TNPSC Thervupettagam

ஜெர்மனியில் இஸ்லாமிய வெறுப்பு ஏன்?

September 22 , 2024 114 days 168 0

ஜெர்மனியில் இஸ்லாமிய வெறுப்பு ஏன்?

  • தன்னுடைய நாட்டு எல்லைகளில் தாற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தத் தொடங்கியது ஜெர்மானிய அரசு; இம்மாதம் 16ஆம் நாள் தொடங்கிய இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பக்கத்து நாடுகளுக்கு எரிச்சலையும் புதிய கவலையையும் ஏற்படுத்தியது. “வெளிநாட்டு அகதிகள் கட்டுப்பாடு இல்லாமல் எங்கள் நாட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமல்ல, இஸ்லாமிய பயங்கரவாதமும் கடுமையான குற்றச் செயல்களும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான் இந்த நடவடிக்கை” என்று ஜெர்மனியின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் நான்ஸி ஃபைஸர் அறிவித்தார்.
  • ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள சோலின்கன் என்ற ஊரில் சிரியா நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 3 பேர் இறந்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியானது. ஜெர்மனியில் தங்க புகலிடம் தர முடியாது என்று அதிகாரிகள் அறிவித்த பிறகு தாக்கிய அவர், ஐஎஸ்ஐஎல் (ஐஎஸ்ஐஎஸ்) அமைப்பைச் சேர்ந்தவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
  • சோஷியல் டெமாக்ரட்ஸ், கிரீன்ஸ், லிபரல்ஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இடதுசாரி முற்போக்கு கூட்டணி அரசா இப்படிக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறது என்று பலரும் அதிர்ச்சி அடைந்தனர். உண்மை என்னவென்றால் ஜெர்மனியில் இப்போது பெரும்பாலானவர்கள் ‘வலதுசாரிக’ளாகவே சிந்திக்கிறார்கள், நடந்துகொள்கிறார்கள், அனைவருக்குள்ளும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு பொங்கி வழிகிறது.

புதிய கட்சி காரணம்

  • ஜெர்மனியில் இப்போது மக்களிடையே வேகமாக செல்வாக்கு பெற்றுவருகிறது ‘ஜெர்மனிக்கு மாற்றுவழி’ (ஆல்டர்நேடிவ் ஃபார் ஜெர்மனி) என்ற புதிய தீவிர வலதுசாரிக் கட்சி. தேசிய அளவிலும் மாநிலங்களிலும் அதற்கு மக்களிடையே ஆதரவு அதிகமாகிக்கொண்டிருக்கிறது. செப்டம்பர் தொடக்கத்தில் ஜெர்மனியின் கிழக்கு மாநிலமான துரிங்கியாவில் அது மொத்த வாக்காளர்களில் 32.8% பேருடைய ஆதரவைப் பெற்றது. கிழக்கில் உள்ள சாக்ஸனி மாநிலத்தில் 30.6% வாக்குகள் பெற்று இரண்டாவது இடம்பிடித்த கட்சியானது. கிறிஸ்டியன் டெமாக்ரட்ஸ் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளைவிட 1.3%தான் குறைவு. கிறிஸ்டியன் டெமாக்ரடிக் என்பது மையவாத – வலதுசாரி கட்சி.
  • புதிய கட்சியின் அரசியல் செல்வாக்கு மட்டுமே இஸ்லாமிய வெறுப்பு வளரக் காரணமல்ல; ஜெர்மானிய அரசியலில் பொதுவாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் போக்கின் அறிகுறிதான் இந்த வெறுப்புணர்வு. முஸ்லிம்களை அரக்கர்களாகச் சித்தரித்து அவர்களைப் பலிகடாவாக ஆக்குவதுதான் இதன் பின்னால் உள்ள நோக்கம்.

இஸ்லாத்துக்கு மறுப்பு

  • ஜெர்மனியை ஆளும் கூட்டணி அரசு, இஸ்லாத்தைத் தொடர்ந்து மறுத்துவருகிறது. “இஸ்லாத்தின் நஞ்சு இங்குள்ளவர்களை மட்டுமல்ல - வெளிநாடுகளில் உள்ளவர்களையும் அடைகிறது” என்று கிரீன் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கேத்தரீனா டுரோகி அறிக்கை வெளியிட்டார். பிறகு ‘இஸ்லாத்தின்’ என்பதை ‘இஸ்லாமியவாதத்தின்’ என்று பிறகு திருத்தினார்.
  • ‘இஸ்லாமியர்களால் ஆபத்து’ என்பது ஜெர்மானிய அரசியல் தலைவர்களின் வாய்வார்த்தைகளாக மட்டுமல்லாமல், அரசின் ஆவணங்கள், கொள்கை அறிவிப்புகளிலும் இடம்பெறத் தொடங்கிவிட்டது. உள்நாட்டு உளவுத் துறை முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை வருமாறு: “தங்களுடைய மத நம்பிக்கையை முன்னிட்டு, ஜெர்மானிய கூட்டரசு குடியரசின் சுதந்திர ஜனநாயக அடிப்படையை முழுதாகவோ, பகுதியளவுக்கோ அழித்துவிட இஸ்லாமிய ஆதரவாளர்கள் நினைக்கின்றனர்.”

பவாரியத்தின் எச்சரிக்கை

  • ஜெர்மனியின் பவாரியா மாநில உளவுத் துறை இணையதளம் இப்படி எச்சரிக்கை விடுப்பதில் ஒருபடி மேலே சென்றுள்ளது: “தங்களுடைய தீவிரமான இலக்குகளை அடைய இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் இப்போதுள்ள சட்ட முறையில் தங்களுக்குச் சாதகமாக எந்த அளவுக்குச் செயல்களைச் செய்துகொள்ள முடியுமோ அனைத்தையும் முயன்று பார்த்துவிடுவது என்று தீவிரமாக இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுவிட்டு, ‘சட்டத்தைப் பயன்படுத்தும் இஸ்லாமியம்’ என்று அந்தச் செயலுக்கு முத்திரையும் குத்தியுள்ளது.
  • ‘சட்டத்தைப் பயன்படுத்தும் இஸ்லாமியர்கள் யார்’ என்றும் அது அடையாளம் காட்டியிருக்கிறது. “இந்த இஸ்லாமியர்கள் தங்களைத் திறந்த மனதுள்ளவர்களைப் போலவும், சகிப்புத்தன்மை மிக்கவர்களைப் போலவும், பேச்சு வார்த்தை மூலமே அனைத்தையும் பேசித் தீர்த்துக்கொள்ளத் தயாரானவர்களைப் போலவும் வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டு அரசியலில் செல்வாக்குச் செலுத்த நினைக்கின்றனர்; அவர்களுடைய மத அமைப்புகளோ ஜனநாயகத்தைத் துளியும் மதிக்காமலும், யதேச்சாதிகாரப் போக்கிலும் செயல்படும் தன்மையில் உள்ளவை” என்கிறது பவாரியா உளவுத் துறை இணையதளம்.
  • சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் திரட்டி தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எந்த முஸ்லிம் அமைப்பையும் குற்றவாளிகளாக சித்தரிக்கவே இந்தக் கருத்து பெரிதும் உதவும். முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையுடன் இருந்தாலும் திறந்த மனதுடன் பேசவந்தாலும் - அவையெல்லாம் உண்மையல்ல, அவையெல்லாம் சட்டத்துக்குள்பட்டுச் செயல்படுவதாக காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்களின் நடிப்பு என்கிறது அது.

தீவிரவாதம் களைதல்

  • இந்தக் கருத்தையே செயல்படுவதற்கான புதிய சட்டகமாக (ஃபிரேம்வொர்க்) கொண்டு, ஜெர்மானிய கூட்டரசிலும் மாநிலங்களிலும், தீவிரவாத எண்ணத்தைக் களையும் முகாம்களையும் ஆலோசனைக் கூட்டங்களையும் முஸ்லிம்களை இலக்காக வைத்து நடத்துகின்றனர்.
  • பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் இப்படி முஸ்லிம்களை மட்டும் அழைத்து கூட்டங்கள் நடத்துவதை சமூக சேவகர்களும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் கண்டிக்கின்றனர், ஆனால் ஜெர்மனியிலோ இது, ‘தீவிரவாதம் வளராமல் தடுப்பதற்கான வரவேற்கத்தக்க நடவடிக்கை’ என்று பார்க்கப்படுகிறது.

சலாஃபி தீவிரவாதம்

  • பவாரியா மாநிலத்தின் ‘தீவிரவாத தடுப்பு, தணிப்பு இணையதளம்’, முஸ்லிம்களில் சலாஃபி பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் ஆண், முஸ்லிம் பெண்ணை சித்திரவதை செய்வதைப் போல காட்சிப்படுத்தி காணொலி வெளியிட்டது. கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் என்ற கட்சி ஆட்சிசெய்யும் பவாரியா மாநில அரசு இந்தக் காணொலியை இம்மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது. உடனே இதற்கு முஸ்லிம் அமைப்புகளிடமிருந்து பலத்த கண்டனங்கள் வெளிப்பட்டன.
  • தங்களுடைய மத நம்பிக்கையுடன் வெளிப்படையாகச் செயல்படும் முஸ்லிம்கள், ஜெர்மனியின் பாதுகாப்புக்கும் சமூகத்துக்கும் பெரிய அச்சுறுத்தல் என்று மக்களை எச்சரிக்கத்தான் இந்தக் காணொலியை வெளியிடும் முடிவை அரசு எடுத்தது. எதிர்ப்புக்குப் பிறகு இந்தக் காணொலி விலக்கப்பட்டது. ‘இந்தக் காணொலி மக்களில் ஒரு பிரிவினருக்கு எரிச்சலையும், தவறான புரிதலையும் அளித்துவிட்டதற்காக வருந்துகிறோம்’ என்று பவாரியா உள்துறை அமைச்சகம் பிறகு விளக்கமும் அளித்தது.
  • ‘சலாஃபிகளும் வேறு பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் புதிதாக, இளம் இஸ்லாமியர்களைத் தங்கள் அணியில் சேர அணுகுகிறார்கள் என்பதைக் காட்டத்தான் அந்தக் காணொலி தயாரிக்கப்பட்டது, அதில் உள்ள சில காட்சிகள் பலரைப் புண்படுத்தியிருப்பதால் மாற்றப்படும்’ என்றும் அந்த விளக்கத்தில் அரசு கூறியிருந்தது.

உண்மைக் காரணம் வேறு!

  • பவாரியா அரசு அந்தக் காணொலியை விலக்கிக்கொண்டதற்கு உண்மையான காரணம் வேறு. ஹிட்லர் காலத்தில் யூதர்களுக்கு எதிரான பிரச்சாரம் எப்படி இருந்ததோ அதேபோல இதுவும் கருத்தில் மட்டுமல்ல – காட்சியிலும் இருக்கிறது என்று பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர். தாடி வைத்த யூதர் ஒரு ஜெர்மானியப் பெண்ணை (அரக்கனைப் போல) அப்படியே விழுங்குவதைப் போன்ற காட்சி, ஹிட்லர் காலத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்தக் காணொலியிலும் தாடி வைத்த முஸ்லிமை அதைப் போலவே சித்தரித்திருந்தனர்.
  • “யூதர்களுக்கு எதிராக நடத்திய பிரச்சார சாயலில் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் ஜெர்மானியர்கள் காணொலி தயாரித்ததில் வியப்பதற்கு ஏதுமில்லை. இன்றைய ஜெர்மானிய அரசின் இஸ்லாமிய வெறுப்புணர்வு, வெளியில் சொல்ல முடியாத யூத வெறுப்புணர்வின் நீட்சிதான்” என்று இஸ்ரேலிய - ஜெர்மானிய மெய்யியலாளர் மோஷே ஜுக்கர்மான் குறிப்பிட்டுள்ளார்.
  • யூதர்களுக்கு எதிராக ஜெர்மானியர்கள் (நாஜிக்கள்) கடைப்பிடித்த பழைய வெறுப்புணர்வை இப்போது மீண்டும் வெளிப்படையாக காட்ட முடியாது, காரணம் இப்போதைய அரசு யூதர்களை விரும்பும் - யூதர்களின் நண்பனாக இருப்பதுதான்.

இணை வரலாறு

  • வரலாற்றில் முன்னர் நிகழ்ந்தவை மீண்டும் நிகழ்வதைக் காணத் தவற முடியாது. வலதுசாரி சக்திகள் ஜெர்மனியில் மீண்டும் எழுச்சி அடைந்துவருகின்றன. ஒரு இனத்துக்கு எதிரான வெறுப்புணர்வு ஜெர்மானிய சமூகத்திலும் அரசிலும் பொங்கிவருகிறது. அதேசமயம் வரலாறும் முழுமையாக திரும்பிவிடாது. நாஜிக்களால் யூதர்களை அப்போது கூட்டம் கூட்டமாக கொல்ல முடிந்தது.
  • இப்போது அதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாக நாட்டைவிட்டு வெளியேற்ற முடியும். அதனால்தான் அகதிகளை மீண்டும் அவரவர் நாட்டுக்கே திரும்ப அனுப்பும் முடிவுக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது. இதை இனியும் தீவிர வலதுசாரிகளுடைய கருத்தாக மட்டும் கருதிவிட முடியாது, இப்போது ஜெர்மனி முழுக்க மக்களிடையே இந்த உணர்வு பரவிவிட்டது.
  • இஸ்லாமியர்களுக்கு எதிராக இப்படி ஜெர்மனியின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், அனைத்துத் தரப்பு கொள்கைவாதிகளும் திரள்வதற்கு முன்னால் ஒன்றை நினைவில் கொள்வது நல்லது; நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உங்களுடைய முன்னோர்களும் இதேபோலத்தான் செயல்பட்டார்கள், அவர்களுக்கு இறுதியில் நன்மை ஏற்படவில்லை. ‘வெறுப்புணர்வு’ என்பது ‘வெற்றிக்கான உத்தி’யாக இருக்கவே முடியாது.

நன்றி: அருஞ்சொல் (22 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories