டாக்டர் அம்பேத்கர் மறைந்த அந்த நாளில்......
- 1956 டிசம்பர் 6-ல் மறைந்தார் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர். இன்றைக்கு 68 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதுள்ளதைப் போன்ற தகவல் தொடர்புகள் எல்லாம் இல்லாத காலம்.
- நாளிதழ்களுக்கான புகைப்படங்கள் எல்லாம்கூட அடுத்தடுத்த நாள்களில்தான், மிகத் தாமதமாகவே, மற்ற இடங்களுக்குக் கிடைக்கும். சில செய்தி நிறுவனங்கள், வானொலி மற்றும் சம்பந்தப்பட்ட நாளிதழ்களின் தொலைபேசிகள்தான் ஒரே வழி.
- எனவே, பெரும்பாலும் நாளிதழ்கள் அனைத்திலும் அம்பேத்கர் மறைவு செய்தி விரிவாக வெளியானபோதிலும் புகைப்படங்கள் இடம்பெறவில்லை.
டாக்டர் அம்பேத்கர் மறைந்த நாளில் நடந்தவை என்ன?
- காலை வழக்கம்போல 6 மணிக்குத் தேநீருடன் அம்பேத்கருடைய படுக்கை அறைக்குச் சென்ற பணியாளர்தான், அவர் இறந்துவிட்டதை முதன்முதலில் அறிந்தவர்.
- மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அம்பேத்கர், உயிர் பிரியும் நாளுக்கு முந்தைய நாளில்கூட அவைக்கு வந்து அனைவருடனும் வழக்கம்போல இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தார்.
- அவர் மறைவுக்கு முந்தைய சில காலமாகவே அவருடைய உடல்நலம் சீராக இல்லை. ஆனால், முந்தைய நாள் நள்ளிரவில் அவர் உறங்கச் சென்றபோது உடல்நிலை சீராகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், காலையில் பணியாள் சென்றபோது அவர் உயிர் பிரிந்துவிட்டிருந்தது.
- அம்பேத்கரின் மறைவு பற்றிய தகவலறிந்ததும் பிரதமர் நேரு, அஞ்சல் துறை அமைச்சர் ஜகஜீவன்ராம் ஆகியோரும் மற்ற அமைச்சர்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் அலிப்பூர் சாலையிலிருந்த அம்பேத்கரின் இல்லத்துக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
- சில புத்த பிக்குகளும் எண்ணற்ற தில்லிவாழ் மக்களும் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினர். அம்பேத்கரின் உடல் அருகே மத்திய சுகாதாரத் துறை உதவி அமைச்சர் திருமதி மரகதம் சந்திரசேகரன் கண்கலங்கியவாறு நின்றிருந்தார்.
- அம்பேத்கரின் உடலுக்கு அருகில் புத்தரின் உருவப் படங்களும் சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன.
- டாக்டர் அம்பேத்கர் மறைவுக்கு முந்தைய சில காலமாகவே நீரிழிவு காரணமாக அவதிப்பட்டுவந்தார். காலில் வலி இருப்பதாகவும் கூறிவந்தார்.
- "நேற்று அம்பேத்கர் மிகவும் உற்சாகமாக இருந்ததாகவும் புத்தரும் அவர் தம்மமும் என்ற தலைப்பில் தான் எழுதியுள்ள புத்தகத்துக்கு முன்னுரை எழுதுவதற்காக இரவு வெகுநேரம் வரை விழித்திருந்தார்" என்றும் திருமதி அம்பேத்கர் தெரிவித்துள்ளார். அந்தத் தருணத்தில் இந்த நூல் அச்சில் இருந்திருக்கிறது.
- டாக்டர் அம்பேத்கரும் அவருடைய மனைவியும் புத்த மதமாற்ற சடங்கிற்காக டிசம்பர் 14 ஆம் தேதி மும்பை செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
- அவர் இறந்த நாளில் அம்பேத்கருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் மக்களவையும் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.
- இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும்முன், பிரதமர் ஜவாஹர்லால் நேரு உள்பட தலைவர்கள், டாக்டர் அம்பேத்கரின் சேவைகளைப் பாராட்டி பேசி அவருடைய முடிவு குறித்து வருத்தம் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பேசியது:
- "பல துறைகளில் முக்கிய சேவை செய்துள்ள டாக்டர் அம்பேத்கர் காலமாகியதை வருத்தத்துடன் அறிவிக்கிறேன். நமது பொதுவாழ்வில் எத்தனையோ சர்ச்சைகளுக்கு அவர் காரணஸ்தராகயிருந்திருக்கிறார். ஆனால், அவருடைய உயர்ந்த குணங்கள், கல்வி கேள்விகள், தமது மனதுக்குப் பிடித்தமானதை நடத்திவைப்பதில் அவர் காட்டிய உறுதி முதலியன குறிப்பிடத் தக்கவை. பல காலமாக முந்தைய முறைகளின் கீழ் அவதியுற்று வந்தவர்களின் விமோசனத்துக்காக அவர் உண்மை உணர்ச்சியுடன் பாடுபட்டார்.
- இந்திய அரசியல் சட்டத் தயாரிப்பில் அவர் எடுத்துக்கொண்ட பிரதான பங்கை மறக்க முடியாது. அவரது மற்ற பணிகளைவிட இதுவே பல காலம் போற்றப்படும்.
- ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் தீவிர உணர்ச்சிக்கு அவர் ஒரு சின்னமாக விளங்கினார். இதை நாம் அனைவரும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- அவர் கலகம் செய்து எதிர்த்த மாசை ஹிந்து சமூகத்திலிருந்து அகற்ற நமது பொது நடவடிக்கைகளிலும் சட்டத்தின் மூலமாகவும் இந்தச் சபையில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சியினரும் முயன்றுவந்திருக்கிறோம். சட்டத்தின் மூலமாக மட்டும் இதை அடியோடு அகற்ற முடியாது. பழக்க வழக்கங்கள் ஆழ வேரூன்றியவை. ஆனால், தீண்டாமை கடைசிக் கட்டத்தை அடைந்துவிட்டது என்பதைப் பற்றிச் சந்தேகமில்லை. சட்டமும் பொதுஜன அபிப்ராயமும் இன்னும் உறுதிகாட்டி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் நெருங்கிவருகிறது.
- அவருடன் சர்க்கார் வேலையில் ஒத்துழைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்கு முன் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. ஆனால், அரசியல் நிர்ணய சபை வேலையில் பரிச்சயமேற்பட்டது. பிறகு சர்க்காரில் சேரும்படி அவரை அழைத்தபோது பலர் ஆச்சரியப்பட்டனர்.
- அவர் எதிர்ப்புக்கான தகுதியினரல்லவா என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், அவர் பொறுப்பேற்று அரசியல் சட்டத் தயாரிப்பு வேலையைச் செவ்வனே நடத்திவைத்தார். அவ்வப்பொழுது சில வேற்றுமைகள் இருந்தன. ஆனாலும் பல வருஷங்கள் சர்க்காரில் சேர்ந்துழைப்பது சாத்தியமாயிற்று. அவர் ஒரு பிரதான புருஷர். அவரது மரணம் நமக்கு வருத்தத்தைத் தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு சபையின் அனுதாபத்தைத் தெரிவிப்போம்.
- ஹிந்து சட்ட சீர்திருத்தப் பிரச்சினையில் அம்பேத்கர் எடுத்துக்கொண்ட சிரமத்துக்கும் காட்டிய அக்கறைக்கும் அவர் என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார். தான் வகுத்த ரீதியில் அல்லாமல் பகுதி பகுதியாக ஹிந்து சட்டம் நிறைவேறியதை அம்பேத்கர் கண்டது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஹிந்து சமூகத்தின் கொடுமைப்படுத்தும் அம்சங்களை எதிர்த்துப் புரட்சியின் சின்னமாக விளங்கியவர், நாடு அவரைப் பெரிதும் நினைவில் வைத்திருக்கும்" என்றார் நேரு.
மும்பையில் இறுதிச் சடங்கு
- புது தில்லியில் மறைந்த டாக்டர் அம்பேத்கரின் உடல், மும்பை நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மறுநாள் டிச. 7 ஆம் நாள் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
- அம்பேத்கரின் மறைவைத் தொடர்ந்து, அவருடைய உடல் மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- மும்பையில் இரவு முழுவதும் விமான நிலையப் பகுதியிலும் வடக்கு மும்பையிலிருந்த அம்பேத்கரின் இல்லமான ராஜகிருஹத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
- நள்ளிரவு 2 மணிக்கு அம்பேத்கரின் சடலம் மும்பை விமான நிலையம் வந்தது. அவருடைய மனைவியும் உடன் வந்தார். பின்னர், அங்கிருந்து அவருடைய இல்லத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு நாள் முழுவதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
- ராஜகிருஹத்திலிருந்து பிற்பகல் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் ஊர்வலமாக உடல் எடுத்துச்செல்லப்பட்டது. அவருடைய உடல் குங்கும நிறத் துணியால் போர்த்தப்பட்டிருந்தது.
- ஊர்வலத்தில் 2 லட்சம் பேர்
- ஊர்வலத்தின் தொடக்கத்திலேயே ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர். தொழில் பகுதியான பரேலை அடைந்தபோது, ஊர்வலத்தில் பங்கேற்றோரின் எண்ணிக்கை இரண்டு லட்சங்களுக்கும் அதிகமானது.
- மயானம் வரையுள்ள 5 மைல் நீளப் பாதை நெடுகிலும் இருமருங்கிலும் ஏராளமான மக்கள் வரிசையாக நின்றிருந்தனர். ஏராளமானோர் வாய்விட்டு அழுதனர். அம்பேத்கரின் உடல் மீது வழிநெடுகிலும் மக்கள் பூமாரி பொழிந்த வண்ணமிருந்தனர். மறைந்த தலைவரை மக்கள் கடைசித் தடவையாகத் தரிசிப்பதன் பொருட்டு அடிக்கடி மலர்க் குவியலைக் கீழே தள்ள வேண்டியிருந்தது.
- சடலம் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தைத் தொடர்ந்து, புத்தத் துறவிகள் மந்திரங்களை ஓதிக்கொண்டே சென்றனர். அவர்களுடன் டாக்டர் அம்பேத்கரின் மனைவியும் மகன் யஷ்வந்த் ராவ் அம்பேத்கரும் சென்றனர்.
- அம்பேத்கரின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது ஒரு சிறிய தந்தத்திலான புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது. மறைந்த தலைவரின் சிஷ்யர்களும் பிக்குகளும் வாசனைத் தூபம் வீசிய மண் கலங்களை ஏந்தி வந்தனர்.
- ஊர்வலத்தினரில் பெரும்பாலோர் கருப்புக் கைப்பட்டி அணிந்துகொண்டிருந்தனர். பாபா சாகேப் அம்பேத்கரின் பரிநிர்வாணம் என்ற வாசகம் எழுதப்பட்ட பெரியபெரிய கருப்பு, வெள்ளைப் பதாகைகளை ஊர்வலத்தினர் ஏந்திச் சென்றனர்.
- சிவாஜி பூங்கா மயானத்தை ஊர்வலம் மாலை 5 மணிக்கு அடைந்தபோது, போக்குவரத்து அறவே நின்றுவிட்டது. அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த இந்தப் பகுதியில் திரண்டிருந்தோர் எண்ணிக்கை 5 லட்சம் வரை இருக்கும். கடற்கரைக்கு அம்பேத்கர் உடலை எடுத்துச் செல்ல வழியமைப்பதே பெரும்பாடாக இருந்தது.
- மணல்மேடு அமைத்து அதன் மீது சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டு சிதை அமைத்திருந்தனர். இரவு 7 மணிக்கு சிதைக்குத் தீ மூட்டப்பட்டது. அங்கேயே நடந்த இரங்கல் கூட்டத்தில் அம்பேத்கரின் சேவையைப் பாராட்டிப் பலரும் உரையாற்றினர்.
- இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக மும்பை மாநகரில் பல்லாயிரக்கணக்கான மக்களும் மில் தொழிலாளர்களும் வேலைக்குச் செல்லவில்லை. துறைமுகத்திலிருந்து பகல் ஒரு மணிக்கு 20 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியே வந்ததும் ஏற்றுமதி இறக்குமதி வேலைகள் அறவே நின்றன.
- மும்பையில் பெரும்பாலான பள்ளிகளும் கடைகளும் துக்கம் தெரிவிப்பதற்காக மூடிக் கிடந்தன.
- அம்பேத்கர் என்ற மாபெரும் ஆளுமை நிறைவு பெற்றது.
நன்றி: தினமணி (06 – 12 – 2024)