TNPSC Thervupettagam

ஜூலை 22: டாக்டர் முத்துலட்சுமி நினைவு நாள்

July 23 , 2023 495 days 526 0
  • பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வந்ததற்கான நெடிய வரலாறு, தமிழ்நாட்டுக்கு மட்டுமே சொந்தமானது. தமிழ்நாட்டு அரசியல் வெளியில் பெண்கள் செயல் பட்ட அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும் செயல்படவில்லை. அரசனான அதியமானுக்கே அறிவுரை சொன்ன ஔவை வாழ்ந்த மண் அல்லவா இது!
  • பெண் விடுதலை வரலாற்றில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்கிற ஆளுமையின் பங்களிப்பு, பெண்ணுலகம் என்றும் நினைவில் வைத்துக் கொண்டாடுவதற்கு உரியது. தமிழகச் சட்டமன்றத்தில் இவர் ஆற்றிய அரும்பணிகள் போற்றிப் பாராட்டப்பட வேண்டியவை. தன்னுடைய அனுபவங்களை ‘My Experience as a Legislator’ நூலில் பதிவு செய்திருக்கிறார் முத்துலட்சுமி.
  • அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட முத்துலட்சுமி, டிசம்பர் 1926 முதல் ஜூன் 1930 வரை இந்தப் பணியில் ஈடுபட்டார். பின்னர் சட்டமன்றத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவரது பெயரை முன்மொழிந்தவர் இன்றைய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவும், நீதிக்கட்சியைச் சேர்ந்தவருமான பி. டி. ராஜன்.
  • டாக்டர் முத்துலட்சுமி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நீதிக்கட்சியைச் சேர்ந்த எம். கிருஷ்ணன் பேசியவை:
  • பெண்களுக்குச் சிறப்புரிமை வழங்குவதில் மெட்ராஸ் மாகாண சட்டமன்றம் எப்போதும் மற்ற மாகாணங்களுக்கு முன்னோடியாக விளங்கு கிறது. பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்க முதன் முதலாகத் தீர்மானம் கொண்டுவந்த சட்டமன்றம் இதுதான். பெண்கள் சட்டமன்றத் தேர்தலில் நிற்பதற்கும் நியமிக்கப்படுவதற்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டதும் இங்குதான்”.
  • இதிலிருந்து பெண்ணுரிமை பேணுவதில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்ததை அறியலாம். சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கை விவாதங்களின்போதும், பொதுவான விவாதங்களின்போதும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்தவர் முத்துலட்சுமி. அப்போதைய சென்னை மாகாணத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1000-க்கு 300 ஆக இருந்தது. இதைச் சுட்டிக்காட்டி, குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
  • உயர்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர் களுக்கு, அதுவும் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பரிசோதனை நடைமுறையில் இருந்தது. இப்பரிசோதனை தொடக்கநிலைப் பள்ளிகளுக்கும், மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர் முத்துலட்சுமி. பெண்களில் மிகக் குறைவான சதவீதத்தினருக்கே உயர்கல்வி கிடைத்துவந்த நிலையைச் சுட்டிக்காட்டி, பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்றார்.
  • பால்வினை நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க, பெண் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய முக்கியமான கோரிக்கை. இளம் வயதில் திருமணம் செய்துவைப்பதன் தீமைகளை விவரித்து காந்திக்குக் கடிதம் எழுதி, அவரது ஆதரவையும் கடிதத்தின்வழி பெற்றார். சட்டமன்றத்திலும் இது குறித்துப் பேசினார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண் களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும், பெண் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது போன்ற அவரது முன்னெடுப்புகள் மிகவும் முன்னோடியானவை.
  • டாக்டர் முத்துலட்சுமியின் முக்கியமான பங்களிப்பாக இன்றளவும் கருதப்படுவது, தேவதாசி முறையை ஒழிப்பதற்கு சட்டமன் றத்தில் அவர் கொண்டுவந்த சட்ட முன்வரைவே. கோயில்களுக்குப் பெண்களைப் பொட்டுக்கட்டி நேர்ந்துவிடும் சமூகக் கொடுமையை எதிர்த்துச் சட்டமன்றத்தில் விரிவான கொள்கைப் போரை நடத்தியவர் முத்துலட்சுமி. இச்சட்டத்திற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்து, 30.10.1927 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதினார். மேலும், சட்ட வரைவுக்கு முழுமையான ஆதரவு தெரிவித்து, அரசுக்குக் கடிதமும் எழுதினார். 1930இல் காந்தியின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தனது பதவியைத் துறந்தார் முத்துலட்சுமி.
  • இத்தகைய பெருமைமிகு வரலாறு கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போதைய சட்டமன்ற பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 5 சதவீதம் மட்டுமே என்பது சிந்தனைக்கு உரியது.

நன்றி: தி இந்து (23 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories