TNPSC Thervupettagam

ஜூன் 16, 1975 - குடியரசுத் தலைவரைச் சந்தித்த இந்திரா காந்தி

June 16 , 2023 572 days 409 0
  • காஷ்மீரிலிருந்து திரும்பிவந்த சிறிது நேரத்தில் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவை பிரதமர் இந்திரா காந்தி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு, பகல் 1.15 முதல் 1.35 வரை, சுமார் 20 நிமிஷங்கள் நீடித்தது.
  • தேர்தல் செல்லாது என்ற தீர்ப்புக்குப் பிறகு முதன்முறையாக அகமதுவைச் சந்தித்திருக்கிறார் பிரதமர் இந்திரா காந்தி. இவர்கள் இருவரும் மறுநாளும் சந்திக்கக் கூடும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் சூழல் பற்றி இந்திரா காந்தி விளக்கியிருக்கலாம் என்று நம்பப்பட்டது.

இந்திராவை விலகச் செய்யுங்கள்

  • அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக நாட்டின் பிரதமராக இருக்கும் தகுதியை தார்மிக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இந்திரா காந்தி இழந்துவிட்டார். எனவே அவரைப் பதவியிலிருந்து விலகுமாறு குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டன.
  • காஷ்மீரில் ஓய்வெடுத்த பிறகு தில்லி திரும்பிய குடியரசுத் தலைவரிடம்,  அவருடைய மாளிகை முன் நான்கு நாள்களாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இந்திய கம்யூனிஸ்ட் தவிர்த்த ஆறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இதுதொடர்பான மனுவை அளித்தனர்.

மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது:

  • "அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கிளர்ச்சிகளை உருவாக்க அருவருக்கத்தக்க முறைகளை இந்திரா காந்தி பின்பற்றுகிறார். அவருடைய நேரடியான வழிகாட்டுதலின் பேரிலும் ஊக்கத்தின் பேரிலும் இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திலிருந்து வீதிக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது. எனவே, தில்லி நகரில் சட்டத்தின் ஆட்சி அனேகமாக மறைந்து விட்டது.
  • "இந்த நாட்டின் கௌரவத்தை நிலை நாட்டவும் நீதித் துறையின் கண்ணியம், சுதந்திரம், பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றைக் காப்பாற்றவும் கட்சி செல்வாக்கிலிருந்து நிர்வாகத்தை விடுவிக்கவும் பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தியை விலக்குவது அவசியம்.
  • "நாடாளுமன்ற புது காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவரொருவரைத் தேர்ந்தெடுக்க சிறிது அவகாசம் தேவைப்படும் என்று இந்திரா காந்தியின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அமல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த இடைக்காலத் தடையை பிரதமர் தவறாகப் பயன்படுத்துவது வருந்தத் தக்கது.
  • "எடுத்துக்காட்டாக, பிரதமர் இல்லத்துக்கு முன் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் ஒன்றில் இந்தத் தீர்ப்பளித்த நீதிபதி சின்ஹவின் உருவபொம்மை கொளுத்தப்பட்டது. அவரைப் பற்றி மோசமான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
  • "உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்குப் பதிலாகத் தீர்ப்பு பற்றித் தமது எதிர்ப்புணர்ச்சியையே அவர் வெளிப்படுத்துகிறார். பதவியில் நீடிப்பதற்கான தன்னுடைய நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, தம்முடைய பதவியைத் தவறாகப் பயன்படுத்தி தம்முடைய அமைச்சர்களையும் செயல்படச் செய்கிறார். தம்முடைய கட்சி எம்.பி.க்கள், முக்கியமான தொண்டர்கள் கூட்டங்களில் தம்மை ஆதரித்துப் பேசுவதற்காக அனைத்து மாநில முதல்வர்களும் தலைநகருக்கு வருமாறு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
  • "தம்முடைய அருவருக்கத் தக்க பிரசாரத்தை நடத்துவதற்காகவும் தன் வீட்டின் முன் ஆதரவுக் கூட்டங்களை நடத்தவும் தில்லி துணை நிலை ஆளுநரைப் பயன்படுத்திக்கொள்ள பிரதமர் இந்திரா காந்தி தயங்கவில்லை.
  • "நீதித்துறைகள் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் இந்திரா காந்தி நடத்திவரும் அவதூறு பிரசாரத்தை ஒலி-ஒளிபரப்ப அகில இந்திய வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • "இந்திரா காந்திக்கு ஆதரவான பிரசாரங்களில் மத்திய அமைச்சர்களும் மாநில முதல்வர்களும் ஈடுபட்டிருப்பதால் மத்தியிலும் மாநிலங்களிலும் அலுவல்கள் கடுமையாகச் சீர்குலைந்துள்ளன.
  • "இந்த விரும்பத் தகாத, அருவருக்கத் தக்க நடவடிக்கைகள் பிரதமர் பதவிக்கே இழுக்கை ஏற்படுத்தியுள்ளது."
  • இந்த மனுவில் ராஜ்நாராயண் (பாரதிய லோக தளம்), எஸ்.என். மிஸ்ர (பழைய காங்கிரஸ்), திரிதீப் சௌதுரி (புரட்சி சோசலிஸ்ட்), நானாஜி தேஷ்முக் (ஜனசங்கம்), பிரிஜ் மோகன் துபான் (சோசலிஸ்ட் கட்சி), பிரகாஷ் சிங் பாதல் (அகாலிதளம்) போன்றோர் கையெழுத்திட்டிருந்தனர்.
  • சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை பொறுமையுடன் இருக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்களிடம் குடியரசுத் தலைவர் கூறியிருக்கிறார்.
  • சந்திப்பின் முடிவில் பழைய காங்கிரஸ் தலைவர் எல்.என். மிஸ்ர செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தீர்ப்பையும் நீதிமன்றத்தையும் சட்டத்தின் மாண்பையும் துளிகூட மதிக்காமல் பிரதமர் இந்திரா காந்தி செயல்பட்டு வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் என்ன செய்வது என்று குடியரசுத் தலைவரிடம் கேட்டதாகத் தெரிவித்தார்.
  • இந்த மனுவைப் பற்றி இரவில் ஜகஜீவன் ராம், ஒய்.பி. சவாண், ஸ்வரண் சிங் ஆகியோருடன் பிரதமர் இந்திரா காந்தியும் ஆலோசனை நடத்தினார்.

ஜகஜீவனின் விருப்பம்

  • ராஜிநாமா விஷயத்தில் இந்திரா காந்தியின் மனநிலையில் மாறுதல் ஏதும் ஏற்படவில்லை என்றபோதிலும், ஒருவேளை அவர் பதவி விலகும்பட்சத்தில் தாம் பிரதமராக வேண்டும் என்று வேளாண் துறை அமைச்சர் ஜகஜீவன் ராம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
  • இந்திரா காந்தி அமைச்சரவையின் மூத்த அமைச்சரான ஜகஜீவன் ராம், இதுபற்றி இந்திரா காந்திக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார். ஆனால், இப்படிக் கடிதம் எதுவும் வரவில்லையென்று பின்னேரத்தில் பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.
  • முன்னதாக, கட்சித் தலைவர் டி.கே. பரூவா, மும்பை காங்கிரஸ் தலைவர் ரஜினி படேல், மேற்குவங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ராய் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஜகஜீவன் ராமை ராய் சந்தித்தார். அப்போது இந்திரா அனுப்பிய தகவலொன்றை ஜகஜீவனிடம் அவர் தெரிவித்துள்ளார்.
  • இதனிடையே, இந்திரா காந்தியின் ஆதரவாளர்களின் நிலை மேலும் உறுதிப்பட, உச்ச நீதிமன்றம் நிபந்தனையற்ற தடை விதிக்காவிட்டாலும்கூட இந்திரா காந்தி பதவி விலகப் போவதில்லை என்று பகிரங்கமாகவே பேசத் தொடங்கிவிட்டனர். இவர்கள் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ் வீட்டில் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.
  • நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தை நாளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திரா காந்தியின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தீர்மானத்தை ஜகஜீவன் ராம் முன்மொழிவார் என்று தெரிகிறது. இதுபற்றிக் கட்சித் துணைத் தலைவர்கள் வி.பி. ராஜு, ஸ்டீபன் ஆகியோர் ஜகஜீவனைச் சந்தித்து விவாதித்துள்ளனர்.
  • தற்போதைய நிலவரம் பற்றியும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி என்ன செய்ய வேண்டும் என்றும் மூத்த கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கே. ரகுராமையா விவாதித்தார். இந்தக் கூட்டத்தில் ஓம் மேத்தா, ஐ.கே. குஜ்ரால், பலிராம் பகத் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
  • அனைத்து மாநிலங்களிலிருந்தும் காங்கிரஸ் எம்.பி.க்கள் தில்லியில் குவியத் தொடங்கியுள்ளனர். தில்லியில் முகாமிட்டுள்ள மாநில முதல்வர்களும் பிற தலைவர்களும் ஒட்டுமொத்தமாக இந்திரா காந்திக்கு ஆதரவாகக் கட்சியைத் திரட்டுவது பற்றி ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த முதல்வர்கள், மக்கள் பிரதிநிதிகள் எல்லாரும் இந்திரா காந்தியின் இல்லத்துக்குச் சென்று ஆதரவை உறுதி செய்தனர்.

ஜனநாயக சோசலிச லட்சியம்!

  • வீட்டின் முன் இந்திரா காந்தி பேசினார்:
  • "சில அந்நிய சக்திகள் கூறுவதைப் போல இந்தியாவுக்கு ஆக்கிரமிப்பு நோக்கம் எதுவுமில்லை.
  • "நாம் பலவீனமாக இருக்க மாட்டோம்.  ஆனால், பிறர் மீது தாக்குதல் நடத்துபவர்களாகவும் இருக்க மாட்டோம். மக்கள் வதந்திகளைத் தவிர்க்க வேண்டும். தேசிய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும். எத்தகைய நெருக்கடிகளிலிருந்தும் நாம் பலசாலிகளாக மீள வேண்டும்.
  • "பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க வேண்டும் என்பதில் என்னுடைய பொறுப்பு முழுமையானது. எல்லா எதிர்ப்பையும் கடந்து லட்சியத்தை அடையத்  தொடர்ந்து பணி செய்யவுள்ளேன்.
  • "எனது பொறுப்புகளை நிறைவேற்ற முடியாமல் எல்லாவிதமான தொல்லைகளும் உருவாக்கப்படுகின்றன. எனினும், நாட்டு மக்களின் உதவியுடன ஜனநாயக சோசலிசம் என்ற லட்சியத்தை அடைவது சிரமமாக இராது என்பது நிச்சயம்.
  • "என்னுடைய திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக அல்லாமல் மக்களின் பெருநலனையொட்டியவையாக உள்ளன. இதனால்தான் எதிர்க்கட்சிகள் என் மீது எல்லாவிதமான புகார்களையும் கூறுகின்றன."

வெகுமக்கள் கருத்து

  • பிரதமர் பதவியில் இந்திரா காந்தி நீடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெகுமக்கள் கருத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முடிவு செய்வதற்காகத் தில்லியில் ஜூன் 21, 22 தேதிகளில் பழைய காங்கிரஸ், ஜனசங்கம், பாரதிய லோகதளம் ஆகியவற்றின் தேசிய நிர்வாகக் குழுக்கள் கூடவுள்ளதாக அபுவிலிருந்த ஜனசங்கத் தலைவர் எல்.கே. அத்வானி அறிவித்தார்.
  • எந்தவொரு வேட்பாளருக்கு எதிராகவும் நீதிமன்றம் விதித்த தகுதியின்மையை அகற்றத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருப்பதைக் கடுமையாகக் கண்டித்தார் அத்வானி. 

அவசியமேயில்லை

  • பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி ராஜிநாமா செய்வதைத் தாம் ஆதரிக்கவில்லை என்று காஷ்மீர் முதல்வர் ஷேக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதில் தார்மிகப் பிரச்சினைகள் எதுவுமில்லை, இது முற்றிலும் சட்டம் சம்பந்தமான விஷயம். இதுபற்றிக் கிளர்ந்தெழ வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார் அப்துல்லா.

நினைத்தார், ஆனால், நீடிப்பார்

  • உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்துப் பதவி விலகத்தான் இந்திரா காந்தி விரும்பினார். ஆனால், அவருடைய அமைச்சரவை சகாக்கள், புது காங்கிரஸ் ஆகியோரின் ஒருமனதான கருத்துக்கிணங்க பிரதமர் பதவியில் நீடிப்பது என முடிவு செய்துவிட்டார் என்று பஞ்சாப் முதல்வர் ஜெயில் சிங் தெரிவித்தார்.

தனிநபரா, நாடா? சர்வாதிகாரமா, ஜனநாயகமா?

  • தனிநபருக்கும் தேசத்துக்கும் இடையில் எதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது, சர்வாதிகார முறைக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் இடையே எதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பதை புது காங்கிரஸ் கட்சி இப்போது தீர்மானிக்க வேண்டும் என்று பாரதிய லோகதளத் தலைவர் சரண்சிங் குறிப்பிட்டார்.
  • தேசிய நிர்வாகக் குழுக் கூட்டத்துக்குப் பின் அறிக்கையொன்றை வெளியிட்டார்  அவர்:
  • "ஆளும் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கச் சிறிது காலம் பிடிக்கும் என்ற ஒரே காரணத்தின்பேரில்தான் தீர்ப்பின் அமலை நிறுத்திவைக்கும் தடை உத்தரவு கோரிப் பெறப்பட்டிருக்கிறது.
  • "இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக ஒரு கைப்பாவையையோ அல்லது முதுகெலும்பற்ற நபரையோ தேர்ந்தெடுக்க புது காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி தயாராகயில்லை. எனவே, புதுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உத்தேசம் கைவிடப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்திருக்கிறது.
  • "இந்திரா காந்தி ஓர் அப்பட்டமான சர்வாதிகாரிதான் என்பது இப்போது மக்களுக்குத் தெரிந்து விட்டது. சட்டங்களும் மரபுகளும் எப்படி இருந்தபோதிலும்  பிரதமராக நீடிப்பதென அவர் முடிவு செய்துள்ளார். சட்ட ரீதியான காரணங்களுக்காக இல்லை என்றாலும் தார்மிக காரணங்களுக்காகவாவது இந்திரா காந்தி ராஜிநாமா செய்திருக்க வேண்டும்."
  • தீர்ப்பைத் தொடரும் அடுத்தடுத்த நாள்களில் இந்திரா காந்தியின் நிலைப்பாட்டுக்கு  ஆதரவு, எதிர்ப்பு என அணிகள் திரளத் தொடங்கியுள்ளன.

நன்றி: தினமணி (16 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories