TNPSC Thervupettagam

ஜாமியா பல்கலைக்கழகம் மறவாத யூதப் பெண்!

September 22 , 2024 115 days 126 0

ஜாமியா பல்கலைக்கழகம் மறவாத யூதப் பெண்!

  • டெல்லியில் உள்ள இஸ்லாமியர்களின் கல்லறையில் ஒரு நடுகல் மட்டும் தனித்துத் தெரிகிறது. அது உருது மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. ஜெர்மனியில் பிறந்த யூதரான கெர்தா பிலிப்ஸ்பான், ‘அப்பாஜான்’ (மூத்த சகோதரி) என்ற அடைமொழியில் அங்கே வாஞ்சையாக போற்றப்பட்டுவருகிறார்.
  • இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் முகிழ்த்த இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்களில் ஒருவராக, ஜெர்மனியில் பிறந்த யூதப் பெண் இருந்திருக்கிறார் என்பதும் முஸ்லிம்கள் இன்றளவும் அவரைப் பாசத்துடன் நினைத்து அஞ்சலி செலுத்துகின்றனர் என்பதும் காணக்கிடைக்காத காட்சி. இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் ஆர்வம் மிக்கவர்கள், 2019இல் மோடி அரசு கொண்டுவந்து மிகவும் சர்ச்சைக்கிடமான குடியுரிமை (திருத்த) மசோதாவுக்கு எதிராக வெகு தீவிரமாகப் போராட்டம் நடத்தியவர்கள். அது அந்தப் பல்கலைக்கழகத்தின் தனிப்பெரும் அடையாளம்.

எப்படி வந்தார்?

  • தான் பிறந்து வளர்ந்த ஜெர்மன் நாட்டுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத, தன்னுடைய யூத மதத்துடனும் தொடர்பில்லாத ஒரு நாட்டுக்கு (இந்தியா), அதன் தலைநகருக்கு (டெல்லி), எப்படி வந்தார் கெர்தா. இதற்குக் காரணம் அவருக்கும் அந்த நாளைய இந்திய மாணவர்களுக்கும் ஜெர்மனியில் ஏற்பட்ட பயன் கருதாத உன்னத நட்புதான். ஜாமியாவின் ‘அப்பாஜான்’ குறித்து புத்தகம் எழுதியிருக்கும் மார்கரெட் பெர்னா இதை விளக்குகிறார்.
  • ஜாமியா பல்கலைக்கழகம் குறித்து ஆராய்ச்சிசெய்யும் பணியைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏற்றுவந்த பெர்னா, ‘அப்பாஜான்’ என்ற பெயர் அந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் பல இடங்களில் வருவதைக் கண்டு வியந்தார். யார் இந்த ‘அப்பாஜான்’ என்று தேடினார். ‘அப்பாஜான்’ என்றால் ‘அக்கா’ என்பது புரிந்தது. சொந்தப் பெயரில் அழைக்காமல், ‘அக்கா’ என்று மட்டுமே ஒருவரை அழைக்க வேண்டுமென்றால் அவர் முக்கியமானவராக இருக்க வேண்டும் என்று சிந்தித்தார்.
  • பெர்னாவின் தேடலுக்கு விடை கிடைத்தது. அவரைப் பற்றித் தெரிந்துகொண்டதும், மத மோதல்களும் கருத்து மோதல்களும் கணக்கின்றிப் பெருகிவிட்ட இந்தக் காலத்து இளைஞர்களுக்கு ‘அப்பாஜான்’ பற்றி அவசியம் தெரிய வேண்டும் என்று முடிவுசெய்து அவரைப் பற்றி புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘அப்பாஜான்: த மெனி லைஃப்வேர்ல்ட்ஸ் ஆஃப் கெர்தா பிலிப்ஸ்பான்’ (Aapa Jaan: The Many Lifeworlds of Gerda Philipsborn).

ஜெர்மானிய துரைசானி

  • அந்தக் காலத்தில் ஐரோப்பியர்களை, குறிப்பாக வெள்ளை நிறப் பெண்களை ‘மேம்சாஹிப்’ (மேடம் சாஹிப்) என்று இந்தியிலும் ‘துரைசானி’ என்று தமிழிலும் அழைப்பது வழக்கம். துரையின் மனைவி அல்லது மகள் அல்லது சகோதரி துரைசானி. அப்படிப்பட்ட ஜெர்மானிய துரைசானியான கெர்தா, பெர்லின் நகரிலிருந்து இந்தியாவுக்கு 1933இல் வந்தார். ஜாகீர் உசைன், முகம்மது முஜீப், அபித் உசைன் என்ற மூன்று கல்லூரித் தோழர்களுடன் இந்திய நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்தார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
  • அந்த நண்பர்கள் மூவரும்தான் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள். கெர்தாவின் பங்கும் அளப்பரியது. அந்த மூவரில் ஒருவரான ஜாகீர் உசைன் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக 1967இல் பதவியேற்றவர். 1920கள், 1930களில் இப்படி வெவ்வேறு நாட்டவர்களுக்கிடையில் நெருங்கிய தோழமை ஏற்படுவது வெகு அரிது. அதிலும் மூன்று ஆண்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் கண்ணியமான தோழமை உறவு ஏற்பட்டதென்றால் இந்தக் காலத்திலும்கூட அதைப் பலரால் நம்ப முடியாது.
  • பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது மதறாஸ், பம்பாய், கல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் வேறு சில நகரங்களிலும் மட்டும்தான் பல்கலைக்கழகங்கள் இருந்தன. அரசின் நிதியுதவியை எதிர்பார்க்காமல் ஒரு பல்கலைக்கழகமும் தொடங்கப்படவில்லை. டெல்லியின் ஜாமியா பகுதியில் இஸ்லாமிய சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து பயிலும் சுதேசி உயர்கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டும், அதில் படிக்கும் மாணவர்கள் சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட வேண்டும் என்று நான்கு பேரும் நினைத்தனர். அது மட்டுமல்லாமல் இந்து – முஸ்லிம் ஒற்றுமை வளர வேண்டும், தாய்நாட்டின் மீது அனைவரும் பற்றுவைக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியமும் அந்த மூன்று முஸ்லிம் நண்பர்களுக்கும் இருந்தது. ஜாமியா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதன் நோக்கமே இதுதான். முஸ்லிம்கள் அதிலும் பெண்கள், உயர்கல்வி பெற வேண்டும், இந்துக்களுடன் ஒற்றுமையை வளர்க்க வேண்டும், நாட்டுப் பற்றோடு செயல்பட வேண்டும்.
  • அவர்களுடைய இந்தப் பொதுநல நோக்கம் கெர்தாவை மிகவும் கவர்ந்தது. அதற்காகவே அவர் ஜெர்மனியிலிருந்து இந்தியா வந்துவிட்டார். அடிமை இந்தியாவின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்து அவருக்கு நன்றாகவே தெரியும். இந்தியர்களுக்குச் சேவை செய்ய தன்னுடைய சொந்த வாழ்க்கை நலன்களைத் துறந்துவிட்டார். மிகப் பெரிய செல்வந்த குடும்பத்தில் 1895இல் பிறந்த கெர்தா, வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதையும் அன்றைய உலகம் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் இளவயதிலேயே வெகுவாக அறிந்துகொண்டார்.
  • இரண்டாவது உலகப் போரால் உலக நாடுகள் படும் துயரையும், உலகில் ஏற்பட்டுவரும் மிகப் பெரிய மாற்றங்களையும்கூட அவர் அறிந்தார். யூதர்களுக்கு எதிராக ஐரோப்பாவில் - குறிப்பாக ஜெர்மனியில் வெறுப்புணர்வு விசிறப்பட்டு வளர்வதைக் கண்டார். இன அடக்குமுறை என்றால் என்ன என்ற நேரடி அனுபவமும் அவருக்கு இருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை ஜெர்மனியில் இருந்தபோதே உணர்ந்துகொண்டார். இந்தியாவில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தானும் ஏதாவதொரு விதத்தில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டார்.
  • வளமான ஜெர்மனியிலிருந்து வறிய இந்தியாவுக்கு வர அவர் விரும்பியபோது, இந்திய நண்பர்கள் அன்போடு அதைத் தடுத்தனர். “இந்தியாவுக்கு வராதீர்கள், துயரங்கள் உங்களைப் பீடிக்கும், எங்கள் நாட்டு விடுதலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், இங்கிருந்தபடி எங்களை வாழ்த்திக்கொண்டிருங்கள்” என்று ஜாகீர் உசைன் கூறினார். கெர்தா அதைக் கேட்பதாக இல்லை. எனவே, சற்று கடினமான குரலில் எச்சரித்தும், கெஞ்சும் குரலில் மன்றாடியும் இந்தியா வரக் கூடாது என்றே அவரைப் பல முறை எச்சரித்தார் ஜாகீர் உசைன். மூன்று நண்பர்களும் இந்தியாவுக்குப் புறப்படும்வரை காத்திருந்த கெர்தா, அவர்கள் புறப்பட்டுச் சென்ற பிறகு அவர்களுக்குத் தெரிவிக்காமல் அவர்கள் பின்னாலேயே டெல்லிக்கு வந்துவிட்டார்.

முஜீபின் கவலை

  • இளவயதில் இருக்கும் கெர்தா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஜாமியா பகுதி முஸ்லிம் பெண்களோ பர்தா இல்லாமல் வெளியே வரமாட்டார்கள், ஆடவர்கள் எதிரில் வந்து நிற்க மாட்டார்கள், இந்த நிலையில் கெர்தா வந்தால் எங்கே, எப்படி தங்குவார் என்றெல்லாம் நண்பர்களில் ஒருவரான முஜீப் மிகவும் கவலைப்பட்டு, வர வேண்டாம் என்று அவரைக் கெஞ்சி கேட்டுக்கொண்டார்.
  • ஆனால், டெல்லிக்கு வந்த பிறகு அவரைக் கட்டாயப்படுத்தித் திருப்பி அனுப்ப நண்பர்களுக்கு மனமில்லை. அவர் மீது இரக்கப்பட்டு அவரைப் பாதுகாப்பாக தங்கவைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். கெர்தாவும் சும்மா இருக்காமல் ஜாமியா மக்களுடன் நன்றாகக் கலந்து பழகி அவர்களுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொண்டார். ஜாமியா பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்துவிட்டார். பிற ஆசிரியர்களுக்குக் கிடைத்த குறைந்தபட்ச ஊதியமே போதும் என்று சொல்லி அதிலேயே எளிமையாக வாழ்ந்தார்.
  • ஜெர்மனியின் கிண்டர்கார்டன் பள்ளிகளில் கிடைத்த ஆசிரியப் பயிற்சி அனுபவத்தைப் பயன்படுத்தி, பாடம் படிப்பதை எளிமையாகவும் இனிமையாகவும் மாற்றினார். குழந்தைகள் பாடம் சம்பந்தமாக சந்தேகம் கேட்க அவரை எளிதாக அணுக முடிந்தது. அங்கே குழந்தைகளுக்கான தங்கும் விடுதியில் அவருக்கு வார்டன் (கண்காணிப்பாளர்) பொறுப்பும் தரப்பட்டது. அந்தப் பணிக்கு ‘அப்பாஜான்’ என்று பெயர். அதாவது ‘அக்கா’, அதுவே அவருக்கு நிலைத்தும்விட்டது.
  • குழந்தைகளைக் குளிப்பாட்டுவார், அவர்களுடைய தலைக்கு எண்ணெய் தேய்த்து சீவிவிடுவார், அவர்கள் சாப்பிடும்போதும் படிக்கும்போதும் விளையாடும்போதும் கூடவே இருப்பார். அவர்களில் யாருக்காவது உடல் நலிவு ஏற்பட்டால் மருந்து – மாத்திரைகளை வேளைக்குக் கொடுப்பதுடன் கஞ்சி, கஷாயம் போன்றவையும் கொடுத்து பக்கத்திலேயே படுத்துக்கொள்ளச் சொல்வார். இதனால் விடுதி மாணவிகளுக்கு ‘அம்மா’ இல்லாத குறையையும் தீர்த்துவைத்தார்.

பாயம்-இ-தாலிம்

  • ஜாமியாவில் படிக்கும் சிறுமிகளும் யுவதிகளும் சமூக சேவையில் பங்கேற்க அவர் ஊக்கப்படுத்தினார். ஜாமியாவில் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட ‘பாயம்-இ-தாலிம்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் சேர்ந்துகொண்டார். பெண்களும் சிறுமிகளும் பயனுள்ள வகையிலும் மகிழ்ச்சியாகவும் பொழுதுபோக்க பல கட்டுரைகளை எழுதினார். அதில் கை வேலைகள், ஓவியம், புதிய ஆடைகள் தயாரிப்பு உள்பட பலவற்றைச் சொல்லிக்கொடுத்தார். அத்துடன் சிறுமிகளையும் பெண்களையும் கட்டுரைகள் எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தினார்.
  • இந்தப் பணிகளோடு, ஜாமியாவின் நிறுவனர்களான சக நண்பர்கள் புரவலர்களைச் சந்திக்கும்போது பேசுவதற்கான குறிப்புகளையும் கூட்டங்களில் பேசுவதற்கான உரைகளையும் தயாரித்துக்கொடுத்தார். அவருடைய வேலை மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதாகவும், அரசியல்ரீதியாக அவர்களைத் தயார்படுத்தும் விதத்திலும் இருந்தன. இந்தியா வந்து இப்படி ஏழாண்டுகள் சேவை செய்த அவருடைய வாழ்க்கையில் விதி மிகப் பெரிய தடையை ஏற்படுத்தியது.

ஜெர்மனி யுத்தம்

  • இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனுடன் பிரிட்டன் யுத்தத்தில் இறங்கியதால் உலகில் தனது காலனிய நாடுகளில்கூட ஜெர்மானியர்களைக் கண்காணிக்கவும் தனிமைப்படுத்தவும் கைதுசெய்யவும் தொடங்கியது பிரிட்டிஷ் அரசு. இந்தியாவிலிருந்த கெர்தாவும் அப்படிச் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டு பிரிட்டிஷாரின் தனி முகாமில் கொண்டுபோய் அடைக்கப்பட்டார். அங்கே போதிய குடிநீர், உணவு, மருத்துவ சிகிச்சை இல்லாமல் எல்லோருமே வெவ்வேறு வகைகளில் நோய்வாய்ப்பட்டனர். குளிர், கொசுக்கடியிலிருந்து தப்ப அவர்களுக்குப் போர்வைகளைக்கூட தரவில்லை பிரிட்டிஷ் அரசு.
  • கெர்தாவும் 1940இல் முகாமில் அடைக்கப்பட்டார். அவரை ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பிவிட அதிகாரிகள் முடிவு செய்தனர். ஜெர்மனியில் யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்கிறார் என்று தெரிந்தும், பிரிட்டிஷ் அரசு அப்படியொரு முடிவை எடுத்தது. அந்த முகாமிலிருந்தபோதுகூட கெர்தா தன்னுடைய சமூக சேவையை சக முகாம்வாசிகளிடம் மேற்கொண்டார். அவர்களுக்குத் தேவைப்பட்ட மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார், மனம் அமைதி பெற ஆறுதல் வாரத்தைகளைக் கூறினார், அவர்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டார், அலைபாய்ந்த அந்த உள்ளங்களுக்கு நம்பிக்கையை ஊட்டினார்.
  • முகாமில் அடைக்கப்பட்ட ஓரிரு மாதங்கள் கழித்து கெர்தாவுக்கே வயிற்றில் புண் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவிட்டு மீண்டும் முகாமிலேயே அடைத்துவிட்டனர். முகாமில் அவர் ஓராண்டு இருந்தார். முகாமிலிருந்து விடுதலை செய்த பிறகு ஜாமியாவுக்குத் திரும்பி முன்பைப் போல உற்சாகமாக பணியில் ஈடுபட்டார். ஆனால், அவருடைய வயிற்றுப் புண் இப்போது புற்றுநோயாக பெரிதாகிவிட்டது. இதனால் உடல் மெலிந்து நடமாடும் திறன் இழந்து படுத்தபடுக்கையானார்.
  • பாடம் சொல்லித்தர முடியாவிட்டாலும் கட்டுரைகள் வாயிலாக தனது மாணவர்களுடன் தொடர்பில் இருந்தார். 1943 ஏப்ரலில், கெர்தா பிலிப்ஸ்பார்ன் என்ற அந்தத் தேவதை தன்னுடைய இன்னுயிரை இந்த மண்ணில் பிரிந்தது. ஜாமியா முஸ்லிம் குடும்பங்களுக்கான கல்லறையில் அவருக்குத் தனியிடம் தரப்பட்டது. “சொந்த ஊரிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் பயணப்பட்டு ஏதோ ஒரு நகரில் அடக்கம் செய்யப்பட்டார், ஆனால் அவரை மிகவும் நேசித்த ஜாமியா மக்கள் புடைசூழ அவர் அந்தக் கல்லறையில் உறங்குகிறார்” என்கிறார் சையதா ஹமீத்.
  • கெர்தாவின் மறைவுக்குப் பிறகு அந்தப் பல்கலைக்கழக மாணவர் விடுதியும் குழந்தைகளுக்கான காப்பகமும் ’அப்பாஜான்’ என்ற அவருடைய பெயரைச் சுமந்து தனது நன்றிக்கடனைச் செலுத்திக்கொண்டிருக்கிறது.

நன்றி: அருஞ்சொல் (22 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories