TNPSC Thervupettagam

டிஜிட்டல் தலைமுறையினரை மீட்டெடுக்கிற உயர்கல்வி வேண்டும்

September 1 , 2023 451 days 438 0
  • இன்றைய மாணவர்களிடம் எந்த விஷயம் குறித்தும் விமர்சனபூர்வமான பார்வை இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறோம். நவீன டிஜிட்டல் உலகம் விமர்சனப் பார்வையிலிருந்து அவர்களைத் திசை திருப்பியிருக்கிறதா அல்லது நம்முடைய கல்வி முறை, விமர்சனப் பார்வையை அவர்களுக்குக் கற்றுத் தரத் தவறிவிட்டதா? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும்.
  • சமூக வலைதளங்கள்தான் இன்றைய இளைஞர்களின் மனப்போக்கை முடிவுசெய்கின்றன. இளைஞர்களின் நேரம் அவர்களுடைய அனுமதி இல்லாமலேயே திருடப்படுகிறது. இதனால் வெறுமை உணர்வுக்கு உள்ளாகும் இளைஞர்கள், பயத்துடனும் பதற்றத்துடனும் இருப்பதை உணர முடிகிறது.
  • சமூக வலைதளங்களில் துண்டு துண்டான பல செய்திகளை இளைஞர்கள் உள்வாங்குவதால் ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்திப் பார்க்க மறந்துவிடுகிறார்கள். இரண்டு பிரச்சினைகளுக்கு இடையே உள்ள தொடர்பை உணர்ந்துகொள்வதில்லை. தகவல்களையும் தரவுகளையும் மேலோட்டமாகப் பெற்றுக்கொண்டே இருப்பதால், எதிலுமே பிடிப்பில்லாமல் இருக்கின்றனர்.
  • டிஜிட்டல் உலகம் இளைஞர்களை அதல பாதாளத்தில் தள்ளினாலும், நடைமுறையில் இருக்கின்ற கல்வி முறை, அவர்களைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை முன்வைக்க வேண்டும். அதற்கு முதலில் ஆக்கபூர்வமான விமர்சனக் கல்வியை அவர்களுக்குத் தர வேண்டும். மாணவர்கள் பயில்கின்ற அறிவியல், கலை என எந்தப் புலத்தை எடுத்துக்கொண்டாலும், அது இன்றைய சமூக யதார்த்தங்களோடும் சமூகப் பிரச்சினைகளோடும் தொடர்புடையதாகப் பார்க்கப்பட வேண்டும்.
  • கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய துறைகளில் ஆய்வுக்கூடத்தில் நடைபெறுகிற பல்வேறு பரிசோதனைகள், ஆய்வுகள், ஆய்வுகள் தரும் முடிவுகள் எல்லாம் சமூகத்தின் ஏற்றத்துக்கும், சமூக மாற்றத்துக்கும் துளி அளவாவது பங்களிக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு மாணவர்கள் பயில வழிவகுக்க வேண்டும். அதேபோலப் பொருளாதாரம், வரலாறு, வணிகவியல், தொடர்பியல் ஆகிய பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் சமூகத்தை ஆட்டிப்படைக்கும் பல்வேறு விதமான நோய்களிலிருந்து எப்படிக் குணப்படுத்த முடியும் என்கிறரீதியில் தங்களுடைய பாடங்களைப் பயில வேண்டும்.
  • மாணவர்களுக்கு மெய்யுணர்வு அனுபவத்தைக் (conscious experience) கல்வி முறை கொடுக்க வேண்டும். அறிவுபூர்வமாகச் சிந்திப்பதற்கும், பிரச்சினைகளுக்கு அறிவியல் பூர்வமாகத் தீர்வுகள் தேடுவதற்கும் அவர்களைத் தயார்செய்ய வேண்டும். அறிவியல் பார்வையை மனிதத்துவப் பார்வையுடனும் சூழலியலோடும் இணைத்துச் சிந்திக்கவைப்பதும் பலன் தரும். இந்தக் கல்வியின் நோக்கம் சரியாக நிறைவேறுவதற்கு எல்லா விதமான சூழலையும், வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதுதான் ஒரு திறமையான அரசின் கடமையாகும்.
  • அறிவியல்பூர்வமான பார்வையையும் சிந்தனையையும் மாணவர் இடத்தில் தொடர்ந்து வளர்த்தெடுத்தோம் என்றால், விமர்சனப் பார்வை அங்கே இயல்பாகத் தோன்றிவிடும். மாணவர்களிடையே விமர்சனப் பார்வை வளரும்போது சமூக மாற்றத்தின் கருவிகளாக அவர்கள் மாறிவிடுவார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (01– 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories