TNPSC Thervupettagam

ஞாபகங்கள் எப்படி உருவாகின்றன

November 22 , 2023 370 days 545 0
  • நினைவாற்றல் என்பது எல்லா உயிர்களுக்குமே உரித்தான பண்பு. ஆனால், மனிதர்கள் மட்டுமே ஞாபகங்களில் இருந்து படிப்பினைகளைப் பெறுகிறார்கள். இந்தப் படிப்பினைகள் உயிர் பிழைத்தலுக்கு அத்தியாவசியமானவையாக இருக்கின்றன. நினைவுகள் உருவாவதற்கு மூளை எனும் உறுப்புதான் மூல கர்த்தாவாக இருக்கிறது. ஆனால், இந்த நினைவுகள் எப்படி உருவாகின்றன? எங்கே சேகரிக்கப்படுகின்றன? நமது மூளை என்பது செல்போனில் போடப்படும் மெமரி கார்டு போன்றதுதானா? அதில் தேவையான நினைவுகளைச் சேகரித்துக் கொண்டு தேவையற்றதை நீக்க முடியுமா?
  • நினைவுகள் என்பவை தனித் தனி தகவல்களாக நமது மூளையில் சேமிக்கப் பட்டிருக்கும் என நீங்கள் நினைத்திருந்தால் தவறு. மாறாக நம் மூளை முழுவதும் இடம்பெற்றிருக்கும் நியூரான் எனும் செல்கள் ஒன்றை இன்னொன்று இணைத்தபடி மின்சமிக்ஞைகளைக் கடத்தும் போது தான் நினைவுகள் உருவாகின்றன. நீங்கள் சிறுவயதில் பாட்டி வீட்டில் சாப்பிட்ட திரட்டுப் பாலை நினைவுகூர்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். சில நியூரான்கள் உங்களுக்குத் திரட்டுப்பாலின் தோற்றத்தைத் தரும். சில நியூரான்கள் அதன் வாசனையை நினைவூட்டும். சில நியூரான்கள் அதன் சுவையையும் உங்கள் பாட்டி வீட்டையும் நினைவுபடுத்தும். இவை எல்லாம் இணைந்துதான் உங்கள் பாட்டி செய்து கொடுத்த உணவு நினைவுக்கு வரும்.
  • தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், நினைவுகள் என்பவை ஒரு வினை (Action). ஒரு நியூரானிலிருந்து இன்னொரு நியூரானுக்கு மின்சமிக்ஞைகள் கடத்தப்படும் வினை நடைபெறும்போதுதான் நினைவுகள் உருவாகின்றன. நம் மூளையில் பல நியூரான்கள் உள்ளன. அவை அனைத்தும் குறிப்பிட்ட ஒழுங்கில் மின்சமிக்ஞைகளைக் கடத்தினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட நினைவு உருவாகும். அதே நியூரான்கள் வேறு ஒழுங்கில் மின்சமிக்ஞைகளைக் கடத்தினால் வேறு நினைவுகள் உருவாகும்.

சரி, இந்தத் தகவல்கள் எங்கே சேகரிக்கப் படுகின்றன

  • நம் மூளையில் கடல்குதிரையின் வடிவத்தில் ஹிப்போகாம்பஸ் எனும் குறிப்பிட்ட வகை செல்கள் இருக்கின்றன. இந்த செல்களில்தாம் புதிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. நாம் உறங்கும்போது, அந்தத் தகவல்கள் அனைத்தும் நமது மூளையில் இருக்கும் பெருமூளைப் புறணி (Cerebral Cortex) என்கிற பகுதியில் இருக்கும் நரம்பணுக்களுக்கு இடமாற்றம் செய்யப்படும். இந்தப் பெருமூளைப்புறணிதான் நமது நீண்ட கால நினைவாற்றல் அமைந்திருக்கும் இடம்.
  • ஒருவேளை ஏதாவது விபத்தில் நமது ஹிப்போகாம்பஸ் சேதம் அடைந்தால், நம்மால் புதிய நினைவுகளை உருவாக்க முடியாது. ஆனால், விபத்துக்கு முந்தைய விஷயங்கள் நமக்கு ஞாபகம் இருக்கும். நிஜத்தில் நாம் கண்டு உணரும் தகவல்கள் மட்டுமல்ல, நாம் புத்தகத்தில் பார்க்கும் ஓர் இயற்கைக் காட்சியைக்கூட மனதில் மீண்டும் மீண்டும் கற்பனையாக ஓட்டும் போது, அது நிஜத்தைப் போன்று மூளையில் தங்கிவிடும். இப்படித்தான் நம்மால் பல விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது.

மறதி எனும் வரம்

  • நமது மூளையில் நினைவைப்போல மறதிக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. நம் மூளை மூன்று வழிகளில் தகவல்களை மறப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முதல் வகை இயல்பு மறதி (Passive Oblivescence). நம் மூளையில் நரம்பணுக்களின் இணைப்புகளுக்கு இடையே மின்சமிக்ஞைகள் கடத்தப்படுவதால் நினைவுகள் தோன்றுகின்றன. இந்த இணைப்புகள் சிறிது சிறிதாக பலவீனம் அடையும்போது அந்தத் தகவல் நினைவுக்கூரப்படாமல் மறைந்து விடுகிறது. இரண்டாவது வகை இலக்கிடப்பட்ட மறதி (Targeted Forgetting). இந்த வகை மறதியில் நமது மூளையில் தங்கியிருக்கும் பயனில்லாத தகவல்கள் எல்லாம் நீக்கப்படுகின்றன.
  • மல்லிகைப் பூவின் நிறம் சிவப்பு என்று நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். உங்கள் மூளை அந்தத் தகவலை நினைவு வைத்துக்கொள்ளும். பிறகு அதன் உண்மை நிறம் வெள்ளை என்று தெரிந்தவுடன் சிவப்பு என்கிற தகவல் தானாக மறைந்துவிடும். அதாவது நம் மூளைக்கு ஒரு விஷயத்தைப் பற்றி இரண்டு முரண்பட்ட தகவல்கள் வரும்போது, அதில் எது தேவையற்றது என்று மூளை கருதுகிறதோ அதை அகற்றிவிடுகிறது. இது பொதுவாக நாம் உறங்கும்போது நடைபெறுகிறது. மூன்றாவது வகை நோக்கமிகு மறதி (Motivated Forgetting). இந்த வகை மறதி நாம் விரும்பாத நினைவுகளை வேண்டுமென்றே அடக்கிவைக்க முயலும்போது ஏற்படுகிறது. கடந்த காலக் கசப்புகளை மறப்பதன்மூலம் நமது உணர்வுகளை ஒழுங்குபடுத்துவதற்காக மனம் இந்த மறதியை நிகழ்த்துகிறது.

மறதி ஏன் அவசியமாகிறது

  • நம் மூளை ஒரு விஷயத்தை மறப்பதற்கு ஏன் இவ்வளவு வழிகளை உருவாக்கி வைத்திருக்கிறது? நிறைய விஷயங்களை நினைவு வைத்துக்கொள்வது நல்லதுதானே என்றால், கிடையாது. மறத்தல் எனும் வினை மனிதர்களுக்கு மிக முக்கியமானது. இதன்மூலம்தான் நாம் மாறிவரும் உலகுக்கு ஏற்பப் பழைய விஷயங்களை மறந்துவிட்டு, நினைவாற்றலைப் புதுப்பித்துக்கொள்கிறோம். மேலும், கடந்தகால கசப்பான நிகழ்வுகளில் இருந்து வெளியேறி எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் நம்பிக்கையும் ஏற்படுகிறது. இதுதானே உயிர் பிழைத்தலுக்கு அவசியம்!
  • ஒருவர் எல்லா விஷயங்களையும் அளவுக்கு அதிகமாக நினைவு வைத்திருப்பதை ஒரு வகைக் குறைபாடு என்கிறார்கள் மருத்துவர்கள். ஒருவருக்கு நினைவாற்றல் அதிகமாக இருப்பது எப்படிக் குறைபாடு? நம் வாழ்க்கையில் நடந்த அவ்வளவு விஷயங்களையும் வெகு துல்லியமாக நம் மூளை நினைவு வைத்துக்கொள்கிறது என வைத்துக்கொள்வோம். திடீரென்று நமக்கு நெருக்கமானவர் மறைந்துவிட்டால், அதை மறக்க முடியாமல் இருப்பது மிகப் பெரிய துன்பம் அல்லவா? அதனால்தான் நினைவாற்றலுக்கு ஏற்ப மறதியும் பரிணாம வளர்ச்சியின் ஊடாக மனிதர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (22 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories