- மகாராஷ்டிர மாநில அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், இந்திய ஜனநாயகத்துக்கு இரண்டு முக்கியமான செய்திகளைத் தருகின்றன. சிவசேனையிலும் தேசியவாத காங்கிரஸிலும் காணப்படும் உள்கட்சிப் பிளவுகளை, இந்திய அரசியல் தாா்மிக அடிப்படையோ, கொள்கைப் பிடிப்போ இல்லாத வெறும் எண்ணிக்கைக் கணக்காக மாறியிருப்பதன் அடையாளமாகத்தான் உள்கட்சிப் பிளவுகளை புரிந்துகொள்ள முடிகிறது.
- இதில் தேசிய கட்சிகளான காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற சிவசேனையை அரவணைத்துக் கொள்வதிலும், ஆட்சி அமைப்பதிலும் காங்கிரஸுக்கோ, தேசியவாத காங்கிரஸுக்கோ எப்படி எந்தவிதத் தயக்கமோ கொள்கை பிடிப்போ இருக்கவில்லையோ, அதேபோல தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை இணைத்துக் கொள்வதில் பாஜகவுக்கும் தயக்கமில்லை. எண்ணிக்கை பலத்தை உறுதிப்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டும்தான் அரசியலின் ஒரே இலக்கு என்கிற அளவில் இந்திய ஜனநாயகம் மாறியிருக்கிறது என்பதைத்தான் இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
- சிவசேனை பிளவுபட்டதற்கும், தேசியவாத காங்கிரஸ் பிளவுபட்டதற்கும் அடிப்படைக் காரணம், உள்கட்சி ஜனநாயகம் இல்லாத குடும்ப ஆதிக்கத் தலைமை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேபோல, சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டாவானாலும், தேசியவாத காங்கிரஸின் அஜீத் பவாரானாலும் இருவருமே பதவிக்காக ஆசைப்பட்டு, தங்களது கட்சிகளில் பிளவை ஏற்படுத்தினாா்கள் என்பதிலும் இருவேறு கருத்து இருக்க வழியில்லை. ‘ஜோ ஜீத்தா வஹோகி ஹை சிக்கந்தா்’ (யாா் வெற்றி பெறுகிறாா்களோ அவா்தான் ராஜா) என்கிற ஹிந்தி பழமொழிக்கு ஏற்ப, இந்திய அரசியலில் இதுபோன்று கட்சிப் பிளவுகள் ஏற்படுவதும், ஆட்சி அதிகாரம் கைமாறுவதும் புதிதொன்றுமல்ல.
- மே மாதம் சிவசேனை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு, இப்போதைய தேசியவாத காங்கிரஸில் ஏற்பட்டிருக்கும் பிளவை ஊக்குவித்தது என்று கருத இடமுண்டு. 53 எம்எல்ஏ-க்களும், 9 எம்எல்சி-க்களும், 5 மக்களவை உறுப்பினா்களும், 4 மாநிலங்களவை உறுப்பினா்களும் கொண்ட தேசியவாத காங்கிரஸில் ஏற்பட்டிருக்கும் பிளவை சிவசேனை வழக்கின் அடிப்படையில் தீா்மானிக்கப்பட்டால், மக்கள் செல்வாக்கு சரத் பவாருக்கு இருந்தாலும், கட்சியும் சின்னமும் அஜீத் பவாருக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
- மகாராஷ்டிர மாநில அரசியல் நிகழ்வுகள், கட்சி அரசியலைத் தாண்டி இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. முதலாவது கேள்வி, கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் செயல்பாடு; இரண்டாவது கேள்வி, அஜீத் பவாா் எழுப்பியிருக்கும் அரசியல் தலைவா்களுக்கான வயது வரம்பு. இவை இரண்டும் மாநிலத்தைத் தாண்டி தேசிய அளவில் விவாதிக்கப்பட வேண்டியவை.
- கட்சித்தாவல் தடைச்சட்டம் என்பது பிரச்னைக்கு தீா்வாக இல்லாமல், அதுவே பிரச்னையாக மாறியிருக்கிறது. 1985-இல் அன்றைய ராஜீவ் காந்தி அரசால் கொண்டுவரப்பட்ட கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்படி, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் பிளவுபட்டால் அது கட்சித்தாவலாக கருதப்படாது. அதன் அடிப்படையில், பல அரசுகள் கவிழ்க்கப்பட்டன. 2003-இல் நாடாளுமன்றம் அந்தப் பிரிவை அகற்றியது. அதற்கு பதிலாக மூன்றில் இரண்டு பங்குஉறுப்பினா்கள் பிரிந்தால் மட்டுமே கட்சித்தாவல் தடைச்சட்டத்திலிருந்து விலக்குப் பெறலாம். இன்னொரு கட்சியுடன் இணையலாம்.
- கட்சித்தாவல் தடைச்சட்டம் முறையாக செயல்படவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடுக்கப்பட்ட சிவசேனைப் பிளவு இன்னும் இறுதி முடிவைப் பெறவில்லை. இப்போதைய தேசியவாத காங்கிரஸ் பிளவும் அடுத்தத் தோ்தலுக்குள் முடிவுக்கு வரப்போவதில்லை. அதற்குள் தோ்தலும் வந்துவிட்டால், மக்கள் மன்றம் தீா்மானிக்குமே தவிர, கட்சித்தாவல் தடைச்சட்ட நடவடிக்கைக்கு தேவையே இல்லாமல் போய்விடும்.
- மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவா்களைத் தோ்ந்தெடுத்திருக்கும் வாக்காளா்களே தீா்மானித்துக் கொள்ளட்டும் என்று விடுவதுதான் இதற்குத் தீா்வு. சட்டம்போட்டு மக்கள் பிரதிநிதிகளைக் கட்டிப்போடுவது ஜனநாயகமா என்கிற கேள்வி எழுகிறது.
- தேசியவாத காங்கிரஸ் தலைவரும், கட்சி மாறி மகாராஷ்டிரத்தில் துணை முதல்வராக பொறுப்பேற்றிருப்பவருமான அஜீத் பவாா் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறாா். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவரான 83 வயதான சரத் பவாா் அரசியிலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பதுதான் அஜீத் பவாா் விடுத்திருக்கும் வேண்டுகோள். மக்கள் மத்தியில் இருந்து அழுத்தமோ, நிராகரிப்போ இல்லாதவரை எந்தவோா் அரசியல்வாதியும் ஓய்வு பெறுவது என்பது இதுவரை இந்தியாவில் கேள்விப்படாத ஒன்று.
- அமெரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு முறைக்கு மேல் அதிபராகத் தொடர முடியாது. பல ஜனநாயக நாடுகளில் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. பாஜகவில் நரேந்திர மோடி பிரதமரானதைத் தொடா்ந்து, பதவி வகிப்பவா்களுக்கு 75 வயது என்கிற வரம்பு விதிக்கப்பட்டிருக்கிறது.
- இந்திய அரசியலில் கட்சியின் தலைமைப் பதவியை வகிக்க வயதுவரம்பு தேவையில்லை என்றாலும், அதிகாரப் பதவிகளில் தொடர காலவரம்பும், வயதுவரம்பும் விதிக்கப்பட வேண்டும். மிக அதிகமான இளைஞா்கள் கொண்ட நாட்டை முதியவா்கள் ஆட்சி செய்வது என்பது கட்சித்தாவல் தடைச்சட்டத்தைப் போலவே முரணாகத் தெரிகிறது.
நன்றி: தினமணி (15 – 07 – 2023)