TNPSC Thervupettagam

ஜூன் 21, 1975 - மக்களைத் திரட்ட எதிர்க்கட்சிகள் குழு

June 21 , 2023 517 days 303 0
  • பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவாக மக்களைத் திரட்டவும் தொடர் நடவடிக்கைகளைத் திட்டமிடவும் இந்திய கம்யூனிஸ்ட் அல்லாத 5 எதிர்க்கட்சிகளின் குழுவொன்று அமைக்கப்பட்டது.
  • இந்தக் குழுவில் பிரகாஷ் சிங் பாதல் (அகாலிதளம்), ஏ.பி. வாஜபேயி (ஜனசங்கம்), ராஜ்நாராயண் (பாரதிய லோகதளம்), அசோக் மேத்தா (பழைய காங்கிரஸ்), ஜார்ஜ் பெர்னாண்டஸ் (சோஷலிஸ்ட்) ஆகியோர் இடம்பெற்றனர்.
  • இந்த நாளில் தில்லியில் பழைய காங்கிரஸ் தலைவர் மொரார்ஜி தேசாய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கட்சிகளின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டத்தின் முடிவில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.
  • "நீதிமன்றங்களின் முடிவு என்னவாக இருந்தாலும் பிரதமர் பதவியில் இந்திரா காந்தி ஒட்டிக்கொண்டிருப்பார் என்பதை இந்திரா காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் தெளிவாக்கிவிட்டார்கள். இது சர்வாதிகாரத்துக்கே வழிவகுக்கும். எனவே, இந்திரா காந்திக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் தயாராக இருக்க வேண்டும். அலகாபாத் தீர்ப்பால் ஏற்பட்டுள்ள நிலைமையில் தார்மிகப் பிரச்சினைகளும் அரசியல் பிரச்சினைகளும் இருக்கின்றன. இவற்றை மக்களுக்கு எடுத்துரைக்க வெகுமக்கள் இயக்கம் நடத்த வேண்டும்" என்பது இந்தக் கூட்டத்தின் கருத்தாக இருந்தது.
  • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் தன்மையைப் பொருத்து இருவிதமான போராட்டங்களை -  நாடாளுமன்றக் கூட்டத் தொடரை உடனடியாகக் கூட்ட வலியுறுத்தி இயக்கம் நடத்துவது, பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் சத்தியாக்கிரகமும் மக்கள் ஒத்துழையாமை இயக்கமும் - நடத்துவதென்றும் தலைவர்கள் திட்டமிட்டனர்.
  • இந்தக் கூட்டத்தில் குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் பாபுபாய் படேலும் கலந்துகொண்டார்.
  • கூட்டத்தின் முடிவில், நீதிமன்றத் தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தெருவுக்குக் கொண்டுவந்து கலாட்டா மூலம் தீர்க்க முயலுகிறார் இந்திரா காந்தி என்று பழைய காங்கிரஸ் தலைவர் எஸ்.என். மிஸ்ர தெரிவித்தார்.
  • எதிர்க்கட்சிகள் ஒன்றுபடும் முயற்சியில் இன்றைய கூட்டம் ஒரு மைல் கல் என்று ஜனசங்கத் தலைவர் எல்.கே. அத்வானி குறிப்பிட்டார்.
  • சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணைக் கலந்துபேசிய பிறகு கிளர்ச்சித் திட்டத்தை இறுதியாக்குவதென்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆட்சிக்கும் கட்சிக்கும் வேறுபாட்டை அழிக்க முயற்சி

  • ஆட்சிக்கும் கட்சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழிக்க முயற்சி நடக்கிறது. இவற்றை விட மோசம், இந்தியாவே இந்திரா என்றும் தேசிய நலன்களே இந்திராவின் நலன்கள் என்றும் கூறப்படுவது. ஜனநாயக உரிமைகளையும் நீதித்துறையின் சுதந்திரத் தன்மையையும் தார்மிக நெறிகளையும் பேணிப்  பாதுகாப்பதில் நாடு விழிப்பாக இருக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற பழைய காங்கிரஸ் தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
  • இந்தக் கூட்டத்தில் அசோக் மேத்தா, மொரார்ஜி தேசாய், எஸ்.கே பாட்டீல், எஸ். நிஜலிங்கப்பா, சி.பி. குப்த ஆகியோர் கலந்துகொண்டனர். காமராஜர் கலந்துகொள்ளவில்லை.

ஒன்றிணைவது அவசியமென ஜெ.பி. அழைப்பு

  • ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி சார்பற்ற தனிநபர்களும் ஒரு பொது மேடையில் ஒன்றிணைவது இன்றியமையாதது என்று சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அழைப்பு விடுத்தார்.
  • மேற்கு வங்கத்தில் சூரி என்ற இடத்தில் இந்திய சோசலிச ஐக்கிய மையத்தின் சாரபில் நடைபெற்ற அகில வங்க இளைஞர் மாநாட்டில் அவர் பேசினார்:
  • "புரட்சிகள் அமைதியாக நடந்ததாக வரலாற்றில் முன்னுதாரணம் எதுவுமில்லை. என்ற போதிலும் முழுப் புரட்சியைத் தோற்றுவிக்க மக்கள் சாத்விக முறைகளைக் கையாள வேண்டும்.
  • "ஜனநாயக மரபுகளையும் நடைமுறைகளையும் பிரதமர் இந்திரா காந்தி எந்த அளவுக்கு மதித்துவருவார் என்பது குறித்து அலாகாபாத் தீர்ப்புக்குப் பின்னர் தம் மனதில் இன்னும் அதிகம் ஐயம் தோன்றியுள்ளது.
  • "முன்னெப்போதையும்விட இப்போதுதான் ஆளுங்கட்சியல்லாத கட்சிகளுக்கு இடையே ஒற்றுமைக்கு அதிக அவசியம் இருக்கிறது.
  • "முழுப் புரட்சியைத் தேடி நாம் மேற்கொள்ளும் முயற்சிக்கு நாமே ஓர் இடைஞ்சலாக ஆகிவிடக் கூடாது" என்றார் ஜெ.பி.
  • மேலும் சில நாள்கள் வங்கத்தில் தங்கத் திட்டமிட்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், எதிர்க்கட்சித் தலைவர்களின் அழைப்பைத் தொடர்ந்து, கூட்டம் முடிந்தவுடனே தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்

  • நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஜி.எஸ். தில்லானைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
  • வழக்கமாக ஜூலை மத்தியில் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடருக்காக ஜூன் முதல் வாரத்திலேயே தகவல்கள் அனுப்பப்படும். இதுவரை இதுபற்றி எவ்வித அறிவிப்புமில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இருந்துவந்த இந்த நடைமுறையை எவ்விதத்திலும் மாற்றக் கூடாது என்றும் தில்லானிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
  • அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக எழுந்துள்ள சூழ்நிலை பற்றி விவாதிக்க இந்தக் கூட்டம் நடத்தப்படுவது மிகவும் அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கூட்டம் நடத்த வேண்டியதன் அவசியத்தைக் குடியரசுத் தலைவரிடம் வற்புறுத்தவும் வலியுறுத்தினர்.
  • தில்லானைச் சந்தித்த இந்தக் குழுவில் எஸ்.என். மிஸ்ர (பழைய காங்கிரஸ்), ஜோதிர்மயி பாசு (மார்க்சிய கம்யூ.), மது லிமாயி, சமர் குஹா (சோசலிஸ்ட்), விஜயராஜே சிந்தியா, ஆர்.வி. படேல், (ஜனசங்கம்), இரா. செழியன் (திமுக), இராஸ்மே டி. சிக்வைரா (பாரதிய லோக தளம்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

தொடரும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்

  • இதனிடையே, பிரதமர் இந்திரா காந்தியின் இல்லத்தின் முன், இன்றும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. எப்போதும்போல ஆர்ப்பாட்டக்காரர்களிடையே தோன்றி இந்திரா காந்தி பேசினார்:
  • "அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறையானது, வறுமைக்கான காரணங்களில் ஒன்றாகும். எல்லா துறைகளிலும் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் இதைச் சமாளித்துவிட முடியும்.
  • "தேச ஒற்றுமையையும் மக்களின் மன உறுதியையும் பேணிக் காப்பதுதான் தற்போது நாட்டின் முன்னுள்ள முக்கியமான பிரச்சினை. நான் பதவியில் நீடிப்பதா, இல்லையா என்பது முக்கியமல்ல. தேச ஒற்றுமையையும் மக்களின் உறுதியையும் குலைக்க எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன" என்றார் இந்திரா காந்தி.

தலையங்கம்

  • இன்றும் மிகச் சிறப்பாக ஒரு தலையங்கத்தை எழுதியிருந்தது தினமணி, அப்படியே நாளை என்ன நடக்கப் போகின்றன என்பதையெல்லாம் முன் உணர்ந்ததைப் போல. காங்கிரஸ் தலைவர் டி.கே. பரூவாவின் பேச்சை நிதானமிழந்தவரின் பேச்சு என்று குறிப்பிட்டதுடன் அரசியலமைப்பின்படி உள்ள நிலைமையை விளக்கி, வேண்டாம் அந்தப் பாதை என்று எச்சரித்து, இந்தத் தலையங்கத்தின் மூலம் மக்கள் கருத்தையே பிரதிபலிக்கிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தது தினமணி.

ஆபத்தான அந்தப் பாதை வேண்டவே வேண்டாம்

  • இந்திரா காந்திதான் இந்தியாவின் பிரதம மந்திரியாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் செய்துவரும் பிரசாரம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாயிருக்கிறது. முக்கியமாக புது  காங்கிரஸ் தலைவர் டி.கே. பரூவா பேசும் பேச்சுகள் நம்ப முடியாதவாறு இருக்கின்றன. பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளுபவர்கள் எழுப்பும் கோஷங்களை அவ்வளவாகப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட கோஷங்களை எழுப்புவதற்கென்றே அவர்கள் கொண்டு வரப்படுகிறார்கள். அந்த கோஷங்களை எழுப்பிவிட்டு அவர்கள் போய்விடுகிறார்கள். யாருடைய செலவிலோ டில்லிக்கு வந்து சொந்தக் கவலையை ஒரு நாளைக்காவது மறக்க முடிகிறது என்ற திருப்தி அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் பொறுப்பான பதவிகளை வகிப்பவர்கள், பொறுப்பற்ற முறையில் பேச ஆரம்பித்தால் அது உண்மையிலேயே கவலைப்பட வேண்டிய விஷயம்தான். உதாரணமாக, "இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா” என்று புது காங்கிரஸ் தலைவர் பரூவா கூறுகிறார். இதைக் கோமாளிப் பேச்சு என்றுகூடச் சொல்ல முடியாது. நிதானமிழந்துவிட்ட ஒருவரின் பேச்சு என்று கூடச் சொல்லலாம்.
  • இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா என்று மட்டும் அவர் நிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்திராதான் உலகம், உலகம்தான் இந்திரா என்றுகூடச் சொல்லிக் கொள்ளட்டும். ஆனால், இன்று நாட்டின் முன்புள்ள பிரச்னை அதுவல்ல. ஒரு தேர்தலில் ஒரு அபேட்சகர் முறைகேடான சில காரியங்களைச் செய்தார் என்று ஒரு வழக்கில் ஹைகோர்ட் ஒரு  தீர்ப்பளித்திருக்கிறது. சில முறைகேடான காரியங்கள் நடந்திருக்கின்றனவென்பதை கோர்ட் ஒப்புக்கொண்டு அந்தத் தேர்தல் செல்லுபடியாகாதென்று தீர்ப்பளித்திருக்கிறது. அந்தத் தீர்ப்பை ஆட்சேபித்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் தாக்கல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்திரா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கோ, மக்களுக்கோ நம்பிக்கை இருக்கிறதா இல்லையாவென்பதல்ல கோர்ட்டின் தீர்ப்பு. ஆகையால், பிரதம மந்திரியிடம் கட்சிக்கு உள்ள நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்யவோ, மக்கள் நம்பிக்கையைக் காட்டுவதற்கு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யவோ எந்தவிதமான அவசியமும் இல்லை. ஆனால், ஆளும் கட்சியினர் இப்போது அதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன?
  • அலகாபாத் கோர்ட் தீர்ப்பு தவறானது என்றால், அப்படிச் சொல்லுவதற்கு சுப்ரீம் கோர்ட் ஒன்றுக்குத்தான் அதிகாரம் உண்டு. வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. ஹைகோர்ட் தீர்ப்பு சரியானதல்லவென்று சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டால், அது இறுதியானது. யாரும் அதை மாற்ற முடியாது. அதற்கு மாறாக ஹைகோர்ட் தீர்ப்பை சுப்ரீம்கோர்ட் ஊர்ஜிதம் செய்துவிட்டால் எத்தனை பரூவாக்கள் வந்தாலும் அதை மாற்ற முடியாது. இதுதான் நமது அரசியலமைப்பின்படி உள்ள நிலைமை. இந்த நிலைமையில், ஆதரவு  ஆர்ப்பாட்டங்களுக்கோ, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கோ என்ன அவசியம்?
  • சட்டப்படி இதுதான் நிலைமை என்றாலும், உள்ளூர வேறு சிந்தனைகள் உருவாகிக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது; ஒருக்கால், ஹைகோர்ட்டின் தீர்ப்பு ஊர்ஜிதம் செய்யப்பட்டுவிட்டால்...? இந்த பீதிதான் ஆளும் கட்சியினரின் இன்றைய அர்த்தமில்லாத பிரசாரத்திற்குக் காரணமாயிருக்க வேண்டும். இதன் பலனாகத்தான் அவர்கள் நிதானமில்லாத பிரசாரங்களில் இறங்கியிருக்கிறர்கள். தாம் பேசுவதின் விளைவுகள் என்னவாக இருக்கக் கூடுமென்பதைப் பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதாகவே தெரியவில்லை. சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்ததற்காக, ஜனாதிபதிகளும், மந்திரிகளும் பதவிகளைத் துறக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டதை சமீப வருஷங்களில் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களே பார்த்திருக்கிறர்கள். ஆகையால் இது ஒன்றும் புதிதல்ல. தன்னுடைய சிப்பந்தி ஒருவர், கிழக்கு ஜெர்மனியின் உளவாளியாக இருந்தார் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டபோது, மேற்கு ஜெர்மனியின் பிரதம மந்திரி தானாகவே பதவியை விட்டுவிலகினார். சில அசிங்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற புகார்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ் மந்திரி ஒருவர் பதவி விலக நேர்ந்தது. 'வாட்டர்கேட்' ஊழலின் விளைவாக யு.எஸ். ஜனாதிபதி நிக்ஸன் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இவையெல்லாம் பழங்கால சரித்திரங்கள் அல்ல. சமீப காலத்தில் நடந்த சம்பவங்கள். முறைகேடுகள் என்பது எல்லா நாடுகளிலும் இருக்கின்றன. அந்தத் தவறுகளைச் செய்பவர்கள், அவற்றின் பலன்களை அனுபவிக்கத்தான் வேண்டும்.
  • இந்த உண்மையை ஒப்புக்கொள்ள ஆளும் கட்சியினர் ஏனோ தயங்குகிறர்கள்? கோர்ட்டின் தீர்ப்பு என்னவாயிருந்தாலும், இந்திரா காந்திதான் தொடர்ந்து பிரதம மந்திரியாக இருக்க வேண்டுமென்று அவர்கள் பேசுகிறார்கள். இந்தப் போக்கு எங்கு கொண்டுபோய் விடும் என்று அவர்கள் நினைத்துப் பார்த்ததாகத் தெரியவில்லை, ஒரு குற்றத்திற்காக ஒருவரை கோர்ட் தண்டிக்கிறது. கோர்ட் தீர்ப்பு என்னவாயிருந்தாலும் பரவாயில்லை என்று கூறி மக்கள் அவரை விடுவித்துக்கொண்டு வந்துவிடலாமா? சர்க்கார் ஒரு உத்திரவு பிறப்பிக்கிறார்கள். அது சரியான உத்தரவுதான் என்று கோர்ட் ஊர்ஜிதம் செய்கிறது. இந்தத் தீர்ப்பினால் பாதிக்கப்படுபவர்கள், கோர்ட் தீர்ப்பைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்ற நிலையை மேற்கொள்ள முடியுமா? முடியாது என்பதுதான் இந்தக் கேள்விகளின் பதில்களாகும். ஆனால், ஆளும் கட்சியினர் இப்போது போகும் போக்கிலேயே போய்க்கொண்டிருந்தால், சட்டத்திற்கோ, கோர்ட்டுகளுக்கோ மதிப்பு இல்லை என்ற அராஜக நிலைமை ஏற்பட்டுவிடுமென்பதில் துளிக்கூட  சந்தேகமிருக்க முடியாது. 'வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’ என்ற காட்டுமிராண்டி நாகரிகம்தான் நடைமுறையில் வந்துவிடும். அந்த நிலைமையைத் தான் ஆளும் கட்சியினர் விரும்புகிறார்களா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தெரியும் வரையில் எதிர்க்கட்சிகள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தோம். நிச்சயமான அராஜகத்தைத் தோற்றுவித்துவிடக் கூடிய பாதையில் இறங்கி, நாட்டைச் சிதறடித்துவிட வேண்டாமென்று ஆளும் கட்சியினரையும் கேட்டுக் கொள்ளுகிறோம். இதில் குறுகிய நோக்கமோ, விருப்பு வெறுப்போ எதுவுமில்லை, நாட்டின் ஜனநாயக மரபுகள், சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம் என்ற உயர்ந்த லட்சியங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அக்கறையுள்ள கோடிக்கணக்கான இந்திய மக்களின் அபிப்பிராயத்தையே பிரதிபலிக்கிறோம்."

நன்றி: தினமணி (21  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories