TNPSC Thervupettagam

டெங்கு காய்ச்சல்: பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் என்னென்ன - 3

September 16 , 2023 478 days 688 0
  • டெங்கு வைரஸால் வேறு சில உடல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

உடலுக்குள் ஏற்படும் உறை பாதிப்பு

  • ரத்த அணுக்கள், டெங்கு வைரஸுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதங்களால் ஏற்படும் தொடர் ரத்த உறைதலில் ஏற்படும் மாற்றங்களால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், ரத்த உறைதல் காரணமாக உடலில் பல இடங்களில், பல உறுப்புகளில், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டுவிடும். அதேநேரம், ரத்த உறை பொருள்கள் குறைபாடு காரணமாக ரத்தக்கசிவுகளும் ஏற்படும். இது உடலைப் பெரிதும் பாதிக்கும்.
  • பெரும்பாலும், ரத்தக்கசிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு இத்தகைய நிலைமை ஏற்படும். இவர்களது ரத்தத்தைப் பரிசோதனை செய்தால், தட்டணுக்கள் உள்பட பல்வேறு ரத்த உறைதலுக்குப் பயன்படும் உறை பொருள்களும்  குறைந்திருக்கும். சில ரத்தம் உறைதல் நேரங்களிலும் மாறுதல்கள் நிகழ்ந்திருக்கும். (Prolongations of aTTT - activated partial Thromboplastin Time, prothrombin Time) இவர்களுக்கு உடலின் பல்வேறு உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படலாம். (Dengue Viral hepatitis). சிலருக்கு இதயத் தசைகள் பாதிக்கப்படலாம். (Acute Myocarditis) சிலருக்கு மூளை பாதிக்கப்பட்டு மயக்க நிலையை அடையலாம். (Encephalitis).

டெங்கு மூளைக் காய்ச்சல்

  • கடந்த 2017-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்களில் சிலருக்கு ரத்தக்கசிவு/அதிர்ச்சிப் பாதிப்புடன் மூளைக்காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டது. இவ்வகை மூளைக்காய்ச்சலை டெங்கு-2 அல்லது டெங்கு-3 வகை வைரஸ்களே பெரிதும் ஏற்படுத்துகின்றன. (Neurotropic Virus).
  • டெங்கு வைரஸ், மூளையில் உள்ள நரம்புகளை பாதிப்பது அபூர்வமாகவே இருந்தாலும், சில வேளைகளில் பாதிப்பும் ஏற்படலாம். சிலருக்கு இத்தகைய டெங்குவினால் ஏற்படும் மூளைக் காய்ச்சல், ரத்தக்கசிவு பாதிப்புடன் சேர்ந்து ஏற்படலாம், அல்லது தனியாகவும் ஏற்படலாம்.
  • வைரஸ் நேரடியாகவே மூளை நரம்புகளைப் பாதிக்கலாம். அல்லது, மூளை ரத்தநாளக் கசிவினால் வெளியேறும் ரத்தச் சிவப்பணுக்கள், புரதம், மற்றும் வைரஸை தாக்கிய வெள்ளையணுக்களின் பாதிப்பினால் (DENV Infected Macrophages) டெங்கு மூளைக்காய்ச்சல் ஏற்படலாம்.
  • இவர்களுக்கு ஆரம்பத்தில் லேசான காய்ச்சல் ஏற்படும். குளிர், நடுக்கம், வாந்தி, தலைவலி, உற்சாகமின்மை ஆகியவை இருக்கும். ரத்த அழுத்தம் குறையும். இவர்களில் சிலருக்கு, மூளையில் பல்வேறு இடங்களில் ரத்தம் கசிந்து மூளை பாதிக்கப்பட்டிருக்கலாம். சிலருக்கு டெங்கு காய்ச்சலால், உடலின் பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்பட்டு அதனால் மூளையில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக, ரத்தக்கசிவு, அதிர்ச்சி பாதிப்பு, கல்லீரல் அழற்சி பாதிப்பு காரணமாக மூளை பாதிக்கப்படலாம். இதனை, டெங்குவின் பாதிப்பினால் ஏற்பட்ட மூளை பாதிப்பு (Dengue Encephalopathy) என்று சொல்வார்கள்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்

  • டெங்கு காய்ச்சல் எந்த வயதினரையும் விட்டுவைப்பதில்லை என்றாலும் சிலருக்கு எளிதாக ஏற்படவும், ஏற்பட்டால் அதிகப் பாதிப்பை உண்டாக்கக்கூடியதாகவும் இருக்கிறது.
  • கர்ப்பிணிகள்
  • பிறந்த குழந்தைகள்
  • வயதில் முதிர்ந்தவர்கள்
  • எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டவர்கள்
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள்
  • நீண்டகால சுவாசப் பிரச்னை/ஆஸ்துமா உள்ளவர்கள்
  • உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள்
  • ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்பவர்கள்
  • உறுப்பு தானம் பெற்று உடல் எதிர்ப்பாற்றலுக்கு எதிரான மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள்
  • இதய நோயாளிகள் மற்றும் ரத்த உறைதலைத் தடுக்க அவர்கள் பயன்படுத்தும் மருந்துகள்
  • ரத்த உறைதல் பாதிப்பு நோய் உள்ளவர்கள்
  • இரைப்பை - குடல் புண்கள் உள்ளவர்கள்
  • ரத்தச் சிவப்பணு நொதி குறைபாடு உள்ளவர்கள் (G6PD Deficiency)

எச்சரிக்கை மணி

  • டெங்கு காய்ச்சல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு முன் சில அறிகுறிகளை எச்சரிக்கை மணியாக அடிக்கும்.
  • மருந்துகளுக்குக் கட்டுப்படாத தொடர் வாந்தி
  • நுரையீரல் உறையில் நீர் தங்குதல்
  • வயிற்றுப் பகுதியில் நீர் தங்குதல்
  • தாங்கமுடியாத வயிற்று வலி
  • மாதவிலக்கில் ரத்தம் அதிகம் வெளியேறுதல்
  • கை, கால் குளிர்ந்து விரைத்துப்போதல்
  • ரத்தம் அழுத்தம் குறைந்துபோதல்
  • நாடித்துடிப்பு அதிகரித்தல்
  • தட்டணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துகொண்டேபோதல்
  • வெளியேறும் சிறுநீரின் அளவு குறைதல்
  • கல்லீரல் வீக்கம்
  • படபடப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆய்வுக்கூடப் பரிசோதனைகள்

  • டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறைய ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் இருக்கின்றன.
  • அணுக்களின் பரிசோதனை - இதில், இவர்களுக்கு வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
  • ரத்தச் சிவப்பணுக்களின் அளவீடு – பொதுவாக இது ஆண்களுக்கு 45 முதல் 52 சதவீதமாகவும், பெண்களுக்கு 37 முதல் 48 சதவீதமாகவும் இருக்கும்.
  • கல்லீரல் நொதிகளின் அளவுகள் - டெங்குவால் கல்லீரலும் பாதிக்கப்படுவதால், பல்வேறு கல்லீரல் நொதிகளின் அளவுகள் அதிகரிக்கும். (AST / ALT; Gamma-GT).
  • டெங்கு ஆன்டிஜன் பரிசோதனை – டெங்கு ஏற்பட்ட, அதாவது காய்ச்சல் ஏற்பட்ட முதல் நாளில் இருந்தே டெங்குவின் ஆன்டிஜின் பரிசோதனை (NSI - Antigen) டெங்கு ஏற்பட்டிருப்பதை மெய்ப்படுத்தும். இதனை எலீசா முறையில் செய்வார்கள்.
  • டெங்கு எதிர்ப்பாற்றல் புரதங்களின் அளவுகள் – டெங்கு வைரஸ் இனங்களுக்கு எதிராக உருவான பல்வேறு எதிர்ப்பாற்றல் புரதங்களும் அதிகரிக்கும். முதலில் இவர்களுக்கு IgM–antibodies (Dengue) அதிகரிக்கும். இந்த எதிர்ப்பாற்றல் புரதம், காய்ச்சல் ஏற்பட்ட ஐந்தாவது நாளில் தொடங்கி அதிகரிக்க ஆரம்பிக்கும். இதன் அதிகரிப்பு 90 நாள்கள் வரைகூட நீடித்திருக்கும்.
  • அதேபோல், IgG-antibodies (Dengue) பரிசோதனையிலும் டெங்குவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் உருவாகியிருக்கும். இவ்வகை எதிர்ப்பாற்றல் புரதம் அதிகரித்திருந்தால், இது ஏற்கெனவே அந்த நபருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும்.
  • பி.சி.ஆர். பரிசோதனை – டெங்கு வைரஸ்தான் என உறுதியாகச் சொல்ல, மிகவும் நுட்பமான தொழில்நுட்பத்துடன் கூடிய பி.சி.ஆர். (RT - PCR) பரிசோதனையை செய்வார்கள்.
  • மேற்கண்ட பரிசோதனைகள் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்தும்.

பிற முக்கியமான பரிசோதனைகள்

  • அதேநேரம், இந்த வைரஸால் ஏற்பட்ட பிற உடல் பாதிப்புகளை அறிய, வேறு சில பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். நெஞ்சுப் பகுதி எக்ஸ்ரே, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதி ஸ்கேன் பரிசோதனை நீர் தேங்கியிருக்கிறதா, கல்லீரல் / பிற உறுப்புகள் பாதிக்கப் பட்டிருக்கின்றனவா என அறிய உதவும். ரத்தக்கசிவு போன்ற பாதிப்பு இருந்தால், ரத்தக்கசிவு நேரம், உறை நேரம் போன்ற பரிசோதனைகளுடன், ரத்த உறை பொருள்களின் நிலை அறியும் பரிசோதனையையும் செய்ய வேண்டும்.
  • மூளைக்காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், மூளை – தலைப்பகுதி ஸ்கேன் பரிசோதனை, மூளையைச் சுற்றியுள்ள, தண்டுவடத்தைச் சுற்றியுள்ள நீரை எடுத்துப் பரிசோதனை செய்யவேண்டி இருக்கும்.
  • மேலும், காய்ச்சலின் தன்மையையும் நோயின் தாக்கத்தையும் அறிய, தினமும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்தச் சிவப்பணுக்களின் அளவீடு (HCT) ஆகியவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும். ரத்தக் கசிவால் ரத்தம் குறைந்தால், ஹீமோகுளோபின் அளவு பார்க்க வேண்டும். என்ன வகை ரத்தப் பிரிவு என்று கண்டறிய வேண்டும். அப்போதுதானே ரத்தம் தேவைப்பட்டால் செலுத்த இயலும்!

சிகிச்சைகள்

  • ஓய்வு அவசியம் – டெங்கு என சந்தேகிக்கும் எந்த நோயாளியையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • வைரஸ் மருந்துகள் இல்லை – டெங்கு வைரஸை அழிப்பதற்கான / எதிராகச் செயல்படக்கூடிய வைரஸ் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
  • தொந்தரவு – அறிகுறிகளை குறைக்கும் மருந்துகள் – எனவே, காய்ச்சலைக் குறைப்பதற்கான பொது மருந்துகளையும், பாரசிட்டமால் (paracetamol) போன்ற மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும். வாந்தி, குமட்டல், வயிற்றோட்டம், உடல் வலி போன்ற தொந்தரவுக்கான மருந்துகளும் தரப்பட வேண்டும்.
  • நோயாளிகள் தாங்களாகவே ஆஸ்பிரின் (Aspirin), இபூபுரோஃபென் (Ibuprofen) போன்ற மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. இவை ரத்தக் கசிவை அதிகரிக்கும். எனவே, எச்சரிக்கை தேவை.
  • தேவைக்கு ஏற்ப, நோயாளிக்கு குளுக்கோஸ் மற்றும் பிற திரவ மருந்துகள் செலுத்தப்படும். ரத்தக் கசிவு மிகுதியாக இருந்தால் (ரத்தச் சிவப்பணு அளவீடு குறைந்துவிடும்), ரத்தம் செலுத்த வேண்டியது வரும்.
  • தட்டணுக்கள் மிகவும் குறைந்தால், தட்டணுக்கள், பிளாஸ்மா ஆகியவற்றை செலுத்த வேண்டியது வரும். அதிக வாந்தி, வயிற்றோட்டம் ஆகிய காரணங்களால் ரத்தச் சிவப்பணு அளவீடு அதிகரித்திருந்தால், அவர்களுக்கு பல்வேறு திரவ மருந்துகளை (crystalloid solution) சிரைக் குழாய்க#ளின் வழியே செலுத்த வேண்டியது வரும். அதனை, மருத்துவர்களின் கண்காணிப்பில் மருத்துவமனையில் நோயாளியை அனுமதித்தே செய்ய இயலும்.
  • இத்துடன் நிலவேம்புக் குடிநீர், காட்டு நிலவேம்புச் சாறு, பப்பாளிச் சாறு ஆகியவை, நோயாளியின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க அரசாங்க மருத்துவமனைகளில் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன.
  • ஆக, டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில், தொந்தரவுகளைக் குறைப்பதற்கான சிகிச்சைகள் (symptomatic treatment) மற்றும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிகிச்சைகள் (supportive treatment) என்ற இரண்டையும் அடிப்படையாகக் கொண்டே சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

தவிர்ப்பது தடுப்பது எப்படி?

  • டெங்கு காய்ச்சலைத் தடுக்க தடுப்பூசிகள் தற்சமயம் இல்லை. எனவே, டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும், தவிர்க்கவும், தவிக்காமல் இருக்கவும் ஒரே வழி கொசு ஒழிப்புதான்.

நன்றி: தினமணி (16 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories