TNPSC Thervupettagam

டிஎன்பிஎஸ்சி தேர்வு: திட்டமிடுவது எப்படி?

April 30 , 2024 255 days 308 0
  • டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தேர்ச்சி பெற பல ஆண்டுகள் படிக்க வேண்டுமா அல்லது பயிற்சி மையத்தில் இணைந்து படிக்க வேண்டுமா? இப்போது படிக்க ஆரம்பித்தால் தேர்ச்சி பெறலாமா போன்ற சந்தேகங்கள் மாணவர்களுக்கு உள்ளன.

திட்டமிட்டுப் படிக்கலாம்:

  • ஆண்டுக்கணக்காகப் படித்துத் தேர்ச்சி பெறாதவர்களும் இருக்கி றார்கள். ஒரு மாதம் படித்துத் தேர்ச்சி பெற்றவர்களும் இருக்கிறார்கள்.‌ வரும் நாள்களில் திட்டமிட்டுப் படித்தால்கூட சிறப்பாகத் தேர்வை எழுதிவிடலாம். எப்படித் திட்டமிட்டுப் படிப்பது?
  • முதலில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்துக்குச் சென்று, பாடத்திட்டத்தைப் பதிவிறக்கம் செய்யுங்கள். அதில், பொதுத் தமிழ் பாடத்தின் கீழ் மூன்று பெரும் பிரிவுகளில் சிறுசிறு தலைப்புகள் கொடுத்திருக்கிறார்கள். உதாரணத் துக்கு, ‘அறநெறி இலக்கியம்’ என்கிற பிரிவின் கீழ் ‘நாலடியார்’, ‘நான்மணிக்கடிகை’, ‘ஏலாதி’ போன்ற தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • நீளமான நோட்டுப் புத்தகம் ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு தலைப்பையும் (தலைப்பை மட்டும்) ஒவ்வொரு பக்கத்தில் எழுதுங்கள். பொது அறிவுப் பாடத்தையும் சேர்த்து மொத்தம் 500 தலைப்புகள் வரை வரலாம். ஆக, உங்களுக்கு 500 பக்கங்கள் தேவைப்படும். ஒவ்வொரு தலைப்புக்கும் இரண்டொரு பக்க அளவில் குறிப்புகள் எழுத வேண்டியிருக்கும். எனவே, 500 பக்கங்களுக்குக் குறிப்பு எழுதும் வகையில் நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்.

என்ன குறிப்பு தேவை?

  • ‘நாலடியார்’ தலைப்பின்கீழ் ஆறாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் நூல் குறிப்பு இருக்கும். அது போல ஏழு, எட்டாம் வகுப்புப் புத்தகங் களிலும் சில குறிப்புகள் இருக்கும். அனைத்துக் குறிப்புகளையும் ஒரே பக்கத்தில் எழுதலாம். இப்படி 500 தலைப்புகளையும் எழுதி முடிக்க வேண்டும். அடுத்து, இதுவரை ‘நாலடியார்’ என்கிற தலைப்பில் குரூப்-4 தேர்வுகளில் என்ன மாதிரியான வினாக்கள் கேட்கப்பட்டன என்பதைத் தொகுத்து எழுத வேண்டும். இதற்குத் தனி நோட்டுப் புத்தகத்தைப் பயன்படுத்தலாம்.
  • அதற்கான விடைகள், நீங்கள் எழுதி வைத்திருக்கும் குறிப்பில் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் அந்தக் குறிப்புகளைத் தேடுங்கள். இப்போது நீங்கள் எழுதி இருக்கக்கூடிய ஒரு பக்கக் குறிப்பு, இதுவரை வந்த வினாக்கள் என இவற்றை மட்டும் படித்தாலே போதும்.‌ ‘நாலடியார்’ பற்றி எந்த மாதிரியான கேள்விகளுக்கும் குரூப்-4 தேர்வில் விடைகள் எழுதி விடலாம்.
  • பொது அறிவுப் பகுதியில் கணக்குப் பாடத்துக்குத் தினசரிப் பயிற்சி அவசியம். இப்பகுதியில் 25 கேள்விகள் கேட்கப்படுகின்றன.‌ கேள்விகளைப் பார்த்த உடனே விடையளிக்கும் வண்ணம் கணக்குகளைப் பயிற்சி செய்ய வேண்டும்.‌ அப்போதுதான் தேர்வின்போது நேரத்தை வீணடிக்காமல் விடையளிக்க முடியும். இல்லையெனில் மற்ற கேள்விகளுக்கு விடை அளிக்கப் போதிய நேரம் இருக்காது.
  • அதுபோல நடப்பு நிகழ்வுகள் பகுதியைப் படிப்பதற்குத் தினசரி இரண்டு செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும். செய்தித்தாள்களில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை வெட்டி எடுத்து ஒரு தனி நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி வைக்க வேண்டும். வெறுமனே அதைச் சேகரித்து வைப்பது சரியான முறையல்ல. அது பழைய பேப்பர் குடோன் போல ஆகிவிடும். செய்தியை வெட்டி ஒவ்வொரு செய்திக்கும் அழகாகத் தலைப்பு எழுதி, சர்வதேசம், தேசம், மாநிலம் எனச் செய்திகளைப் பிரித்துச் சேகரிக்கும்போதுதான் திரும்பவும் நடப்பு நிகழ்வுகள் பகுதியைப் படிப்பதற்கு ஆர்வமாக இருக்கும்.

‘கிராஸ் ரீடிங்’ செய்வது எப்படி?

  • தலைப்பு வாரியாக எழுதிப் படிக்கும் முறைகளைப் பார்த்தோம். இந்தப் படிப்பை இன்னொரு முறை வேறு மாதிரி மாற்றிப் படித்துவிட்டால் குரூப்-4 தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். ஏற்கெனவே நடந்த இரண்டு தேர்வுகளின் வினாக்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • ஒரு தேர்வுக்கு 200 வினாக்கள் வீதம் மொத்தம் 400 வினாக்கள் கிடைக்கும். ஒவ்வொரு வினாவையும் நீளமான ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி, அந்த வினாவுக்குத் தொடர்பான செய்திகளை, ஒரு பக்க அளவில் குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, அறிவியல் பாடத்தில் ‘இதய அறைகள்’ பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால் ‘இதய அறைகள்’ பற்றிய கூடுதலான தகவல்களை ஒரு பக்க அளவுக்குச் சேகரிக்க வேண்டும்.
  • அதுபோல ‘பாரத ரத்னா’ விருதுகள் பற்றிக் கேட்கப்பட்டிருந்தால் ‘பாரத ரத்னா’ விருதுகள் குறித்து ஒரு பக்க அளவில் குறிப்புகளைச் சேகரிக்க வேண்டும். ‘இந்தியாவின் நிலக்கரிச் சுரங்கங்கள்’ பற்றிக் கேட்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக நீங்கள் குறிப்பு எழுதும் போது இந்தியாவின் இரும்புச் சுரங்கங்கள், தங்கச் சுரங்கம், வெள்ளிச் சுரங்கம், மைக்கா சுரங்கம் ஆகியவை பற்றியும் தகவல்களைச் சேகரித்துக் குறிப்புகள் எழுத வேண்டும்.
  • தேர்வுக்கு இன்னும் 40 நாள்கள் இருந்தாலும், எவ்வளவுக்கு எவ்வளவு குறிப்புகளைத் தயார் செய்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தேர்வில் நீங்கள் வெற்றி பெற உதவும். இப்படிக் குறிப்புகள் எழுதுவதற்குப் பள்ளிப்பாடப் புத்தகங்கள் மட்டுமல்ல, வழிகாட்டி நூல்களையும் பயன்படுத்தலாம்.
  • குரூப் 4 போன்ற தேர்வுகளுக்குத் திட்டமிட்டுப் படிப்பது என்றால் இப்படிப் படிப்பதுதான் நல்லது. இந்தக் கடினமான படிப்புதான் பலனையும் தரும். குரூப்-4 தேர்வுக்கு உங்களுடைய முயற்சி, பயிற்சி போன்றவை சரியாகவும், தீவிரமாகவும் இருந்தால் வெற்றி நிச்சயம்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories