- அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் மிகுந்த அக்கறை காட்டுகிறது. நகர்ப்புற வாக்காளர்களுக்கான அதே முக்கியத்துவத்தோடும் ஈடுபாட்டோடும் கடைக்கோடிக் கிராமத்தில் வசிப்பவர்களையும் தேர்தல் ஆணையம் அணுகுகிறது.
- இவ்வளவுக்கு மத்தியிலும் தேர்தலை ஜனநாயகத்தன்மையுடன்தான் அது நடத்துகிறதா என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஒரு மக்களவைத் தொகுதிக்கு, ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.95 லட்சம் வரை செலவு செய்ய வரம்பு விதித்துள்ளது தேர்தல் ஆணையம். ஆனால், ஆட்சியதிகாரத்தில் இருந்த, இருக்கின்ற ஒவ்வொரு கட்சியும் குறைந்தபட்சம் ஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி வரை செலவு செய்யக்கூடிய நபர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கின்றன. சாமானியர்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
- அதுமட்டுமின்றிப் பெரும் வணிக நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாகப் பெறும் கோடிக்கணக்கான தொகையைக் கொண்டுதான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலைச் சந்திக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பெரும்பான்மை சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ள வாக்கு வங்கிகளைக் கணக்கில் கொண்டுதான் வேட்பாளர்களையும் அரசியல் கட்சிகள் தேர்வுசெய்கின்றன.
- மக்களிடையே வாழ்ந்து, மக்களுக்காக வேலை செய்கின்ற எளிய மனிதர்களால், அம்மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் குரல் கொடுக்கமுடியாது என்கிற அவலநிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இத்தகைய அசமத்துவ நிலையை இந்தியத் தேர்தல்ஆணையம் உணர்ந்தும்கூட, அதனை மௌனமாகக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
- ஒவ்வொரு தேர்தலின்போதும் திருமணத்துக்கு நகை வாங்கச் செல்பவர்கள், சிறு-குறு வியாபாரிகள் ஆகியோரிடமிருந்து - சரியான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் - தேர்தல் பறக்கும் படை மூலமாக லட்சக்கணக்கில் ரொக்கம் பறிமுதல் செய்யப்படுவதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
- பொதுமக்களிடம் கெடுபிடியுடன் நடந்துகொள்ளும் தேர்தல்ஆணையம், பல கோடி ரூபாய் செலவுசெய்து பொதுக்கூட்டங்கள் நடத்துகின்ற, அவற்றில் பங்கேற்கும் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் பணம், பிரியாணி, மதுபுட்டிகள் ஆகியவற்றை வாரி வழங்குகின்ற அரசியல் கட்சியினர் மீது அவ்வளவு எளிதில் நடவடிக்கை எடுத்துவிடுவதில்லை.
- அரசியல் கட்சியினர் வீடு வீடாகச்சென்று வாக்குக்குப் பணம் கொடுக்கும்அவலம் இதுவரை முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயக உரிமை அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்கிற தேர்தல்ஆணையத்தின் உறுதிப்பாடு, தேர்தலை ஜனநாயகத்தன்மையோடு நடத்த வேண்டும் என்பதிலும் வெளிப்பட வேண்டும்.
- இந்த நாட்டின் சாமானியக் குடிமக்களுக்கு வாக்களிப்பதற்கான உரிமை மட்டுமல்ல, தேர்தலில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும் சூழலையும் உருவாக்கித் தரும்போதுதான், ஜனநாயகத்தின் உண்மையான பொருளில் தேர்தல் ஆணையம் இயங்குகிறது என்ற நம்பிக்கை உருவாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 04 – 2024)