TNPSC Thervupettagam

ஜம்மு ஏன் பாதிக்கப்படுவதாக உணர்கிறது?

June 3 , 2020 1691 days 1302 0
  • ஜம்மு காஷ்மீரில் அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 370, 35ஏ ஆகியவை நீக்கப்பட்டு 10 மாதங்களுக்குப் பிறகு புதுப்புது சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன; கூடவே, புதுவித நிர்வாக அமைப்புகள் உருவெடுக்க ஆரம்பித்திருக்கின்றன.
  • ஜம்மு பகுதியில் பல மாதங்கள் அமைதி நிலவிய பிறகும் உணர்வுகள் அடங்கியே காணப்படுகின்றன. இந்த அமைதி என்பது சமரசத்தாலோ அலட்சியத்தாலோ நம்பிக்கையாலோ பிறந்ததல்ல; பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சத்தாலும், ஆகஸ்ட் 5, 2019-க்குப் பிந்தைய ஜம்முவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளாலும்தான்.
  • அதிதீவிர தேசியத்தாலும் இந்தியமைய அரசியலாலும் ஊறிப்போயிருக்கும் ஜம்மு பிராந்தியம், கடந்த காலம் நெடுகிலும் தேசியத்தையும் தேசியப் பாதுகாப்பையும் காக்கும் பொறுப்பு தனது தோள்களில்தான் இருக்கிறது என்ற பிரமையிலேயே வாழ்ந்துவந்திருக்கிறது.
  • தேசியத்தின் செயல்திட்டத்தைப் பரப்புவதற்காகக் கடந்த ஏழு தசாப்தங்களாகத் தனக்கென்று தனிப்பட்ட லட்சியங்களை அது புறக்கணித்துவந்திருக்கிறது.
  • இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் எண்ணங்களுக்கு நேரெதிரான போக்காக உருமாற ஆரம்பித்தது; இந்தியாவில் உருவான வலதுசாரி இந்துத்துவத்தால் இது மேலும் தீவிரமடைந்தது.
  • ஆக, பன்மைத்தன்மை என்ற தனது தனித்துவமான வலிமையைப் பயன்படுத்திக்கொள்ளாமல் ஜம்முவின் அரசியல் போக்கு தேசியத்துக்கும், பிளவுபடுத்தலுக்கும், காஷ்மீரிகளால் பாகுபாடு காட்டப்படுவதான உணர்வுக்கும் இடையே ஊசலாடியது.
  • இப்போது சில மாதங்களாக ஜம்முவாசிகள் தாங்கள் கைவிடப்பட்டதாக உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜம்முவாசிகளின் கேள்வி

  • ஆகஸ்ட் 5, 2019-ல் ஜம்மு காஷ்மீர் மீது இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக நிலவும் அரசியல், பொருளாதார நிச்சயமின்மை மற்றும் அதையொட்டி அமலுக்குக் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக ஜம்முவின் பொருளாதாரமும் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது.
  • பகுதியளவு இணைய சேவை முடக்கமும் இதற்கு ஒரு காரணம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிப்பவர்களைப் போல அல்லாமல், ஜம்முவாசிகள் இந்திய தேசியத்தைத் தூக்கிப்பிடிப்பவர்களாக இருக்கிறோம்; ஜம்முவைப் பொறுத்த அளவில் எந்த வன்முறையும் சட்ட ஒழுங்கு பிரச்சினையும் இல்லை;
  • ஆயினும், ஏன் நாமும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி ஜம்மு மக்களின் மனதில் எழுந்துள்ளது. தாங்கள் அதிகம் நம்பிய கட்சியாலும் தேசியச் செயல்திட்டத்தின் பகுதியாகத் தாங்கள் தீவிரமாக விதந்தோதிய சக்தி வாய்ந்த பிரதமராலும் தாங்கள் கைவிடப்பட்ட உணர்வும்தான் அவர்களுக்கு மேலோங்கிக் காணப்படுகிறது.

இந்திய அரசின் புதிய ஏற்பாடுகள்

  • மார்ச் 30, 2020 தேதியிட்ட இந்திய அரசின் அரசிதழானது, ‘ஜம்மு – காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்துக்கான வசிப்பிட அந்தஸ்து’ தொடர்பிலான புதிய விதிகளைத் தாங்கிவந்தது.
  • இதன் வழி பழைய ஜம்மு காஷ்மீரின் நூறு சட்டங்கள் திருத்தவோ நீக்கவோ பட்டன. இதில் முக்கியமானது புதிய வசிப்பிட விதிகள். இந்த விதிகளால் வேலைகளையும் பள்ளி, கல்லூரிகளில் இடங்களையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சம் ஜம்மு இளைஞர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
  • 12.5 ஏக்கர் நிலத்துக்கு மேல் ஒருவர் உடைமையாளராக இருக்க முடியாது என்கிற முந்தைய விவசாயச் சீர்திருத்தச் சட்டம் இப்போது ஒழிக்கப்பட்டுவிட்டதால், எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும் பெரும் பணம் படைத்த நிறுவனங்களுக்கும் ஜம்மு – காஷ்மீரில் கதவுகள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.
  • இதனால், உள்ளூர்க்காரர்களின் பொருளாதாரத்துக்குச் சிக்கலும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது என்ற அச்சம் எழுந்திருக்கிறது.
  • புதிய விதிகளின்படி ஜம்மு காஷ்மீரில் பதினைந்து ஆண்டுகள் வசித்தவர்கள் அல்லது ஏழு ஆண்டுகள் படித்தவர்கள் அதன் நிரந்தர வசிப்பிட உரிமையைப் பெறலாம்.
  • இந்தப் பலன்கள் மொத்தமாகப் பத்து ஆண்டுகள் ஜம்மு காஷ்மீரில் வேலை பார்த்த மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் உண்டு என்கிறது புதிய விதி. ஆக, இதுவும் பதற்றத்தோடு பார்க்கப்படுகிறது.

ஜம்முவின் பதற்றங்கள்

  • ஜம்முவின் பதற்றங்கள் மிகவும் வெளிப்படையானவை. இந்தப் புதிய நடைமுறையால் உடனடியாகப் பலனடையப்போகிறவர்கள் பெரும்பாலும் அங்கேதான் இருக்கிறார்கள்.
  • இரண்டு லட்சம் பாகிஸ்தான் அகதிகள், முந்நூறுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்கள், மிக முக்கியமாக 29 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பல தசாப்தங்களாக ஜம்மு காஷ்மீரில் வசித்துவருகிறார்கள்.
  • அதிக ஊதியம், கட்டணமில்லா பள்ளிக் கல்வி போன்றவற்றால் ஜம்மு காஷ்மீர் அவர்களை ஈர்த்துவைத்திருக்கிறது. இந்தியாவின் பிரதானப் பகுதியுடன் புவியியல், பண்பாடு, மதரீதியாக ஜம்மு கொண்டிருக்கும் நெருக்கம், காஷ்மீர் பள்ளத்தாக்குபோல அல்லாமல் வன்முறையற்ற அமைதியான சூழல் அங்கே வசிப்பிட உரிமை நாடுபவர்களையும் முதலீடு செய்ய விரும்புபவர்களையும் எளிதில் ஈர்க்கிறது.
  • ஆக, ஜம்முவில் நிறைய பேர் வந்து குடியேறுவதற்கான வாய்ப்பு இருப்பதால் அங்கே நிறைய தொழில்கள் தொடங்கப்படுவதற்கும், அதற்கென நிலங்கள் வாங்கப்படுவதற்கும் அந்தத் தொழில்களில் வெளியாட்கள் வேலைக்குச் சேர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது; இதுவே அச்சத்துக்கான அடிப்படை ஆகியிருக்கிறது.
  • வர்த்தகத்துக்கான கேந்திரமாக இருக்கும் ஜம்முவில் கடந்த ஏழு தசாப்தங்களாகப் புனித யாத்திரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளாலும் காஷ்மீர் பகுதியுடன் பரஸ்பரம் சார்ந்து இருப்பதாலும் வணிகம் தழைத்தோங்கியது.
  • வளம் குன்றாத, எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதார எதிர்காலத்தை ஜம்மு எதிர்நோக்கியிருக்கும் வேளையில், ஆறு ஆண்டுகளாக பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தும் தீர்க்கமான பொருளாதாரப் பார்வை இல்லாததால் ஜம்முவின் கனவுகளெல்லாம் சிதறிப்போயிருக்கின்றன.
  • மேலும், டோக்ரா கலாச்சாரம் அழிவை நோக்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்துத்துவ அரசியலோடு உறவிருந்தாலும் ஜம்முவின் இந்துப் பகுதிகள்தான் ஜம்மு காஷ்மீரின் மிகுந்த பன்மைக் கலாச்சாரத்தைக் கொண்ட பகுதி.
  • பல்வேறு கலாச்சாரங்களையும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொருளாதாரக் காரணங்களாலும் காஷ்மீர் பிரச்சினையாலும் அங்கு வந்து சேரும் மக்களையும் அரவணைத்துக்கொள்வதுதான் ஜம்முவின் மிகப் பெரிய பலம்.
  • ஆனால், அதுவும் தற்போது ஒரு உறைநிலையை எட்டியுள்ளது. டோக்ரா இனத்துக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் பொய்யானது அல்ல.

முதல் இந்து முதல்வர்

  • அரசியல்ரீதியில் ஜம்முவுக்கு எந்த லாபமும் கிடைப்பதுபோல் தெரியவில்லை. தொகுதிகளின் மறுவரையறை மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமல்லாமல், நிலப்பரப்பு அளவிலும் செய்யப்படுமானால் வேறு ஒரு விஷயம் இங்கு நடக்கலாம்.
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தொகுதிகளும் 1950 முதலாகவே ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத்தில் காலியாகவே இருந்துவருபவையுமான 25 சட்டமன்றத் தொகுதிகளும் பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளால் நிரப்பப்படும் சாத்தியங்கள் இருப்பதாக ஊகிக்கப்படுகிறது.
  • இதனால், ஜம்மு காஷ்மீரில் முதல் இந்து முதல்வர் ஒருவர் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அந்தப் பதவிக்கு ஒரு வெளியாளைக் கொண்டுவந்தால் பாஜகவின் ஒருங்கிணைப்புத் திட்டம் ஜம்மு மக்களுக்கே பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தும்.
  • ஆக, ஜம்மு வெறும் கையோடு விடப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், கைவிடப்பட்டும் வழிப்பறிக்குள்ளாகியும் இருப்பதான ஓர் உணர்வுக்குள் ஆட்படத் தொடங்கியிருக்கிறது!

நன்றி: தி இந்து (03-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories