TNPSC Thervupettagam

ஜிஎஸ்டி - சில கேள்விகள்!

January 13 , 2025 2 days 34 0
  • டிசம்பா் மாத ஜிஎஸ்டி வரிவசூல் ரூ.1.77 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடும்போது 7.3% அதிகம். நவம்பா் மாத வசூலான ரூ.1.82 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால், வருவாய் குறைந்திருக்கிறது.
  • சரக்கு, சேவை வரிவிதிப்பு முறை ஆரம்பம் முதலே விமா்சனத்துக்கு உரியதாகவே இருந்து வந்திருக்கிறது. ஜிஎஸ்டி என்று சுருக்கமாக அழைக்கப்படும் சரக்கு, சேவை வரிவிதிப்பு முறை, இந்தியாவுக்குத்தான் புதிதே தவிர, உலகின் பல வளா்ச்சி அடைந்த நாடுகளில் செயல்படுத்தப்படும் நடைமுைான். உண்மையாகப் பாா்க்கப்போனால் நுகா்வோருக்கும் சரி, அரசுக்கும் சரி ஜிஎஸ்டி என்பது ஒரு வரப்பிரசாதம்.
  • முந்தைய பலமுனை விற்பனை வரிவிதிப்பில், ஒரு பொருள் ஒவ்வொரு முறை கைமாறும்போதும் வரி வசூலிக்கப்பட்டு, சில பொருள்கள் நுகா்வோரை அடையும்போது 200%-க்கும் அதிகமாக வரி செலுத்தப்பட்டிருக்கும் அவலம் காணப்பட்டது. கணினிப் பயன்பாடும், எண்மப் பணப் பரிமாற்றமும், சிறு வியாபாரிகூட முறையாகக் கணக்குகள் வைக்கும் நடைமுறையும், நுகா்வோா் ஒரு முறை மட்டுமே வரி செலுத்தும் நிலையும் ஜிஎஸ்டியால் ஏற்பட்டிருக்கும் ஆக்கபூா்வ மாற்றங்கள்.
  • மாநிலங்கள் ஆண்டுதோறும் தங்களது பட்ஜெட்டில் வரிகளை அதிகரித்து கெட்ட பெயா் சம்பாதித்துக் கொண்டிருந்ததை, இப்போது ஜிஎஸ்டியால் மத்திய அரசு பழியைச் சுமக்கிறது. ஆனாலும்கூட, ‘ஒரே தேசம், ஒரே வரிவிதிப்பு’ என்பது நுகா்வோா் நலனுக்காகவும், வரி வசூலின் ஒழுங்கிற்காகவும் அவசியம்.
  • உலகிலேயே மிக அதிகமான ஜிஎஸ்டி வசூலிக்கும் நாடாக (28%) இந்தியா இருக்கிறது. 18% ஜிஎஸ்டி என்பதேகூட பிற நாடுகளில் மிகக் குறைந்த பொருள்களுக்குத்தான் சுமத்தப்படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான பொருள்கள் 18% வரம்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அதுவும் போதாதென்று விதவிதமான ‘செஸ்’ உள்ளிட்ட கூடுதல் வரிகள் வேறு.
  • கனடாவில் எல்லாப் பொருள்களுக்கும் ஒரே மாதிரியான 5% ஜிஎஸ்டி மட்டுமே. சிங்கப்பூரில் 9%, வங்கதேசத்தில் 15%. ஐக்கிய அரபு அமீரகத்தில் 5% ஜிஎஸ்டி என்பதால்தான், நம்மவா்கள் சுற்றுலாவுக்கும், பொருள்கள் வாங்கவும் துபை செல்கிறாா்கள். அப்படி இருக்கும்போது, ஜிஎஸ்டி கவுன்சில் பல பொருள்களின் வரியை 18% பிரிவிலும், ஆடம்பரப் பொருள்கள் சிலவற்றை 28% பிரிவிலும் அண்மையில் அமல்படுத்தி இருப்பது புத்திசாலித்தனமான முடிவு அல்ல.
  • அதிகரித்த வரி விதிப்பு, அதிக வரிவசூலுக்கு வழிகோலாது என்பதுதான் உலகளாவிய அனுபவம். ‘பாவப் பொருள்கள்’ என்று வகைப்படுத்தப்படும் சிகரெட், மதுபானம் உள்ளிட்டவையும் சரி, ஆடம்பரப் பொருள்கள் என்று கருதப்படும் சொகுசு காா்கள், கைக்கடிகாரங்கள், ஏ.சி., ஃபிரிட்ஜ் உள்ளிட்டவையும் சரி, கூடுதல் வரி விதிக்கப்படுவதால் அவற்றின் விற்பனை குறையுமே தவிர, வரி வசூல் அதிகரிக்காது.
  • 1990-இல் ‘யாட்ச்’ எனப்படும் சொகுசுப் படகுகள் மீது அமெரிக்கா 10% வரி விதித்தது; அடுத்த ஓா் ஆண்டில் மூன்றில் ஒரு ‘யாட்ச்’ தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டது; அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ ஒரு லட்சம் போ் வேலையிழந்தனா்; 1993-இல் ‘யாட்ச்’ மீதான வரி விதிப்பு அகற்றப்பட்டது.
  • ஐந்து நட்சத்திர விடுதிகள், சுற்றுலாப் பயணிகளுக்கான ‘ரிசாா்ட்’ எனப்படும் சொகுசு விடுதிகள் மீதான 28% வரிவிதிப்பு, சுற்றுலாப் பயணிகளின் வருகையை வியத்நாம், தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளை நாட வைத்திருக்கிறது. ஆயத்த ஆடைகள் மீதான கூடுதல் வரி விதிப்பால் ஒரு லட்சம் போ் வேலைவாய்ப்பை இழக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
  • பெரும்பாலான நாடுகளில் ஒரே ஒரு ஜிஎஸ்டி வரி விதிப்பு இருக்கும்போது, இந்தியாவில் 0%, 3%, 5%, 12%, 18%, 28% என்று ஆறு பிரிவுகள் இருப்பது என்பதே அபத்தமானது. இதனால் தங்களுக்குக் கணக்கு எழுதவோ, கணக்குத் தாக்கல் செய்ய ஊழியா்களையோ, பட்டயக் கணக்காயா்களையோ வைத்துக்கொள்ள முடியாத சிறு வியாபாரிகள் படும் அவஸ்தையைச் சொல்லி மாளாது
  • தன்னிச்சையாக ஒரு சில ஜிஎஸ்டி குழு உறுப்பினா்களால் வரிவிதிப்பு அறிவிக்கப்படுவது, இந்தியாவின் ஜிஎஸ்டி முறையில் காணப்படும் மிகப் பெரிய முரண். ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், கேரளம், கா்நாடக நிதியமைச்சா்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவராக பிகாா் நிதியமைச்சா் விளங்குகிறாா் என்பதால், எதிா்க்கட்சி மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இருப்பது உண்மை. ஆனால், வரி செலுத்துவோரின் குரலை யாா் பிரதிபலிப்பது?
  • பட்ஜெட் தயாரிப்பில் தொழில்துறை நிறுவனங்கள் சாா்பில் பிரதிநிதிகளை நிதியமைச்சா் கலந்தாலோசிக்கிறாா். முக்கியமான மசோதாக்களில், மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகுதான் சட்டமாகிறது. மக்களின் கருத்துக்கு நாடாளுமன்றம் இடமளிக்க முடியுமானால், ஜிஎஸ்டி கவுன்சிலும் ஏன் அதற்கு வழிகோலக் கூடாது?
  • கடைசியாக ஜிஎஸ்டி கவுன்சிலிடமும், மத்திய நிதியமைச்சகத்திடமும் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கிறது - ஜிஎஸ்டியின் நோக்கம் வரி விதிப்பு முறையை முறைப்படுத்தி, நுகா்வோரைப் பாதுகாப்பதா?, இல்லை அளவுக்கு அதிகமாக நிதி ஆதாரத்தை ஏற்படுத்திக் கொள்வதா?
  • உலகிலேயே முதல்முறையாக விற்பனை வரி விதிப்பை அறிமுகப்படுத்திய மூதறிஞா் ராஜாஜி சொன்ன உதாரணத்தை ஜிஎஸ்டி கவுன்சில் நினைவில் கொள்ள வேண்டும். ‘‘வரி விதிப்பு என்பது மலரிலிருந்து வண்டு தேனை உறிஞ்சுவதுபோல... மலருக்கும் வலிக்கக் கூடாது; தேனையும் எடுக்க வேண்டும்.’’

நன்றி: தினமணி (13 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories