- பழங்கால இந்திய வரலாற்றுத் துறையில் டி.டி.கோசாம்பி, ராம் சரண் சர்மா, ரொமிலா தாப்பர் எனத் தொடரும் அறிஞர்களின் வரிசையில் டி.என்.ஜா என்று அழைக்கப்படும் த்விஜேந்திர நாராயண் ஜாவும் (1940-2021) முக்கியமான ஒருவர்.
- டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். பழங்கால இந்திய வரலாறு குறித்து அவர் 1977-ல் எழுதிய அறிமுக நூலான ‘ஏன்ஷன்ட் இந்தியா இன் ஹிஸ்டாரிகல் அவுட்லைன்’ பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்று சாதனை படைத்த புத்தகங்களில் ஒன்று.
- இருபதாண்டுகளுக்குப் பிறகு அப்புத்தகம் விரிவுபடுத்தப்பட்டு வெளிவந்தது. வரலாற்று மாணவர்களுக்கு மட்டுமின்றிப் போட்டித்தேர்வு மாணவர்களுக்கும் இன்னும் அது முக்கியப் பாடநூலாக விளங்கிவருகிறது.
- வரலாற்றின் சமூக, பண்பாட்டு மாற்றங்களில் பொருளாதாரம் வகித்த பங்குக்குச் சிறப்பு கவனம் கொடுத்தவர் ஜா. காலம்காலமாக சொல்லப்பட்டுவந்த வரலாற்றுக் கற்பனைகளுக்கு ஆதாரபூர்வமாக முற்றுப்புள்ளிகளை வைத்தவர்.
- குப்தர்களின் காலம் இந்திய வரலாற்றின் பொற்காலம் என்ற நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்திய டி.என்.ஜா, உண்மை அப்படியில்லை என்பதைப் பல்வேறு சான்றுகளுடன் நிறுவினார்.
- அவரது 'ஏன்ஷன்ட் இந்தியா' புத்தகத்தில் எட்டு அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. இறுதி அத்தியாயம், ‘பொற்காலம் என்ற கட்டுக்கதை’ என்ற தலைப்பில் குப்தப் பேரரசின் காலத்தை விவரிப்பது.
விவசாயிகளின் இருண்ட காலம்
- அரசவையை காளிதாசன் என்ற பெரும் புலவன் அலங்கரித்தார், நாணயங்களில்கூட அரசர்கள் கையில் வீணையோடு காட்சியளித்தார்கள் என்றெல்லாம் கலை, இலக்கியங்களின் பொற்காலமாக சித்தரிக்கப்படும் குப்தர்களின் காலம் விவசாயிகளைப் பொறுத்தவரை இருண்ட காலமே.
- அவர்கள் அதிகபட்ச வரிவிதிப்பின் சுமையினால் அல்லலுற்றார்கள். மௌரியர்களின் காலத்தில் அரசின் சார்பாக அதிகாரிகள்தான் விவசாயிகளிடமிருந்து வரிவசூல்களைச் செய்துவந்தார்கள்.
- குப்தர் காலத்தில் நிலங்கள் தானங்களாக அளிக்கப்பட்டு, தானங்களைப் பெற்றவர்களே பரம்பரை பரம்பரையாக நிலவரிகளை வசூலித்துக்கொள்ளும் உரிமைகளைப் பெற்றார்கள். நிலதானங்களை வழங்கும் முறையானது பெருநிலவுடைமையை வளர்த்தெடுத்ததோடு, உழைப்புச் சுரண்டலுக்கும் வித்திட்டது.
- கட்டாய உழைப்புக்கும் கூடுதல் வரிகளுக்கும் நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமாக விவசாயிகள் மிகவும் வலுவிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். தவிர, கிராமங்களை அரசு அதிகாரிகளும் படைப் பிரிவினரும் கடந்து செல்லும்போது ஒட்டுமொத்த விவசாயத் தொழிலாளிகளும் அவர்களுக்குச் சேவகம் செய்யவும் பணம் கொடுக்கவும் வேண்டியிருந்த நிலையை டி.என்.ஜா எடுத்துக் கூறினார்.
- ஊர்களைத் தானம் வழங்கியபோது அங்கு வசித்த விவசாயத் தொழிலாளர்களும் கைவினைக் கலைஞர்களும் சேர்த்தே அளிக்கப்பட்டார்கள். அவர்கள் அந்த கிராமங்களிலிருந்து வெளியேறாத வண்ணம் தொலைதூர வணிகங்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டது.
- விவசாயிகளின் நிலைமையைப் போலவே பெண்களின் நிலையும் மிகவும் மோசமாகத்தான் இருந்தது. பெண்களுக்குப் படிப்பில்லை, சொத்துரிமையும் இல்லை. பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டனர். கணவன் இறந்தால் அவனுடன் நெருப்பில் பாய்ந்து உயிர் துறக்கும் சதியெனும் கொடுமைக்கு ஆளாகவும் நேர்ந்தது.
- விசாகதத்தர் எழுதிய ‘முத்ராராட்சசம்’ நாடகத்தில் தலைநகரின் வீதிகள் திருவிழாக் காலங்களில் விலைமகளிரால் நிறைந்திருந்த காட்சிகள் எழுதப்பட்டிருக்கின்றன. குப்தர் காலத்தின் மற்றொரு இலக்கியமான ‘காமசூத்திரம்’, உடலின்ப நுட்பங்களை எடுத்துரைக்கும் காவியமாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
- அதே நூலிலிருந்து விவசாயத் தொழிலாளிகளின் வீட்டுப் பெண்கள் எந்த வித ஊதியமும் இல்லாமல் கிராமத் தலைவர்களின் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டியிருந்த நிலையை டி.என்.ஜா எடுத்துக்காட்டினார்.
பசுவின் புனிதம்
- டி.என்.ஜா எழுதிய ‘ஏன்ஷன்ட் இந்தியா’ அறிமுக நூல் அசோகன் முத்துச்சாமி மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலய வெளியீடாக வெளிவந்துள்ளது.
- ஆனால், அதற்கு முன்பே அவர் எழுதிய ‘தி மித் ஆஃப் தி ஹோலி கவ்’ புத்தகம் வெ.கோவிந்தசாமி மொழிபெயர்ப்பில் விடியல் பதிப்பக வெளியீடாகத் தமிழுக்கு வெளிவந்துவிட்டது.
- ஆய்வுத் துறையின் போக்கை அரசியல் சூழலே தீர்மானிக்கிறது என்பதற்கு டி.என்.ஜா எழுதிய இந்தப் புத்தகம் ஒரு சிறந்த உதாரணம்.
- உணவுக்காகப் பசுக்களைக் கொல்லும் வழக்கம் இடைக்காலத்தில் அந்நியர்களின் படையெடுப்புக்குப் பிறகு பொதுச் சமூகத்துக்கு பரவியது என்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரச்சாரத்தைப் பொய் என்று அம்பலப்படுத்தினார் டி.என்.ஜா.
- இந்தியாவில் வேத காலத்திலிருந்தே உணவின் ஒரு பகுதியாக மாடுகள் இருக்கின்றன என்றும் விவசாய உற்பத்தியை முன்னிட்டே அவை உணவுப் பழக்கத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டன என்றும் உரிய வரலாற்றுச் சான்றுகளோடு மெய்ப்பித்தார்.
- அதே நேரத்தில், எந்தப் புத்திசாலி இந்தியரும் தனது கால்நடையைக் கொல்ல மாட்டார் என்பதே அவரது கருத்தாக இருந்தது. ஆனால், பசுவுக்கு மட்டும் ஏன் சிறப்பு நிலைமை என்பதே அவர் எழுப்பிய கேள்வி.
- ஒரு வரலாற்று அறிஞராக மட்டுமின்றித் தான் வாழ்ந்த காலத்தின் அரசியல் போக்குகள் குறித்து ஆழமான விமர்சகராகவும் விளங்கியவர் டி.என்.ஜா.
- தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வகுப்புவாதத்தால் இயக்கப்படுவதை அவர் தொடர்ந்து கவனப்படுத்தினார். ஊடகங்கள் சமய நம்பிக்கைகளை வளர்த்தெடுத்த உதவுகின்றன, அதை அரசியல்வாதிகள் தங்களது வகுப்புவாதத் திட்டங்களுக்கு வாய்ப்பாக மாற்றிக்கொள்கிறார்கள் என்று கண்டித்தார்.
- தான் வாழும் காலத்து அரசியலை மட்டுமில்லை, தனக்கு முந்தையை வரலாற்றாசிரியர்களையும் அவர் பாரபட்சமற்ற ஆய்வுக்கு உட்படுத்தினார்.
- ஒரு குறிப்பிட்ட சமயத்தின் வரலாறாகவே இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டதற்கு ஆர்.சி.மஜூம்தார், ஜதுநாத் சர்க்கார் போன்ற வரலாற்றாசிரியர்களும் காரணமாக இருந்ததை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
- வரலாற்றுத் துறைக்குத் தனது வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்ட அந்த ஆய்வாளரின் செய்தி மிகவும் எளிமையானது: ‘இந்தியா என்பது அதன் பன்மைத்துவமே’.
நன்றி: இந்து தமிழ் திசை (08-02-2021)