டத்தின் இறுதியில் மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்கட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (17-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories