TNPSC Thervupettagam

ஜப்பான் பொருளாதாரம் சரிகிறது ஏன்

February 26 , 2024 148 days 220 0
  • சூரியன் முதலில் உதிக்கிற நாடு. சுறுசுறுப்புக்கும் உற்பத்தித் திறனுக்கும் பெயர் பெற்ற நாடு எனப்படும் ஜப்பான் குறித்து இரண்டு செய்திகள் வந்திருக்கின்றன. முதல் செய்தி, ஜப்பானின் பொருளாதாரம் கடந்த இரண்டு காலாண்டுகளாக வளர்ச்சி காணவில்லை. மாறாக, சுருக்கம் கண்டிருக்கிறது. பொருளாதார கணக்கீட்டின்படி இது பெருமந்தம் (ரெசஷன்).
  • இரண்டாவது செய்தி, ஒப்பீட்டு அளவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருந்து வந்த ஜப்பான், சற்று சறுக்கி, ஜெர்மனிக்கு அந்த இடத்தைக் கொடுத்துவிட்டு, நான்காவது இடத்திற்குப் போய்விட்டது. 2023-ம் ஆண்டின் ‘ஜூலை-செப்டம்பர்’ மற்றும் ‘அக்டோபர்-டிசம்பர்’ ஆகிய இரண்டு காலாண்டுகளில் முறையே மைனஸ் 2.9 மற்றும் மைனஸ் 0.4 சதவீதம் சுருக்கம் கண்டிருக்கிறது ஜப்பானின் ஜிடிபி. ‘சுருக்கம்’ என்றால், 2022-ம் ஆண்டில் அதே காலாண்டுகளில் இருந்ததைவிட 2023 காலாண்டுகளில் ஜிடிபி குறைவு. உலகின் மிகப்பெரும் பொருளாதாரம் அமெரிக்காதான்.
  • அதன் ஜிடிபி மதிப்பு, 27.97 டிரில்லியன் டாலர்கள். 18.56 டிரில்லியன் டாலர்களுடன் அடுத்த இடத்தில் சீனா உள்ளது. ஜெர்மனி 4.73 டிரில்லியன் டாலருடன் 3-வது இடத்திலும், ஜப்பான் (4.29 டிரில்லியன் டாலர்) 4-வது இடத்திலும், இந்தியா (4.11 டிரில்லியன் டாலர்) 5-வது இடத்திலும், இங்கிலாந்து (3.59 டிரில்லியன் டாலர்) 6-வது இடத்திலும் உள்ளன.
  • இந்த தரவரிசைக்கு அமெரிக்க டாலர் கணக்கில் மதிப்பிடுவதால், அமெரிக்க டாலருக்கு எதிரான உலக நாடுகளின் நாணய மதிப்பும், இந்த தரவரிசை முடிவில் தாக்கம் கொடுக்கிறது. மூன்றாவதிலிருந்து நான்காவது இடத்திற்கு ஜப்பான் இறங்கியதற்கு வெறும் 43,000 கோடி டாலர்கள் வேறுபாடே காரணம்! அந்த வேறுபாடுநாணய மதிப்பு மாறுபாட்டால் வந்திருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு எதிராக:

  • ஜப்பானின் நாணயமான யென் (Yen) கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்க டாலருக்கு எதிராக மதிப்பு குறைந்து வருகிறது. ஜனவரி 2021 முதல் ஜனவரி 2024 வரையிலான 3 ஆண்டுகளில் 29% வீழ்ச்சி கண்டிருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 10% வீழ்ச்சி. மாறாக ஜெர்மனி(யும்) பயன்படுத்தும் ’யூரோ’வின் மதிப்பு, கடந்த மூன்றாண்டுகளில் அமெரிக்க டாலருக்கு எதிராக 4.56% மட்டும் குறைந்தது மட்டுமின்றி, கடந்த ஓராண்டில் 2.25% மதிப்பு அதிகரித்திருக்கிறது.
  • நாணய மதிப்புக் குறைவு மட்டும்தான் காரணமா என்று கேட்டால், தற்போதைய தரவரிசை மாறுதலுக்கு ஆம் என்றும் மற்றபடி ஜப்பானின் பொருளாதார ‘ரெசஷனுக்கு’ இல்லை என்றும் சொல்ல வேண்டும். ஜப்பானிய பொருளாதாரத்தின் பலவீனம் காரணமாகத்தான் ரெசஷன் மற்றும் அதன் நாணய மதிப்பு குறைவும் ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானிய பொருளாதாரம், வலு குறைய ஒன்றல்ல. பல காரணங்கள் உள்ளன.
  • சமீபத்திய காரணங்கள் என்று பார்த்தால், மோட்டார் வாகனங்கள் தொழிலில் உச்சத்தில் இருந்த ஜப்பான், மின்சார வாகனங்கள் வருகைக்குப் பிறகு அந்த வாய்ப்பை இழந்திருக்கிறது. ஜப்பானின் பெரும் முதலாளிகள் தொடர்ந்து அவர்களது புதிய முதலீடுகளை வளரும் வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்கிறார்கள். ஜப்பானில் ஊதியங்கள் உயரவில்லை. அதனால் மக்கள் செலவழிப்பது குறைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் கூட சரி செய்து விடலாம். ஆனால், உடனடியாக சரி செய்துவிட முடியாத, பூதாகரமாக மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை, நாட்டின் மனிதவளம்.

முதியோர் தேசம்:

  • 2015-ம் ஆண்டிலிருந்து ஜப்பானின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2015-ல் 12 கோடியே 70 லட்சமாக இருந்த மக்கள் தொகை, 2023-ல், 12 கோடியே 26 லட்சம் ஆக குறைந்துவிட்டது. 2022-ல் இறப்பு எண்ணிக்கை 15.6 லட்சம். பிறப்பு எண்ணிக்கை 7.71 லட்சம். குழந்தை பிறப்பு குறைந்துவிட்டதால், வாழும் மக்களின் சராசரி (மீடியன்) வயது அதிகம். குடிமக்களில் 50 சதவீதத்தினரின் வயது 49.1 க்கும் மேல்.
  • அதனால் ஜப்பானின் பலமாக இருந்த ‘உற்பத்தித்திறன்’ குறைகிறது. அதை சரிக்கட்ட ஜெர்மனியைப் போல ஜப்பானில் இளம் வயது வெளிநாட்டவர் அதிகமில்லை.சுமார் எட்டரை கோடி மக்கள்தொகை கொண்ட ஜெர்மனியில் வாழும் வெளி நாட்டவர்-இமிகிரண்ட்ஸ்- எண்ணிக்கை ஒன்றரை கோடி. அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் அரை கோடி. ஆனால், 12 கோடி மக்கள் தொகை இருக்கிற ஜப்பானில் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை சுமார் முப்பது லட்சம் மட்டுமே. உற்பத்தித் துறையில் ரோபோ இயந்திரங்களின் பயன்பாடும் வேண்டிய அளவுகளில் கூடவில்லை.

பீனிக்ஸ் பறவைபோல:

  • இரண்டாவது உலகப்போர், அணு ஆயுத தாக்குதல் போன்ற மிகப்பெரும் வீழ்ச்சிகளிலிருந்து, அதன் புத்தாக்கங்கள், கடுமையான உழைப்பு மற்றும் உற்பத்தித்திறன் காரணமாக, சாம்பலான பின்புமீண்ட பீனிக்ஸ் பறவையைப் போல, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக ஜொலித்த தேசம் ஜப்பான். 1960-க்கு பிறகு சில தசமங்களுக்கு, புல்லட் ரயில் வேகத்தில் வளர்ச்சிகண்ட பொருளாதார அதிசயம். ஏற்றுமதி செய்து தள்ளிய நாடு. ஆனால் எல்லாம் 1990 வரைதான்.

திருப்புமுனை:

  • இந்திய பொருளாதாரத்தில் எப்படி 1991-ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஆண்டோ அதேபோல, ஜப்பானிய பொருளாதரத்திற்கும் 1991 ஒரு திருப்புமுனை ஆண்டானது. எல்.பி.ஜி. என்படும் தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் காரணமாக 1991-ம் ஆண்டிலிருந்து இந்தியா கூடுதல் பொருளாதார வளர்ச்சி பெற்றது. மாறாக, 1991-ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த ‘ரியல் எஸ்டேட்’ சிக்கல் காரணமாக, அப்போதிலிருந்து ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சி காண ஆரம்பித்தது.

அடிமேல் அடி:

  • அவற்றை சரி செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கையில், 2008-ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க சப்ரைம் பிரச்சினையும், அதனால், உலகெங்கும் உண்டான ‘பொருளாதார சுணக்கமும்’. ஜப்பானை பாதித்தது. அதன்பிறகு ஜப்பானில் ஏற்பட்ட ‘கிரேட் ஈஸ்ட் ஜப்பான் நிலநடுக்கம், அதனால் நாசம் விளைவித்த சுனாமி, 2011-ல் ஏற்பட்ட புக்குஷிமா அணுமின் கசிவு.
  • அதற்கு பிறகு வந்த கோவிட் 19 என அடி மேல் அடி விழ ஜப்பானிய பொருளாதாரம் எழ முடியாமல் தொடர்ந்து தடுமாறுகிறது. இதனால் 2010-ல் ஜப்பான் பொருளாதாரம் 3-ம் இடத்துக்கு பின்தங்கியது. சீன பொருளாதாரம் 2-ம் இடத்துக்கு முன்னேறியது.
  • சிக்கல்களை சமாளிக்க, அரசு கடன் தொகைகள், வட்டி குறைப்பு, உதவித் தொகைகள் என பலவிதங்களில் செலவு செய்ய வேண்டிவந்தது. குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தில் 4 % அளவு, பெற்றோருக்கு சலுகைகள், ஊக்கத்தொகைகள் கொடுக்க ஒதுக்கியிருக்கிறது.

பெருகியுள்ள அரசு கடன்:

  • அதனால், 2020-ம் ஆண்டு ஜப்பான் அரசு வாங்கி இருந்த மொத்த கடன் அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பான ஜிடிபி போல 260% ஆகிவிட்டது. நாட்டின் நாணயத்தின் மதிப்பு குறைவு தொடர்ந்தது.

நம்பிக்கை உண்டு:

  • இப்படியெல்லாம் ஆகியும் கூட அன்னிய செலாவணி கையிருப்பில் ஜாப்பான்தான் இரண்டாம் இடம். 1.4 லட்சம் கோடி டாலர்கள். மக்களின் தனிநபர் வருமானம், ஆண்டுக்கு 52,120 டாலர்கள். (சீனா 19,160, இந்தியா 2,450 $). ஜப்பான் இன்னமும் பெரிய பொருளாதாரம்தான்.
  • கால சுழற்சி, பருவநிலை சுழற்சி போல தேசப் பொருளாதாரங்களிலும் ஏற்ற இறக்கங்கள் வரவே செய்யும். ஜப்பான் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் ‘தளர்வு நிலை’ யை அது தாண்டி வரும், வெளிச்சம் குறைவது சூரியனை மேகம் மறைப்பதால்தான். விரைவில் உழைப்புக்கு பெயர் போன ஜப்பான் தேசம் பொருளாதாரத்தில் மீண்டும் முந்தைய நிலையை அடைந்து முன்போல ஒளிரும் என்று நம்புவோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories