- ஆங்கிலேயரான ஜிம் கார்பெட், இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலம் நைனிடாலில், 25-07-1875இல் பிறந்தார். அவருடைய பெற்றோர் கோடைக் காலத்தில் நைனிடாலிலும், குளிர்காலத்தில் தற்போதைய உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள காலதுங்கி என்கிற காடுகளால் சூழ்ந்த கிராமத்திலும் வசித்து வந்தார்கள்.
- சிறு வயதிலிருந்தே ஜிம் கார்பெட்டிற்கு காடுகளில் சுற்றித் திரியும் வாய்ப்பு கிடைத்ததால் காடுகளையும் காட்டுயிர்களையும் அவர் நேசித்தார். சாகசத்திற்காக வேட்டையிலும் ஈடுபட்டார். அவருடைய காலத்தில் வேட்டை என்பது கௌரவமாகக் கருதப்பட்டது.
- அவரின் கூரியக் கண்பார்வை, கேட்கும் சக்தி, நினைவாற்றல், துணிச்சல், விலங்குகள், பறவைகள் போல ஒலியெழுப்பும் திறன், இரவில் நிலவு வெளிச்சத்திலும், நட்சத்திர ஒளியிலும்கூட சுடும் ஆற்றல், புலி, சிறுத்தை ஆகியவற்றின் காலடித் தடத்தை வைத்து அவற்றின் வயது, பாலினம், ஆரோக்கியம் ஆகிய அம்சங்களைக் கணித்தல் போன்ற திறமைகள் காடுகளின் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்' என அவரைப் போற்ற வைத்தது.
வேட்டை இலக்கியங்கள்:
- ஜிம் கார்பெட்டின் காலத்திற்கு முன்பும், அவர் காலத்திலும் ஆங்கிலேய வேட்டைக்காரர்கள் நிறையப் பேர் இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் அந்த நிகழ்வுகளை இலக்கியத் தரத்தில் எழுதி மக்களின் கவனத்தைக் கவரவில்லை. ஜிம் கார்பெட் மட்டுமே அந்தப் பணியை நேர்த்தியாகச் செய்தார்.
- அதன் காரணமாகவே ஜிம் கார்பெட் காலமாகி 68 ஆண்டுகள் ஆனபோதிலும், இன்றுவரை அவருடைய வேட்டை இலக்கிய நூல்கள் விற்பனையாகி வருகின்றன.
- புலிகளைப் பற்றிய அவரின் கருத்து ‘வேங்கை பெரிய மனது படைத்த கனவான். அது எல்லையற்ற தைரியம் மிக்கது. பொதுமக்கள் அபிப்பிராயம் திரண்டு, அதை ஆதரிக்கவில்லை என்றால், இந்தியா தன் விலங்கினங்களிலேயே, மிக உன்னதமான ஒன்றை இழந்து விடும்..' எளிய அப்பாவி மலைவாழ் மக்களை ஆட்கொல்லிப் புலிகளும், சிறுத்தைகளும் கொன்றபோதிலும், அந்த ஆட்கொல்லிகளை ஜிம் கார்பெட் கொன்ற பின் அவற்றைப் பற்றி இப்படி எழுதியுள்ளார்.
மோகன் ஆட்கொல்லி:
- ‘எனக்கு என்ன நேருமோ என்ற பயத்தினாலோ, எனக்கு அரிதாகக் கிடைத்த ஒரு வாய்ப்பை இழந்து விடுவேனோ என்ற பரபரப்பாலோ, அது எந்தக் காரணமாக இருந்தாலும் சரிதான். நான் அந்த ஆட்கொல்லியைத் தூக்கத்திலிருந்து எழுப்பாமல் போய்விட்டேன். யுத்தத் தர்மப்படி அதற்கு ஒரு வாய்ப்பு வழங்காமல் போனது என் மனதை இன்னும் உறுத்திக்கொண்டே இருக்கிறது. '
ருத்ரபிரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை:
- ‘இந்தியாவிலேயே அதிகமாக வெறுக்கப் பட்ட அந்தச் சிறுத்தை செய்த ஒரே குற்றம் - இயற்கைச் சட்டத்திற்கு எதிரானதல்ல. ஆனால், மனிதனின் சட்டத்திற்கு எதிரானது - அது மனிதர்கள் ரத்தம் சிந்தக் காரணமாக இருந்தது என்பதுதான். மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்கிற நோக்கமெல்லாம் அதற்கு இல்லை. இயலாமையால் தன் பசியைப் போக்கிக்கொள்ள வேண்டுமே என்ற காரணத்தினால்தான் அது மனிதர்களைக் கொன்றது.'
பீபல் பானி வேங்கை:
- ‘இந்தப் புலி ஆள்கொல்லியாக மாறிவிடும் என்று தவறாக நினைத்து அதைச் சுட்டுக் கொன்று விட்டேன். அதற்கு ஏற்கெனவே ஏற்பட்ட காயங்களைப் பரிசீலித்ததில், அந்தக் காயங்கள் அநேகமாக ஆறிப் போய் இருந்ததைக் கண்டேன். என்னுடைய தப்பான அபிப்பிராயம் காரணமாக அதைக் கொன்றுவிட்டதை நினைத்து வருந்தினேன்.
- அடித் தொண்டையில் அது கத்தியழைக்கும் குரல், குன்றின் அடிவாரம் எல்லாம் எதிரொலிப்பதைக் காட்டு விலங்குகளும், நானும் இனி எப்போது கேட்கப் போகிறோம். அதுவும், நானும் பதினைந்து வருட காலமாக நடந்து பழகிய வேட்டைத் தடங்களில், எனக்குப் பரிச்சயமான அதன் காலடிச் சுவடுகளை இனி எப்போது காணப் போகிறேன்.'
- அவருடைய வாழ்நாளில் 1,500 மனித உயிர்களைப் பலிகொண்ட 12 ஆட்கொல்லிகளை வேட்டையாடி குமாயுன் மலைப்பிரதேச மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். காலப்போக்கில் வேட்டையாடுவதைத் தவிர்த்துவிட்டு, புலிகளைப் படமெடுக்கத் தொடங்கினார். அவர் எடுத்த படங்கள் லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இப்போதும் காணக்கிடைக்கின்றன.
கொண்டாடப்படுவதற்கான காரணங்கள்:
- அவர் வாழ்ந்த காலதுங்கியின் அருகிலிருந்த ஹால்த்வானி என்ற 221 ஏக்கர் பரப்பளவுள்ள கைவிடப்பட்ட கிராமத்தை ரூ1,500/-க்கு வாங்கி புதர்கள், செடிகளை நீக்கி, நிலப் பகுதிகளாகப் பிரித்து, அத்துடன் வீடுகளையும் கட்டி, தண்ணீர் வசதிக்காக சிமென்ட் கால்வாய்களையும், விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காக்க, ஆறு அடி உயரச் சுற்றுச்சுவரையும் கிராமத்தைச் சுற்றி அமைத்து, அந்த வீடுகளில் மலைவாழ் மக்களைக் குடியமர்த்தினார். அங்கிருந்த வீடுகளுக்கும் நிலங்களுக்கும், அவரே வரி செலுத்திவந்தார்.
- காலதுங்கியில் இருந்த அவரின் வீடு, ஒரு சிறிய மருத்துவமனையாகவே செயல்பட்டது. அவருடைய தமக்கை மேகி என்பவர் மருத்துவச் செவிலியர் பயிற்சி பெற்றிருந்ததால், ஒவ்வொரு நாளும் அங்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்யப்பட்டது. இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றபோது அவரும், அவருடைய தமக்கையும் கென்யா சென்று அங்கேயே தங்குவது என்று முடிவெடுத்தனர். ஆதலால் ஹால்த்வானி கிராமத்தை அந்த மக்களுக்கே இலவசமாக வழங்கி விட்டார்.
- அவர் இந்தியாவை விட்டு கென்யா புறப்பட்ட அந்த நாள், அவரின் நண்பர்களுக்கும், குமாயுன் பகுதி மக்களுக்கும் வாழ்வில் மறக்க முடியாத, துயர நாளாக அமைந்தது. அவர்கள் மும்பை வரை அவருடன் சென்று தங்கள் கண்ணீரையும், எளிய காணிக்கைகளையும் அவரின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு வீடு திரும்பினார்கள்.
- ஜிம் கார்பெட் கென்யாவில் உள்ள நையேரியில் 19-04-1955 அன்று மாரடைப்பால் காலமானார். ஆனாலும் குமாயுன் பிரதேச எளிய மக்கள், அவர் தங்கள் கிராமத்திற்கு நிச்சயம் ஒருநாள் திரும்பவும் வருவார் எனத் தங்கள் சந்ததிகளுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
- ஏப்ரல் 19: ஜிம் கார்பெட் பிறந்தநாள்
நன்றி: தி இந்து (15 – 04 – 2023)