- இன்று ஒரு மகத்தான நாள். இந்தியாவின் 18ஆவது மக்களவைத் தேர்தலின் முதல் கட்டமாக, தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்குமாக இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. துப்பாக்கித் தோட்டாவைவிட வாக்குச் சீட்டுக்கு வலிமை அதிகம் என்பார்கள். அந்த வலிமையை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்தி, நமது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம் இது.
- உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 1951-52 முதல் சீரான இடைவெளியில் தேர்தல்கள் நடத்தப்பட்டுவருகின்றன. தற்போது நடைபெறும் தேர்தலில் 97 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கும் ஜனநாயக வலிமையைப் பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 6,18,90,348 பேர் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் ஆண்களைவிட (3,03,96,330) பெண்களே (3,14,85,724) அதிகம்; திருநர்கள் 8,294 பேர் வாக்களிக்கவிருக்கிறார்கள்.
- நாம் அளிக்கும் வாக்குகள் அனைத்தும் நமது நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு தனிமனிதரின் எதிர்காலத்தை, நமது குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வலிமை கொண்டவை. அரசியலில் நேரடியாகப் பங்கேற்காதவர்கள், அரசியலின் அடிப்படை தெரியாதவர்கள் உள்பட அனைவரின் வாழ்விலும் பல்வேறு விதங்களில் அரசியல் தாக்கம் செலுத்துகிறது. நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுதான் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, வேளாண் மேம்பாடு என அனைத்துக்குமான கொள்கை முடிவுகளை வகுக்கிறது.
- ஆக, அரசமைப்புச் சட்டம் உறுதிசெய்திருக்கும் வாக்குரிமையானது சாமானியர்களின் நேரடி அரசியல் பங்களிப்புக்கு வழிவகுக்கிறது. நமது தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற / சட்டப்பேரவை / உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதைச் சீர்தூக்கிப் பார்த்து, நேரடியாக அவர்களிடம் கேள்வி எழுப்புவதற்கான தார்மிக உரிமையை நாம் அளிக்கும் வாக்கே நமக்கு வழங்குகிறது.
- தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு முயற்சிகளைத் தேர்தல் ஆணையம் முன்னெடுத்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான இன்று (ஏப்ரல் 19) தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
- அதைக் கடைப்பிடிக்குமாறு தொழில் நிறுவனங்களுக்கு தமிழகத் தொழிலாளர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது. ‘வாக்களிப்பதைப் போன்றது எதுவுமில்லை, நான் நிச்சயமாக வாக்களிப்பேன்’ என்பதை 2024ஆம் ஆண்டின் தேசிய வாக்காளர்கள் தினத்தின் கருப்பொருளாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு விவரங்களையும் வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கேஒய்சி செயலியைத் தேர்தல் ஆணையம் உருவாக்கியிருக்கிறது. எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், அவர்களின் சொத்து மதிப்பு, குற்றப் பின்னணி கொண்டவர்கள் எத்தனை பேர் என எல்லா விவரங்களையும் அந்தச் செயலி மூலம் வாக்காளர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
- வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்கள்கூட ஆதார் அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சான்றுகளைக் காட்டி வாக்களிக்க முடியும். பணக்காரர் முதல் ஏழைவரை அனைவரின் வாக்குக்கும் ஒரே மதிப்புதான். எனவே, வாக்களிக்கும் உரிமை என்பது அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் ஜனநாயக சமத்துவம்.
- தேர்தல்களில் வாக்களிப்பது என்பது அரசமைப்புச் சட்ட உரிமை மட்டுமல்ல, குடிமக்களின் அடிப்படை உரிமை; நாம் கைவிடக் கூடாத கடமையும்கூட. எனவே, இந்தத் தேர்தலில் நாம் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகக் கடமை ஆற்றுவோம்!
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 04 – 2024)