TNPSC Thervupettagam

டேவிட் லிஞ்ச்: நனவோடைத் திரைக்கலைஞன் (1946 - 2025)

January 19 , 2025 18 days 51 0

டேவிட் லிஞ்ச்: நனவோடைத் திரைக்கலைஞன் (1946 - 2025)

  • டேவிட் லிஞ்சின் திரைப்பட பாணி, நனவோடை உத்தியை அமெரிக்க சினிமாவில் அறிமுகப்படுத்திய விதத்தில், தனித்த சிறப்பம்சம் பெற்றவை. கண்களுக்கு எளிதில் புலப்படாத, மறைத்துவைக்கப்பட்ட பிரச்சினைப்பாடுகளைத் தாளமுடியாத யதார்த்தத்துடன் லிஞ்சின் படங்கள் இருண்ட காட்சிவெளிகளோடு பிணைந்து திரையில் ஒளிப்படுத்துபவை.
  • 1967இல் லிஞ்சினது திரைவாழ்வு Six Men getting Sick என்ற பரிசோதனை அனிமேஷன் குறும்படத்தை இயக்குவதன் வாயிலாகத் தொடங்குகிறது. அதற்கு முன்பு, அவரது வித்தியாசப்பட்ட திரைப்பட பாணியை முன்னறிவிப்பு செய்யும்விதமாக, அந்த அனிமேஷன் படத்திற்குள் ஓவியம், சிற்பம் ஆகியவையும் இணைக்கப்பட்டுப் புதிய வகையிலான வடிவில் அமைந்தது.
  • பத்து வருடங்கள் கழித்து, அவரது முதல் முழுநீளத் திரைப்படம் எரசர்ஹெட் (Eraserhead) வெளியானது. பாழடைந்த தொழிற்சாலையுள்ள நிலப்பரப்பிற்குள் ஒரு நபர் தன்னுடைய உருச்சிதைந்த பிள்ளையைப் பராமரிக்கும்பொருட்டு வசிப்பது குறித்த கதை அது. அதுவரை அமெரிக்க சினிமாவில் நிலவிவந்த புனைவு யதார்த்தத்திலிருந்து முற்றிலுமாக மடைமாறி நனவோடை உத்தி கலந்த பரிசோதனைப் படைப்பாக வந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது இப்படம்.
  • லிஞ்சை உலகறியச் செய்த படம் 1986இல் வெளியான ‘ப்ளூ வெல்வெட்’ (Blue Velvet). அமெரிக்காவின் வட கரோலினா நகரத்தில் உள்ள லும்பர்டன் என்னும் மர்மமான ஒரு சிறுநகரத்தில் நடக்கும் கதை. கல்லூரி மாணவனான ஜெஃபரி பியுமாண்ட், அக முரண்களுடைய பாடகியான டோரன் வாலன்ஸ் ஆகிய இருவர் இடையே நேரும் விபரீதமான பாலுறவு சார்ந்த பிணைப்புணர்வைப் பற்றிய சித்திரம் அது.
  • லிஞ்சினது நனவோடை உத்தியிலமைந்த மற்றொரு சிறந்த படம் 2001இல் வெளிவந்த ‘முல்ஹோலண்ட் டிரைவ்’ (Mulholland Drive). நடிப்பில் ஆர்வம் கொண்டிருக்கும் பெட்டி எல்ம்ஸ் என்பவளுக்கும் ஒரு வாகன விபத்தில் பாதிக்கப்பட்டு மீண்டுகொண்டிருக்கும் நினைவு மறந்த பெண்ணொருத்திக்குமான நட்பைப் பற்றியது இது.
  • லிஞ்சின் திரைமொழி எளிமையில் அமைந்த படம் ‘தி எலிபெண்ட் மேன்’ (The Elephant Man). அவரது முந்தைய படத்திலிருந்து சில தாக்கங்களைப் பெற்றும், எதிர்காலத்தில் அவர் உருவாக்கப்போகிற படங்களின் திரைமொழியை வடிவமைக்கும் ஆயத்தமாகவும் அப்படம் உலகளாவிய விமர்சகர்களால் கணிக்கப்பட்டது.
  • லிஞ்ச்சிற்கு பிடித்தமான இயக்குநர்கள் ஸ்டான்லி குப்ரிக், ஃபெடரிகோ ஃபெலினி, பில்லி வைல்டர், வெர்னர் ஹெர்சாக், ழாக் தாத்தி ஆகியோர். ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு விதமான திரைமொழியை பாவித்தவர்கள். எனவே, இவர்களைத் தனது ரசனை அடிப்படையிலான தேர்வாக லிஞ்ச் கூறியிருக்கவேண்டும். எனினும், அவரது முதல் விருப்ப இயக்குநரான ஸ்டான்லி குப்ரிக்கினது ‘ஏ க்ளாக்வொர்க் ஆரஞ்ச்’ (A Clockwork Orange), ‘தி சைனிங்’ (The Shining), ‘2001: ஏ ஸ்பெஸ் ஒடிசி’ (2001: A Space odyssey) ஆகிய படங்களிலிருந்து பெற்ற தாக்கங்களை லிஞ்சின் படங்களில் இழையோட்டமாக காணலாம்.
  • ஆயினும், அவருக்கே உரிய சிக்கல்வயப்பட்ட கதையோட்டமும், கதாபாத்திரங்களும், மற்றவர்களது படங்களிலிருந்து முற்றிலுமாகத் திசைமாறி வித்தியாசமான, வடிவம் சார்ந்த வரையறைகளை மீறிய திரைமொழியைக் கையாண்டவிதத்திலும் லிஞ்ச் அமெரிக்க சினிமாவின் தனித்துவமான திரையாளுமையாக மதிப்பிடப்படுகிறார்.
  • மற்ற திரை இயக்குநர்களிடம் காணவியலாத ஒரு கலைப் பண்பும் லிஞ்சிடம் இருந்தது. 1977 தொடங்கி 2005 வரை அவர் முழுநீளத் திரைப்படங்களை இயக்கியபோதும், அதே காலகட்டங்களில் இணையாக்கமாக குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசைக் காணொளிகள், தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார். அதேபோல, ஒரு இயக்குநராக மட்டுமே தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாமல், திரைக்கதை எழுதுதல், நடிப்பு, ஒளிப்பதிவு, இசையமைப்பு, படத்தொகுப்பு, ஒலி வடிவமைப்பு, படத் தயாரிப்பு எனப் பன்முக ஆளுமையாக தன்னை அங்கப்படுத்தியவர். அவரது கலைத்தேடலின் ஆழம் அத்தகையது.
  • தனித்துவமான தனது படங்களின் வாயிலாக, உலகின் பல்வேறு விருதுகளைப் பெற்ற டேவிட் லிஞ்சின் திரைப்படச் சேவையைப் பாராட்டி 2006இல் நடைபெற்ற வெனிஸ் திரைப்பட விழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. 2019இல் ‘கௌரவ அகாதமி விருது’ வழங்கப்பட்டது.
  • 2024, ஆகஸ்ட்டில் தனக்குச் சுவாசத்தைப் பாதிக்கும் எம்பிசிமா எனப்படும் நோய் ஆட்பட்டிருப்பதாக லிஞ்ச் அறிவித்தார். நீண்டகாலமாக புகைபிடித்தலின் காரணமாக ஏற்பட்ட துர்வினை. அந்த நிலையிலும், திரைப்பணியிலிருந்து விடுபட நினையாமல், தொடர்ந்து இயங்குவதற்கான செயல்திட்டங்களைக் கொண்டிருந்தார். தனது எழுபத்தி ஒன்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக காலமாகிவிட்டார். ஜனவரி 20 அவரது பிறந்த நாள்.
  • ‘கையால் வனையப்பட்ட கலைப்பொருளைப் போன்று உணரச்செய்த படங்களை இயக்கிய ஒரு தனித்த, தொலைநோக்கிலான கனவுகொண்டிருந்த டேவிட் லிஞ்ச் மறைந்துவிட்டார். அசல் மற்றும் தனித்துவமான மனிதரை உலகம் இழந்திருக்கிறது. அவரது படங்கள் காலத்தின் சோதனையாக நிலைபெறுவன. அவை எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும்’ என அமெரிக்க சினிமாவின் சிறந்த திரை இயக்குநர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனது அஞ்சலிக் குறிப்பில் லிஞ்சை மதிப்பிடுகிறார். இதுவே அவருக்கான சிறந்த மரியாதை எனலாம்.
  • நன்றி: இந்து தமிழ் திசை (19 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories