- சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தலை மேற்கத்திய நாடுகளும் ஊடகங்களும் அணுகிய விதம் இன்றைய வாக்காளர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம். ஓர் இளம் ஜனநாயக நாடு, தேசப் பிரிவினை - கலவரங்கள் என கொந்தளிப்புகளின் சுவடுகள் மறைந்துவிடாத காலத்தில், உள்கட்டமைப்புகள் ஆரம்ப நிலையில் இருந்த தருணத்தில், எப்படி இத்தனைக் கோடி வாக்காளர்கள் பங்கேற்கும் ஒரு ஜனநாயகத் திருவிழாவை நடத்த முடியும் என்கிற சந்தேகம் அப்போது பலருக்கும் இருந்தது.
- ஆனால், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அந்தத் தேர்தலை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதைப் பார்த்து அவர்கள் அதிசயித்துப்போயினர்.
- குறிப்பாக, கல்வியறிவில்லாத மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாடு, முதல் தேர்தலையே நம்ப முடியாத ஒழுங்குடன் எதிர்கொண்டு தங்களுக்கான அரசைத் தேர்ந்தெடுத்தது எப்படி என்கிற ஆச்சரியத்திலிருந்து அவர்கள் அவ்வளவு எளிதில் மீளவில்லை.
- ஜனநாயகம் என்கிற கருத்தாக்கத்தை மேற்கத்திய நாடுகளைவிடவும் ஆழமாக உள்வாங்கிக்கொண்ட இந்தியர்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி அது!
- ஜனநாயகத்தின் வரலாறு: கிரேக்கச் சொல்லான டெமாக்ரஸியின் பொருள், ‘மக்களால் ஆளப்படுவது’ என்பதுதான். பொ.ஆ.மு. (கி.மு.) 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கத் தத்துவவியலாளர் அரிஸ்டாட்டில் தனது ‘Politics’ என்ற புத்தகத்தில் ஜனநாயகம் குறித்துப் பேசியிருக்கிறார். பொ.ஆ.மு. 5ஆம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்றறிஞர் ஹெரோடிடஸ், நகர அரசு நடைபெற்ற ஏதென்ஸில் ஜனநாயக ஆட்சி நடைபெற்றது பற்றித் தனது ‘Histories’ நூலில் எழுதியிருக்கிறார்.
- பொ.ஆ. (கி.பி.) 18ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் பரவத் தொடங்கியது குறித்து ஜவாஹர்லால் நேரு தனது ‘Glimpses of World History’ (1934) நூலில் விரிவாகவே பேசியிருக்கிறார்.
- புரட்சி, பகுத்தறிவு, தனிமனிதச் சுதந்திரம், சகிப்புத்தன்மை, சமத்துவம், சோஷலிஸம், தொழில் வளர்ச்சி எனப் பல கருத்தாக்கங்கள் - நிகழ்வுகள் ஜனநாயகம் மீண்டும் முளைவிடத் தொடங்கிய நவீன யுகத்தின் சமகால விளைச்சல்கள் என்றே சொல்லலாம்.
- தங்கள் மூதாதையரான பிரிட்டிஷாரை எதிர்த்து அமெரிக்கர்கள் நடத்திய சுதந்திரப் போர் (1775-1783), பிரான்ஸில் மன்னராட்சிக்கு எதிராக நிகழ்ந்த புரட்சி (1789–1799) போன்ற நிகழ்வுகள் அந்நாடுகளில் ஜனநாயகம் நிலைபெறத் துணைபுரிந்தன.
- அதேவேளையில், அமெரிக்காவில் உண்மையான ஜனநாயகம் என்பது பல தலைமுறைகளாக அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த கறுப்பின மக்களின் விடுதலையில்தான் சாத்தியமானது. அமெரிக்க சுதந்திரப் போரில் உயிர்த் தியாகம் செய்த முதல் நபர், கறுப்பின அடிமையான கிறிஸ்பஸ் ஆட்டக்ஸ் தான் என்கிறது வரலாறு.
- அதேபோல பிரான்ஸில் பதினாறாம் லூயியின் ஆட்சிக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்டவை அந்நாட்டு மக்களைக் கிளர்ந்தெழச் செய்து புரட்சிக்கு வழிவகுத்தன. ஆக, அடித்தட்டு மக்களின் எழுச்சிதான், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயகம் உயிர் பெற மூல காரணமாக இருந்துள்ளது. மறுபுறம் தாமஸ் பெயின், அகஸ்டேகாம்டே, ஜான் ஸ்டூவர்ட் மில் உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள் ஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் பரவுவதற்கு உழைத்தனர்.
- வளர்ச்சியும் எதிர்வினையும்: மறுபுறம், பல நாடுகளில் ஜனநாயகக் கருத்துகள் பரவியதும் அச்சமடைந்த மன்னர்கள் / கொடுங்கோலர்கள், அதை முறியடிக்க மேலும் மேலும் கொடுங்கோன்மையான / பிற்போக்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.
- இப்படிப் பல்வேறு கட்டங்களில் முன்னேற்றத்தையும் பின்னடைவையும் சந்தித்து வளர்ந்த ஜனநாயகம், வெவ்வேறு விதங்களில் கையாளப்பட்டதும் கவனிக்கத்தக்கது. மக்களாட்சி என்ற பெயரில் உருவான அரசுகள் சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்றதையும் நேரு சுட்டிக்காட்டுகிறார்.
- ஜனநாயகம் நடைமுறைக்கு வந்ததும் மக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அகன்றுவிடும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஒவ்வொரு குடிநபரின் நலனையும் கவனித்துக்கொள்ளும் என்றும் 18-19ஆம் நூற்றாண்டுகளில் ஜனநாயகவாதிகள் நம்பினர்.
- ஆனால், வாக்கு செலுத்துவதன் மூலம் மட்டுமே அனைத்துத் தரப்பு மக்களும் சம அந்தஸ்தைப் பெற்றுவிடுவதில்லை என்பதையும், தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள்தான் அதைத் தீர்மானிக்கும் என்பதையும் காலம் உணர்த்தியது.
- ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறதா என்பதில் சர்வதேச சமூகம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்பதைத்தான் இதுவரையிலான உலக நிகழ்வுகள் உணர்த்திவருகின்றன. எனினும், இந்தியா போன்ற நாடுகள் இன்றளவும் சுதந்திரமான – நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதால், வாக்காளர்கள் எடுக்கும் முடிவுகள் நாட்டின் ஜனநாயகம் நிலைபெற உறுதுணையாக இருக்கின்றன.
- அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் ஜனநாயகத்தை வடிவமைப்பதில் செய்தித்தாள்கள் நீண்ட காலமாகப் பெரும் பங்குவகித்துவருகின்றன. ஊடகச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது.
- இந்தியாவில் ஜனநாயகம்: இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியாவை ஆண்டுவந்த பிரிட்டிஷாரின் நாடாளுமன்ற நடைமுறைதான் இங்கும் கொண்டுவரப்பட்டது. தேச விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடிய காந்தி, நேரு உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் இயல்பாகவே ஜனநாயகவாதிகளாக இருந்தனர். இப்படியாக, சுதந்திரம் கிடைத்த பின்னர், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உருவெடுத்தது.
- அனைத்துக் குடிமக்களுக்கும் ஆரம்பத்திலேயே வாக்குரிமை என்பது ஐரோப்பிய நாடுகளிலேயே சாத்தியமாகாத நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே சாதி, மதம், இனம், மொழி, பொருளாதார அந்தஸ்து என எந்தவித வேறுபாடுகளும் இன்றி அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதுதான் இந்தியாவின் மிகப் பெரிய சாதனை.
- ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படும் பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் என அண்டை நாடுகளில் ராணுவ சதி / ஆட்சிக் கவிழ்ப்பு அதற்கான முயற்சிகள் நடந்திருக்கும் நிலையில், இந்தியா முழுமையான ஜனநாயக நாடாகவே திகழ்ந்து வந்திருக்கிறது.
- இந்தியாவின் முதல் தேர்தலிலேயே பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்ததை மேற்கத்திய ஊடகங்கள் ஆச்சரியத்துடன் பாராட்டியதையும் நாம் கவனிக்க வேண்டும். பெண்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் கட்சிகள் அளித்த வாக்குறுதிகளும் ஐரோப்பியர்களின் கவனத்தை ஈர்த்தன.
- அந்தத் தேர்தலின்போது, அம்பாலாவில் நடந்த வாக்குப்பதிவைநேரில் பார்வையிட்ட ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழின் செய்தியாளர் ராபர்ட் ட்ரம்புள் ஸ்மித், பெண் வாக்காளர்கள் தங்கள் காலணிகளை வாக்குச்சாவடிக்கு வெளியில் விட்டுவிட்டு உள்ளே சென்று வாக்குப் பெட்டியைத் தொட்டுவணங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகத்தின் மீது இந்தியர்கள் வைத்த அந்த நம்பிக்கை இன்றுவரை இம்மியளவும் குறையாமல் தொடர்கிறது!
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 04 – 2024)