டிக்டாக்கிற்கு மாற்று!
- அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படுமா அல்லது வேறு நிறுவனம் வசமாகுமா என்பது தெரியவில்லை. அந்நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் அதிபர் டிரம்ப்பால் 75 நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், பல்வேறு யூகங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
- இதனிடையே டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் நட்சத்திர யூடியூபர் மிஸ்டர் பிஸ்டும் சேர்ந்திருக்கிறார். இதனிடையே அமெரிக்கர்கள் மத்தியில் சீன மொழி கற்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. டுவாலிங்கோ (Duolingo) எனும் மொழிப் பயிற்சி செயலி தனது மேடையில் சீன மொழிக் கற்க விரும்பும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை இருநூறு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
- இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ‘ரெட்நோட்’ என்கிற சீன செயலி இதற்கு ஒரு காரணம் என்கின்றனர். டிக்டாக் இடத்தை நிரப்பக்கூடிய மாற்று செயலிகளில் ஒன்றாக ரெட்நோட் சொல்லப்படுகிறது. இந்தச் செயலியின் இடைமுகம் முழுவதும் சீன மொழியில் இருப்பதால், அமெரிக்கர்கள் பலரும் சீன மொழியைக் கொஞ்சம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருக்கலாம் என்கின்றனர்.
வேலைக்குப் பொருத்தம் பார்க்கலாம்:
- தொழில்முறை நோக்கிலான சமூக வலைப்பின்னல் சேவையான லிங்க்டுஇன் வேலைவாய்ப்பு நோக்கில் பயன்படுத்தப்படுவதை அறிந்திருக்கலாம். வேலைத் தேடுபவர்களுக்கு மேலும் உதவும் வகையில் லிங்க்டுஇன், ஜாப் மேட்ச் எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
- இந்த வசதி மூலம் பயனாளிகள் விண்ணப்பிக்கும் வேலைக்கு தாங்கள் எந்த அளவு பொருத்தம் என்பதை அறிந்துகொள்ளலாம். ஏஐ துணையோடு பயனாளிகள் விண்ணப்பதை அலசிப் பார்த்து, குறிப்பிட்ட அந்த வேலைக்கான தகுதி, எந்த அளவு இருக்கிறது என்பதை இந்தச் சேவை தெரிவிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. பொருத்தமான வேலையைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க இந்தச் சேவை உதவலாம்.
நடந்தாய் வாழி இன்ஸ்டகிராம்!
- சமூக வலைதளங்களிலேயே மூழ்கியிருக்கும் பழக்கத்திலிருந்து விடுபட பிரீடம், பாரஸ்ட் போன்ற செயலிகள் உதவுகின்றன. இந்த வரிசையில் ஐபோனுக்காகப் புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஸ்டெபின்.நெட் (https://www.steppin.net/about) செயலி, நடைபயிற்சி மேற்கொண்டால் மட்டுமே, பயனாளிகள் தங்கள் அபிமான சமூக வலைதள சேவைகளைப் பயன்படுத்த முடியும் எனும் வகையில் அமைந்துள்ளது.
- இந்தச் செயலியைப் பயன்படுத்தும்போது, பயனாளிகள் தாங்கள் கட்டுப்படுத்த வேண்டிய சமூக வலைதளச் சேவைகளைத் தேர்வுசெய்து, அவற்றைப் பயன்படுத்தும் முன் எத்தனை நிமிடங்கள் நடக்க வேண்டும் என நிர்ணயம் செய்ய வேண்டும். பிறகு, இன்ஸ்டகிராம் அல்லது வேறு சேவைகளைப் பயன்படுத்த வேண்டுமெனில், முதலில் அதற்கேற்ப நடைபயிற்சி செய்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும்.
செயலி வடிவில் பிக்ஸல்ஃபெட்!
- எக்ஸ் சேவைக்கு மாற்றாக மஸ்டோடன், புளூஸ்கை போன்ற சேவைகள் கவனத்தை ஈர்த்திருப்பது போல, ஒளிப்படப் பகிர்வு செயலியான இன்ஸ்டாவுக்கு மாற்றாகக் கருதப்படும் செயலிகளில் ஒன்றாக பிக்ஸல்ஃபெட் (https://pixelfed.org/) அமைந்துள்ளது. கடந்த 2018 முதல் புழக்கத்தில் இருந்தாலும், இந்தச் செயலி இணையதள வடிவிலேயே செயல்பட்டு வந்தது.
- இந்நிலையில் தற்போது இதற்கான அதிகாரபூர்வ செயலி அறிமுகம் ஆகியுள்ளது. இன்ஸ்டகிராம் போல விளம்பரங்களைக் காண்பிப்பதில்லை என்பதோடு, பயனாளிகள் தனியுரிமையை மதிப்பதும் இந்தச் செயலியின் சிறப்பம்சாக சொல்லப்படுகிறது.
ஸ்பாட்டிபையில் பாடம் கற்கலாம்!
- இசை கேட்பு சேவையான ஸ்பாட்டிபையில் இப்போது பாடல்கள் தவிர, பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகள், ஆடியோ புத்தகங்களைக் கேட்டு ரசிக்கலாம். இனி ஸ்பாட்டிபையில் பாடங்களும் படிக்கலாம். ஸ்பாட்டிபை சேவையில் பாடம் கற்கும் வசதி கோர்சஸ் எனும் பகுதியாக அறிமுகமாகியுள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகளில் பாடங்களைக் கற்கலாம். ஐரோப்பிய நாடுகளில் இந்த வசதி அறிமுகம் ஆகியிருப்பதாகவும், அடுத்த கட்டமாக அமெரிக்காவிலும் பிறகு உலகம் முழுவதும் அறிமுகம் ஆகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காணிப்புத் திரைப்படங்கள்:
- யார் வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானால் கண்காணிப்புக்கு உள்ளாகலாம் எனும் கண்காணிப்பு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கண்காணிப்பு சமூகத்தின் இயல்பை புரிந்துகொள்ள உதவும் திரைப்படங்களை பட்டியலிட்டு பார்க்க வழி செய்கிறது கிரிட்டிரியன் அலைவரிசை: https://www.criterionchannel.com/surveillance-cinema
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 02 – 2025)