- உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி சுமார் 5 முதல் 11 சதவீத உடல்நலப் பாதிப்புகள் மூளை நரம்பியல் நோய்களால் ஏற்படுகின்றன. உலக அளவில் சுமார் 12 சதவீதத்துக்கும் மேலான இறப்புகள், நரம்பியல் நோய் காரணமாக ஏற்படுகின்றன. மூளை, நரம்பியல் நோய்களின் தாக்கம் அதிகரித்தவண்ணம் உள்ளது.
- மேலும் மூளை நரம்பியல் நோய்களின் தாக்கத்தால் உடல் செயலிழப்புகள் ஏற்படும் சாத்தியமும் அதிகமாகவே உள்ளது. இந்தச் சூழலில் இந்த ஆண்டுக்கான உலக மூளை தினத்தை (ஜூலை 22) ‘மூளை நலம் & செயலிழப்புகள்’ என்கிற கருப்பொருளில் உலக நரம்பியல் கழகம் முன்னெடுத்துள்ளது.
- உடலில் ஏற்படக்கூடிய முடங்கும்தன்மை அனைத்துமே செயலிழப்புகள்தாம். அது அறிவு, ஆற்றல், இயக்கம், வளர்ச்சி என எந்தக் குறைபாடாகவும் இருக்கலாம். பொதுவாக மூளை பாதிப்பால் ஏற்படும் பக்கவாதம் மட்டுமே முடங்கும்தன்மை அல்ல. ஆட்டிசம் போன்ற மூளை வளர்ச்சிக் குறைபாடு, போலியோவால் ஏற்படும் பாதிப்பு போன்றவையும் முடங்கும் தன்மைதான். முடங்கும்தன்மையை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.
முடங்கும் தன்மையின் வகைகள்:
- முதல் வகை: பிறந்தவுடனேயே சரியாகச் சுவாசிக்க முடியாத குழந்தைகள் வளர்ச்சி குன்றிய குழந்தைகளாக வளரக்கூடும்.
- இரண்டாம் வகை: வளரும் பருவத்தில் சிறார்களுக்குக் கவனக் குறைபாடு, ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆட்டிசம் போன்ற தொந்தரவுகள் இருக்கக்கூடும்.
- மூன்றாம் வகை: வளர்ந்தவர்கள் பயன் படுத்தும் போதை மருந்து, மது போன்ற பழக்கத்தால் அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாத நிலை அளவுக்கு அறிவு மழுங்கலாம்.
- நான்காம் வகை: முதியவர்களுக்குப் பக்கவாதம், ஞாபக மறதி நோய், பார்க்கின்சன் எனப்படும் நடுக்குவாத நோய் ஏற்படலாம்.
- ஐந்தாம் வகை: தலைக் காயங்கள், தண்டுவடக் காயங்கள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள்.
என்ன செய்ய வேண்டும்?
- இதுபோன்ற பாதிப்புகளால் செயலிழப்புகள் ஏற்பட்டு முடங்கும் நிலை ஏற்பட்டால், அதற்காக அப்படியே முடங்கி இருந்துவிடக் கூடாது. முடங்கும்தன்மை இருந்தாலும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். உடல் செயலிழப்புகளால் வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது. அந்தப் பிரச்சினைகளிலிருந்து உடலையும் மனதையும் மேம்படுத்திக் கொள்வது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
- ஆட்டிசம், ஹைப்பர் ஆக்டிவிட்டி, கவனக் குறைபாடு, பேசுவதில் சிரமம் உள்ளவர் களுக்கெனச் சிறப்புப் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீளத் தொடர்ச்சியான தெரபி சிகிச்சைகள், உடற்பயிற்சிகள், மனப்பயிற்சிகள், பேச்சுப் பயிற்சிகள், பழக்கவழக்க சிகிச்சை, காட்சிகள் மூலம் கற்றுக்கொடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். தொடர் பயிற்சிகள், முயற்சிகள் மூலம் அதிலிருந்து ஓரளவு மீண்டு வரலாம்.
- உயர் ரத்த அழுத்தமோ, நீரிழிவு நோயோ இருந்தால், அதை அவ்வப்போது பரிசோதித்து மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். இதற்கான சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப் படுகின்றன. மேலும் மூளை, நரம்பியல் பாதிப்பால் ஏற்படும் நோய்களுக்கும் தமிழக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
- மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டம், மாநில அரசின் காப்பீட்டுத் திட்டம், விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உதவும் ‘இன்னுயிர் காப்போம்’ ஆகிய திட்டங்களைப் பயன்படுத்தி மூளையில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தலைக்காயமோ, பக்கவாதமோ ஏற்பட்டால் காலதாமதம் இன்றிச் சிகிச்சை பெற வேண்டும். இதை அரசு மருத்துவமனைகள் மூலமே பெறலாம். இதன்மூலம் உடலில் முடங்கும்தன்மை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
பயிற்சிகள் அவசியம்:
- மூளை, நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் முடங்குத்தன்மையைக் குறைத்துக்கொள்ள முடியும். பக்கவாதம் ஏற்பட்டவர்கள் முறையாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நடுக்குவாதம் உள்ளவர்கள் அதற்கான மருந்துகளை உட்கொள்வதுடன் உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். உடல் உறுப்புகளை இழக்க நேரிடுபவர்கள் செயற்கைக் கருவிகளைப் பொருத்திக்கொள்ள வேண்டும். இதன்மூலம் முடங்கும்தன்மையிலிருந்து மீள முடியும்.
தடுப்பு முறைகள்:
- மூளை, நரம்பு பாதிக்கப்படுவதால், அங்க, அவயச் செயலிழப்புகளைத் தவிர்ப்பதே இந்த ஆண்டு உலக மூளை தினத்தின் நோக்கம். எனவே, மூளை நலத்தைப் பேணிக்காப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மூளையில் ஏற்படும் நோய்களால் முடங்கும்தன்மை ஏற்படாமல் தடுக்க முறையான உணவுப் பழக்கவழக்கம் தேவை. காய்கறிகள், பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
- உடற்பயிற்சியைத் தினமும் மேற்கொள்ள வேண்டும். புகைப் பழக்கம், மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். தலைக்காயங்கள் ஏற்படாமல் தடுக்க தலைக்கவசம் அணிவதுடன், வாகனங்களை வேகமாக இயக்குவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எந்த அறிகுறிகளையும் உதாசீனப்படுத்தக் கூடாது. மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, தியானம், யோகா போன்ற பயிற்சிகள், நேர்மறையான எண்ணங்கள் போன்றவையும் மூளை நலனுக்கு உதவும். இவற்றை அனைவரும் கடைப்பிடித்து மூளை நலம் பேணுவோம்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 07 – 2023)