- ஜெர்மனியில் நடந்து முடிந்திருக்கும் தேர்தலானது, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஐரோப்பாவைத் தாண்டியும் மிகப் பெரிய அரசியல் - பொருளியல் சக்தி ஜெர்மனி என்பதே முக்கியமான காரணம். ஜெர்மனி என்றாலே, ஹிட்லரின் பாசிஸம் நம் நினைவுக்கு வருவது இயல்பானது. ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகப் போரின் முடிவில் ஜெர்மனியானது, கிழக்கு - மேற்கு என்று இரு துண்டுகள் ஆக்கப்பட்டதும், 1990-ல் அது மீண்டும் ஒன்றானதும் பலருக்கும் நினைவில் இருக்கும்.
- ஒன்றுபட்ட ஜெர்மனி உலகின் கூட்டாட்சிக்கான முன்னுதாரணங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த இடத்தை அது வந்தடைய நெடிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. ஜெர்மனி எப்படி தன்னுடைய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது, அரசியல் கட்சிகள் எப்படி அங்கு செயல்படுகின்றன என்பது நாம் எல்லோருமே அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று. அறிந்துகொள்வோம்!
- ஜெர்மனி தன்னுடைய அரசை ‘கூட்டாட்சி அரசு’ என்றே குறிப்பிடுகிறது. ஜெர்மனியின் தேர்தல் நடைமுறை ஜனநாயகத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் என்றால், ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு வாக்குகள் தரப்படும். 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கலாம். அதே வயதில் வேட்பாளராகவும் போட்டியிடலாம். வாக்களிக்க ஒரு வயது, போட்டியிட ஒரு வயது என்று குறைந்தபட்ச வயதில் பேதமே கிடையாது.
- எல்லாக் கட்சிகளுக்கும் எல்லா அரசியல் கருத்துகளுக்கும் இடம் கிடைக்க வேண்டும் என்பது ஜெர்மனியின் அக்கறையுள்ள நடைமுறை. ஜெர்மனியின் நாடாளுமன்றம் ‘புந்தேஸ்டாக்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தமுள்ள இடங்கள் 656. நாடாளுமன்றத் தொகுதிகள் 328.
முதல் வாக்கு வேட்பாளருக்கு!
- அதாவது, தன்னுடைய தொகுதியில் இரண்டு வாக்குகளைப் பெறும் வாக்காளர், அவருடைய முதல் வாக்கைத் தன்னுடைய தொகுதியில் போட்டியிடும் நேரடி வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தலாம். ‘இந்தத் தொகுதிக்கு இவர்தான் என்னுடைய பிரதிநிதி’ என்பது இந்த வாக்கின் மூலம் அவர் வெளிப்படுத்தும் செய்தி (கிட்டத்தட்ட நம்மூர் பாணி இது).
- இதன் மூலம் அத்தொகுதி மக்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினருக்கும் உறவு ஏற்படுகிறது. தொகுதியின் வளர்ச்சிக்கு அவரால் ஊக்கமுடன் செயல்பட முடிகிறது. வாக்காளர்களும் அவரிடம் உரிமையுடன் கேட்க முடிகிறது.
இரண்டாவது வாக்கு கட்சிக்கு!
- வாக்காளருடைய இரண்டவாது வாக்கானது, வாக்காளர் விரும்பும் அரசியல் கட்சிக்கானதாக ஆகிறது. இங்கே தான் ஆதரிக்கும் கட்சிக்கோ, அதன் கூட்டணிக் கட்சிக்கோ, தங்களுடைய கட்சிக்கு இணக்கமான கொள்கையுள்ள இன்னொரு சிறிய கட்சிக்கோ இந்த வாக்கை வாக்காளர் அளிக்கிறார். இதன் மூலம் தனிநபருக்கும், அரசியல் கட்சிக்கும் இடையிலான தன்னுடைய தேர்வில் வேறுபாட்டைக் காட்டும் வாய்ப்பை வாக்காளர் பெறுகிறார்.
புதிய கட்சிகளுக்கான இடம்
- ஜெர்மனியில் ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட்டு செல்வாக்கு பெற்றுவிட்ட கட்சிகளைத் தவிர, புதிய சித்தாந்தங்களுடன் வரும் கட்சிகளுக்கு மக்களிடையே ஆதரவு இருந்தால், அதன் தனி வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டாலும், அந்தக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் நிச்சயம் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று அரசமைப்பு சொல்கிறது.
- ஒரு கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தனித் தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால் அதற்கு அங்கீகாரமும் வாக்குகள் அடிப்படையிலான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படும். அதேசமயம், பதிவான மொத்த வாக்குகளில் 5%-க்கும் குறைவான வாக்குகள் பெற்ற கட்சிக்கு நாடாளுமன்றத்தில் இடம் இருக்காது.
- இத்தகைய ஏற்பாடு எப்படி உதவுகிறது என்றால், புதிய கனவுகளுடன் வரும் சிறிய கட்சிகள் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு மட்டுமல்லாது, பழைய சிந்தனைகளுடன் கெட்டித் தட்டிப் போன கட்சிகளை அரங்கத்தைவிட்டு வெளியேற்றுவதற்கும் உதவுகிறது.
- புதிய கட்சியான பசுமைக் கட்சி இப்போது பெற்று வரும் ஆதரவையும், ஹிட்லரின் பாசிஸ கருத்துகளையும் செயல்பாடுகளையும் ஆதரிக்கும் பழைய வலதுசாரி கட்சிகள் படிப்படியாக தங்கள் இடங்களை இழப்பதும் இதன் வழி நடக்கிறது.
தனிநபர் விகிதாச்சார முறை
- ஜெர்மன் நாடாளுமன்ற முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை என்று அவசரப்பட்டு கூறிவிட முடியாது. இது தனிநபர் சார்ந்த விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை. அதாவது, இரண்டு வாக்குகளில் முதல் வாக்கின்படி, தனிநபர் தொகுதியில் ஒருவர் அடுத்தவரைவிட அதிகம் பெற்றால் வெற்றிக்கு அது போதும். இரண்டாவது வாக்கின்படி ஒரு கட்சியானது பெறும் வாக்குகள் அதற்கு நாடாளுமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற வழி வகுக்கும்.
- இப்படியான நேரடிக் கணக்கைத் தாண்டி, இந்த விஷயத்தில் கூடுதலாக இன்னும் சில விசேஷ வேறுபாடுகளும் உண்டு. அதாவது, வேட்பாளர் பெறும் வாக்குகளின் அடிப்படையிலும் கட்சிகள் பெறும் பிரதிநிதித்துவத்தில் மாற்றம் இருக்கும். உதாரணமாக, ஒரு வேட்பாளர் 90% வாக்குகள் பெற்றால் அந்தக் கூடுதல் வாக்குகளுக்கு ஒரு மதிப்பு வேண்டுமே! ஆக, அதிக வாக்குகள் பெற்ற கட்சிக்கு கூடுதல் இடங்கள் என்றால் செல்வாக்கிழந்த கட்சிக்கு அதே அளவுக்கு இடங்கள் குறையும்.
- வேட்பாளர்களைப் பொருத்தவரை கட்சிதான் அவர்களுக்கு எஜமானர். குறிப்பிட்ட தொகுதியில் ஒருவரை வேட்பாளராக நியமிப்பதுடன், தேர்தலுக்குப் பின் தன் கட்சிக்கு விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கிடைக்கும் இடங்களுக்கான பிரதிநிதிகளின் பட்டியலிலும் அவரைக் கட்சி சேர்க்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் நாடாளுமன்றத்தில் இரண்டு இடங்கள் என்பதை இங்கே மீண்டும் நினைவில் கொள்க. ஆக, தன்னுடைய தொகுதியில் தோற்றவரும்கூட கட்சியின் தயவில், இன்னொரு இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிவிட முடியும். அதனால்தான் கட்சி எஜமானன் ஆகிறது.
அதீதப் பெரும்பான்மைக்குத் தடை
- முக்கியமான இன்னொரு விஷயம், ஒரு கட்சியின் நேரடி வேட்பாளர்களும் அதிக இடங்களில் வென்று, கட்சிக்கான வாக்குகளிலும் கட்சி அதே அளவுக்குப் பெற்றுவிட்டது என்றால், அந்தக் கட்சிக்கான இடம் இரட்டிப்பாகிவிடாது.
- வாக்குகள் அடிப்படையில் அந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்று கணக்கிடப்படும். ஏற்கெனவே தனிநபர் தொகுதியில் வென்ற இடம் எத்தனை என்று பார்க்கப்படும். தனிநபர் தொகுதியில் பெற்ற இடங்கள், வாக்குகளுக்குக் கிடைக்க வேண்டிய இடங்களின் எண்ணிக்கையிலிருந்து கழிக்கப்பட்டு எஞ்சிய இடம் மட்டுமே அக்கட்சிக்கு ஒதுக்கப்படும்.
- இதனால் ஒரு கட்சிக்கு தேவைக்கு அதிகமாகப் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் தவிர்க்கப்படுவதோடு, சிறிய கட்சிகள் பிரதிநிதித்துவம் பெறவும் வழி கிடைக்கும்.
ஞாயிறு தேர்தல்
- நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். தேர்தல் நாள் பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமையாகத்தான் இருக்கும். காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்களிப்பு மாலை 6 மணி வரையில் தொடரும். தேர்தல் நடத்தும் முகமை சுதந்திரமாகச் செயல்படும். தேர்தல் நடத்தை நெறிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படும்.
- தேசத் துரோக வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள், அரசை ஏய்த்தவர்கள் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஜெர்மானிய குடிமக்கள் மட்டுமே வாக்களிக்கலாம். தேர்தல் நடைமுறைகளையும் சட்டத்தையும் ஜெர்மானிய அரசும் கட்சிகளும் அவ்வப்போது திருத்திக்கொண்டேவருகிறார்கள்.
- மேம்பட்ட ஜனநாயகம், கூட்டாட்சி என்பது ஒரு முறையைத் தொடர்ந்து புதுப்பித்தும், செழுமைப்படுத்தியும் வருவதாகும். ஜெர்மனி அதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறது!
நன்றி: அருஞ்சொல் (01 – 10 – 2021)