TNPSC Thervupettagam

ஜூன் 24, 1975 - பிரதமராக இந்திரா நீடிக்கலாம், வாக்களிக்க இயலாது

June 24 , 2023 512 days 320 0
  • 'இந்திரா காந்தி பிரதமராக நீடிக்கலாம், ஆனால், வாக்களிக்க இயலாது'
  • நாடு முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு, எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அமல் தொடர்பாக பிரதமர் இந்திரா காந்தி செய்துகொண்ட மேல் முறையீட்டின் மீது இவ்வாறு தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
  • ராய் பரேலி தொகுதியிலிருந்து இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற தீர்ப்பின் அமலை சில நிபந்தனைகளுடன் நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார் உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால நீதிபதியான வி.ஆர். கிருஷ்ணய்யர்.
  • மேல் முறையீடு இறுதி செய்யப்படும் வரை மக்களவை உறுப்பினராகத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கான உரிமைகளைப் பிரதமர் இந்திரா காந்தி பெறலாம். தொடர்ந்து, அவர் பிரதமராகப் பதவி வகிக்கவும் சட்டப்பூர்வமான தடை எதுவுமில்லை.
  • ஆனால், மக்களவையில் முன்வரைவுகள், திருத்தச் சட்டங்கள் போன்றவற்றின் மீது வாக்கெடுப்பு நடக்கும்போது வாக்களிக்க அவருக்கு உரிமையில்லை. ஆனால், மக்களவைக் கூட்டங்களில் அவர் கலந்துகொள்ளலாம்.
  • இந்த நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தின் அமர்வுக்கு பிரதமர் இந்திரா காந்தி மனுச் செய்துகொள்ளலாம். முழுமையான, நிபந்தனையற்ற தடை உத்தரவுக்கும் நிபந்தனையுடன் தற்போது வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவுக்கும் நடைமுறையில் எவ்வித வித்தியாசமும் இல்லை. பிரதமர் பதவியை அவர் வகித்துக் கொண்டிருக்கும் வரையில் அவருடைய நிலை எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது.

நீதிபதி கிருஷ்ணய்யர் அளித்த தீர்ப்பின் வரிகள்:

  • "1. கீழே மூன்றாவது பாராவிலுள்ள கட்டுப்பாடுகளுக்குள்பட்டு அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அமல் நிறுத்திவைக்கப்படும்.
  • 2. தீர்ப்பின் விளைவாகவும் 8 (ஏ) விதியின் விளைவாகவும் அவர் (இந்திரா காந்தி) உறுப்பினராக இருப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நிறுத்திவைக்கப்படுகிறது. அதாவது மனுதாரர் (இந்திரா காந்தி) தொடர்ந்து மக்களவை உறுப்பினராக  இருப்பதாகவே கருதப்படுவார். ஆயினும், இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் வரையில், மூன்றாவது பாராவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பொருந்தும்.
  • 3. மக்களவை உறுப்பினர் என்ற முறையில் மனுதாரர் மக்களவையில் வைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடலாம். மக்களவைக் கூட்டங்களுக்கும் வரலாம். ஆனால், மக்களவை விவாதங்களில் பங்குகொள்ள முடியாது., மக்களவை உறுப்பினருக்குரிய ஊதியத்தையும் அவர் பெற முடியாது.
  • [ஆனால், இந்தத் தடையைப் பற்றி நீதிபதி ஒரு விளக்கமும் கொடுத்திருக்கிறார். அதாவது, உறுப்பினர் என்ற முறையில்தான் அவர் அவை விவாதங்களில் கலந்துகொள்ளவோ, வாக்களிக்கவோ, ஊதியம் பெறவோ முடியாது. ஆனால், அவர் பிரதமராக இருக்கும் வரையில் அவையில் பேசவும் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவும் மற்ற பொறுப்புகளை நிறைவேற்றவும் எந்தத் தடையுமில்லை!].

மேல் முறையீடு செய்யலாம்

  • இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்ற நிலை எழுந்தால் இந்த உத்தரவை மாற்ற வேண்டுமென்று கோரி, மனுதாரரோ (இந்திரா காந்தியோ) எதிர் மனுதாரரோ (ராஜ்நாராயணோ) உச்ச நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்யலாம்.
  • ஓர் அவசர உணர்வுடன் இந்த உத்தரவை நான் பிறப்பிக்க வேண்டியதாயிருக்கிறது. இப்போது நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருக்கவில்லை. ஆகையால் வாக்களிக்க முடியாது என்ற தடை, நடைமுறைகளைப் பாதிக்காது. ஆனால், நிலைமை மாறக் கூடும். ஆகையால், இந்த உத்தரவு தாற்காலிகமானதுதான்.
  • நாடாளுமன்றத்தைக் கூட்டுவது போன்ற புதிய நிலைமை ஏற்பட்டால், அல்லது இந்த உத்தரவிலுள்ள நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய புதிய நிலைமை ஏற்பட்டால், நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டுமென்றோ, நிபந்தனையற்ற தடையை வழங்க வேண்டுமென்றோ மேல் முறையீடு செய்ய இரு தரப்பினருக்கும் உரிமையுண்டு.
  • இதற்கு முன்பு இந்த நீதிமன்றத்தின் முன் வந்த இதேபோன்ற வழக்குகளில் அளிக்கப்பட்ட தடை உத்தரவையே அனேகமாகப் பின்பற்றி இந்த உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. ஆனால், இந்தக் குறிப்பிட்ட வழக்கிலுள்ள சில நிர்பந்தமான அவசியங்களை முன்னிட்டு சில மாறுதல்கள் செய்யப்படுகின்றன.
  • இத்தகைய உத்தரவினால் பிரதமர் பதவிக்கு ஏற்படக்கூடிய சட்டபூர்வமான நிலைமை என்ன?  இதைப் பற்றி இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால், தப்பபிப்ராயத்தைப் போக்கக் கூடிய விதத்தில் தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டியதுதான்.
  • மனுதாரர் மக்களவை உறுப்பினராக இருக்க முடியுமா என்பதுதான் இந்த மேல் முறையீட்டின் ஒரே நோக்கமாகும். அவர் பிரதமராக இருக்க முடியுமா என்பது நேரடியாக நீதிமன்றத்தின் முன் எழுப்பப்படவில்லை. அந்தப் பதவி, அதனுடைய பொறுப்புகள் ஆகியவையெல்லாம் அரசியலமைப்பில் தனியாக விதிக்கப்பட்டிருக்கின்றன.
  • நாடாளுமன்ற அவைகளில் உறுப்பினராக இருப்பதற்கும் ஓர் அமைச்சராக இருப்பதற்கும் தொடர்பு இருக்கிறது. மேலே குறிப்பிட்ட விதத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்போது உறுப்பினராயிருக்கக் கூடாதென்ற தடை செயல்படவில்லை. அதேபோல இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் வரையில், மனுதாரர் மக்களவை உறுப்பினர் என்பதும் நீடிக்கிறது.
  • ஆனாலும், அவர் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் அவையின் நடவடிக்கைகளில் பங்கு கொள்வதற்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், பிரதமர் என்ற முறையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசுவதற்குள்ள உரிமையையோ, பிரதமரின் ஊதியத்தைப் பெறும் உரிமையோ பாதிக்கவில்லை.
  • ஆகையால், அவர் (இந்திரா காந்தி) பிரதமர் பதவியை வகிப்பதற்கு இனி  சட்டபூர்வமான தடை ஒன்றுமில்லை.
  • ஆனால், இந்த உத்தரவுக்கும் சட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்கும் சம்பந்தமில்லை. சட்டபூர்வமான பிரச்சினைகளைத்தான் நீதிமன்றம் கவனிக்க முடியும். அரசியல் நேர்மை, ஜனநாயக தர்மம் ஆகிய விஷயங்களில் நீதிமன்றங்கள் வாயைத் திறக்காமலிருப்பதுதான் நல்லது".
  • முதலில் உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த முழுமையான தடையை நீடிக்கத் தாம் விரும்பியதாகவும் ஆனால், முழுமையாக யோசித்த பிறகு அந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தயங்கியதாகவும் நீதிபதி கூறினார்.
  • விரைவில் மேல் முறையீட்டில் தீர்ப்பளிக்கப்பட்டால் தற்போதுள்ள நிலைமை (பிரதமராக இந்திரா காந்தி நீடிப்பது) நிர்வாக ஸ்திரத் தன்மையைக் காக்கவும் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படவும் பெரிதும் உதவும் என்ற பால்கிவாலாவின் வாதம் கவனத்துக்குரியது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியில் பலவீனமாக இருக்கக் கூடும் என்றாலும் அந்தத் தீர்ப்பு மாற்றப்படும் வரை அது நீடிக்கும் என்று குறிப்பிட்டார் அவர்.

சட்டத்தின் குறைபாடுகள்

  • நீதிபதி கிருஷ்ணய்யரின் உத்தரவு 23 பக்கங்களில் இருந்த்து. இந்த உத்தரவில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் சில பிரிவுகள் மிகவும் கொடுமையானவை என்பதாகக் குறிப்பாகத் தெரிவித்திருந்தார் கிருஷ்ணய்யர்.
  • தேர்தல் செல்லாது என்பதற்காக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள காரணங்களின் தன்மை, சட்டத்தின் 123-வது பிரிவில் கூறப்பட்டுள்ள கடும் தேர்தல் குற்றங்கள் எதிலும் இந்திரா காந்தியைச் சம்பந்தப்படுத்தவில்லை என பால்கிவாலா கூறியதை நீதிபதி ஒப்புக் கொண்டதுடன், அவை தவறு அற்றவையாக இருக்கலாம், ஆனால், இப்பொழுதுள்ள சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு அதே விளைவுகளை உண்டாக்குகின்றன. கொடுமையான சட்டங்கள் நீதிமன்றங்களில் சட்டம் அல்லாததாகிவிடவில்லை என்றார். தேர்தல் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை இந்த்த் தொடக்க நிலையில் தம்மால் எளிதில் நிராகரித்துவிட முடியாது என்றும் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் குறிப்பிட்டார்.

விலகல் இல்லை-இந்திரா முடிவு

  • பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தபடியே, உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகள் கொண்ட தடை உத்தரவுக்குப் பிறகும் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதில்லை என்று இந்திரா காந்தி முடிவு செய்துவிட்டார்.
  • இந்திராவின் முடிவுக்கு வலுவூட்டும் வகையில், அவர் பிரதமராகச் செயல்படுவதில் இடையூறு இல்லை என்ற நிலை சரியே என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக்கியுள்ளது என்று தெரிவித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. பரூவாவும் மத்திய அமைச்சர்களும் மாநில முதல்வர்களும் அறிக்கையொன்றை வெளியிட்டனர்.
  • நூறு எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாகவும் சிக்கலான ஏதேனும் ஒரு  நிலைப்பாட்டை எடுக்கலாம் என்றும் அஞ்சப்பட்ட அமைச்சர் ஜெகஜீவன் ராமும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்ட நிலையில் இருந்த சிறு சங்கடமும் விலகியது.

நாடு முழுவதும் கிளர்ச்சி, நாளை அறிவிப்பு

  • பிரதமரைப் பதவி விலகச் செய்ய நாடு முழுவதும் கிளர்ச்சிகளை மேற்கொள்வதென எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதுபற்றிய விவரங்களை மறுநாள் ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்பட தலைவர்கள் பேசவுள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றின.
  • நிபந்தனைகளுடன் மட்டுமே தடை விதித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்னமும் பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகாவிட்டால், அவரை விலக வலியுறுத்தி நாடு முழுவதும் சத்தியாக்கிரகம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
  • ஐந்து எதிர்க்கட்சிகளின் செயற்குழுவின் கூட்டுக் கூட்டத்திற்குப் பிறகு தீர்மானத்தை ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், எல்.கே. அத்வானி ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்

அறிக்கை விவரம்:

  • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது. தண்டனை பெற்ற மக்களவை உறுப்பினராகத்தான் இந்திரா காந்தி இருக்கிறார். இத்தகைய ஒருவர் அமைச்சராக இருப்பதை, அதுவும் பிரதமராக இருப்பதை அரசியல் சட்டம் எதிர்நோக்கவில்லை.
  • அரசியல் நேர்மை, ஜனநாயக மரபுகளைக் கருதி பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டும். சட்டப்படி அலாகாபாத் உயர் நீதிமன்ற முடிவுகள் மாற்றப்படாத வரை, அவை அப்படியே நீடிக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நிலையில் ஊழல் களங்கம் நீடிக்கிறது.
  • திருமதி காந்தி பற்றிய நம்பிக்கை சிதறுண்டுள்ளது. அவரது உறுப்பினர் பதவி கட்டுப்பாடுகளுக்குள் பட்டது. அவரது வாக்குரிமை நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலைமையில் அவரது பிரதமர் பதவி எத்தகையதாக இருக்க முடியும்?
  • அரசியல் நேர்மை, ஜனநாயக தர்மத்தைப் பற்றி நீதிமன்றம் குறிப்பாக எடுத்துக்காட்டியுள்ளது. சட்ட நுணுக்கங்களைவிட இத்தகைய மதிப்புகள்தான் ஜனநாயகத்தைக் காக்கின்றன. இவற்றின் மீதுதான் மக்களுக்கும்  நாடாளுமன்றத்துக்கும் மிகுந்த அக்கறை இருக்கிறது.

பிரதமர் வீட்டில் ஆலோசனை

  • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு கிடைக்கப் பெற்றவுடன் பிரதமர் இந்திரா காந்தியின் வீட்டில் கூடி, மத்திய அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களும் டி.கே. பரூவா உள்பட காங்கிரஸ் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
  • உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னரே பெரும்பாலான அமைச்சர்களும் மாநில முதல்வர்களும் வீட்டுக்கு வந்துவிட்டனர்.
  • தீர்ப்பின் நகலை இந்திரா காந்தியிடம் தந்து அவருக்கும் மூத்த அமைச்சர்களுக்கும் பால்கிவாலா விளக்கியதாகக் கூறப்பட்டது.
  • இந்திரா காந்தியின் இல்லத்துக்கு வெளியே மக்கள் திரண்டு, இந்திரா காந்தி வாழ்க என்று முழக்கமிட்டனர்.

இந்திரா நீடிக்க வேண்டும்

  • பிரதமர் பதவியில் இந்திரா காந்தி நீடிக்க வேண்டும் என மாலையில் கூடிய நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
  • கட்சியின் வேண்டுகோளை வரவேற்றுப் பேசிய நிதித் துறை அமைச்சர் சி. சுப்பிரமணியம், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசியல் முறைமை, ஜனநாயக தர்மம், தார்மிகக் கொள்கை ஆகியவற்றின் பேரில் இந்திரா காந்தி பதவியில் நீடிக்கலாம் என்றார்.
  • முழுத் தடை, நிபந்தனை கொண்ட தடை ஆகியவை பற்றி அநாவசிய குழப்பம் இருந்த நிலையில், நாட்டுக்கு வழிகாட்ட உச்ச நீதிமன்றம் ஒரு தீரப்பளித்திருப்பது அதிர்ஷ்டவசமானது. அரசியல் சொற்களில் காங்கிரஸ் கூறியதைத்தான் சட்ட, அரசியல் சாசன சொற்களில் நீதிபதி கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார் என்று ஒய்.பி. சவாண் குறிப்பிட்டார்.
  • புது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுவும் இந்திரா காந்தியின் தலைமையின் மீது முழு நம்பிக்கை தெரிவித்து, பிரதமர் பதவியில் அவர் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
  • இதையும் படிக்க.. இந்திராதிகாரம் பிறந்த கதை! - 8 :  ஜூன் 18, 1975 - இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா
  • பிரதமராக அவர் நீடிக்கும் சட்டபூர்வ, தார்மிக அதிகாரத்தையும் உரிமையையும் அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு அகற்றுவதாக எதிர்ப்பாளர்கள் செய்துவந்த தவறான, உள்நோக்கம் கொண்ட பிரசாரத்துக்கு உச்ச நீதிமன்ற உத்தரவு முடிவு கட்டியுள்ளதாகவும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

முன்னேற்றப் பாதையில்...

  • முன்னேற்றம், சுபிட்சப் பாதையில் நாட்டைக் கொண்டுசெல்ல தியாகங்களைப் புரிவதற்குத் தயாராக இருக்குமாறு பிரதமர் இந்திரா காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
  • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான தருணத்தில் தமது இல்லத்தில் முஸ்லிம் பெண்களிடையே பேசிக்கொண்டிருந்த பிரதமர் இந்திரா காந்தியிடம் கருத்துக் கேட்டபோது, எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். தீர்ப்புக்குப் பிறகு மாலையில் வழக்கம்போல வீட்டுக்கு வெளியே திரண்டிருந்த மக்களிடையே இந்திரா காந்தி பேசினார்.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் சங்கடங்கள் இருந்தபோதிலும் அது சாதனையும் வெற்றியும் நிலவிய காலம். நாட்டின் கண்ணியம் உயர்ந்துள்ளது. இந்திரா காந்தியா, அல்லது அவர் இல்லையா என்பது அல்ல பிரச்சினை. நாட்டை எந்தப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் பிரச்சினை என்று குறிப்பிட்டார் அவர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து

  • தடை உத்தரவின் நிபந்தனைகளை ராஜ்நாராயண் வரவேற்றார். பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
  • வேறு எந்த நாட்டிலும் நாடாளுமன்றத்தில் வாக்குரிமை பாதிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவியில் தொடர மாட்டார்; இந்திரா காந்தி உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஜனசங்கத் தலைவர் வாஜபேயி குறிப்பிட்டார்.
  • உச்ச நீதிமன்றத்தில் முழுமையான தடை வழங்கப்படாத நிலையில் பிரதமர் பதவியிலிருந்து கண்ணியமாக இந்திரா காந்தி விலகிவிட வேண்டும் என்று சோசலிஸ்ட் தலைவர் மது லிமயே தெரிவித்தார்.
  • இத்தகைய தர்மசங்கடமான நிலைமையில் எப்படிதான் நாடாளுமன்றத்துக்கு இந்திரா காந்தியால் வர இயலுமோ தெரியவில்லை என்றார் சட்ட வல்லுநர் ராம் ஜேத்மலானி.
  • ஒரு நிமிஷம்கூட தாமதிக்காமல் பதவியிலிருந்து இந்திரா காந்தி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பிகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குர் தெரிவித்தார்.
  • பிரதமராக இந்திரா காந்தி தொடர்ந்து நீடிப்பதற்கு தார்மிக, அரசியல், சட்ட ரீதியிலான நியாயம் எதுவும் இல்லை, இந்திரா காந்தி உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கருத்துத் தெரிவித்தது.
  • இந்திரா காந்தி இன்னமும் நீடித்தால் அது இந்திய மக்களுக்கு ஏற்பட்ட இழுக்கு, ஜனநாயகவாதிகள் யாரும் அதைச் சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு குறிப்பிட்டார்.
  • பிரதமர் பதவியில் தொடர்ந்து இந்திரா காந்தி நீடிக்க வேண்டும் என்று அவருடைய சகாக்கள் கூறுவதிலிருந்து காங்கிரஸ்காரர்களும் இந்திரா காந்தியும்  எந்தளவுக்கு தார்மிக அரசியல் தரத்தில் மட்டமாகிவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. இனியும் அவர் பதவியில் நீடிப்பது வெட்கக்குறைவான செயல் என்று பி. ராமமூர்த்தி தெரிவித்தார்.

கருணாநிதி அறிக்கை

  • இந்திரா காந்தியின் புது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, 1971 மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் தேர்தலை நடத்தச் செய்து (வழக்கமாக 1967-க்குப் பிறகு 1972 ஆம் ஆண்டில்தான் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், சட்டப்பேரவையைக் கலைத்து முன்னதாகவே தேர்தலை வரச் செய்தார்) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்த நிலையில், இந்தப் பிரச்சினையில் தொடக்கத்திலிருந்த நேரடியான கருத்துகளைத் தவிர்த்தே வந்திருக்கிறார் திமுக தலைவரும் அன்றைய முதல்வருமான மு. கருணாநிதி. இந்த நிலையிலும் அதேபாணியில்தான் சுற்றிவளைத்துக் கருத்துத் தெரிவித்தார் அவர்.
  • "அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் வழங்கப்பட்ட பிறகு அந்தத் தீர்ப்பின் உட்பொருளை உணர்ந்து இந்திய நாட்டு ஜனநாயக அரசியலுக்கு எதிர்கால முன்மாதிரியை அளிக்க வேண்டிய பொறுப்பின் சுமை, ஆளும் காங்கிரஸின் மீதும் - இந்திரா காந்தியின் மீதும் - அதிகமாக விழுந்துவிட்டது. அதனை  உணர்ந்து சரியான முடிவெடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளும் காங்கிரஸும் இந்திரா காந்தியும் தள்ளப் பட்டிருக்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தின் மேன்மை எந்த வகையில் பாதிக்கப்படப் போகிறது என்பதை மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்."

இளந்துருக்கியர் எதிர்ப்பு

  • காங்கிரஸிலுள்ள இளந்துருக்கியர்களான சந்திரசேகர், மோகன் தாரியா, ராம்தன் போன்றவர்கள் கூடி, பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.
  • இந்தக் கூட்டத்தில் ரங்கநாத ஷெனாய், லட்சுமி காந்தம்மா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நன்றி: தினமணி (24  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories