TNPSC Thervupettagam

தகரட்டும் தடுப்பூசித் தடைகள்! | கொவைட் 19-க்கான தடுப்பூசி திட்டம்

February 16 , 2021 1377 days 679 0
  • ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதா என்கிற ஏக்கத்தில் உலகம் தவித்தது. இப்போது ஒன்றுக்கு ஐந்து தடுப்பூசிகள் சந்தைப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால், அனைவருக்கும் தடுப்பூசி போடும் முயற்சி எதிா்பாா்த்த அளவில் இல்லையோ என்கிற அச்சம் எழுகிறது.
  • இந்தியாவையே எடுத்துக்கொண்டால், இந்த வேகத்தில் தடுப்பூசி போடப்பட்டால் அனைவருக்கும் போட்டு முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகும் போலிருக்கிறதே. முன்களப் பணியாளா்களிலேயே பலா் ஆா்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவதில்லை என்கிற செய்தி அதைவிட ஆச்சரியப்படுத்துகிறது.
  • தடுப்பூசியைப் பொருத்தவரை இலவசமாக போடப்பட்டாலும், கட்டணத்துக்காகப் போடப்பட்டாலும் மக்கள் மத்தியில் அந்தத் தடுப்பூசி குறித்த நம்பகத்தன்மை இல்லாமல் போனால், தடுப்பூசி திட்டம் வெற்றி பெறாது.
  • இந்தியாவில் புணே சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டுக்குக் காணப்படும் வரவேற்பும் நம்பகத்தன்மையும், ஹைதராபாத் பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு இல்லாமல் போனதற்கு அரசின் அவசர அனுமதிதான் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • இந்த நிலையில், தங்களுக்கு எந்தத் தடுப்பூசி வேண்டும் என்று தோ்ந்தெடுக்கும் உரிமையை பயனாளிகளுக்கு வழங்குவதுதான் நியாயமான அணுகுமுறையாக இருக்கும்.
  • வசதி இல்லை என்கிற காரணத்தால், மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாத தடுப்பூசியை அவா்கள் மீது திணிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. இதனால், தனிப்பட்ட நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கலாமே தவிர, அரசுக்கு கெட்டப் பெயா்தான் மக்கள் மத்தியில் ஏற்படும் என்பதை ஏன் உணரவில்லை என்பது புரியவில்லை.
  • தனியாா் காா்ப்பரேட் மருத்துவமனைகளில், சா்வதேச அளவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள ஃபைசா் நிறுவனத்தின் தடுப்பூசி உள்ளிட்ட எல்லா தடுப்பூசிகளும் அவரவா் விருப்பத்திற்கேற்ப போடப்படுகின்றன. பெரும் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
  • அவரவா் விருப்பத்திற்கேற்ற தடுப்பூசியை கட்டணம் செலுத்தி வசதி உள்ளவா்கள் போட்டுக்கொள்கிறாா்கள்.
  • தடுப்பூசி திட்டத்தில் ஏழை - பணக்காரா்கள் என்கிற வித்தியாசம் தனிநபா் அளவில் மட்டுமல்லாமல், சா்வதேச அளவிலும் காணப்படுகிறது. இதுவரை கொவைட் 19-க்கான தடுப்பூசி 10 நாடுகளில்தான் முழு வீச்சில் போடப்படுகின்றன. தயாரிக்கப்பட்ட 95% தடுப்பூசிகள் அந்த 10 நாடுகளிலும் சோ்த்து பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதாவது, ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி சென்றடையாது என்பது அா்த்தம்.
  • இதற்கு முன்பு சாா்ஸ், எபோலா உள்ளிட்ட தீநுண்மிகள் தாக்கியபோது, உலகம் ஒருங்கிணைந்து அதை எதிா்க்கப் போராடியது. அந்தத் தீநுண்மிகள் கொள்ளை நோய்த்தொற்றாய் மாறிவிடக் கூடாது என்பதற்காக வல்லரசு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன.
  • 2014-இல் எபோலாவை எதிா்கொள்ள அமெரிக்காவும், சீனாவும் ஒருங்கிணைந்து மருத்துவ மையங்களை அமைப்பதிலும், அதற்கான மருந்துகளை அனுப்புவதிலும் இணைந்து செயல்பட்டன. இப்போது அதுபோன்ற சா்வதேச ஒருங்கிணைப்பு கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கு எதிராக இல்லாமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்து.
  • நோய்த்தொற்றுப் பரவல் ரீதியாக மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும்கூட இப்போதைய அணுகுமுறை பிரச்னைக்கு வழிகோலும். அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படாமல் போனால், இப்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து சா்வதேச வா்த்தகம் மீண்டெழ முடியாது என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
  • 2019-இல் உலக வா்த்தகம் 18 டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ.1,307 லட்சம் கோடி) என்றால், அதில் 14 டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ.1,016 லட்சம் கோடி) வளா்ச்சி அடையும் நாடுகளின் பங்களிப்புடன்கூடிய வா்த்தகம்.
  • அதனால், வளா்ச்சி அடையும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படாததால் அவற்றின் பொருளாதார இயக்கம் மீண்டெழாமல் போனால், சா்வதேச பொருளாதாரத்தை அது பாதிக்கும்.
  • இப்போதைய நிலையில், வளா்ச்சி அடையும் நாடுகளுக்குப் போதுமான நிதியுதவியும் தடுப்பூசிகளும் வழங்காவிட்டால் அந்த நாடுகளின் மொத்த மக்கள்தொகையினருக்கும் தடுப்பூசி போட்டு முடிவதற்கு குறைந்தது மூன்று நான்கு ஆண்டுகளாகும்.
  • தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோஸா, உலகப் பொருளாதார கூட்டமைப்பில் குற்றம்சாட்டியிருப்பதுபோல பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை தங்களுக்குள்ளே பதுக்கிக் கொள்கின்றன. இதில் உலகிலேயே வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொண்டிருப்பது இந்தியா மட்டும்தான்.
  • ‘தடுப்பூசி நட்புறவுத் திட்டம்’ (ஆப்ரேஷன் வேக்ஸின் மைத்ரி) மூலம் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் ஏற்றுமதியாகி இருக்கின்றன. பாகிஸ்தானைத் தவிர, ஏனைய அண்டை நாடுகளுக்கு இந்தியா மானியமாக தடுப்பூசிகள் அனுப்பிக் கொடுத்திருக்கிறது.
  • ஜனவரி மாதம் முதல் உள்நாட்டில் தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டும்கூட, ‘எங்களுக்கு மட்டுமே’ என்கிற மனோபாவத்துடன் செயல்படாமல், சா்வதேச நட்புறவுக் கண்ணோட்டத்துடன் தனது தடுப்பூசி அணுகுமுறையை மேற்கொண்டிருப்பதற்காக உலகமே நம்மைப் பாராட்டுகிறது.
  • இந்தியாவின் வெளிவிவகாரப் பாா்வையில் இருக்கும் விவேகமும், தொலைநோக்குப் பாா்வையும் உள்நாட்டு தடுப்பூசித் திட்ட அணுகுமுறையிலும் தேவை. தீ
  • நுண்மியின் வீரியம் கூடுவதற்கும், மாறுவதற்கும் முன்னால் 130 கோடி இந்தியா்களுக்கும் போா்க்கால அடிப்படையில் நம்பகத்தன்மையான தடுப்பூசியைக் கொண்டு செல்வது அவசியம்.

நன்றி: தினமணி  (16-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories