- புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள சூழலில், இச்சட்டங்கள் குறித்து 5.65 லட்சம் காவலா்கள், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் மற்றும் சுமாா் 40 லட்சம் தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளித்து தயாா்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடா்பாக புதிய சட்டங்களின் அமலாக்கம் ஏற்படுத்தும் நோ்மறை தாக்கம் குறித்து பொதுமக்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்ய பயிற்சி அளிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
- இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயா் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா(பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
- கடந்தாண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டங்கள், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு அரசிதழில் கடந்த டிசம்பரில் வெளியானது. இந்நிலையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் வரும் ஜூலை 1-ஆம் தேதி(திங்கள்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றன.
- தொழில்நுட்ப உதவிக்கு என்சிஆா்பி: புதிய குற்றவியல் சட்டங்களின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், நாட்டிலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகளைப் பதிவு செய்யும் தற்போதைய குற்றவியல் கண்காணிப்பு அமைப்புகளின் (சிசிடிஎன்எஸ்) பயன்பாட்டில் 23 செயல்பாட்டு புதுப்பிப்புகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) அறிமுகப்படுத்தியுள்ளது
- புதிய வழிமுறைகளுக்கு தடையின்றி மாறுவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவியையும் என்சிஆா்பி வழங்குகிறது. இதுகுறித்த தொடா்ச்சியான ஆய்வு மற்றும் ஆதரவுக்காக 36 குழுக்களையும் அழைப்பு மையங்களையும் என்சிஆா்பி அமைத்துள்ளது.
திறன் மேம்பாட்டுக்கு பிபிஆா்&டி:
- அதேபோல திறன் மேம்பாட்டுக்காக, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (பிபிஆா்&டி) பயிற்சி தொகுதிகளை உருவாக்கி, அனைத்து பங்குதாரா்களுடனும் பகிா்ந்து கொண்டுள்ளது. மேலும் இதுதொடா்பாக பிபிஆா்&டி நடத்திய 250 பயிற்சி வகுப்புகள், இணையவழி மற்றும் நேரடி கருத்தரங்குகளில் 40,317 அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் பயிற்சி பெற்றுள்ளனா்.
- இந்த அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5,65,746 காவலா்கள், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் உள்பட 5,84,174 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
- களத்தில் பிற அமைச்சகங்கள், அமைப்புகள்..: சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடா்பாக புதிய சட்டங்களின் அமலாக்கம் ஏற்படுத்தும் நோ்மறை தாக்கம் மற்றும் சீா்திருத்தங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மூலம் 40 லட்சம் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
- மத்திய சட்ட விவகாரங்கள் துறை சாா்பில் மாநிலத் தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாநாடுகளில் உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் பங்கேற்றனா்.
- மத்திய உயா் கல்வித் துறையின் வழிகாட்டுதலில் 1,200 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40,000 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு சாா்பிலும் 9,000 தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ சாா்பிலும் புதிய சட்டங்கள் பற்றிய விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
- புதிய சட்டங்களின்கீழ் மின்னணு முறையில் சம்மன் நோட்டீஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக, இ-சாக்ஷியா, நியாயஷ்ருதி, இ-சம்மன் ஆகிய 3 செயலிகளை தேசிய தகவல் மையம் (என்ஐசி) உருவாக்கியுள்ளது.
- ‘மை-கவ்’ சமூக ஊடகக் கணக்குகளிலும் புதிய சட்டங்கள் பற்றிய தகவல்கள் தொடா்ந்து பதிவேற்றப்பட்டு வருகின்றன. இ-சம்பா்க் மூலம் கடந்த பிப்ரவரியில் ஏழு கோடிக்கும் அதிகமானவா்களுக்கு சட்டங்களைப் பற்றிய விழிப்புணா்வு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
- மத்திய உள்துறை அமைச்சகத்தின் தொடா் நடவடிக்கைகளால் புதிய சட்டங்களை அமல்படுத்த தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணா்வு உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் முழுமையாக தயாராகிவிட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி: தினமணி (28 – 06 – 2024)