TNPSC Thervupettagam

ஜி.பி.எஸ். நோயிலிருந்து எப்படித் தப்பிப்பது?

February 8 , 2025 5 hrs 0 min 11 0

ஜி.பி.எஸ். நோயிலிருந்து எப்படித் தப்பிப்பது?

  • மகாராஷ்டிர மாநிலம் புனே நகரத்திலும் அதன் புறநகர் பகுதிகளிலும் ஜிபிஎஸ் எனும் கில்லன் பாரே சிண்ட் ரோம் (Guillain-Barre Syndrome) கொள்ளை நோயாக உருவெடுத்துள்ளது. இதுவரை 163 பேருக்கு கில்லன் பாரே சிண்ட்ரோம் நோய் பாதித்துள்ளது. இதில் 47 பேர் தீவிர சிகிச்சையிலும், 21 பேர் செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலையிலும் உள்ளனர்.

நரம்புச் செயலிழப்பு:

  • கில்லன் பாரே சிண்ட்ரோம் என்பது நமது உடலின் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நோய் நிலையாகும். தசைகளுக்கு உணர்வூட்டும் நரம்புகளில் செயலிழப்பை ஏற்படுத்தி வாதத்தை ஏற்படுத்தும் நோய் இது. சிலருக்கு இதன் விளைவாகத் தசைகள் வலுவிழந்து தளர்வுறுகின்றன.
  • கை, கால்களில் வாதம் ஏற்பட்டுச் செயலிழந்துவிடும். சுவாசிப்பதற்கு உதவும் நெஞ்சுப் பகுதித் தசைகளும் செயலிழந்து சுவாசச் செயலிழப்பு ஏற்பட்டு மரணமும் ஏற்படலாம். இதுவரை புனேயில் ஐந்து பேர் சுவாசச் செயலிழப்பால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • முதலில் உள்ளங்கை, பாதங்களில் குத்துவது போலவும் சுர்ரென்ற உணர்வும் ஏற்படும்; சில நாள்களில் கை, கால்கள் முழுவதுமாகச் செயலிழக்கும் நிலை ஏற்படும். நோயாளி வெளிப்படுத்தும் நோய் அறிகுறிகளை வைத்து மட்டுமே ஜிபிஎஸ் நோயைக் கண்டறிய முடியும். இதற்கென ரத்தப் பரிசோதனையோ வேறு பரிசோதனைகளோ இல்லை.

எவ்வாறு ஏற்படுகிறது?

  • நமது நோய் எதிர்ப்பு ஆற்றல் நமது நரம்புகளுக்கு எதிராக வினையாற்றுவதால் இந்த ஜிபிஎஸ் நோய் ஏற்படுகிறது. சில வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளினால் தொற்று ஏற்பட்டு மீளும் போதும், சில மருந்துகள் வழங்கப்படும் போதும், சில தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்பும் அரிதிலும் அரிதாக ‘மாலிக்யூலர் மிமிக்ரி’யின் ( இரண்டு மூலக்கூறுகள் ஒரே மாதிரி இருப்பது) காரணமாக இந்த ஜிபிஎஸ் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

மாலிக்யூலர் மிமிக்ரி:

  • பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட கிருமிகள் உடலுக்குள் நுழையும் போது அவற்றைத் தாக்கி அழிக்க முற்படும் நமது நோய் எதிர்ப்பு ஆற்றலானது, அந்தக் கிருமிகள் போலவே உருவம், அமைப்பில் ஒத்துக் காணப்படும் நமது நரம்பு செல்களையும் சேர்த்தே தாக்கிவிடுகின்றன. இதை‘மாலிக்யூலர் மிமிக்ரி’ என்று அழைக்கிறோம். மேலும், இந்த நோய்க்குச் சிகிச்சையாக, இம்யூனோ குளோபுலின் எனும் எதிர்ப்பு சக்தி சிகிச்சையும், பிளாஸ்மா மாற்று சிகிச்சையும் உடனடியாகப் பலனளிக்கும்.
  • எனினும், இந்தச் சிகிச்சை மேம்பட்ட நகரங்களில் இருக்கும் நவீன மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. சுவாசச் செயலிழப்பு ஏற்படுவதற்கு முன் செயற்கை சுவாசம் வழங்குவதும் பிரதான சிகிச்சையாகும். துரிதமான, தீவிர சிகிச்சை மூலம் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.

கேம்பைலோபாக்டர் ஜெஜுனி:

  • புனேயில் பரவிவரும் ஜிபிஎஸ் நோய்க்கான காரணம் கேம்பைலோ பாக்டர் ஜெஜுனி (Campylobacter jejuni) எனும் பாக்டீரியா. உலகில் பதிவு செய்யப் படும் மூன்றில் ஒரு ஜிபிஎஸ் நோய் நிலை - இந்த கேம்பைலோபாக்டர் தொற்றுக்குப் பிறகு ஏற்படுகிறது. கேம்பைலோபாக்டர் பாக்டீரியா, வெப்ப ரத்தம் கொண்ட உயிரினங் களான கோழி, கால்நடைகள், பன்றி, செம்மறி ஆடு, பூனை, நாய் விர ஓடுள்ள மீன்கள் ஆகியவற்றில் பரவலாகக் காணப்படுகிறது. இந்த பாக்டீரியா வேறு விலங்குகளில் நோய் நிலையை ஏற்படுத்துவ தில்லை.
  • தொற்றுக்குள்ளான மாமிசம், நீரை உட்கொள்ளும்போது தொற்று மனிதர்களுக்குப் பரவுகிறது. உலகில் அதிக அளவில் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் பாக்டீரியா இதுதான். எனவே, தொற்று ஏற்பட்டு இரண்டு முதல் ஐந்து நாள்களுக்குள் வயிற்றுப் போக்கு (சில நேரத்தில் ரத்தத்துடன் வெளியேறும்), வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். இந்தத் தொற்று, பலருக்குச் சாதாரணமாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்லும்.
  • இருப்பினும், இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், எதிர்ப்பு ஆற்றல் குன்றியோர், முதியோர் ஆகியோருக்குச் சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம். இந்தத் தொற்று ஏற்பட்ட சில நாள்கள் முதல் சில வாரங்களில் பத்தாயிரம் பேரில் ஒருவர் என்கிற விகிதத்தில் ஜிபிஎஸ் ஏற்படலாம்.
  • பொதுவாக கேம்பைலோபாக்டரைத் தொடர்ந்து வரும் ஜிபிஎஸ் நோய் சற்று தீவிரத்துடன் வெளிப்படும் என்று அறியப்பட் டுள்ளது. பாதுகாப்பற்ற- முறையாகச் சமைக்கப் படாத மாமிசத்தை உண்ணுதல், சரியாகக் காய்ச்சப்படாத பாலையும் அசுத்தமான நீரையும் பருகுவதால் இந்தத் தொற்று மனிதர்களுக்குப் பரவுகிறது.

தடுப்பது எப்படி?

  • நாம் உண்ணும் உணவு முறையாகச் சமைக்கப்பட்டிருப்பதையும் சூடாகச் சாப்பிடுவதையும் உறுதிசெய்ய வேண்டும். மாமிசம் உள்ளிட்ட எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் சமைக்கும்போது 70 டிகிரி செல்சி யஸுக்கு மேல் வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • சமைத்த உணவை இரண்டு முதல் நான்கு மணிநேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். ஒருவேளை நீண்ட நேரம் கழித்து உணவைச் சாப்பிடுவதாக இருந்தால், சமைத்து ஆறியதுமே குளிர்பதனப் பெட்டியில் ஐந்து டிகிரி செல்சியஸுக்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டும். குளிர்பதனப் பெட்டியில் நீண்ட காலம் உணவை வைத்திருக்கக் கூடாது.
  • குளிர்பதனப் பெட்டியில் உணவுப் பொருள்களை வைக்கும்போது, சமைத்த உணவு தனியாகவும், சமைக் காத உணவுப் பொருள்கள் குறிப்பாக மாமிசம், மீன் போன்றவற்றைத் தனியாகவும் வைக்க வேண்டும். காய்ச்சாத கறந்த பாலைப் பருகக் கூடாது. நீரை நன்றாகக் காய்ச்சிப் பருக வேண்டும். நீரைக் காய்ச்ச வழி யற்ற நிலையில் குளோரின் உள்ளிட்ட கிருமிநாசினி சேர்த்துத் தொற்று நீக்கம் செய்த பிறகு பருக வேண்டும்.
  • உணவை உண்பதற்கு முன்னும், உணவைத் தயாரிக்கும் முன்னும், உணவைப் பரிமாறுவதற்கு முன்னும் கட்டாயம் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்றாகக் கழுவி, சுத்தம் செய்தபின் பயன்படுத்த வேண்டும். பச்சையாகச் சாப்பிடு வதாக இருந்தால் அவற்றின் தோல் பகுதியை நீக்கிவிடுவது சிறந்தது.
  • மாமிசம், காய்கறி, மீன், முட்டை உள்ளிட்ட பொருள்களை வாங்குமிடம் சுத்தமாக இருப்பதையும், வெளி உணவைச் சாப்பிட நேர்ந்தால் அவை தயாரிக்கப்படும் இடங்கள் சுத்தமாக இருப்பதையும் சுத்தமான நீரைப் பருகுவதையும் உறுதிசெய்ய வேண்டும். இதைப் பின்பற்றினால் கேம்பைலோபாக்டர் தொற்றைத் தவிர்த்து அதன் மூலம் ஜிபிஎஸ் நோய் கொள்ளைநோயாக உருவெடுக்காமல் தடுக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories