TNPSC Thervupettagam

டிரம்ப்பின் மீள்வருகை இந்தியாவுக்கு நல்லதா?

November 19 , 2024 60 days 184 0

டிரம்ப்பின் மீள்வருகை இந்தியாவுக்கு நல்லதா?

  • நண்பர் வாட்ஸ்அப்பிலேயே வாழ்பவர். நல்லவர். ‘சிறப்பான செவ்வாய்க்கிழமை’, ‘புத்துணர்வூட்டும் புதன்கிழமை’ என்று ஒவ்வொரு நாளையும் எதுகை மோனை வாழ்த்தோடு தொடங்குவார். நவம்பர் 6ஆம் தேதி. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸைவிட முன்னணியில் இருந்தார்.
  • அன்று பிற்பகல் நண்பர் தனது முதல் காணொளியை அனுப்​பினார். அது ஆஸ்கர் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ எனும் தெலுங்குப் பாடலின் நறுக்கு. அதில் ஆடியவர்கள் ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் அல்ல. விக்கிர​மா​தித்தன் கதைகளில் வருவதுபோல் அவர்கள் தலைகள் மாற்றப்​பட்​டிருந்தன. அந்தக் காணொளியில் உற்சாகமாக ஆடியவர்கள் மோடியும் டிரம்ப்பும். நண்பர் அனுப்பிய அடுத்த காணொளி ஒரு தமிழ்ப் பாடல். ‘காட்டுக் குயிலு மனசுக்​குள்ள பாட்டுக்​கொண்ணும் பஞ்சமில்ல’.
  • திரையில் தோன்றிய​வர்கள் ரஜினி​காந்தும் மம்மூட்​டியும் அல்ல, மோடியும் டிரம்ப்பும். ‘ஹவ்டி மோடி’ (2019, டெக்சாஸ்), ‘நமஸ்தே டிரம்ப்’ (2020, அகமதாபாத்) ஆகிய இரண்டு நிகழ்வு​களி​லிருந்தும் எடுக்​கப்பட்ட நறுக்​குகள் அந்தக் காணொளியில் இடம்பெற்றிருந்தன. வாலியின் பாடல் வரிகளுக்குத் தலைவர்​களின் வாயசைப்பு கச்சித​மாகப் பொருந்​தியது. நண்பர் வழக்கத்​தைவிட உற்சாகமாக இருந்தார் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அன்றைய தினம் தொடர்ந்து பல பகடிப் படங்களை (memes) அனுப்​பினார்.
  • தனது உற்சாகத்​துக்கான காரணத்​தையும் விளக்​கினார். “டிரம்ப் மோடியின் நண்பர். அவர் அதிபராவது இந்தியா​வுக்கு நல்லது.” எனது நண்பரின் கருத்தைப் பலரும் எதிரொலிப்​பதைச் சமூக ஊடகங்​களில் காண முடிகிறது. அது அப்படித்​தானா? ஜனவரி 2025இல் பதவியேற்​கப்​போகும் டிரம்ப்பின் அரசு இந்தியாவில் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்​தும்? குறிப்பாக அயலுறவு, சுற்றுச்​சூழல், வணிகம், குடியேற்றம் போன்ற துறைகளில் எவ்விதமான மாற்றங்கள் நிகழக்​கூடும்?

அயலுறவு:

  • தங்களுக்கு அச்சுறுத்தலாக உருவாகி​யிருக்கும் சீனாவைச் சமன்படுத்தும் சக்தி​யாகத்தான் இந்தியாவைப் பயன்படுத்​திக்​கொள்ள விரும்​பு​கிறது அமெரிக்கா. இதில் இந்நாள் அதிபர் பைடனுக்கும் வருங்கால அதிபர் டிரம்​ப்புக்கும் பெரிய வேற்றுமைகள் இல்லை.
  • அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பான ‘நாற்​கரம்’ (Quad), சீன எதிர்ப்பு என்கிற ஒரே புள்ளியில் இயங்குவதாக பெய்ஜிங் குற்றம்​சாட்டு​கிறது. டிரம்ப் இந்தக் கூட்டணியை வலுவாக்​கக்​கூடும். இதனால் இந்தியா​வுக்கு என்ன பயன்? ஜனவரி 2020இல் கல்வான் பள்ளத்​தாக்கில் சீனா எல்லை தாண்டியது. 20 இந்திய வீரர்கள் கொல்லப்​பட்​டனர்.
  • தொடர்ந்து பான்காங் ஏரி, கோக்ரா ஊற்று, தெப்சாங் சமவெளி முதலிய இடங்களிலும் சீனா எல்லை தாண்டியது. பல சுற்றுப் பேச்சு​வார்த்​தைகளுக்குப் பிறகே இந்த இடங்களில் இருந்த சீனத் துருப்புகள் தம் பாசறைக்குத் திரும்பின. இவற்றுள் கல்வான் (ஜூலை 2020), பான்காங் (பிப்ரவரி 2021), கோக்ரா (செப்​டம்பர் 2022) ஆகிய இடங்களுக்குப் பிறகு, சமீபத்​தில்தான் தெப்சாங்கில் (அக்டோபர் 2024) பின்வாங்கி​யிருக்​கிறது சீனா. இந்தப் பகுதி​களி​லிருந்து தத்தமது படைகளை விலக்​கிக்​கொள்ளும் ஒப்பந்​தத்தில் இந்தியாவும் சீனாவும் கையெழுத்​திட்​டிருப்பது சமீபத்தில் பேசுபொருளானது.
  • 2020க்கு முன்பு ரோந்துபோன இடங்களில் சில இப்போதும் இந்தியத் துருப்பு​களுக்கு அடைபட்​டிருப்​ப​தாகத் தெரிகிறது. சீனாவுடனான இந்த எல்லைப் பிரச்​சினையின் சிக்கலான முடிச்​சுகளை இந்தியா தன்னந்​தனி​யாகவே முயன்று அவிழ்த்து​ வரு​கிறது. இவ்விஷ​யத்தில் பைடன், டிரம்ப் உள்பட எந்த மேற்குலகத் தலைவராலும் சீனாவிடம் செல்வாக்கு செலுத்த முடியாது. அவர்களின் தலையீடு சிக்கலை அதிகரிக்கவே செய்யும்.
  • அடுத்து, வங்கதேசம். அது பிரச்​சினைக்​குரிய இன்னொரு அண்டை நாடாக மாறிவரு​கிறது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவோடு இந்திய அரசு நெருக்கம் பாராட்​டியது. அவரது ஆட்சியில் எதேச்​ச​தி​காரம் மிகுந்​திருந்தது. மாணவர் எழுச்​சியால் அவர் பதவி விலகினார்.
  • இந்தியாவில் தஞ்சம் புகுந்​திருக்​கிறார். வங்கத்தில் இப்போது முஹமது யூனூஸின் இடைக்கால ஆட்சி நடைபெறுகிறது. யூனூஸ் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர். ஆகவே டிரம்ப்​புக்கு ஆகாதவர். ஹசீனாவை நாடு கடத்தி வங்கதேசத்​துக்கு அழைத்துவர ‘இன்டர்​போல்’ உதவியை யூனூஸ் அரசு நாடவுள்ளது. இது இந்தியா​வுக்குத் தர்ம
  • சங்​கடத்தை விளைவிக்​கும். இந்தப் பிரச்​சினையில் டிரம்ப், யூனூஸ் அரசுக்கு எதிராகச் செயல்​படலாம். ஆனால், அது இந்தி​ய-வங்க உறவுக்கு நன்மை பயக்குமா என்பது ஐயமே. மற்றபடி, இந்தியா​வுக்கு ராணுவத் தளவாடங்களை விற்ப​திலும் பாகிஸ்​தானியத் தீவிர​வா​திகளை எதிர்​கொள்​வ​திலும் அமெரிக்க அரசுகள் இந்தியா​விடம் அனுசரணை​யாகவே நடந்து​கொள்​ளும்.

சுற்றுச்​சூழல், மனித உரிமை:

  • காலநிலை மாற்றத்தையே ஒரு கற்பிதம் என்று சொல்லிவருபவர் டிரம்ப். ஆதலால், எந்தப் பன்னாட்டு உடன்படிக்கைக்கும் அவர் இணங்க மாட்டார். ஆகவே, இந்தியாவோ வேறு எந்த நாடோ எவ்விதமான கட்டுப்​பாட்​டையும் கடைப்​பிடிக்க வேண்டு​மென்று வற்புறுத்​த​ மாட்​டார்.
  • மேலும், மனித உரிமை மீறல், ஊடகச் சுதந்​திரம், சிறுபான்​மை​யினர் நலன் தொடர்பாக பைடன் அரசு வழங்கிவந்த புள்ளி​விவரங்​களும் கருத்து​களும் இந்திய அரசுக்கு உவப்பாக இல்லை. இப்போது டிரம்ப்​பிட​மிருந்து இவை தொடர்பாக எந்த விமர்​சனமும் எழாது என்று எதிர்பார்க்கலாம். எனில், இதை நன்மை என்கிற கணக்கில் வரவு வைக்கலாமா என்பது தெரிய​வில்லை.

வணிகம்:

  • டிரம்ப்பின் ஆட்சியில் இந்தி​ய-அமெரிக்க வணிகம் பாதிக்​கப்​படும் என்று அரசியல் நோக்கர்கள் பலரும் அஞ்சுகிறார்கள். இந்தியாவின் தலையாய வணிகப் பங்காளி அமெரிக்​கா​தான். இந்தியாவின் இப்போதைய அமெரிக்க ஏற்றுமதி, இறக்கும​தி​யைவிட அதிகமாக இருக்​கிறது. 2019இல் விரும்பத்தக்க வணிகர் (GSP) என்னும் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கினார் டிரம்ப். “பன்னாட்டு வணிகத்தில் நிலவும் சலுகைகளை முறைகேடாகப் பயன்படுத்தும் நாடு இந்தியா” என்றுகூட விமர்​சித்தார்.
  • உலக வணிக மையத்தின் கொள்கைகளான உலகம் முழுதும் ஒரே சந்தை, தீர்வைகளே கூடாது என்பது போன்ற​வற்றில் டிரம்ப்​புக்கு உடன்பாடு இல்லை. சீனப் பொருள்​களின் மீது 60% தீர்வையையும் மற்ற நாடுகளுக்கு 10% முதல் 20% தீர்வையையும் விதிக்​கப்​போவ​தாகத் தேர்தல் காலத்தில் பரப்புரை மேற்கொண்​டார். அப்படித் தீர்வை விதிக்​கப்​பட்​டால், அது இந்திய ஏற்றுமதியைக் கணிசமாகப் பாதிக்​கும்.

குடியேற்றம்:

  • அமெரிக்​காவில் அந்நியர் குடியேற்​றத்தைக் கட்டுப்​படுத்தப் போவதாக டிரம்ப் வாக்குறுதி அளித்​திருக்​கிறார். இதனால், இந்திய இளைஞர்​களின் ஹெச்1பி விசாக்கள் மட்டுப்​படுத்​தப்​படலாம். இதனால், இந்திய வல்லுநர்கள் அமெரிக்​காவில் பணியாற்றுவது குறையக்​கூடும். அமெரிக்​காவில் இயங்கும் இந்திய நிறுவனங்கள் அதிக ஊதியம் வழங்கி அமெரிக்க வல்லுநர்களைப் பணியமர்த்த வேண்டிய நிர்ப்​பந்தம் உருவாகலாம்.
  • அயல் பணி ஒப்படைப்புதான் (outsourcing) இந்தியத் தகவல் தொழில்​நுட்பத் (ஐ.டி) துறையின் ஆதாரமாக விளங்​கிவரு​கிறது. இதில் இந்திய ஐ.டி துறை 80% அமெரிக்​காவையே சார்ந்திருக்கிறது. இது அமெரிக்கப் பொருளா​தா​ரத்​துக்கும் பலனளித்து வருகிறது. ஆனால், இது உள்நாட்டு வேலைவாய்ப்பைப் பறிப்பதாக டிரம்ப் கருதுகிறார். இதில் அவர் கடுமையான கொள்கை முடிவுகள் எடுத்​தால், அது நமது ஐ.டி துறையைப் பெரிதும் பாதிக்​கும்.

திசைவழி:

  • டிரம்ப் அரசை இந்தியா எங்ஙனம் எதிர்​கொள்​ளலாம்? இந்தியா தனக்கு இயைந்த அயலுறவுக் கொள்கையைத் தானே தேர்ந்​து ​கொள்ள வேண்டும். இதில் அமெரிக்​காவின் விருப்​பங்​களுக்கு இடம்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது சுற்றுச்​சூழல் கொள்கைக்கும் பொருந்​தும். வணிகம், குடியேற்றம் தொடர்பான டிரம்ப்பின் கொள்கைகள் இந்தியாவைப் பாதிக்கும் என்பது நோக்கர்​களின் அச்சமாக இருக்​கிறது. மோடி-டிரம்ப் நட்புறவு அந்த அச்சத்தைப் போக்கு​மானால், அது இரு நாட்ட​வருக்கும் நல்லது. அப்போது ‘நாட்டு நாட்டு’ காணொளி நாடெங்கும் பல லட்சம் பார்வை​யாளர்களை எட்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories