TNPSC Thervupettagam

ஜி20: கற்றதும் பெற்றதும்

September 13 , 2023 355 days 263 0
  • ஜி20 கூட்டமைப்பின் 18ஆவது உச்சி மாநாடு, டெல்லி பிரகதி மைதானில் அமைந்துள்ள பாரத் மண்டபம் சர்வதேச மையத்தில் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெற்றது. ஜி20-யின் உறுப்பு நாடுகள், ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பேற்றுவரும் நிலையில், 2022-2023ஆம் ஆண்டுக்கு இந்தியா தலைமையேற்றிருந்தது. அந்த வகையில், டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவில் நடைபெற்ற முதல் ஜி20 மாநாடாகவும் அமைந்தது.

ஜி20-யின் பின்னணி

  • 1990களின் இறுதியில் நிலவிய உலகளாவியப் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் விதமாக, ஜி20 (G20 / Group of 20) கூட்டமைப்பு 1999இல் தொடங்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய (வளர்ச்சியடைந்த-வளர்ந்துவரும்) பொருளாதார நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டமைப்பாகத் தொடங்கப்பட்ட இது, 2008 பொருளாதாரப் பெருமந்தத்துக்குப் பிறகு, நாடுகளின் தலைவர்கள் கூடும் உச்சி மாநாடாக ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது.
  • உலகப் பொருளாதாரத்துடன் தொடர்புடைய சர்வதேசப் பொருளாதார ஸ்திரநிலை, காலநிலை மாற்றம் சார்ந்த மட்டுப்படுத்துதல் (mitigation), நீடித்த வளர்ச்சி ஆகியவை சார்ந்த பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வுகளை எட்டுவதை இக்கூட்டமைப்பு முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
  • அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரிட்டன், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி ஆகிய 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் ஜி20 கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ளன; இந்நிலையில், இக்கூட்டமைப்பின் புதிய நிரந்தர உறுப்பினராக ஆப்ரிக்க ஒன்றியம் (African Union, AU) இந்த ஆண்டு இணைந்திருக்கிறது. அந்த வகையில், ஜி20 உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 21ஆக உயர்ந்திருக்கிறது.
  • இரண்டு நாள்கள் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில், பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தி, அண்மைக் காலத்தின் முக்கியப் பிரச்சினைகளைத் தலைவர்கள் விவாதிப்பார்கள். அதிலிருந்து கூட்டு நடவடிக்கைக்கான ஒருமித்த கருத்து, மாநாட்டின் முடிவில் கூட்டு அறிக்கையாக (பிரகடனம்) வெளியிடப்படும்.
  • ரஷ்ய-உக்ரைன் போர் சார்ந்த பிளவுபட்ட நிலைப்பாடுகளின் பின்னணியில், நிதி-பொருளாதார ஒழுங்குமுறை, காலநிலை மாற்றம் என முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை விவாதிப்பதற்காக இந்த ஆண்டு உச்சி மாநாடு கூடியது.

இந்தியாவின் தலைமை

  • இந்தோனேசியாவிடமிருந்து கடந்த ஆண்டு (1 டிசம்பர் 2022) தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இந்தியா, ‘வசுதைவ குடும்பகம்’ (ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்) என்பதைக் கருப்பொருளாக அறிவித்தது. வழக்கமான முறையில் ஒரே நிகழ்விடத்தில் அல்லாமல், 60 நகரங்களில் 200 கூட்டங்களை 125 நாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சம் அதிகாரபூர்வப் பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தியது - கூடுதல் செலவில் என்றாலும் - மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
  • இந்தியாவின் தலைமையில் ஏராளமான முன்னெடுப்புகள், பரந்த அளவில் ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட மூன்று அம்சங்களை அதிமுக்கியத்துவம் வாய்ந்தவையாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

ஒன்று

  • 55 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆப்ரிக்க ஒன்றியம் ஜி20-யில் இணைந்தது, இந்தியாவின் தெற்குலக முன்னெடுப்புக்கு (Global South initiative) முக்கியப் பங்காற்றும் எனக் கருதப் படுகிறது; இரண்டு: காலநிலை மாற்றத்தின் காலத்தில், புதைபடிவ எரிபொருளிலிருந்து மாற்று எரிசக்திக்கு மாறும் நடவடிக்கையில், இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்ட ‘உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி’ (The Global Biofuel Alliance) மிகப் பெரிய முன்னெடுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது; மூன்று: இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான இந்தியா-மத்தியக் கிழக்கு-ஐரோப்பா பாதை (India-Middle East-Europe Corridor) மிகப் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

புது டெல்லி பிரகடனம்

  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2021 முதல் ஜி20 மாநாடுகளில் பங்கேற்காத நிலையில், டெல்லி மாநாட்டிலும் பங்கேற்கப் போவதில்லை என ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்-க்குப் பதிலாகப் பிரதமர் லீ கியாங் பங்கேற்பார் என சீன அரசு அறிவித்திருந்தது. சீன அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து (2013) ஜி20 மாநாடுகளில் தவறாமல் பங்கேற்றுவந்த ஜின்பிங், டெல்லி மாநாட்டில் பங்கேற்காததற்குப் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன: சர்வதேசப் பொருளாதார ஒத்துழைப்புக்காகத் தொடங்கப்பட்ட ஜி20-யில் ‘புவிஅரசியல் பிரச்சினை’யான உக்ரைன் போர் பற்றிய விவாதத்தைத் தொடர்ச்சியாக உள்ளடக்குவது குறித்த அதிருப்தியை வெளிப்படுத்துவதன் மூலம் ஜி20-யையே அவர் நிராகரிக்கிறார் என்பது அவற்றுள் ஒன்று.
  • எனினும், உக்ரைன் போரை முன்னிட்டு ஜி20 நாடுகள், ஜி7-ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா-சீனா ஆகியவற்றுக்கு இடையே நிலவிவரும் கசப்பினைக் கடந்து ஒருமித்த கருத்தை ‘புது டெல்லி பிரகடனம்’ (New Delhi Declaration) உருவாக்கியிருப்பதாகச் சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த மாநாட்டின் வெற்றிகளில் ஒன்றாக இந்தப் பிரகடனம் முன்வைக்கப் படுகிறது.

கவனிக்க வேண்டியவை

  • 2008 தொடங்கி சுழற்சி முறையில்பல்வேறு நாடுகளில், உச்சி மாநாடுகள் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், தலைமைப் பொறுப்பிலிருந்து மாநாட்டை நடத்திய நாடுகளுக்கு அது ஒரு மாற்றத்துக்குரிய தருணமாக அமைந்ததில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு உச்சி மாநாட்டுக்கான, முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஏற்பாடுகளைக் கண்டு, ‘இது இந்தியாவின் தருணம்’ என சர்வதேச அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டனர்.
  • மற்றொருபுறம், உச்சி மாநாட்டுக்காகத் தலைநகரை அழகுபடுத்தும் நடவடிக்கையாக மக்களின் வாழிடங்களைப் பச்சை துணியால் மூடியது, மக்களை இடம்பெயரச் செய்தது, கட்டிடங்கள் இடிக்கப்பட்டது போன்ற செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகின. அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இம்மாநாட்டுக்கான இலச்சினையாகத் தாமரையைத் தேர்ந்தெடுத்தது தொடங்கி ‘இது மக்களின் ஜி20’ என அடையாளப்படுத்தியது வரை ஜி20-ஐ முன்னிட்டு பாஜக அரசாங்கம் மேற்கொண்ட பிரச்சாரங்களும் விமர்சிக்கப்பட்டன.
  • நவம்பர் 30 அன்று இந்தியாவின் தலைமைக் காலம் முடிவடையும் நிலையில், பிரேசில் அடுத்த தலைமையாகப் பொறுப்பேற்றிருக்கிறது. ஏற்றத்தாழ்வு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் ஆகியவற்றில் பிரேசில் கவனம் கொள்ளும் என அந்நாட்டின் அதிபர் லூலா டி சில்வா அறிவித்துள்ளார்.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories