- டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியிருப்பது ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும் முக்கிய நடவடிக்கை. மக்களவைத் தேர்தலில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள ஏதுவாக இந்தப் பிணை வழங்கப்பட்டிருப்பது, ஜனநாயக நடைமுறை மீது நீதித் துறை காட்டும் அக்கறையின் வெளிப்பாடு என்றே சொல்ல வேண்டும்.
- இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட நிலையில், பல முறை அழைப்பாணை அனுப்பியும் ஆஜராகாமல் தவிர்த்துவந்த கேஜ்ரிவால், மார்ச் 21இல் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டார்.
- இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு அவருக்கு இடைக்காலப் பிணை வழங்கியிருக்கிறது. டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கு மே 25ஆம் தேதியும், பஞ்சாபின் 13 தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், கேஜ்ரிவால் வெளிவந்திருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமல்ல, இண்டியா கூட்டணிக்கும் வலுசேர்த்திருக்கிறது.
- கேஜ்ரிவால் டெல்லியின் முதலமைச்சர்; ஒரு தேசியக் கட்சியின் தலைவர், குற்றப் பின்னணி எதுவும் இல்லாதவர் என்பன உள்ளிட்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டி, அவருக்குப் பிணை வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வது அடிப்படை உரிமை அல்ல என அமலாக்கத் துறை முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், ‘‘இந்த விஷயத்தில் சாமானியர்களுடன் ஒப்பிட அரசியல் தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாகச் சொல்ல முடியாது; மக்களவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்துக்கான ஓர் இயங்காற்றல் என்பதாலேயே கேஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கப்படுகிறது’’ என உறுதியாகத் தெரிவித்திருக்கின்றனர்.
- மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் ஜூன் 1 வரை கேஜ்ரிவாலுக்குப் பிணை வழங்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4 வரை பிணை வேண்டும் என்று கேஜ்ரிவால் முன்வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது கவனிக்கத்தக்கது.
- அதே நேரத்தில், முதல்வர் அலுவலகத்துக்கோ டெல்லி தலைமைச் செயலகத்துக்கோ கேஜ்ரிவால் செல்லக் கூடாது, தனது வழக்கு குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
- இடைக்காலப் பிணையில் வெளிவந்திருக்கும் கேஜ்ரிவால், இந்த வழக்கில் குற்றமற்றவர் என இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதை பாஜகவினர் சரியாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். எனினும், தேர்தல் நடைபெறும் நேரத்தில் அவர் கைதுசெய்யப்பட்டது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது முக்கியமானது.
- இதற்கிடையே, பண மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நேற்று (மே 13) இடைக்காலப் பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறாவிட்டால் தான் மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம் என கேஜ்ரிவால் பேசிவருவதும் கவனிக்கத்தக்கது.
- நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டின் மிக முக்கிய நிகழ்வு என உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டிருக்கும் நிலையில், கேஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கப்பட்டிருப்பதை ஜனநாயகத்துக்கு வலுவூட்டும் நகர்வாகக் கருதலாம்!
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 05 – 2024)