TNPSC Thervupettagam

ஜெகதீஷ் சந்திர போஸ்

January 1 , 2025 9 days 36 0

ஜெகதீஷ் சந்திர போஸ்

  • தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதை நிரூபித்ததன் மூலம் அறிவியல்ரீதியாக உலகின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியவர் ஜெகதீஷ் சந்திர போஸ்.
  • 1858 நவம்பர் 30 அன்று இன்றைய வங்கதேசத்தில் பிறந்தார். சிறுவனாக இருந்த போதே போஸ் எதையும் கூர்மையாக உற்று நோக்குவார். ஏன், எதற்கு, எப்படி என்று எதையும் கேள்வி கேட்டு, தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார். போஸின் தந்தை மருத்துவர் என்பதால் போஸின் ஆர்வத்தை ஊக்குவித்தார்.
  • கொல்கத்தாவில் உள்ள சேவியர் கல்லூரியில் படித்தார். பின்னர் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார். அப்போது தாவரவியல், விலங்கியலில் அதிக ஆர்வம் காட்டினார். லார்டு ரிலே என்கிற விஞ்ஞானியின் நட்பு கிடைத்தது. அவரின் வழிகாட்டலில் தாவரங்களைப் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
  • படிப்பு முடிந்து நாடு திரும்பியவர் கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதோடு ஆய்வுகளையும் மேற்கொண்டார்.
  • இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள் என்று கருதிய ஆங்கிலேய அரசு, அதே வேலை செய்த ஆங்கிலேயர்களுக்கு அளித்த சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளத்தையே போஸுக்குக் கொடுக்க முன்வந்தது. தன்மானத்தை விட்டுக் கொடுக்காத போஸ், தனக்குச் சம்பளமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 3 ஆண்டுகள் சம்பளம் இன்றி சிறப்பாக வேலை செய்தார். அவர் திறமையைப் பார்த்த கல்லூரி நிர்வாகம், ஆங்கிலேயருக்கு நிகரான முழு ஊதியத்தைத் தர முன்வந்தது. அதோடு மூன்று ஆண்டுகள் அவருக்குக் கிடைக்க வேண்டிய ஊதியத்தையும் அளித்தது.
  • அந்தத் தொகையை வைத்து ஓர் அறிவியல் ஆய்வுக் கூடத்தை நிறுவினார் போஸ். அங்கு தாவரவியல், இயற்பியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ரேடியோ அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். 3 கி.மீ. தொலைவுக்குத் தந்தி இல்லாமல் ரேடியோ அலைகளைக் கடத்திக் காட்டினார். மார்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பை போஸ் உருவாக்கினார். அறிவியல் உலகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. காப்புரிமை பெற்று, உரிமை கொண்டாடும் முயற்சியிலும் போஸ் இறங்கவில்லை. நூறு ஆண்டுகள் கழித்து வானொலி அறிவியலின் முன்னோடியாகப் போஸை ஏற்றுக்கொண்டனர்.
  • போஸ் மிகக் குறைந்த அலை நீளமுடைய நுண்ணலைகளை உருவாக்கும் ஓர் இயந்திரத்தை உருவாக்கினார். கணிப்பொறி அறிவியலின் ஆரம்பகால ஆய்வாளர்களில் அவரும் ஒருவர்.
  • தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்று நம்பினார். அதன் அசைவுகளையும் சலசலப்புகளையும் அளக்கும் நுண்ணிய உணர் கருவிகளைக் கண்டறிந்தார். அவற்றைக் கொண்டு தாவரங்களின் மீது சோதனை நடத்தினார். அந்தச் சோதனைகள் மூலம் வெப்பம், குளிர், ஒலி, ஒளி போன்ற புறத்தூண்டுதல்களைப் பதிவு செய்தார். அவை மனிதர்களையும் விலங்குகளையும் பாதிப்பது போல் தாவரங்களையும் பாதிக்கின்றன என்பது உறுதியானது.
  • புறத்தூண்டுதல்களுக்குத் தாவரங்கள் எவ்வளவு பொறுமையுடன் நடந்து கொள்கின்றன என்று ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். போஸின் முடிவுகளை உலகம் வரவேற்று பாராட்டியது.
  • தன் ஆராய்ச்சிகளின் முடிவை வைத்து Response in the Living and Non living, Nervous mechanism of Plants ஆகிய நூல்களை எழுதினார். இந்த நூல்கள் போஸுக்கு உலக அளவில் புகழைத் தேடிக் கொடுத்தன.
  • பிரிட்டிஷ் அரசு போஸைக் கௌரவிக்கும் வகையில் சர் பட்டம் வழங்கியது. 1920இல் லண்டன் ராயல் கழகத்தின் நிரந்தர உறுப்பினரானார் போஸ்.
  • ஆண்டு வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கைத் தன் அத்தியாவசியத் தேவைக்கு வைத்துக்கொண்டு, மீதியை அறிவியல் பயிலும் மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டார். 1937 நவம்பர் 23 அன்று 79 வயதில் மறைந்தார் போஸ்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories