TNPSC Thervupettagam

டெல்லிக்குச் சென்றது எந்த ஊர் அய்யனார்?

March 3 , 2020 1780 days 1091 0
  • கையில் சிலம்போடு வரும் கண்ணகியும் திருவள்ளுவரும் பொங்கல் விழாவும் அழுத்தமான தமிழ் அடையாளங்கள். கற்றவர்கள் கை நோவ எழுதி, அவை தமிழ் அடையாளங்களாகத் திரண்டன. ஜல்லிக்கட்டும் அண்மையில் இந்த அடையாள வரிசையில் தானாகவே சேர்ந்துகொண்டது. தமிழர் என்ற தன்னுணர்வு இப்போது அய்யனாரையும் தன் அடையாளமாக்கிக்கொண்டு வெளிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அடையாள வரிசையில் சலசலப்பு

  • தானும் தமிழ் அடையாள வரிசையில் சேர்ந்து கொள்ள அய்யனாருக்கு இயன்றது எப்படிஅய்யனார் தமிழ் அடையாளம் பற்றி நமக்கு என்ன சொல்கிறார்? சமயம், சடங்கு போன்றவற்றைக் கழித்துவந்தவை மரபான தமிழ் அடையாளங்கள். தைப் பொங்கல் அதன் சடங்குச் சாயலிலிருந்து விடுபட்ட வடிவில்தான் தமிழ் அடையாளமானது. பட்டையாக நெற்றி நிறைந்த விபூதியோடு வந்த அய்யனாரையும் இந்த வரிசைக்குள் மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்றார்கள். கூடவே வந்த ஒருவர் நம்மைவிட்டு ஒரு அடி விலகி நடந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஆகிவிட்டது நமக்கு. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் அடையாள வரிசைக்கு அய்யனார் தேர்வாகியிருப்பாரா என்பது சந்தேகம். இந்தக் குடியரசு நாளில் அவர் வராமலிருந்திருந்தால் இனியும் அவர் வராமலிருப்பாரா என்பதும் சந்தேகமே. தமிழ் அடையாளத்தின் வடிவங்கள் எல்லாக் காலத்திலும் அரசியல் சிந்தனையின் வரம்புக்குள் தங்களை ஒடுக்கிக்கொள்ளாது. கலாச்சாரமும் தமிழ் அடையாளமும் தங்கள் போக்கில் பயணிப்பது இயற்கை.
  • நடு வகிடு எடுத்த அய்யனாரின் தலைமுடி, சடை சடையாக இடமும் வலமும் அவர் தோளுக்கு வழியும். வலது கையில் குதிரை விரட்டும் சாட்டையல்ல, செண்டாயுதம் இருக்கும். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் அய்யனாரிடம் செண்டாயுதத்தைப் பெற்றுக்கொண்டுதான் கரிகாலன் இமயத்தை வென்றான் என்பது பழைய கதை. இடது காலைக் குத்துக்காலிட்டு இடது கையை அதன் மீது யானை துதிக்கைபோல தொங்கவிட்டிருப்பார் அய்யனார். அவருக்கு யானையும் ஒரு வாகனம். அவர் ஊர்வலம் செல்வதாக ஒரு சிலை இருந்தால், அது யானை மீது அமர்ந்து செல்வதாக இருக்கும். தமிழகத்தில் பரவலாகத் தெரிந்த இந்த உருவத்தில் வந்திருந்தால் அய்யனாருக்கு டெல்லி ஊர்வலம் இவ்வளவு எளிதாக வாய்த்திருக்காது.

கதம்பக் கடவுள்

  • குடியரசு தினத்தில் ஊர்வலம் வந்த அய்யனார் ஜடாமுடியல்ல, கரண்ட மகுடம் தரித்திருந்தார். இருப்பதைவிட மேலும் அதை எடுப்பாக்கிக்கொண்டு, அதற்குப் பின்னால் கதகளி ஆட்டக்காரர்களுக்கு இருப்பதுபோன்ற பிரபை ஒன்று. வெட்டரிவாள் மீசை. உக்கிரம் காட்டும் உருட்டு விழிகள். வலது பின் கையில் அரிவாள். இடது கைகளில் உடுக்கையும் சூலமும். ‘அஞ்ச வேண்டாம்’ என்ற அபய முத்திரையில் வலது முன் கை. அய்யனாரிடம், ‘உன் அடைக்கலம்’ என்று தேவேந்திரன் இந்திராணியை ஒப்படைத்திருந்ததாக ஒரு கதை. நான்கு கைகளோடு சுகாசனத்தில் வந்த அய்யனார் கதம்பக் கடவுளாகத் தோன்றினாலும் அவர் அபயம் காப்பதை முதன்மைப்படுத்தியது டெல்லியில் வந்த சிலை.
  • கிராமமும் கிராம தெய்வங்களும் கிராமியக் கலைகளும் அந்தந்த மண்ணுக்கு உரியவை. அய்யனாரும் மண்ணின் தெய்வமாகத்தான் தமிழ் அடையாளம் பெறுகிறார். இந்த அடையாளங்களை அழுத்திப் பதித்து அய்யனாரை அழைத்துவந்தது குடியரசு தின அணிவகுப்பு. மேளம் முழங்கியது, நாகசுரம் ஒரு சுரக் கோவைத் துணுக்கை இழைத்தது. மற்றொரு பக்கம் உறுமி மேளம் ஒலித்தது. பறையில் சாமிக்கொட்டு அதிர்ந்தது. கொம்பு எக்காளமிட்டது. கரகாட்டம், கோலாட்டத்தோடு அமர்க்களமாக அன்று அய்யனார் வந்தார்.
  • இப்படி வந்தவருக்குத் தமிழ் அடையாளம் பாயாக இருந்தாலும் அதற்குக் கீழே புகுந்துகொள்ள முடியும், தடுக்காக இருந்தாலும் புகுந்துகொள்ள முடியும். தமிழ் அடையாளக் கட்டுமானத்தில் இருந்த இறுக்கம் அன்று தளர்ந்தது. சிவனையும் பெருமாளையும் பெருந்தெய்வங்களாகக் கொண்டு கிராம தெய்வங்களைச் சிறுதெய்வங்களாக்கும் தரக் கட்டுமானம் உண்டு. அதைப் பிரித்து, பெருந்தெய்வத்துக்குக் கீழ் இருந்த அய்யனாருக்கு முதன்மை கொடுத்ததால் அவரும் எளிதாகத் தமிழ் அடையாளமானார்.
  • அய்யனார் என்று பெயரைச் சொல்லாமல், ஊர்வலம் வந்தது என்ன தெய்வம் என்று கேட்டால் எனக்குச் சொல்லத் தெரிந்திருக்காது. அநேகமாக, பத்துக்கு ஏழு பேர் என் நிலைமையில் இருந்திருப்பார்கள். நான் அய்யனார் கையில் அரிவாளைப் பார்த்ததில்லை. அவருடன் இருப்பவர்களான முன்னடியான், வீரன், சாம்பான், பெத்தான் போன்ற தெய்வங்களின் கைகளில் அரிவாளைப் பார்த்திருக்கிறேன். அன்றைக்கு அய்யனாரிடம் தணிய வேண்டிய அம்சங்கள் தணிந்து, முதன்மைப்பட வேண்டியவை முன்னால் வந்திருக்கின்றன. தமிழ் அடையாளமும் அவற்றின் பொருளும் உயிர்ப்போடு மாறிக்கொண்டிருப்பவைதான்; ‘மாறவில்லை, அது சிதைந்துகொண்டிருக்கிறது’ என்றும் ஒரு விமர்சனம் இருக்கக்கூடும்.

போலி இருமை

  • அய்யனார், கிராம தெய்வம் போன்றவற்றின் நம் மன பிம்பமும், கோயில்களில் இருப்பவையும் ஒத்துப்போவதில்லை. இன்னமும் நாம் காலனிய காலத்து ஆர்வலர்கள் இவை பற்றி என்ன சொன்னார்களோ அதிலிருந்து விடுபடவில்லை என்பதுதான் இதற்குக் காரணம். கிராமம், நகரம் என்ற இருமையின் அமைப்பிலேயே கிராம தெய்வம் என்று இவற்றைக் கற்பித்துக்கொண்டால், இந்த இருமையின் மறுமுனையான ‘நகர தெய்வம்’ என்று ஏதேனும் உண்டா? இது ஒரு போலியான இருமை. ‘நகரக் கோயில்’ என்று எதையாவது சொல்வோமா?
  • குலதெய்வம் என்று அய்யனார், மாரியம்மன் கோயில்களில் குழந்தைகளுக்கு முதல் முடி இறக்குகிறோம். இவை எப்படி சிறுதெய்வங்களாகும்? அய்யனாரும் பிடாரியும் கிராம தெய்வங்கள் என்றால், அவை கிராமத்தை உருவாக்கும் தெய்வங்கள்; கிராமத்தில் இருக்கும் தெய்வங்கள் என்பதல்ல அதன் பொருள்.
  • அய்யனாரும் பிடாரியும் இருக்கிறார்கள் என்றால், அது ஒரு கிராமம்; அது அவற்றோடுதான் இருப்புக்குள் வந்தது. ஊர், பெயர் போன்ற பரிமாணங்கள் இல்லாமல் வெற்றுக் கருத்தாக அய்யனார் இருப்பதில்லை.
  • நகரங்கள் விரிவடைந்து புது நகரங்கள் உருவானால், அங்கு சிவனுக்கும் பெருமாளுக்கும் கோயில் வரலாம். புதிய நகரங்களில் அய்யனாருக்கும் பிடாரிக்கும் கோயில் கட்டிப் பார்த்திருக்கிறீர்களா? இந்தத் தெய்வங்கள் தங்கள் கிராமத்திலிருந்து பிரிந்துவராதவை. அவை கருத்தளவிலான தெய்வங்கள் என்றால், உருவம் கொடுத்து எங்கே வேண்டுமானாலும் இருத்திவைக்கலாம். ஆக, குடியரசு தினத்தில் ஊர்வலம் வந்த அய்யனார் ஏதாவது ஒரு கிராம அய்யனாராகத்தான் இருக்க வேண்டும். அவர் எந்தக் கிராம அய்யனார்?

நன்றி: இந்து தமிழ் திசை (03-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories