ட்ரம்ப்பின் வர்த்தக வரி யுத்தம்
- அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற உடனேயே, சில நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நோக்குடைய சீர்திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் அமெரிக்காவை மீண்டும் சிறந்த அமெரிக்காவாக (Make America Great Again: MAGA) மாற்றுவதே அவரது நோக்கம் என்பதை அவை தெளிவாகக் குறிப்பிட்டன.
- உலகமயமாக்கல் என்ற யோசனையை ட்ரம்ப் விரும்பியதில்லை. அமெரிக்கா முதன்மையான நாடாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். 1980-களில் இருந்து சீனாவில் நிறுவப்பட்ட அமெரிக்க நிறுவனங்களை திரும்பப் பெறுவது மற்றொரு நோக்கமாகும். குறிப்பாக, வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.
- அந்த நிறுவனங்கள், அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதற்காக பெருநிறுவன (கார்ப்பரேட்) வரி விகிதத்தை 25% - லிருந்து 15% - ஆகக் குறைத்துள்ளார். உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகள் இந்தியா உட்பட வளரும் ஏழை நாடுகளுக்கு பெரும் நன்மைகளைக் கொண்டு வந்துள்ளன. வளரும் நாடுகளும் பொருளாதார சீர்திருத்தங்களை விரைவாக ஏற்றுக்கொண்டன.
- முதலாளித்துவ அணுகுமுறை வழியாக தமது சொந்த நுகர்வுக்காக மட்டுமல்லாமல், முழு உலகுக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்கின்றன. அவற்றை ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை ஈட்டுகின்றன. கடந்த 1962-லேயே கம்யூனிச கொள்கை கொண்ட சீனாவின் துணைப் பிரதமர் டெங் சியாவோ பிங், முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக, "பூனை கருப்பாக இருந்தாலும் சரி, மஞ்சள் நிறமாக இருந்தாலும் சரி, அது எலிகளைப் பிடிக்கும் வரை எல்லா வர்ணமுமே சரி” என்ற சீனப் பழமொழியை மேற்கோள் காட்டினார்.
- நீண்ட காலமாக சோசலிச கருத்தில் ஒட்டிக்கொண்டிருந்த இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்கள், பிரதமர் நரசிம்மராவ் தலைமையில்தான் தொடங்கின. 1990-களின் பிற்பகுதியில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தது, எப்போதும் ஆண்டுக்கு 2% ஆக இருந்த வளர்ச்சி விகிதம் இப்போது சராசரியாக 6% முதல் 7% வரை உள்ளது. இந்த சூழ்நிலையில், ட்ரம்பின் கொள்கைகள், உலகமயமாக்கலால் பயனடைந்த உலக நாடுகளுக்கு ஏமாற்றமாகவும், பின்னடைவாகவும் அமைந்துள்ளன.
வர்த்தக பற்றாக்குறை:
- 2024-ம் ஆண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, உலகின் பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. இதை இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றார் ட்ரம்ப். மேலும் உலக நாடுகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். அதேநேரம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வர்த்தக கூட்டாளிகளுக்கு சலுகைகளை அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
- கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட மந்த நிலைக்குப் பிறகு அமெரிக்காவின் மொத்த வர்த்தக பற்றாக்குறை 2022-ல் 70.8 பில்லியன் டாலராக இருந்தது. இது 2024-ல் 98.4 பில்லியன் டாலராக அதிகரித்தது. அதிலும் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்காவுக்கு இறக்குமதியைவிட அதிக ஏற்றுமதி செய்து லாபத்தைப் பெற்றன. ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை சிறிய லாபத்தைப் பெற்றன.
வர்த்தக வரி வகைகள்:
- அமெரிக்காவின் வர்த்தக வரிப் போர் நெருங்கிய அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவுடன் தொடங்கப்பட்டது. வரியின் அளவீடு பற்றி விவாதிப்பதற்கு முன், வரியின் வகைகள் மற்றும் நோக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். வரி விகிதம் பொருளின் விலையை அடிப்படையாகக் கொண்டது. எனவே இது அட்வலோரம் (லத்தீன் மொழி சொல்) வரி என்று அழைக்கப்படுகிறது. இதன் நோக்கம் வருவாயை அதிகரிப்பது.
- உள்ளூர் தொழில் துறையைப் பாதுகாப்பது நோக்கமாக இருந்தால், விகிதம் 100% அல்லது அதற்கு மேலும் இருக்கும். இது உள்ளூர் தொழில் துறையை ஆதரிப்பதற்கான பாதுகாப்பு வரி என்று அழைக்கப்படும். மற்றொரு வகை ‘குறிப்பிட்ட வரி’ என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு யூனிட்டுக்கு ஒரு நிலையான கட்டணமாக விதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு மெக்சிகன் பட்டர் ஃபுரூட்டுக்கும் (avocado) அமெரிக்கா 1 டாலர் வரி விதிக்க முடியும்.
- இதுபோன்ற மற்றொரு வகை வரி, 'கட்டண-விகித ஒதுக்கீடுகள்' (tariff-rate quotas) ஆகும். அவை ஒரு குறிப்பிட்ட இறக்குமதி வரம்பை அடைவதன் மூலம் தூண்டப்படும் வரிகள். உதாரணமாக, இந்த வகை ஒதுக்கீடு 2018-ம் ஆண்டில், ட்ரம்பின் முதல் நிர்வாகத்தால் சலவை இயந்திரங்களுக்கு (washing machines) விதிக்கப்பட்டது. அப்போது முதல் இறக்குமதி செய்யப்பட்ட 12 லட்சம் அலகுகள் 20% வரியை எதிர்கொண்டன. அதே நேரம் அந்த எண்ணிக்கையைவிட அதிகமான அலகுகளுக்கு 50% வரி விதிக்கப்பட்டன.
வர்த்தக வரிப் போரின் தற்போதைய நிலை :
- கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரியும், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு தற்போதைய வரி விகிதத்தைவிட 10% கூடுதல் வரியும் விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். அவை நடைமுறைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு ஃபெண்டானில் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலை நிறுத்த உடனடியாக 10,000 தேசிய காவல் படை வீரர்கள் வடக்கு எல்லையில் நிறுத்தப்படுவார்கள் என் அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.
- பேச்சுவார்த்தை தொடர்ந்ததால், மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கான வரிவிதிப்பை 30 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்தி வைத்தார். ஒரு வாரம் கழித்து பிப்ரவரி 11-ல், எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு 25% கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்கா, இந்தியாவின் நம்பர் 1, வர்த்தக கூட்டாளி, ஆனால் அமெரிக்க வர்த்தக கூட்டாளிகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. அதாவது, அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியைவிட அதிகமாக உள்ளது.
- இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் இந்தியாவின் நிகர வருவாய் 2019-20 (கரோனா முன்பு) நிதியாண்டில் 17.3 பில்லியன் டாலராக இருந்தது. கரோனாவுக்குப் பிந்தைய 2021-22-ல் 32.8 பில்லியன் டாலராக உயர்ந்தது, இது 2023-24-ம் ஆண்டில் 35.3 பில்லியன் டாலராக அதிகரித்தது. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே ட்ரம்பின் முதன்மையான நோக்கமாகும்.
ட்ரம்ப் - மோடி சந்திப்பு:
- இந்தப் பின்னணியில், பிப்ரவரி 13-ம் தேதி, அமெரிக்கா சென்றிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ட்ரம்பை வாஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ட்ரம்ப் கூறும்போது, “பிரதமர் மோடி சிறந்த தலைவர், நண்பர். அவர் என்னைவிட கறாராக பேசக்கூடியவர். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. முதல் முறை அதிபராக இருந்தபோதே இதைக் குறைக்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் அது நடக்கவில்லை. இனி, இந்தியா எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவுக்கு நாங்களும் வரி விதிக்க முடிவு செய்துள்ளோம். இது இரு நாடுகளுக்கும் நியாயமானதாக இருக்கும்.
- இதுமட்டுமல்லாமல், இந்தியா அமெரிக்காவுக்கு அதிக பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால் அமெரிக்காவில் இருந்து குறைவான பொருட்களையே இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த வர்த்தக பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம்” என்றார். பிரதமர் மோடி கூறும்போது, “இந்தியா பெரிய ஜனநாயக நாடு. அமெரிக்கா மிகவும் பழமையான ஜனநாயக நாடு.
- இரு நாடுகளும் ஒன்றிணைந்தால், 1 + 1 = 2 அல்ல 11. இந்த சக்தி மனிதகுலத்தின் நன்மைக்காக பணியாற்றும். இரு நாடுகளும் இணைந்து ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும். செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர் உள்ளிட்ட பல துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக (ரூ.43.43 லட்சம் கோடி) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.
- இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட உள்ள ஒப்பந்தத்தில், அதிநவீன எப்-35 ரக போர் விமானங்கள், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்த அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. இதன்மூலம் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் அமெரிக்கா முதலிடம் பிடிக்கும். மொத்தத்தில் இந்தியாவுடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்க ட்ரம்ப் காய் நகர்த்தி வருகிறார்.
- வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதித்தால் அமெரிக்காவில் பண வீக்கம் அதிகரிக்கும் என்பது ட்ரம்புக்கு தெரியும். எனினும், கனடா, மெக்சிகோ, சீனா, இந்தியா உட்பட வர்த்தக பற்றாக்குறை அதிகமாக உள்ள நாடுகளுக்கு தங்கள் பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்ய விரும்புகிறார். இதன்மூலம் பற்றாக்குறையை குறைப்பதற்கான பேரமாக, வர்த்தக வரி யுத்தத்தை ட்ரம்ப் தொடங்கி இருக்கிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 02 – 2025)