TNPSC Thervupettagam

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சுணக்கம்

August 9 , 2023 478 days 363 0
  • இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளது. கியூஆர் கோடு ஸ்கேனர் இல்லாத மளிகைக் கடைகளே இன்று இல்லை எனும் அளவுக்கு அது பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான யுபிஐ’ (Unified Payments Interface), நாம் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரவேற்பும் எளிமையான செயல்முறையும் பணம் செலுத்தும் அல்லது பெறும் முறையை இந்தியா முழுவதும் எளிதாக்கியுள்ளன. இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா எங்கே நிற்கிறது?

யுபிஐ அறிமுகம்

  • யுபிஐ 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து, யுபிஐ பரிவர்த்தனைகள் மதிப்பிலும் அளவிலும் வளர்ந்துள்ளன. நவம்பர் 2016இல் முன்னறிவிப்பின்றி அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, 2020இல் கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொதுமுடக்கம் போன்றவை டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப் படுவதற்கான முக்கியக் காரணிகளாக இருந்தன.

வளர்ச்சி

  • ஜூன் 2021 முதல் ஏப்ரல் 2023 வரையிலான காலகட்டத்தில், யுபிஐ பரிவர்த்தனைகளின் மாதாந்திர வளர்ச்சி சராசரியாக 6% என இருந்தது. இதே காலகட்டத்தில் நெஃப்ட், ஐ.எம்.பி.எஸ்., டெபிட் கார்டு பரிவர்த்தனைகளின் வளர்ச்சி முறையே 3%, 3%, 1.5% என இருந்தன. மற்ற அனைத்துப் பரிவர்த்தனைகளையும்விட யுபிஐ பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்துள்ளன என்பதை உணர்த்தும் தரவு இது.

வளரும் யுபிஐ, தேயும் நெஃப்ட்

  • நாட்டின் சில்லறை வர்த்தகத்தை எடுத்துக்கொண்டால், அதன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பில் யுபிஐ பரிவர்த்தனைகளின் பங்கு, 2021 நடுப்பகுதியில் 20%க்கும் குறைவாக இருந்தது; மார்ச் 2023இல் சுமார் 27% ஆக அது அதிகரித்தது. மாறாக, அதே காலகட்டத்தில் நெஃப்ட் பரிவர்த்தனைகளின் பங்கு சுமார் 10% (64%இலிருந்து முதல் 54%) சரிவைக் கண்டது. ஐ.எம்.பி.எஸ்.இன் பங்கு ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்தது.
  • டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் பங்கும் சரிந்துள்ளது. இருப்பினும், அவற்றின் ஒருங்கிணைந்த பங்கு ஒட்டுமொத்த டிஜிட்டல் சில்லறைப் பரிவர்த்தனைகளின் மதிப்பில் 2.5%ஐத் தாண்டவில்லை. எனவே, யுபிஐ பரிவர்த்தனைகளின் அதிவேகமான வளர்ச்சி, நெஃப்ட் பரிவர்த்தனைகளின் வீழ்ச்சியில் இருந்து பெறப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.

வங்கிக் கணக்கு

  • யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கான முதல் படி வங்கிக் கணக்கு வைத்திருப்பது. மேலோட்டமான பார்வையில், இந்தியா வங்கிக் கணக்கு வைத்திருப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதுபோல் தெரிகிறது. உலக வங்கியின் குளோபல் ஃபைன்டெக்ஸ்கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2014இல் 53% மக்கள் வங்கிக் கணக்குகளைக் கொண்டிருந்தனர்; 2017, 2021இல் 80% மக்கள் வங்கிக் கணக்குகளைக் கொண்டிருந்தனர்.
  • இருப்பினும், தரவுகளை உற்று நோக்கினால், வங்கிக் கணக்குகள் உள்ளவர்களில் 38% பேர் செயலற்ற கணக்குகளைக் கொண்டுள்ளனர். உலகின் மற்ற அனைத்து நாடுகளுடன் ஒப்பிடும் போது, உலகில் செயல்படாத வங்கிக் கணக்குகள் இந்தியாவில்தான் அதிகம் உள்ளன. ஆண்களைவிட (23%) அதிகமான பெண்கள் (32%) செயலற்ற கணக்குகளைக் கொண்டுள்ளனர்.
  • கிராமப்புறங்களில் உள்ள மக்களில் 31% பேர் செயலற்ற கணக்கைக் கொண்டுள்ளனர்; நகர்ப்புறங்களில் உள்ளவர்களின் பங்கு 23%. இதேபோல், ஏழைகளில் 35% பேர் செயலற்ற வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளனர்; பணக்காரர்களின் பங்கு 22%.

முன்னேற்றம் போதுமா?

  • சமீபத்திய ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனையின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், 2021இல் 35% மக்கள் மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனை (பணம் செலுத்துதல் அல்லது பெறுதல்) செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.
  • இது முந்தைய ஆண்டுகளைவிட (2014 இல் 22% , 2017இல் 29%) அதிகம் என்றாலும், மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இது குறைவே. உலகின் வளரும் நாடுகளில் உள்ள மக்களில் சராசரியாக 54% டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
  • உலக அளவில் உள்ள மக்களை எடுத்துக்கொண்டால், சராசரியாக 64% டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து நமது நாட்டின் நிலையை நாம் புரிந்து கொள்ளலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா பெரிய முன்னேற்றம் அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், ‘டிஜிட்டல் இந்தியாவாக மாறுவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதே நிதர்சனம்.

நன்றி: இந்து தமிழ் திசை (09– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories