TNPSC Thervupettagam

டிஜிட்டல் கைதிலிருந்து தப்பிக்க முடியுமா?

November 19 , 2024 60 days 156 0

டிஜிட்டல் கைதிலிருந்து தப்பிக்க முடியுமா?

  • ஃபேஸ்புக்கில் உங்கள் பெயரில் போலியாக கணக்கைத் தொடங்கி, உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இணையவழி மோசடியாளர்கள் பணம் பறித்திருக்கிறார்களா? இப்போது ஃபேஸ்புக் வழியாக யாராவது பணம் கேட்டாலே, இது போலிக் கணக்கு என்று நினைக்கும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
  • இப்படிப் பலரும் விழிப்புணர்வு பெற்றுவிட்டால், இணையவழி மோசடியாளர்கள் பேசாமல் இருந்துவிடுவார்களா? புதிது புதிதாக எப்படித் திருடலாம் என்றும் யோசிப்பார்கள். அப்படி அவர்கள் யோசித்ததன் விளைவுதான் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி.
  • அது என்ன ‘டிஜிட்டல் அரெஸ்ட்’? நம்முடைய திறன்பேசியில் தொடர்புகொள்ளும் மர்ம நபரோ அல்லது தானியங்கி குரலோ, “உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பண மோசடி செய்யப்பட்டுள்ளது. உங்கள் சிம் கார்டு சேவையைத் துண்டிக்க உள்ளோம்.
  • உங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க, சிபிஐ அதிகாரியுடன் பேசுங்கள். இந்த இணைப்பை, நான் அவருக்கு ‘பார்வேர்டு' செய்கிறேன்' எனப் பதற்றத்தை ஏற்படுத்துவதுபோல் கூறும்; “உங்களை கைது செய்ய இந்திய ரிசர்வ் வங்கி ஆவணங்கள் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் ‘அரெஸ்ட் வாரண்ட்' பிறப்பித்துள்ளது” எனவும் மிரட்டும்.
  • இணையவழிக் குற்றங்களில் ஈடுபடுவோர் கையில் எடுத்திருக்கும் புதிய மோசடி ஆயுதம் இது. இப்படித் தொடர்புகொள்வோர் தங்களை சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சுங்கத் துறை என ஏதாவது ஒரு மத்திய அரசுத் துறையிலிருந்து பேசுவதாக உருட்டுவார்கள். பதற்றத்தோடு அவர்களுடன் நாம் பேசினால், நம் வாழ்நாள் சேமிப்பு வரை அனைத்தையும் உருவிவிடுவார்கள்.
  • இப்படி பயந்துபோய் மிரட்டல் பேர்வழிகளிடம் பேசியோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த விவரங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் ரூ. 120 கோடியை இந்திய மக்கள் இப்படி இழந்துள்ளனர் என்கிறது புள்ளிவிவரம்.
  • எந்தக் குற்றமும் செய்யாதவர்களை மனரீதியாகக் குற்றவாளியாக்கி இணையம் வழியாகக் கோடிக்கணக்கில் பணத்தைத் திருடும் இணையவழி மோசடியாளர்கள் இந்தியாவுக்குள் மட்டுமல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இயங்குகிறார்கள். இதுபோன்ற மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?
  • உங்கள் ஃபோனை ‘டிராய்’ துண்டிக்கப் போகிறது என்று அழைத்தால், அதைப் பொருட்படுத்தாதீர்கள்.
  • கைபேசி எண்போல அல்லாமல் ‘FedEx’ எனப்படும் வாடிக்கையாளர் சேவை அழைப்பில் 1 அல்லது ஏதாவது வேறு எண்ணை அழுத்துமாறு கேட்டால், புறந்தள்ளுங்கள்.
  • காவல் அதிகாரி என்று அழைத்து உங்கள் ஆதார் எண் பற்றியெல்லாம் பேசினால், பதிலளிக்க வேண்டாம்.
  • உங்களை ‘டிஜிட்டல் கைது' செய்வதாகச் சொன்னால் பதற்றமடையாதீர்கள். அழைப்பிலிருந்து வெளியேறிவிடுங்கள்.
  • உங்களுக்கோ அல்லது உங்களால் அனுப்பப்பட்ட பார்சல்களில் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றோ சொன்னால் பதில் சொல்ல வேண்டாம்.
  • ஒருவேளை போனில் பேசுவோர், இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னால், உடனே சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினருக்கு 1930இல் தகவல் தெரிவியுங்கள்.
  • வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்புகொண்டால் பொருட்படுத்தாதீர்கள்.
  • யுபிஐ மூலம் உங்களுக்குத் தவறுதலாக பணம் அனுப்பி விட்டதாகவும், அந்தப் பணத்தைத் திரும்ப அனுப்பும்படி போன் செய்தால், அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டாம்.
  • உணவு விநியோக நிறுவனங்களிலிருந்து அழைப்பதாகக் கூறி, 1 அல்லது வேறு ஏதாவது எண்ணை அழுத்தி, உங்கள் முகவரியை உறுதிப்படுத்தச் சொன்னால், அதை செய்யாதீர்கள்.
  • எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைபேசி வழியாக ஓடிபியை எவருடனும் பகிர வேண்டாம்.
  • வீடியோ அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டாம்.
  • நீல நிறத்தில் எழுதப்பட்ட எந்த இணையச்சுட்டியையும் அழுத்த வேண்டாம்.
  • புலனாய்வு அமைப்புகளின் பெயர்களில் உங்களுக்கு நோட்டிஸ் வந்தாலும்; அதை சரிபார்த்து உறுதி செய்துகொள்ளுங்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இவை அனைத்துமே இணையவழித் திருடர்கள் பின்பற்றும் பல்வேறு மோசடி உத்திகள். சற்றே கவனம் தவறிவிட்டாலும்கூட சிக்கல்தான்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories