- இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அறுபதாவது ஆண்டு நினைவு நாளை கடைப்பிடிக்கவிருக்கிறோம். இந்தக் கட்டுரை, அரசியல் வாழ்வில் வல்லபபாய் படேலுடன் இணைந்து நேரு எப்படிப் பணியாற்றினார் என்கிற ஒரு அம்சத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தருகிறது. இவ்விரண்டு மனிதர்களும் நாட்டின் சுதந்திர விடுதலைப் போராட்டத்திலும், பிறகு நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் அரசிலும் இணைந்தே பணியாற்றினார்கள்.
- அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன; எந்த இரு தனிநபர்களுக்கும் இடையில் இருப்பதைப் போல, கிரிக்கெட் அணியில் இரு வீரர்களுக்கு இடையில், திருமணத்துக்குப் பிறகு கணவன் – மனைவிக்கு இடையில், ஒரு தொழில் நிறுவனத்தில் அதன் இயக்குநர்களுக்கு இடையில் இருப்பதைப் போலவே - அவர்களுக்குள்ளும் மாறுபட்ட கருத்துகள் இருந்தன.
- இருப்பினும் அவர்களுக்கு இடையில் நிலவிய உறவை முழுமையான கண்ணோட்டத்துடன் பார்த்தால் அது உறுதியான கூட்டுறவாகவும், அவர்கள் மிகவும் விரும்பிய தாய்நாட்டின் வளர்ச்சிக்காக இருவருடைய தனித்திறமைகளையும் ஒன்றுசேர்த்து பயன்படுத்தியதாகவுமே இருக்கிறது.
- ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து உதவிய பாங்கை பார்க்க மறுக்கும் விதத்திலேயே, மோடியும் அவருடைய சகாக்களும் பேசுகின்றனர். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் படேலை உயர்த்தியும் - நேருவைத் தாழ்த்தியும் பேசுகின்றனர்.
காங்கிரஸை வளர்த்ததில்
- பிரிட்டிஷார் நம்மை ஆண்டபோது இந்தியச் சமூகத்தின் பெரும்பகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக – மக்கள் ஆதரவு பெற்ற இயக்கமாக – காங்கிரஸை வளர்ப்பதற்கு நேருவும் படேலும் மிகவும் உதவினர். இருவருமே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்கள்.
- சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இருவரும் இணைந்து பணியாற்றியது எல்லாவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரிட்டிஷார் புறப்பட்டபோது, நாட்டைப் பல்வேறு வகையிலும் பிளவுபடுத்திவிட்டும் சீர்கேடு அடையவைத்தும் சென்றனர்.
- உலகில் எந்த நாடுமே அதைப் போல பயனற்ற ஒரு சூழலில் பிறந்திருக்கவே முடியாது; மக்களிடையே உள்நாட்டுப் போர் போல, மதக் கலவரங்களும் மோதல்களும் நிகழ்ந்தன; அவசியப் பண்டங்களுக்கு நாட்டில் பற்றாக்குறை நிலவியது; பெரும்பாலான மக்கள் வறுமையில் உழன்றனர்; சாதி, வர்க்கம், பாலின அடிப்படையில் மக்களிடையே கடுமையான ஏற்றத்தாழ்வுகள் நிலவின; நாட்டில் அப்போதிருந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை சுதந்திர நாட்டுடன் இணைக்க வேண்டிய பெரும் சிக்கல் நிலவியது; லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் அகதிகளாக வந்ததால் அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை அளித்து மறுகுடியமர்த்தலுக்கு வழிகாண வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.
- இத்தனை பிரச்சினைகளுக்கும் இடையில் நாடு ஒற்றுமையாக இருந்தது, 1947–1950க்குள் ஜனநாயக கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது, இவற்றையெல்லாம் சாதித்தவர்கள் ஏராளமான தேசபக்தர்கள், அவர்களில் தலையாயவர்கள் நேருவும் படேலும்.
புத்தகம் பேசுகிறது
- இந்தியக் குடியரசின் அஸ்திவாரத்தை வலுவாக உருவாக்கியதில் நேருவும் படேலும் அளித்த உழைப்பு எப்படிப்பட்டது என்பதை ‘காந்திக்குப் பிறகு இந்தியா’ (India after Gandhi) என்ற என்னுடைய புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன், படேலைப் பற்றி ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ள – இதுவரை வேறு எவராலும் அதைவிட சிறப்பாக எழுத முடியாத – வாழ்க்கை வரலாற்றிலும் அவை இடம்பெற்றுள்ளன.
- இந்தியர்களை உணர்ச்சிப்பூர்வமாக ஒற்றுமைப்படுத்தினார் நேரு, மகளிருக்கும் இன, மத, மொழிச் சிறுபான்மையினருக்கும் சம உரிமைகள் அளித்தார். வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில் பல கட்சி ஜனநாயக முறை நாட்டில் ஏற்பட வேண்டுமென்றார், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் தலைவராக விளங்கினார்.
- இந்தியாவின் பிரதேசங்களை இணைக்கும் கடமையில் கவனம் செலுத்தினார் படேல், அதற்காக சுதேச சமஸ்தானங்களின் மன்னர்களை, இந்தியாவுடன் இணையவைத்தார்; உள்துறை அமைச்சர் என்ற வகையில் இந்திய அரசுப் பணிகளில் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்தார், இந்தியாவின் புதிய அரசமைப்புச் சட்டத்தை அனைத்து தரப்பும் ஏற்பதற்கான கருத்தொற்றுமையையும் ஏற்படுத்தினார்.
- தேசம் உருவான காலகட்டத்தில் நிலவிய பல்வேறு நெருக்கடிகளைத் தீர்ப்பதில் நேருவும் படேலும் எப்படித் தோளோடு தோள் சேர்ந்து உழைத்தனர், அந்த வகையில் இந்தியர்கள் எந்த அளவுக்கு அதிருஷ்டசாலிகள் என்பதை வரலாறு பதிவுசெய்திருக்கிறது. இருவரும் பரஸ்பரம் எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர் என்பதை பொதுவெளியிலும் தனிப்பட்ட முறையிலும் அடிக்கடி வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
- நேருவும் படேலும் விலகிச் செல்கிறார்கள் என்ற எண்ணத்துடன் தன்னைத் தொடர்புகொண்ட இளைய சகாவுக்கு 1948 செப்டம்பரில் படேல் எழுதிய கடிதம் இப்படிச் செல்கிறது, “நானும் ஜவஹர்லால் நேருவும் கருத்து வேற்றுமையால் பிளவுபட்டுச் செல்வதாக தவறான எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது; இதில் சிறிதளவும் உண்மை இல்லை… எங்களுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன – நேர்மையான எல்லா மனிதர்களுக்கும் இடையில் இருப்பதைப் போல. அதனால் எங்கள் இருவருக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை, மதிப்பு, பாராட்டுணர்வு, நம்பிக்கை ஆகியவற்றில் எந்த மாறுபாடுகளும் இல்லவே இல்லை.”
- ஓராண்டு கழித்து, நேருவின் அறுபதாவது பிறந்த நாளை ஒட்டிய குறிப்பில் படேல் எழுதினார், “இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொண்டு மிகவும் சேய்மையில் இருந்து பணியாற்றியதால் இயல்பாகவே எங்களுக்குள் அன்பு பெருக்கெடுத்துள்ளது, ஆண்டுகள் செல்லச் செல்ல இந்தப் பரஸ்பர பாசம் மேலும் பெரிதாகியே வருகிறது, இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்க முடியாத தருணங்களில் அல்லது நாள்களில் எங்களுக்குள் எப்படிப்பட்ட ஏக்கம் நிலவுகிறது என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வது கடினம், பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு காணும்போது அருகில் இல்லையே என்று நாங்கள் ஒருவருக்கொருவர் பிரிவாற்றாமை கொள்வது மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கவும் முடியாது.”
- படேல் நேருவைப் பற்றிச் சொன்ன இதேபோன்ற கருத்தை நேருவும் இன்னொரு தருணத்தில வெளிப்படுத்தியிருக்கிறார். 1947 ஆகஸ்டில் படேலுக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்திய அமைச்சரவையின் மிகவும் வலிமையான தூண்’ என்று படேலைப் பாராட்டியிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு படேல் மறைவை ஒட்டி துக்கம் தோய நேரு எழுதிய இரங்கல் குறிப்பு இப்படிச் செல்கிறது.
- “சுதந்திரப் போராட்ட காலத்தில் நம்முடைய படைகளுக்கு மிகச் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தார், பிரச்சினைகள் ஏற்பட்டபோது அவற்றைத் தீர்க்க வலிமையான ஆலோசனைகளை வழங்கினார், வெற்றிகள் ஏற்பட்டபோது அவற்றை எப்படிப் பாதுகாப்பது, தொடர்வது என்றும் வழிநடத்தினார்; ஈடு இணையற்ற துணிச்சல், சிறிதும் தளர்த்திக்கொள்ளாத ஒழுக்கம், அமைப்புக்கு நல்வழிகாட்டும் அறிவாற்றல் மிக்கவர் படேல். பழைய சமஸ்தானங்களை நாட்டுடன் இணைப்பது மிகவும் கடினமானதும் சிக்கலானதுமான பிரச்சினை, அதை முழுமூச்சாகத் தீர்த்துவைத்து தனது மேதமையை வெளிப்படுத்தினார். ஒன்றுபட்ட – வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தை வகுத்துக்கொண்டு அதை அடைய உறுதியுடனும் திறமையுடனும் செயல்பட்டார். மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் அவருடைய வழிகாட்டலை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும், கடமையில் அவருக்கிருந்த ஈடுபாடு, கொண்ட கொள்கையை நிறைவேற்றுவதில் அவருக்கிருந்த உறுதி, கடமையைச் செய்யும்போது அவர் கடைப்பிடித்த ஒழுக்கம் ஆகியவற்றை சுதந்திரமான வலிமையான நாட்டை உருவாக்க நாமும் கடைப்பிடித்தாக வேண்டும்.”
- சுதந்திரத்துக்கு முன்னரும் நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் நேருவும் படேலும் எப்படித் தோழமையுணர்வோடு செயல்பட்டார்கள் என்பதை வரலாற்று ஆவணங்கள் தொகுத்துத் தந்துள்ளன. அவர்கள் இருவரும் அரசியலில் கருத்து மாறுபட்டவர்கள், போட்டியாளர்கள் என்ற எண்ணம் எப்படி மக்களுடைய மனங்களில் இன்று விதைக்கப்பட்டிருக்கிறது?
பாவம் தொடங்கிய இடம்
- இந்தப் பாவத்தை முதலில் செய்தவர்கள் நேருவின் சொந்தக் குடும்பத்தார்தான். 1966 ஜனவரியில், நேருவுக்குப் பிறகு பிரதமராக வந்த லால் பகதூர் சாஸ்திரி தனது 61வது வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் அடுத்த பிரதமராக இந்திரா காந்தியைத் தேர்ந்தெடுத்தனர். அவரை வெகு எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று அவர்கள் கருதினர். ஆனால், அவர்களுடைய எண்ணம் தவறு என்பதைப் போல, தனது அதிகாரத்தைக் கட்சி மீது முழுமையாக செலுத்தினார் இந்திரா காந்தி.
- சுதேச சமஸ்தானங்களை இணைத்ததற்காக, ஒப்பந்தப்படி மன்னர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களை ரத்துசெய்தும், கிழக்கு பாகிஸ்தானாக இருந்த நாட்டின் மீது படையெடுத்து கைப்பற்றி அதை வங்கதேசமாக உருவாக்கியும் தான் எப்படிப்பட்ட துணிவும் செயல்வேகமும் மிக்க தலைவர் என்பதை உணர்த்தினார். காங்கிரஸ் கட்சியையும் மத்திய அரசையும் தனது முழு அதிகாரம், செல்வாக்கின் கீழ் கொண்டுவந்துவிட்ட பிறகு கட்சியையே தனது குடும்பச் சொத்தாக மாற்றிவிட்டார்.
- தேச நிர்மாணப் பணியில் படேல் ஆற்றிய தொண்டை உணராதவர் அல்ல இந்திரா. தேசிய காவல் துறை பயிற்சிப் பள்ளிக்குப் படேலின் பெயரை 1974இல் அவர்தான் சூட்டினார். ஆனால், அதைவிட தன்னுடைய தந்தைக்கு அதிக முக்கியத்துவம் தந்து முக்கியமான அரசு நிறுவனங்களுக்கு தந்தையின் பெயரையே தொடர்ந்து சூட்டி அவருடைய நினைவைத் தொடர்ந்து நிலைபெறச் செய்தார். புதிய பல்கலைக்கழகம் ஒன்றுக்குக்கூட நேருவின் பெயரையே சூட்டினார்.
- ராஜீவ் காந்தி பிரதமரான பிறகு படேலைவிட நேருவின் புகழ்பாடலுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. படேல் மட்டுமல்ல பிற தேசத் தலைவர்களும் புறக்கணிக்கப்பட்டனர். 1989இல் நேருவின் பிறந்த நாள் நூற்றாண்டை ஒட்டி நேருவின் பெயருக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. தாத்தா நேருவை மட்டுமல்ல, அன்னை இந்திராவையும் அவருக்கு இணையாக உயர்த்திப் பிடித்தார் பிரதமர் ராஜீவ். டெல்லியில் உள்ள விமான நிலையத்துக்கு இந்திராவின் பெயரை சூட்டினார்.
- இந்திராவும் பிறகு ராஜீவ் காந்தியும் காங்கிரஸின் வரலாற்றையே தங்களுடைய குடும்ப வரலாறாக மாற்றத் தலைப்பட்டனர். 1998இல் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பதவியேற்ற பிறகு, இந்தப் போக்கு மேலும் தீவிரமானது. கட்சியின் வரலாறு பற்றிய புரிதலில் அவருக்குப் படேல் முக்கியமானவராகத் தெரியவில்லை. அபுல் கலாம் ஆசாத், காமராஜர், சரோஜினி நாயுடு இன்னும் பல தலைவர்களுக்கும் காங்கிரஸ் வரலாற்றில் இடமில்லாமல் போனது.
- சோனியா தலைமையிலான காங்கிரஸ் எப்போதாவது சில சமயம் மகாத்மா காந்தியை நினைவுகூர்ந்தது. ஆனால், காங்கிரஸ் வரலாறு என்றால் அது நேரு குடும்பத்தின் வரலாறு என்று இணை வைக்கப்பட்டது. நேரு, இந்திரா, ராஜீவ் மட்டுமே காங்கிரஸ்காரர்களால் மிகவும் போற்றப்பட வேண்டிய காங்கிரஸ் தலைவர்களாக மாற்றப்பட்டனர்.
- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிசெய்த 2004 முதல் 2014 வரையிலான காலத்தில், நாட்டின் பெருமை மிகு திட்டங்களுக்கு ராஜீவ் காந்தியின் பெயரே சூட்டப்பட்டது. நேருவின் நூற்றாண்டு பிறந்த நாள் மற்றும் மறைவு நாள்களில் அஞ்சலிக்கு கோடிக்கணக்கான ரூபாய் அரசு சார்பில் செலவிடப்பட்டது.
மோடி வந்த வழி
- ஆர்எஸ்எஸ் தொண்டர் என்ற வகையில் நரேந்திர மோடிக்கு கே.எஸ்.ஹெட்கேவார், எம்.எஸ்.கோல்வால்கர் ஆகியோரை வழிபட கற்றுத்தரப்பட்டது. கட்சியின் அமைப்புச் செயலாளர் என்ற வகையில் சியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாய ஆகியோரைப் புகழ்ந்து பேச வேண்டும் என்றே பணிக்கப்பட்டது.
- குஜராத் மாநில முதல்வராகப் பதவியேற்ற பிறகே அவருக்கு வல்லபபாய் படேல் மீது பெருமதிப்பும் பற்றும் ஏற்பட்டது. பிரதமர் பதவிக்குத் தயாரானபோது 2012இல் படேலின் புகழ்பாடும் வேலையில் தீவிரமாக இறங்கினார் மோடி. மோடியைப் பின்பற்றி பாஜகவிலும் படேலின் புகழ் பாடப்பட்டது.
- ‘நேருவுக்குப் பிந்தைய காங்கிரஸ் கட்சி, படேலை தங்களுடைய தலைவராகக் கருதாமல் கைவிட்டுவிட்டதால், நரேந்திர மோடியின் பாஜக, தங்களுடையவராக அவரை வரித்துக்கொண்டுவிட்டது’ என்று எழுத்தாளரும் மக்கள் சேவகருமான கோபாலகிருஷ்ண காந்தி சுட்டிக்காட்டுகிறார்.
- குஜராத்தில் மிகப் பெரிய இரும்புச் சிலையை வடித்தும் ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சிகளிலும் அவரை நினைவுகூர்ந்தும் சொந்தம் கொண்டாடுகிறது மோடி அரசு. வாழ்நாள் முழுக்க காங்கிரஸ்காரராக வாழ்ந்த படேலை, தங்களுக்கான அடையாள உடைமை போல பாஜக நடத்துவது வரலாற்று நகைமுரண்!
நேரு வெறுப்பு ஏன்?
- மோடியும் பாஜகவும் நேருவை வெறுக்க பல காரணங்கள் உள்ளன. நேருவின் மதச்சார்பின்மை அவர்கள் கடைப்பிடிக்கும் பேரினவாதத்துக்கு நேர் முரணானது. அவர் கடைப்பிடித்த சமரசத்துவம் அவர்களுடைய அன்னியர் எதிர்ப்புணர்வுக்கு எதிரானது. நவீன அறிவியல் மீது நேருவுக்கிருந்த பற்று, பண்டைய இந்துக்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அவர்களுடைய நம்பிக்கைக்குப் பகையானது.
- வாழ்க்கை மீது உற்சாகமும் நம்பிக்கையுமாக வாழ்ந்த நேருவின் வாழ்க்கை, பாஜகவினரின் தூய்மைத்துவத்துக்கும் ரசனையற்ற அணுகுமுறைக்கும் நேரெதிரானது. நேருவின் மிகச் சிறந்த தோழரான படேலையே ஆயுதமாக்கி, இந்தியாவின் முதல் பிரதமர் மீது பாஜகவினர் தொடுக்கும் தாக்குதலைக் கண்டால் படேலே இப்போது மிரண்டுபோயிருப்பார். நேரு குடும்ப வரலாறுதான் காங்கிரஸின் வரலாறு என்று சோனியா நிலைநிறுத்த முயன்ற விதம் குறித்து நமுட்டுச் சிரிப்புடன் படேல் வேடிக்கை பார்த்திருப்பார்.
- ஆனால், வாழ்விலும் சாவிலும் பிரிக்க முடியாத பந்தத்துடன் நேருவுடன் தனக்கிருந்த நெருக்கத்தை, தன்னுடைய பெயரையே தவறாகப் பயன்படுத்தி அழிக்க நினைக்கும் பாஜகவின் செயலைக் கண்டு கொதித்துப்போய் வெடித்திருப்பார்.
- ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல் ஜோடி இந்திய அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் உருவாக்கிய இணைந்திசை அரியது, ஆற்றல் மிக்கது. பிற்காலத்தில் இந்திரா காந்தி – பி.என்.ஹக்சர், அடல் பிஹாரி வாஜ்பாய் – லால் கிருஷ்ண அத்வானி, மன்மோகன் சிங் – சோனியா காந்தி, சமீப காலத்தில் - நரேந்திர மோடி – அமித் ஷா என்று பல இரட்டையர்களாகத் தொடர்கிறது.
- மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நேருவும் படேலும் நமக்கு தலைவர்களாகவும் நிர்வாகிகளாகவும் வாய்த்தது, நாம் செய்த புண்ணியத்தால்தான் என்று ஒரு குடிமகனாகவும் வரலாற்றாசிரியராகவும் துணிவுடன் என்னால் கூற முடியும். நவீன இந்திய வரலாற்றில் நாம் காணும் பல கூட்டுறவில் மிகவும் புனிதமானதும், மிகவும் அவசியமானதும் நேரு – படேல் இடையிலான கூட்டுறவுதான்.
நன்றி: அருஞ்சொல் (21 – 05 – 2024)