TNPSC Thervupettagam

டிரம்ப் 2.0: உலகுக்கு உணர்த்தும் செய்தி

November 8 , 2024 66 days 71 0

டிரம்ப் 2.0: உலகுக்கு உணர்த்தும் செய்தி

  • நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றிருப்பதன் மூலம் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபர் ஆகியிருக்கிறார், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப். 2025 ஜனவரி 20இல் அதிகாரபூர்வமாக வெள்ளை மாளிகையில் டிரம்ப் குடியேறவிருக்கும் நிலையில், அவரது புதிய அரசின் செயல்பாடுகள் குறித்த எதிர்பார்ப்புகள் உலக அளவில் எழுந்திருக்கின்றன.
  • 2016 தேர்தல் நிதியை முறைகேடாகக் கையாண்ட வழக்கில் குற்றவாளி என டிரம்ப் அறிவிக்கப்பட்டது, அவர் மீதான பிற வழக்குகள், 2020 அதிபர் தேர்தலில் கிடைத்த தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் அவரது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை என ஏராளமான எதிர்மறை அம்சங்களையும் தாண்டி, இந்தத் தேர்தலில் ஏகோபித்த ஆதரவுடன் அவர் வென்றிருப்பது கவனத்துக்குரியது.
  • மக்களின் அன்றாட வாழ்வில் தாக்கம் செலுத்திய பணவீக்கம் முக்கியப் பிரச்சினையாக இத்தேர்தலில் எதிரொலித்திருக்கிறது. சட்டவிரோதக் குடியேற்றங்களால் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக டிரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டும் வாக்காளர்களிடையே எடுபட்டிருக்கிறது.
  • கருக்கலைப்பு உரிமை தொடர்பாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் முன்னெடுத்த பிரச்சாரம் கைகொடுக்கவில்லை. வழக்கமாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளிக்கும் லத்தீன் அமெரிக்கக் குடியேறிகள், ஆசியாவைச் சேர்ந்த குடியேறிகள், கறுப்பின மக்கள் இந்த முறை கமலா ஹாரிஸுக்கு முழுமையான ஆதரவை அளிக்கவில்லை எனத் தெரிகிறது.
  • சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 60% வரி விதிக்கும் திட்டத்தில் டிரம்ப் இருக்கிறார். பிற நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கும் 10 – 20% இறக்குமதி வரி விதிக்கப்படும் எனத் தெரிகிறது. எனினும், இறக்குமதிப் பொருள்களுக்கு அதிக வரி விதிப்பது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உதவுமா என்பது விவாதத்துக்குரியது. எஃப்.பி.ஐ. நீதித் துறை ஆகியவை தனக்கு எதிராகச் செயல்படுவதாக விமர்சித்துவந்த டிரம்ப், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.
  • அதே வேளையில், டிரம்ப் ஆட்சியில் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவும் என்றும் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பு பலம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் நடத்தப்படும் போர்களில் அமெரிக்கா பங்களிப்பதைக் கடுமையாக எதிர்க்கும் டிரம்ப், நேட்டோ போன்ற அமைப்புகளுக்கு நிதி அளிப்பதையும் விரும்பாதவர்.
  • உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரவிருப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். இஸ்ரேலுக்கு ஆதரவானவரான டிரம்ப், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் முனைப்பை இதுவரை வெளிப்படுத்தவில்லை. ஈரானுடனான அணு ஒப்பந்தத்திலிருந்து 2018இல் டிரம்ப் அரசு வெளியேறிய நிலையில், அவர் மீண்டும் அதிபராவது ஈரானுக்குப் பதற்றத்தை அளிக்கக்கூடும்.
  • இந்தியப் பிரதமர் மோடியிடம் நெருங்கிய நட்பைப் பேணுபவர் டிரம்ப். இந்தப் பின்னணியில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் விவகாரத்தில் பைடன் அரசு இந்தியாவிடம் காட்டிய கடுமை, டிரம்ப் ஆட்சிக்காலத்தில் இருக்காது என்று நம்பப்படுகிறது. அதேவேளையில், டிரம்ப் ஆட்சியில் குடியேற்றச் சட்டங்களின் பிடி இறுகக்கூடும். ஹெச்.1பி விசாக்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம்.
  • இது இந்தியக் குடியேறிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். அமெரிக்கத் தயாரிப்புகளுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகப் பிரச்சாரங்களில் குற்றம்சாட்டிய டிரம்ப், அதேபோல இந்திய இறக்குமதிப் பொருள்களுக்கும் வரி விதிக்கப்படும் என எச்சரித்தது கவனத்துக்குரியது.
  • அமெரிக்காவின் மேலவை (செனட்), கீழவை ஆகியவற்றில் குடியரசுக் கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் நிலையில், தனது குறிக்கோள்களைத் திட்டங்களாக நிறைவேற்றும் வாய்ப்பு டிரம்ப்புக்கு அதிகரித்துள்ளது. அதிபரின் அதிகார எல்லைகள் விஸ்தரிக்கப்படலாம், சிவில் உரிமைகளுக்குப் பின்னடைவு ஏற்படும் என்றெல்லாம் ஊகிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் தாண்டி, புதிய முகங்களுடன் தனது புதிய அரசைக் கட்டமைத்திருக்கும் டிரம்ப், உலக அளவில் செலுத்தப்போகும் தாக்கம் அவரது விமர்சகர்களின் அச்சங்களை உண்மையாக்கிவிடக் கூடாது!

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories