TNPSC Thervupettagam

ஜெயிக்குமா ஜனநாயகம்

February 8 , 2024 340 days 233 0
  • பாகிஸ்தான் இன்று தனது 12-ஆவது பொதுத் தேர்தலை சந்திக்கிறது. அந்த நாட்டின் 12.85 கோடி வாக்காளர்கள் அடுத்தாற்போல யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பார்கள். இடைக்கால அரசின் கீழ் நடத்தப்படும் இந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கும், நான்கு மாநிலப் பேரவைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.
  • தேர்தலில் வெற்றிபெற்று யார் ஆட்சி அமைக்கப் போகிறார் என்பதில் வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம். ஆனால், யார் பிரதமராகப் போவதில்லை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையிலடைக்கப்பட்டு, அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்--இன்சாஃப் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், "மீண்டும் இம்ரான் கான்' என்கிற பேச்சுக்கே இடமில்லை.
  • கடந்த 2018 தேர்தலில் எப்படி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சிறையிலடைக்கப்பட்டு, ராணுவத்தால் இம்ரான் கான் பிரதமராக முன்னிறுத்தப்பட்டாரோ, அதே பாணியில் இப்போது மீண்டும் நவாஸ் ஷெரீஃப் ராணுவத்தால் ஆதரிக்கப்படுகிறார். இவ்வளவுதான் வித்தியாசம்.
  • முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மீது மூன்று வழக்குகள் பாய்ந்திருக்கின்றன. அவரது கட்சித் தொண்டர்கள் மீது பல வழக்குகள் தொடரப்பட்டு தேர்தலில் அவர்கள் போட்டியிடாதபடி தடுக்கப்பட்டிருக்கிறது. இம்ரான் கட்சியின் சின்னமான கிரிக்கெட் மட்டையும் முடக்கப்பட்டிருக்கிறது. சுயேச்சைகளாக அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள்.
  • "தேசிய அவை' என்று சொல்லப்படும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 336 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 266 இடங்களுக்கு உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படு
  • கிறார்கள். ஏனைய 70 இடங்களில் 60 இடங்கள் மகளிருக்காகவும், 10 இடங்கள் முஸ்லிம் அல்லாதவர்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் பெறும் இடங்களின் அடிப்படையில், ஒதுக்கீட்டு இடங்களுக்கான உறுப்பினர்களை அவர்கள் நியமித்துக் கொள்ளலாம். அவையில் 169 உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற கட்சி ஆட்சி அமைக்கும்.
  • பாகிஸ்தானின் தேசிய அவைக்கு 5,121 வேட்பாளர்கள்- 4,807 ஆண்கள், 312 பெண்கள், 2  திருநங்கையர் - களத்தில் இருக்கிறார்கள். பாகிஸ்தானில் உள்ள நான்கு மாநில சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் 12,695 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். 90,777 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வாக்குச் சாவடியும்  பாதுகாப்புப் படையினரால் கண்காணிக்கப்படுகிறது.
  • இந்தமுறை தேசிய அவைக்கான தேர்தல் களத்தில் 313 பெண்கள் போட்டியிடுவது இதுவரையில் இல்லாத அளவிலானது. அதேபோல, மாநிலப் பேரவைகளுக்கான தேர்தலில் 568 பெண்கள் வேட்பாளர்களாகக் களமிறங்கி இருக்கிறார்கள். விழுக்காடு என்று பார்த்தால், அவர்களது எண்ணிக்கை வெறும் 6% தான் என்றாலும், அதுவேகூட பாகிஸ்தான் அரசியலில் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.
  • எல்லோருடைய பார்வையும் இந்தமுறை வாக்கு விகிதம் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்ததாகவே இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் பாகிஸ்தான் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தை ஓரளவுக்கு நாம் கணிக்க முடியும். ராணுவத்தின் மேற்பார்வையில் நடத்தப்படும் தேர்தலின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் வாக்காளர்களுக்கு இருந்தால் அதை வாக்கு விகிதம் வெளிப்படுத்தும்.
  • கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களின் வாக்கு விகிதம் சுமார் 52% ஆக இருந்தது. கடந்த நான்கு தேர்தல்கள் என்று எடுத்துக்கொண்டால், 51% (2018); 53% (2013); 44% (2008); 41% (2002) என்று காணப்பட்டது. 1997 இல் வெறும் 36% வாக்குகள்தான் பதிவாகின. ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட தேர்தல் என்கிற மனநிலை வாக்காளர்களுக்கு ஏற்படும்போது, நாம் வாக்களித்து என்னவாகப் போகிறது என்கிற எண்ணத்தில் அவர்கள் வாக்குப் பதிவைத் தவிர்த்துவிடுகிறார்கள் என்று பொருள்.
  • பாகிஸ்தானைப் பொருத்தவரை, இளம் வாக்காளர்கள் தேர்தலில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. இதுகுறித்த சரியான புள்ளிவிவரம் இல்லை. இந்தமுறை இம்ரான் கானுக்கு சாதகமாக இளம் வாக்காளர்கள் சுயேச்சைகளுக்கு வாக்களிக்கக்கூடும் என்று ஒரு கணிப்பு தெரிவிக்கிறது.
  • கடந்த தேர்தலைவிட 2.35 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் 1.2 கோடி பேர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது. முந்தைய தேர்தல்களில் வாக்களிக்காத புதியவர்களும் இந்தப் பட்டியலில் இருக்கக்கூடும். அவர்களது வாக்குகள்தான் இன்று நடைபெறும் தேர்தலின் முடிவை முன்கூட்டியே கணிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
  • பாகிஸ்தானின் மக்கள்தொகையில் பெண்கள் 49%. வாக்காளர்களில் பெண்களின் பங்கு 46.1%. அதனால் பெண் வாக்காளர்களும், புதிய வாக்காளர்களும்தான் தேர்தல் முடிவை நிர்ணயிப்பவர்கள் என்று பலரும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். பாகிஸ்தான் தேர்தல்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி - தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், இந்த வாக்குகள் முக்கியத்துவம் பெறுவதில் வியப்பில்லை.
  • நான்காவது முறையாக நவாஸ் ஷெரீஃப் பிரதமராவாரா இல்லையா என்பதல்ல கேள்வி. இம்ரான் மீதான வெறுப்பில் நவாஸ் ஷெரீஃபை மீண்டும் ஏற்றுக் கொண்டிருக்கும் ராணுவம், அவர் வலிமையான பிரதமராகச் செயல்பட அனுமதிக்குமா? முடிவு என்னவாக இருந்தாலும் ராணுவத்தின் பிடியிலிருந்தும், பயங்கரவாதத்தில் இருந்தும், பொருளாதார சிக்கலில் இருந்தும் பாகிஸ்தான் தன்னை விடுவித்துக் கொள்வது இயலாது என்பது மட்டும் உறுதி.

நன்றி: தினமணி (08 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories