TNPSC Thervupettagam

ஜி20 மாநாட்டால் இந்தியாவுக்கு என்ன பலன்

September 18 , 2023 432 days 376 0
  • வெற்றிகரமாக நிலவில் இறங்கிய சந்திரயான்-3, உலக செஸ் போட்டியில் இரண்டாமிடம், ஈட்டி எறிதலில் தங்கம் ஆகிய வெற்றிகளைத் தொடர்ந்து, எதிர்பார்த்ததைவிட அதிகமான பாராட்டுகளையும் நன்மைகளையும் இந்தியாவிடம் சேர்த்திருக்கிறது, டெல்லியில் முடிவுற்ற ஜி20 உச்சி மாநாடு.
  • சுழற்சி முறையில் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கிடைப்பதுதான் ‘ஜி-20’ என்றழைக்கப்படும் ‘குருப் ஆப் 20’ அமைப்பின் தலைமைப் பொறுப்பு. அதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 10 மாதங்களாக இந்தியா நடத்தியிருக்கும் விதத்தைப் பார்த்து உலக நாடுகள் பல வியக்கின்றன, பாராட்டுகின்றன.
  • உலக தலைவர்கள் வெளியிட்ட உச்சி மாநாட்டு கூட்டுப் பிரகடனம், முந்தைய ஆண்டு இந்தோனேஷியா தலைமையில் நடந்த பாலி மாநாட்டின் பிரகடனம் போல் இல்லை. எந்த நாட்டின் முணுமுணுப்பும் எதிர்ப்பும் இல்லாமல் ஒருமனதாக வெளியிடப்பட்டிருக்கிறது.
  • ரஷ்யா, சீனா ஒரு பக்கமும் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் போன்ற நாடுகள் எதிர்ப்புறமும் பிரிந்து நின்று, உக்ரைன் தொடர்பாக அவரவர் நிலைப்பாடுகளை தீர்மானத்தில் கொண்டுவர முயன்றனர். இந்நிலையில், இருசாராருக்கும் ஏற்புடைய கூட்டுப்பிரகடனம் வெளியிட்டிருப்பது அசாத்தியத்திற்கும் அப்பாற்பட்டது. அதை வெற்றிகரமாக, இரு சாராரும் போற்றும் விதம் அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்தியா. இது மிகப்பெரிய வெற்றி.
  • இதை சாத்தியபடுத்த இந்தியப் பிரதமர் மோடி, இங்கிலாந்து, ஜப்பான் பிரான்ஸ் நாட்டுத் தலைவர்களுடன் நேரடியாகப் பேசியிருக்கிறார். இந்திய ஷெர்பா தலைவர் அமிதாப் காந்த், மொத்தம் 200 மணி நேரங்கள் பலநாட்டுப் பிரதிநிதிகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
  • ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கை லாரவ், மாநாட்டுத் தீர்மானம் ஒரு மைல்கல் என்று பாராட்டுகிறார். அதைவிட ஆச்சரியகரமாக சீனாவின் வெளி விவகாரத் துறை அதிகாரி மாவோ நிங், டெல்லி மாநாட்டின் தீர்மானங்கள், உலக பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான ’பாசிட்டிவ் சிக்னல்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா தலைமைப் பொறுப்பில் இருந்ததால்தான் இவையெல்லாம் சாத்தியமானது என்கிறார் ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதி.
  • 43 உலகத் தலைவர்கள், 25,000 வெளியுறவு அதிகாரிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் பேசப்பட்டவையும், தலைவர்கள் நடந்துகொண்டவிதமும், வெளிவருமா என்று பலரும்சந்தேகப்பட்ட நிலையில்,முதல்நாளே ஒருமனதாக வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனமும் உலக நாடுகள் தற்போது இந்தியாவை எவ்வளவு மதிக்கின்றன, இந்தியாவின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கின்றன என்பதை காட்டுவதாக எடுத்துக் கொள்ள முடியும்.
  • கிடைத்திருக்கும் மரியாதைக்கும், அங்கீகரிப்புகளுக்கும் காரணம் கூட்டுப் பிரகடனம் மட்டுமல்ல. தலைமையேற்கும் நாடு என்கிற முறையில், ஜி 20 அமைப்பு நாடுகள் செய்ய வேண்டியவையாக இந்தியா முன்வைத்த அஜெண்டா ஆரம்ப நேரத்திலிருந்தே தொடங்கி விட்டன என்று சொல்லலாம்.

உலக தலைவர்கள் பாராட்டு

  •  ‘ஒரு பூமி-ஒரு குடும்பம்-ஒரு எதிர்காலம்’, தொடரக்கூடிய அளவிலான வளர்ச்சி (சஸ்டெயினபிள் குரோத்), அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (இன்குளூசிவ் குரோத்), சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்காத எரிசக்தி (கிரீன் எனெர்ஜி) என இந்தியா முன்வைத்த ‘அஜெண்டா’ அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
  • ‘குளோபல் சவுத்’ என்று அழைக்கப்படும் ஏழை மற்றும் வளரும் நாடுகளை கருத்தில்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்களை கொண்டுவர பிரதமர் மோடி காட்டிய அக்கறையை பல நாட்டுத் தலைவர்களும் பாராட்டி, ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
  • 55 நாடுகள் சேர்ந்த ஆப்ரிக்க யூனியனை, ஜி 20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக சேர்க்க, பாரதப் பிரதமர் முன்மொழிந்ததை ஏனைய தேசங்களின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதுடன் அப்போதே சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
  • உலக சுற்றுச்சுழல் நன்மைக்காக பெட்ரோலுடன் 20% எத்தனாலை கலந்து பயன்படுத்துவதை அனைத்து நாடுகளும் செய்ய வேண்டும் என்று பேசியதுடன் அதற்காக ‘குளோபல் பயோ பியூல் அலையன்ஸ்’ ஏற்படுத்தி அதற்கான ஆவணங்களில் அமெரிக்கா, பிரேசில், வங்கதேசம், இத்தாலி, தென்னாப்பிரிக்கா, ஐக்கியஅரபு அமீரகம், அர்ஜெண்டினா, மொரீஷியஸ் ஆகிய நாட்டுப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனா பெரிய தடையாக இருந்து வருவது மட்டுமல்லாமல், உலக அரங்கில் கூடுதல் அதிகாரத்தைப் பெறவும், தங்கள் நாட்டுப் பொருட்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யவும் ஒரு யுக்தி செய்தது. அதன் பெயர், ‘பெல்ட் அண்ட் ரோடு’ அல்லது ‘ஒன் பெல்ட் ஒன் ரோடு’.
  • ‘ஒன் பெல்ட் ஒன் ரோடு’ என்ற, கண்டங்களுக்கு இடையேயான பல லட்சம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும், சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தை (காரிடார்) சீனா, 2013-ல் தொடங்கியது. இதற்காக இலங்கை, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளுக்கு கடன் கொடுத்து அந்தப் பணத்தில் அந்தந்த நாடுகளில் துறைமுகம் போன்ற பெரிய கட்டுமானங்களை சீனாவே செய்கிறது. இதனால் பல நாடுகள் சீனாவிடம் கடனாளியாவதுடன், சீனாவின் பொருட்களை வாங்கவும் வேண்டியிருக்கிறது.

ஸ்பைஸ் ரூட் வழித்தடம்

  • இந்த சூழலில் சீனாவைப் போலவே, ‘இந்தியா- மிடில் ஈஸ்ட்- யூரோப் காரிடார்’ (IMEC)என்ற கடல் மற்றும் தரைவழி புதிய ‘ஸ்பைஸ் ரூட்’ வழித்தடம் ஒன்றை ஜி 20 மாநாட்டில் இந்தியா அறிவித்திருக்கிறது. 8,611 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடம் மும்பையில் தொடங்கி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் வழியாக ஐரோப்பா போய், அங்கிருந்து அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க சந்தைகளையும் அடையும்.
  • இந்த திட்டத்தின் பகுதிகளாக, கடல், இருப்புப்பாதைகள் மற்றும் சாலைகளை ஒட்டி, ஹைட்ரஜன் குழாய்கள் மற்றும் ஆப்டிக்கல் கேபிள் பைபர் குழாய்களை அமைப்பதற்கும் தொடர்புடைய 7 நாடுகளும் ஒப்புக்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.
  • ஆக, உலக மக்கள் தொகையில் 65%, உலக வர்த்தகத்தில் 75% மற்றும் மொத்த பொருளாதாரத்தில் 85%, கொண்ட பலமிக்க 20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஒரு சர்வேதேச உச்சி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. வந்தார்கள், உண்டார்கள், புகைப்படங்கள் எடுத்தார்கள், போனார்கள் என்பதுபோல நடக்கவில்லை. மாநாட்டுக்கு முன்பே தீவிர திட்டமிடல்களும் வேலைகளும் நடந்திருக்கின்றன.
  • தொடங்கிய நாளிலிருந்து அல்லது அதற்கு முன்பிருந்தே கூட இந்தியா இதற்காக ஆயத்தமாகி, தலைமைப் பொறுப்பில் இருந்த ஓராண்டு முடிவதற்கு முன்பே பல மட்டங்களில் கூட்டங்கள் நடத்தி, பல நாட்டினரையும் ஈடுபடுத்தியிருக்கிறது.
  • ‘பைனான்ஸ் டிராக்’ மற்றும் ‘ஷெர்பா டிராக் என இரு வகையான வேலைகளுக்காகவும், உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொண்ட 18 கூட்டங்கள், 80 ‘ஒர்கிங் லெவல்’ கூட்டங்கள் மற்றும் 33 ‘என்கேஜ்மெண்ட்’ குழுக்கள், சென்னைஉள்பட இந்தியாவின் 60 வெவ்வேறு நகரங்களில் கூடிப் பேசியிருக்கிறார்கள். அவற்றில் காட்சிப்படுத்துதல்கள், கலந்துரையாடல்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான முன்னெடுப்புகள் என பலவும் நடந்திருக்கின்றன.

வியாபாரம் அதிகரிக்கும்

  • பல நாடுகளும் அவற்றுக்கு நன்மை கிடைக்கும் விஷயங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப் பட்டிருப்பதற்காக திருப்தி தெரிவித்திருக்கின்றன. அத்துடன் இங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக உலக நாடுகள் பாராட்டி இருக்கின்றன. இந்த மாநாட்டால் அந்நிய நேரடி முதலீடு மேலும் அதிகரிக்கும். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க முன்வரும்.
  • இந்தியாவைப் பொருத்தவரை அடுத்த சில தசமங்களுக்கு வியாபார மற்றும் பிற வாய்ப்புகளை பெருக்கித் தந்திருக்கும் ஒரு மாநாடு என்று கூட இதைச் சொல்லலாம்.
  • குறிப்பாக, பொருளாதார ரீதியாக தனது பலத்தை அதிகரிக்கவும் உலக அளவில் தனதுஅதிகாரத்தை அதிகரித்துக்கொள்ளவும் ‘பெல்ட் அண்ட் ரோடு’ என்ற திட்டத்தை சீனா திட்டமிட்டது. சீனாவில் இருந்து பல நாடுகள் வழியாகஅமெரிக்கா வரை நீளும், கடல் போக்குவரத்துக்கான இந்த கட்டுமான திட்டத்துக்கு இணையாக, இந்தியா ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.
  • அதில், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

ஏற்றுமதி அதிகரிக்கும்

  • பல ஆண்டுகளுக்கு சில லட்சம் கோடி ரூபாய் செலவில் செய்யப்படவிருக்கும் ‘நியு ஸ்பைஸ் ரூட்’ வழித்தட பணிகளால், இந்திய ரயில்வே, கட்டுமான நிறுவனங்கள், இரும்பு சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் தவிர வேறு பல தொழில், வியாபார வாய்புகள் பெருகும். இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு கூடும்.
  • மொத்தத்தில், ஜி 20 உச்சி மாநாட்டை இந்தியா சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது. உலக நன்மைக்காக அடுத்தடுத்து செய்யப்பட வேண்டியவை குறித்து சக்திமிக்க நாடுகள் இணைந்து பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன. இவை உலகமே ஒரு குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்ற இந்தியாவின் ஜி20 முழக்கத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது
  • இந்தியாவின் ‘நியு ஸ்பைஸ் ரூட்’ வழித்தட பணிகளால், இந்திய ரயில்வே, கட்டுமான நிறுவனங்கள், இரும்பு சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் தவிர வேறு பல தொழில், வியாபார வாய்புகள் பெருகும். இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு கூடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories