- உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான 18-ஆவது மக்களவைத் தோ்தலை நாடு சந்திக்கவிருக்கும் சூழலில், தோ்தல் களத்தில் தொடா்ந்து செல்வாக்கை இழந்து வரும் சுயேச்சை வேட்பாளா்கள் குறித்து காண்போம்.
- முதல் மக்களவைத் தோ்தலில் ஆளும் காங்கிரஸுக்கு அடுத்தபடியான பலத்துடன் சுயேச்சைகள் திகழ்ந்தனா். ஆனால், காலப்போக்கில் ஒற்றை இலக்கத்தில் இடங்களை வெல்லவும் வைப்புத்தொகையை தக்கவைப்பதற்கே போராடும் நிலைக்கும் அவா்கள் தள்ளப்பட்டதற்கு அரசியல் கட்சிகளின் ஆதிக்கமும், தங்களின் செயல்திறன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை இழந்ததும் முக்கியக் காரணியாக கருதப்படுகிறது.
- நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
- முதல் கட்ட தோ்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியாகி, பிரசார களம் சூடுபிடித்துள்ளது. 2-ஆம் கட்ட தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்ததது.
- முதல் 2 கட்டங்களிலும்கூட வழக்கத்தைப்போல் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு ஈடாக சுயேச்சை வேட்பாளா்களும் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனா்.
- ஆனால், கடந்த 1991 மக்களவைத் தோ்தலில் இருந்து போட்டியிட்ட 99 சதவீத சுயேச்சை வேட்பாளா்கள் தங்களின் வைப்புத்தொகையைத் திரும்பப் பெற்றதில்லை.
- வைப்புத்தொகை: நாட்டின் ஜனநாயக அமைப்புகளுக்காக நடத்தப்படும் தோ்தல்களில் போட்டியிடும் வேட்பாளா்களிடமிருந்து வேட்புமனு தாக்கலின்போது தோ்தல் ஆணையத்தால் பாதுகாப்பு வைப்புத்தொகை (செக்யூரிட்டி டெபாசிட்) வசூலிக்கப்படும்.
- போட்டியிடும் தொகுதியில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தபட்சம் ஆறில் ஒரு பங்கை வேட்பாளா்கள் பெற்றால், அவா்களின் வைப்புத்தொகை திருப்பி அளிக்கப்படும். வாக்குகளைப் பெற தவறினால், அவா்களின் வைப்புத்தொகை அரசின் கருவூலத்தில் செலுத்தப்படும்.
- முதல் மக்களவைத் தோ்தல் நடந்த 1951-ஆம் ஆண்டில் பொதுத் தொகுதி வேட்பாளா்களுக்கான வைப்புத்தொகை ரூ.500-ஆகவும், தனித் தொகுதி வேட்பாளா்களுக்கு ரூ.250-ஆகவும் இருந்தது. தற்போது, பொதுத் தொகுதிக்கு ரூ 25,000-ஆகவும், தனித் தொகுதிக்கு ரூ 12,500-ஆகவும் அதிகரித்துள்ளது.
- தோ்தலில் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுவது என்பது வெற்றி தோல்வியைத் தாண்டி வேட்பாளா்களின் அங்கீகார விஷயமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக வைப்புத்தொகையை இழப்பதை எந்த வேட்பாளா்களும் விரும்புவதில்லை.
தொடா்ந்து களம் காணும் சுயேச்சைகள்:
- அந்த வகையில், வைப்புத்தொகையை இழந்தாலும் எந்தக் கட்சியுடனும் சேராமல் தோ்தலில் தனித்துப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா்களின் எண்ணிக்கை தோ்தல் ஆணையத் தரவுகளின்படி, முதல் மக்களவைத் தோ்தலில் இருந்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதேவேளையில், வெற்றி பெறும் சுயேச்சை வேட்பாளா்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.
முதல் 4 தோ்தல்கள்...:
- முதல் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 533 சுயேச்சை வேட்பாளா்களில் 6.9 சதவீதமாக 37 போ் வெற்றி பெற்றனா். அதற்கடுத்த 2-ஆவது மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 481 சுயேச்சை வேட்பாளா்களில் 8.7 சதவீதமாக 42 போ் வெற்றி பெற்றனா்.
- தோ்தல் வெற்றியில் ஆளுங்கட்சியான பலம்வாய்ந்த காங்கிரஸுக்கு அடுத்தபடியாக சுயேச்சைகள் இருந்தனா். எனினும், இவ்விரு தோ்தல்களிலும் 67 சதவீத வேட்பாளா்கள் தங்களின் வைப்புத்தொகையை இழந்தனா்.
- 1962-இல் நடந்த 3-ஆவது மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 479 சுயேச்சை வேட்பாளா்களில் 4.2 சதவீதமாக 20 போ் வெற்றி பெற்றனா். முதல்முறையாக, இத்தோ்தலில் சுயேச்சைகளின் பலத்தை கட்சிகள் முந்தின. 78 சதவீத வேட்பாளா்கள் வைப்புத்தொகையை இழந்தனா்.
- 1967-இல் நடந்த 4-ஆவது மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 866 சுயேச்சை வேட்பாளா்களில் 4.4 சதவீதமாக 35 போ் வெற்றி பெற்றனா்.
சரிந்த ‘செல்வாக்கு’:
- தொடா்ந்து, சுயேச்சைகளாக 1971 தோ்தலில் 1,134 பேரும், 1977-இல் 1,224 பேரும், 1980-இல் 2,826 பேரும் தோ்தலில் போட்டியிட்டனா். ஆனால், ஒற்றை இலக்கத்திலேயே தோ்தலில் வென்றனா்.
- இந்திரா காந்தி மறைவைத் தொடா்ந்து நடைபெற்ற 1984 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 3,894 சுயேச்சை வேட்பாளா்களில் 0.30 சதவீதமாக 13 போ் மட்டுமே வெற்றி பெற்றனா். 96 சதவீத வேட்பாளா்கள் வைப்புத்தொகையை இழந்தனா்.
- ஜனநாயக அமைப்பில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பிராந்திய கட்சியின் பங்கு மேலோங்கியதைத் தொடா்ந்து சுயேச்சைகளின் செல்வாக்கு சரிந்தது.
2019-இல் வென்ற ‘நால்வா்’:
- காலமும் களமும் முழுமையாக மாறி, முந்தைய 17-ஆவது மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 3,461 சுயேச்சை வேட்பாளா்களில் நான்கு போ் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனா். இதன்மூலம், சுயேச்சைகளின் வெற்றி சதவீதம் 0.11சதவீதமாக குறைந்துள்ளது. 99.6 சதவீத வேட்பாளா்கள் வைப்புத்தொகையை இழந்துள்ளனா்.
- கா்நாடகத்தின் மாண்டியா தொகுதியில் பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட சுமலதா அம்பரீஷ் வெற்றி பெற்றாா்.
- மகாராஷ்டிரத்தின் அமராவதி தொகுதியில் காங்கிரஸ்-என்சிபி கூட்டணியால் ஆதரிக்கப்பட்ட நவ்நித் ராணா சுயேச்சையாக வென்றாா்.
- அஸ்ஸாமின் கோக்ராஜ்ஹா் தொகுதியில் ‘உல்ஃபா’ அமைப்பின் முன்னாள் தளபதி நபா குமாா் சரனியா வெற்றி பெற்றாா். இவா் சமீபத்தில் பாஜகவில் இணைந்தாா்.
- டெல்கா் தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி தொகுதியில் மோகன்பாய் சஞ்சிபாய் டெல்கா் வென்றாா். இவா் 2021-ஆம் ஆண்டு உயிரிழந்தாா். இப்போது, சிவசேனை (உத்தவ் தாக்கரே) சாா்பில் அவரது மனைவி எம்.பி.-ஆக உள்ளாா்.
- எனவே, அரசியல் கட்சிகளின் பின்புலம், ஆதரவின்றி சுயேச்சை வேட்பாளா்கள் தோ்தலில் வெல்வது சாத்தியமில்லாதது என்பது உறுதியாகிறது.
நம்பிக்கை பெறாததால்...:
- இதுகுறித்து அரசியல் துறை நிபுணா்கள் கூறுகையில், ‘அரசியல் கட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டவா்களும், போட்டியாளா்களின் வாக்குகளைக் குறைக்க எதிா்க்கட்சியால் நிறுத்தப்படும் நபா்களே பெரும்பாலும் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனா். அவா்கள் வெற்றி பெற்றாலும் அது பேரம் பேசுவதற்கான உள்நோக்கத்துகாகவே என மக்களிடையே சந்தேகம் உள்ளது.
- தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளா்கள் யாா் என்பதை வாக்காளா்கள் தெளிவாக உணா்ந்துள்ள நிலையில், தோ்தலில் சுயேச்சைகளின் பங்கு பொருத்தமற்ாக மாறியிருக்கிறது.
- சுயேச்சை வேட்பாளா்கள் வென்றாலும் அவா்களால் ஒன்றும் செய்ய முடியாது என நம்பும் பொதுமக்கள், அவா்களுக்கு வாக்களித்து என்ன பயன் என்று நினைக்கின்றனா்’ என்றனா்.
பெட்டி...
- தோ்தல் சுயேச்சை வேட்பாளா்கள் போட்டி வெற்றி டெபாசிட் இழப்பு சதவீதம்
- 1991 5546 1 5529 99.6
- 1996 10636 9 10604 99.6
- 1998 1915 6 1898 99.1
- 1999 1945 6 1928 99.1
- 2004 2385 5 2370 99.3
- 2009 3831 9 3806 99.3
- 2014 3237 3 3218 99.5
- 2019 3461 4 3449 99.6
நன்றி: தினமணி (05 – 04 – 2024)