TNPSC Thervupettagam

ஜூன் 17, 1975 - மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பா

June 17 , 2023 571 days 406 0
  • அரசியல் சட்டபூர்வமான ஆட்சி முறையைக் குலைக்கக் கூடிய எந்தவொரு முயற்சியையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று எச்சரித்ததுடன், மழைக்காலக் கூட்டத் தொடரை ஒத்தி வைக்கும் முயற்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீங்கலான எதிர்க்கட்சிகள் கண்டித்தன.
  • எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பழைய காங்கிரஸ் தலைவர்கள் அசோக் மேத்தா, எஸ்.என். மிஸ்ர ஆகியோர் செய்தியாளரக்ளுடன் பேசினர்.
  • "அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, பிரதமர் இந்திரா காந்தியின் தேவைக்கேற்ப அரசியல் சாசன எந்திரத்தை மாற்றிக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • "பிரச்சினையை வீதிக்குக் கொண்டுவரவே பிரதமர் முயலுகிறார். அரசியல் சட்ட அமைப்புகள் தங்குதடையின்றிச் செயல்பட அனுமதிக்க வேண்டும்" என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
  • ஜூன் 21 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி எதிர்க்கட்சிகள் நடத்த திட்டமிட்டிருந்த பேரணி ஒத்திவைக்கப்படுவதாகவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் வருவதற்கேற்ப மற்றொரு நாள் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கூலிக்கு ஆள் பிடிக்கவில்லை

  • தன்னுடைய தலைமைப் பதவிக்கு ஆதரவுள்ளதாகக் காட்டுவதற்காக கூலிக்கு ஆள் பிடித்துக் கொண்டு வரவில்லை என்று பிரதமர் இந்திரா காந்தி மறுப்புத் தெரிவித்தார்.
  • எப்போதும் போல தம் இல்லத்தின் முன் மக்களிடையே இன்றும் அவர் பேசும்போது, என்னுடைய பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துவதற்காக எதிர்க்கட்சியினர் ஏதேனும் புகார் கூறுவதில் முனைந்துள்ளனர். அலாகாபாத் நீதிமன்ற நீதிபதியின் உருவபொம்மை எரிக்கப்பட்டதாகக் கூறப்படுவது பொய் என்றார்.
  • இந்த நாளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. தில்லிப் புறநகர்ப் பகுதிகளிலிருந்தும் ஹரியாணாவிலிருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.
  • ஒவ்வொரு மாநிலத்திலும் இந்திரா காந்திக்கு ஆதரவு தெரிவித்துக் கூட்டங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்களும் கட்சிக் கூட்டங்களை நடத்தி பிரதமராக இந்திரா காந்தி தொடர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.

நிதானமும் அமைதியும் தேவை

  • நிலைமையைச் சமாளிப்பதில் மிகுந்த நிதானமும் அமைதியும் காட்ட வேண்டும் என்று இளந்துருக்கியர் தலைவர் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
  • யங் இந்தியன் இதழில் தலையங்கம் எழுதியிருந்தார் அவர்:
  • அவசரப்பட்டு ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் திசை தவறக் கூடும். ஏற்கெனவே சிக்கலாகவுள்ள விஷயம் மேலும் சிக்கலாகிவிடும்.
  • வரலாற்றின் பாதையை மக்கள் மட்டுமே உருவாக்குகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அரசு அமைப்புகளை வெறும் கருவிகளாகப் பயன்படுத்திக் குறுகிய நலனுக்காக நேரத்துக்கு ஏற்றபடி கைவிடுவது ஆபத்தானதாகும்.
  • ஆதரவளிக்கும் தூண்களாக விளங்கும் இந்த அமைப்புகள் படிப்படியாக செல்வாக்கு இழந்து மறைந்தால் நாட்டின் முறைமையும் நொறுங்கி சின்னமாகிவிடும். அதை அடுத்த ஏற்படும் கொந்தளிப்புகள் அந்த நடவடிக்கைகளைத் தொடக்கியவர்களையே மூழ்கடித்துவிடும்.
  • குறுகிய கால நலனுக்காக இயல்பு நிலையைச் சிலர் புறக்கணிக்கலாம். ஆனால், வரலாற்றுக்குத் தனிப்பாதை இருக்கிறது. அந்த நேரத்தில் விரும்பத் தக்க பலன்கள் ஏற்படலாம் என்பது வேறு விஷயம். ஆனால், விஷயம் அம்பலமானதும் எதிர்விளைவுகள் ஏற்பட்டு, சுய தோல்வியை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டிருந்தார் சந்திரசேகர்.

இரு அம்சங்கள்

  • பிரிட்டிஷ் இதழ்கள் தலையங்கங்களிலும் கட்டுரைகளிலும் இரு முக்கிய அம்சங்கள் பிரதானமாக இடம் பெற்றிருந்தன.
  • முதலில், இந்திய நீதித்துறையின் சுதந்திரம். ஒரு பிரதமரின் தேர்தலையே செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்திருப்பது. இரண்டாவது, ஒரு சிறு குற்றத்தைப் பெரிதுபடுத்தும் விந்தையான நிலை. இவ்வாறு விமர்சிப்பதாக இருந்தால் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேலும் பலர் பதவி வகிக்க முடியாது.
  • கார்டியன் இதழ் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தது: "இயல்பான வாழ்க்கை நடைமுறை ஒன்றுக்காக, கீழ் பதவியிலுள்ள ஒவ்வொருவர் செய்யக்கூடிய ஒரு செயலை உயர் பதவியிலிருந்து செய்ததற்காக திருமதி காந்திக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இப்படிப்பட்ட குற்றத்தை மன்னித்து விட்டுவிட வேண்டும் என்பதல்ல. ஏராளமாகவுள்ள அவருடைய எதிரிகள் அவற்றை மன்னிக்கவும் மாட்டார்கள். இந்திரா காந்தி செய்த தவறுகளைவிட பல மடங்கு மோசமான தவறுகளைச் செய்து செழித்தவர்கள் அவர்கள். அப்படியிருந்தும் ஓயாமல் இந்திராவைக் குறைகூறி வருகிறார்கள். காரணம், அவர் சோசலிச கொள்கைகளைக் கடைப்பிடிப்பதுதான்."

இந்தியாவின் வாட்டர்கேட்

  • ஆனால், இதையே இந்தியாவின் வாட்டர்கேட் என்று அமெரிக்க பத்திரிகைகள் குறிப்பிட்டன.
  • இந்திரா காந்தி பதவி விலகினால் இந்தியாவுக்கு என்ன நேரிடும் என்று நிச்சயமாகக் கூற முடியாது. ஒருக்கால் குழப்பம் நேரிடலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது.
  • அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு இந்திரா காந்தியையும் அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று கோரும் அவருடைய ஆமாம்சாமிகளையும் சிரமப்படுத்திவிட்டது. இந்திரா காந்தியின் சேவை இந்தியாவுக்கு இன்றியமையாதது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், குஜராத் தேர்தல் முடிவுகளோ அந்த வாதத்தை முறியடித்துவிட்டன என்று நியு யார்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

வேண்டாம் மிசா

  • மிசா (உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம்) சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஜனசங்கத்தின் செயற்குழு கேட்டுக்கொண்டது.
  • மௌண்ட் அபுவில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தற்போது அரசியல் காரணங்களுக்காகத்தான் மிசா பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு செய்வதில்லை என்று உறுதி கூறியபோதிலும் நடப்பது இதுதான் என்றும் சுட்டிக்காட்டியது.
  • இந்த நாளில், ஜூன் 17-ல், மிக்க அவதானிப்புடன் கூடியதொரு தலையங்கத்தை - புது டில்லி நாடகம் என்று தலைப்பிட்டு எழுதியிருந்தது தினமணி!

தலையங்கம்

புது டில்லி நாடகம்

  • பிரதம மந்திரி இந்திரா காந்தியின் தேர்தல் செல்லுபடியாகாதென்று அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதியளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, புது காங்கிரஸ் சார்பில் எழுப்பப்படும் புயலைப் பார்க்கும்போது, நாம் ஏதோ ஒரு கனவு உலகத்தில் வசிக்கிறோமோ என்ற சந்தேகம்கூட ஏற்படுகிறது. 'இந்திரா காந்தி பிரதமராக இல்லாத இந்தியாவா?' என்று நாடெங்கும் ஒரு பிரசாரம் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
  • இந்தியாவெங்கிலுமிருந்து ஆளும் கட்சியினரை டில்லிக்குக் கொண்டு வந்து, அங்கு பெரிய இந்திரா ஆதரவு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்திரா காந்தி பிரதமராக இல்லாவிட்டால், மறுநாளே இந்தியா வங்காளக் குடாக் கடலில் மூழ்கிவிடும் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய தலைவரின் சேவை நாட்டுக்கு அவசியம்தான். ஆனால், மனிதப் பிறவிகள் வாழும் இந்த உலகத்தில், ஒருவர் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்று பேசிக்கொண்டிருப்பது கலப்பற்ற  அசட்டுத்தனமாகும். காந்திஜி போய்விட்டால் என்ன ஆகும் என்று கேட்டுக்கொண்டிருந்தோம். நேருஜிக்குப் பிறகு யார் என்று கேட்டுக்கொண்டிருந்தோம். அவர்கள் இறந்துவிட்டார்கள். உலக தேசப் படங்களிலிருந்து இந்தியாவை நீக்கிவிட்டார்களா? இன்னமும் இந்தியா இருந்துகொண்டுதானிருக்கிறது. பிறப்பதும், இறப்பதும் அன்றாட சம்பவங்கள்.
  • ஆனால், சரித்திரம் என்பது நிரந்தரமானது. ஆகையால், இந்திரா காந்தி பிரதமராக இல்லாவிட்டால் என்னவோ நேர்ந்துவிடும் என்ற தோரணையில் ஆளும் கட்சியினர் நாடகமாடிக் கொண்டிருப்பது அவர்களுக்கு வேண்டுமானால் திருப்தியளிக்கலாம். இப்போது ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களெல்லாம் முற்றிலும் ஆளும் கட்சியினரின் முயற்சிகளேயாகும். மக்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இந்த கோஷத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்பது சென்ற வாரம் நடந்து முடிந்த குஜராத் அசெம்பிளி தேர்தல் முடிவுகளில் சந்தேகத்திற்கிடமில்லாமல் ருசுப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்திரா காந்தியின் தலைமையை அவருடைய கட்சிக்காரர்கள் விரும்புவதாயிருக்கலாம். ஆனால், மக்கள் அதை விரும்புகிறார்களென்று பேசுவது கலப்பற்ற பொய்ப் பிரசாரமே ஆகும்.
  • இந்தப் பிரசாரத்தில் மற்றொரு ஆட்சேபகரமான அம்சமும் இருக்கிறது. கோர்ட்டில் ஒரு வழக்கின் மீது ஒரு தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டால், அப்பீல் உரிமை உள்ள மற்றொரு கோர்ட்டினால், மாற்றப்படும் வரையில் அதற்கு மதிப்பு கொடுக்கப்பட வேண்டும், ஹைகோர்ட் அளிக்கும் தீர்ப்புகளுக்கு விசேஷ மதிப்பு உண்டு. அதை மாற்றுவதற்கு சுப்ரீம் கோர்ட் ஒன்றுக்குத்தான் அதிகாரம் உண்டு. பிரதம மந்திரி அப்பீல் செய்யலாம். அதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது.
  • சுப்ரீம் கோர்ட் முடிவு சொல்லும் வரையில், அசல் தீர்ப்பைப் பற்றி விமரிசனங்களில் இறங்குவது முறையானதல்ல.. பிரதம மந்திரி சட்டத்திற்கு அப்பாற்பட்டவரென்றும், எந்தக் கோர்ட்டின் தீர்ப்பும் அவரை ஒன்றும் செய்ய முடியாதென்றும் பேசுவது சர்வாதிகார அமைப்புள்ள கம்யூனிஸ்டு நாடுகளில் சரியானதாயிருக்கலாம். ஆனால் இந்தியாவில் இன்னும் அத்தகைய சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டு விடவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது. புது காங்கிரஸ் தலைவரான பரூவா இம்மாதிரியெல்லாம் பேசியிருக்கிறார். பரூவாவின் கோமாளித்தனத்தைப் பற்றி அவ்வப்போது சிலர் கிண்டல் செய்வதுண்டு.
  • ஆனால் இந்த அளவுக்கு அவர் இறங்க முடியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அவரே இப்போது தன் தவறை உணர்ந்திருக்கிறார்; அல்லது தவறு அவருக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. நீதிபதியைப் பற்றியோ தீர்ப்பைப் பற்றியோ தாங்கள் எதுவும் விமரிசனம் செய்யவில்லையென்று ஞாயிற்றுக்கிழமையன்று, தன் வீட்டுக்கு முன்பு கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்த 'ஆதரவாளர்கள்' கூட்டத்தில் பிரதம மந்திரியும் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியினால், தாம் பொறுப்பற்ற முறையில் பேசியது தவறுதான் என்பதை ஆளும் கட்சியினர் இப்போது உணரத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கதே.
  • தீர்ப்பின் அமலை ஹைக்கோர்ட்டே இருபது நாட்களுக்கு நிறுத்திவைத்திருப்பதால், பிரதம மந்திரி ராஜிநாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இல்லையென்பதுதான் அவர்களுடைய வாதமாகும். இது சரியான நிலைதான். ஆனால், தடை எதற்காகக் கொடுக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்வதற்கு அவகாசம் கொடுப்பதற்காகவே அமல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பிரதம மந்திரி தனது தேர்தலுக்கு ஊழல் முறைகளைக் கையாண்டார் என்ற கோர்ட் முடிவு அப்படியேதானிருக்கிறது. 
  • ஆகையால், பிரதம மந்திரி ராஜினாமா செய்வதுதான் கண்ணியமானதாயிருக்கும் என்று மற்றவர்கள் கோருவதிலும் தவறு இல்லை. ஹைகோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து இந்திரா காந்தி நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண் டும் என்று யாரும் சொல்லவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பு தெரியும்வரையில், பிரதமர் பதவி விலகி இருக்க வேண்டுமென்றுதான் கேட்கிறார்கள். நேருவின் மறைவுக்குப் பிறகு, புது பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்படும் வரையில், தற்காலிகமாகச் சில தினங்களுக்கு வேறொருவர் அந்தப் பொறுப்பை வகித்தார். லால்பகதூர் சாஸ்திரியின் மரணத்திற்குப் பிறகும் அப்படித்தான் நடந்தது. இப்போது ஏற்பட்டுள்ள நிலைமையில், பிரதமர் பதவி விலகுவதில் எந்தத் தடங்கலுமில்லை. இறுதி முடிவு தெரியும் வரையில், தற்காலிகமாக ஒருவரை அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி ஆளும் கட்சியினர் கேட்டுக் கொள்ளலாம். சுலபமான இந்த நடைமுறையைப் பின்பற்றுவதற்கு அவர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?
  • இதற்கு ரகசியமான காரணங்கள் ஏதாவது இருக்கலாம். 'இந்திராவே எங்கள் தலைவர்' என்று எல்லோரும் சொல்லிக்கொண்டே இருந்தாலும், கட்சியில் சில கோஷ்டிகள் இருக்கின்றனவென்பதும், குறிப்பிட்ட தலைவர்கள் அப்பொறுப்புக்கு வருவதை அந்த கோஷ்டிகள் வரவேற்கும் என்பதும் எல்லோரும் அறிந்த உண்மையாகும். தற்காலிகமாக ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்தால், இடைக்காலத்தில் அவர்கள் தம் நிலைமையைப் பலப்படுத்திக்கொண்டு விடுவாரோ என்ற அச்சம்தான் தயக்கத்திற்கு முக்கியமான காரணமாக இருக்க வேண்டும்.
  • இதில் மற்றொரு வேடிக்கையும் இருக்கிறது. இவ்வளவு காலமாக ராஜ்யங்களிலுள்ள தலைவர்கள் தம் கைகளைப் பலப்படுத்திக்கொள்ளுவதற்கு இந்திராவின் ஆதரவைப் பெறுவதற்காக டில்லிக்கு ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருந்து. ஆனால், நிலைமை இன்று தலைகீழாக மாறிவிட்டது. இந்திராவின் கரங்களை பலப்படுத்துவதற்காக ராஜ்ய தலைவர்கள் இப்போது டில்லிக்கு ஓடவேண்டியிருக்கிறது. காலம்தான் எவ்வளவு விசித்திரமான நிலைமைகளைத் தோற்றுவிக்கிறது!

நன்றி: தினமணி (17 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories