TNPSC Thervupettagam

ஜப்பானை தமிழ்நாடு எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்

August 7 , 2023 394 days 471 0
  • உலகின் உற்பத்தி மையமாக சீனா தற்போது திகழ்ந்து வருகிறது. உலகின் மொத்த ஏற்றுமதியில் சீனாவின் பங்கு மட்டும் 15 சதவீதம் ஆகும். மின்னணு சாதனங்கள், இயந்திரங்கள், பிளாஸ்டிக் தயாரிப்புகள் தொடங்கி உற்பத்திக்குத் தேவையான கச்சா பொருள்கள் வரையில் உலக நாடுகளுக்கு பிரதானமாக சீனாவிலிருந்து விநியோகமாகிறது.
  • கரோனா மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக, சீனாவிலிருந்து சரக்குகள் சரியான நேரத்தில் கிடைக்கப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தச் சூழலில் தங்கள் விநியோகத்துக்கு சீனாவை நம்பி இருக்க வேண்டாம் என்று நிலைப்பாட்டுக்கு உலக நாடுகள் வந்துள்ளன. இதற்கு சீனாவின் அரசியல் போக்கும் ஒரு காரணம். இதன் தொடர்ச்சியாக, வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி வேறு ஆசிய நாடுகளில் தங்கள் நிறுவனத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
  • டொயோட்டா, ஹோண்டா, சோனி, கேனான் உள்ளிட்ட முக்கிய ஜப்பான் நிறுவனங்கள் சீனாவில் ஆலையைக் கொண்டுள்ளன. அங்கு தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டு அது ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும். ஆனால், தற்போது ஜப்பான் நிறுவனங்களும் சீனாவிலிருந்து வெளியேற தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டுக்கான வாய்ப்பு

  • பொருளாதார ரீதியாக உலகின் 5-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. தற்போது சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டபோதிலும், இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருக்கிறது. இதனால், உலக நாடுகள் சீனாவுக்கு மாற்றாக இந்தியாவில் தங்கள் நிறுவனங்களை அமைக்க பரிசீலித்து வருகின்றன. ஜப்பானும் தற்போது சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை பரிசீலிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்தியாவுடன் தொழில் உறவை வலுப்படுத்த ஜப்பான் திட்டங்களை வகுத்து வருகிறது.
  • ஜப்பான் மூலம் உருவாகி வரும் வாய்ப்புகளை தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ள நிறைய வழிகள் உள்ளன. இந்தியாவின் வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், இந்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முதலீடு வழங்க ஜப்பான் ஆர்வமாக உள்ளது. இந்திய நிறுவனங்களுடன் கூட்டிணைந்து செயல்பட ஜப்பான் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
  • இந்திய அளவில் தொழில் துறையில் மேம்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நிறுவனங்கள் ஜப்பானிடமிருந்து ஆர்டர் பெற்று அந்த வேலைகளை இங்கிருந்து செய்து கொடுக்கலாம். அதேபோல், ஜப்பான் நிறுவனத்துடன் கூட்டு வைத்து அவர்களிடம் முதலீடு பெற்று அவர்களது ஆர்டர்களை இந்தியாவில் செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

ஜப்பானின் கடன் உதவி

  • ஜப்பான் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிக மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. ஆண்டுக்கு 0.1% முதல் 0.5% அளவிலேயே ஜப்பானிய கடன்களுக்கான வட்டி விகிதம் உள்ளது. இந்த வாய்ப்பை தமிழ்நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இன்று இந்தியாவின் மெட்ரோ ரயில் திட்டங்கள் அனைத்தும் ஜப்பான் நாட்டின் கடன் உதவி மூலமே மேற்கொள்ளப்படுகிறது. ஜப்பானில் JICA (Japan international cooperation agency) என்ற முதலீட்டு நிறுவனம் வெளிநாட்டு அரசுகளுக்கு கடன் வழங்கக் கூடியது. வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு கடன் வழங்க JBIC நிறுவனம் உள்ளது.
  • இன்று இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு JICA நிறுவனம்தான் கடன் உதவி வழங்குகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் விரிவாக்கம் JICA நிறுவனத்தின் நிதி மூலமே மேற்கொள்ளப்படுகிறது. சுகாதாரம், கல்வி, விவசாயம், உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு அவை கடன் வழங்குகின்றன.
  • எனவே, ஜப்பானின் கடன் உதவி குறித்து தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எல்லா திறனும் இருந்தும் போதிய முதலீடு இல்லாமல் திணறுபவர்களுக்கு ஜப்பானின் முதலீடு கைக்கொடுக்ககூடியதாக அமையும்.

இந்திய இளைஞர்களை குறிவைக்கும் ஜப்பான்

  • தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் ஜப்பான் உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒரு சிறிய உதாரணம். இந்தியாவில் பால் உற்பத்தியில் 10 சதவீதம் கேனிலேயே வீணாகிறது. ஆனால், ஜப்பானில் பால் கேன்களில் சோலார் பட்டைகள் சுற்றப்படுகின்றன. இதன் மூலம், அந்த கேன்களில் பல நாள் இருந்தாலும் பால் கெடுவதில்லை. குப்பை மேலாண்மை, மறுசுழற்சி உள்ளிட்டவற்றில் ஜப்பான் முன்னுதாரண நாடாக உள்ளது.
  • இப்படி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் இந்தியாவை விட பலபடி முன்னிலையில் இருக்கும் ஜப்பானுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், அங்கு வேலை வாய்ப்பில் ஈடுபடும் மக்களின் பங்கு குறைகிறது.
  • இந்தச் சூழலில், தங்கள் நாட்டு வளர்ச்சிக்கு, திறன்மிக்க இந்திய இளைஞர்களை பயன்படுத்த ஜப்பான் திட்டமிட்டு வருகிறது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜப்பான் அரசு சகுரா சயின்ஸ் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன்படி, அறிவியலில் ஆர்வமுள்ள வெளிநாட்டு மாணவர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுத் தருகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஜப்பான் செல்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டிலிருந்து பெரிய அளவில் மாணவர்கள் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை. அதற்கான முயற்சிகளை நாம் தொடங்க வேண்டும்.

ஐப்பானில் வேலைவாய்ப்பு

  • அதேபோல், ஜப்பானில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. பொறியியல் துறை தொடங்கி, கட்டுமானம், விவசாயம், முதியோர்களை கவனிக்கும் பணி என பல தளங்களில் அங்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. சிக்கல் என்னவென்றால், ஜப்பான் நாட்டுக்குச் சென்று வேலை செய்ய ஜப்பான் மொழி தெரிந்திருப்பது அவசியம். ஆனால், அது ஒன்றும் கடினமான விஷயமல்ல. 10 மாதங்களுக்குள் ஜப்பான் மொழியில் நன்கு தேர்ச்சி பெற முடியும்.
  • ஜப்பான் மொழியை கற்றுக்கொண்டால், 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் மாதம் ரூ.1.5 லட்சம் வரையிலும் பொறியியல் படிப்பு முடித்தவர்கள் மாதம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலும் ஜப்பானில் ஊதியம் பெற முடியும்.
  • யோகா, ஆயுர்வேதா, சித்தா ஆகியவை சார்ந்தும் ஜப்பான் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்த நாம் உரிய திட்டங்களை வகுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories