TNPSC Thervupettagam

தகவல் அறியும் சட்டம் மீது விழுந்திருக்கும் பலத்த அடி!

July 24 , 2019 1985 days 1174 0
  • இந்திய அரசு இயந்திரத்தின் ஊழல்களையும் மெத்தனத்தையும் பாரபட்சத்தையும் அம்பலத்துக்குக் கொண்டுவர சாமானியர்களுக்குப் பெரிய ஆயுதமாகப் பயன்பட்டுவந்த தகவல் உரிமைச் சட்டத்தின் மீது பலத்த அடி விழுந்திருக்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் 13, 16 மற்றும் 27-வது பிரிவுகளுக்குத் திருத்தங்கள் கொண்டுவந்து மக்களவையில் அதை நிறைவேற்றியும்விட்டது பாஜக அரசு.
  • பேச்சுரிமை, எழுத்துரிமை போல மத்திய, மாநில அரசுகளிடமிருந்து தகவல் பெறும் உரிமையும் இருக்கிறது என்ற நோக்கில் 2005-ல் கொண்டுவரப்பட்ட சட்டம் இது. கிராம நியாய விலைக் கடைகளுக்கு அரிசி எவ்வளவு வருகிறது, எந்தெந்த தேதிகளில் விநியோகமாகிறது என்பதில் தொடங்கி ரிசர்வ் வங்கியிடம் உள்ள ரொக்கக் கையிருப்பு எவ்வளவு, பணமதிப்பு நீக்கம் தொடர்பாக வங்கிகளில் குறிப்பிட்ட காலத்தில் ஒப்படைக்கப்பட்ட உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது வரை ஒரு சாமானியன் தகவல் பெற இச்சட்டம் உதவியது.
  • பொதுமக்கள் தாங்கள் விரும்பும் தகவல்களைப் பெற உரிய முறையில் விண்ணப்பித்து மிகக் குறைந்த கட்டணத்தைச் செலுத்திவிட்டால் போதும், 30 நாட்களுக்குள் அந்தத் தகவல் அவருக்குத் தெரிவிக்கப்படும். அந்தத் தகவலில் அவருக்குத் திருப்தி  இல்லையென்றாலோ, போதவில்லை என்றாலோ மேலும் கேட்கலாம் அல்லது அந்த அமைப்புக்கும் மேல் உள்ளவர்களுக்கு மேல்முறையீடு செய்யலாம். அரசு ஆவணங்களுடைய நகல்களைக் கேட்கலாம். அரசின் கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றை அனுமதி பெற்றுப் பார்வையிடலாம். அரசு கட்டுமானமாகவோ சாலைப் பணியாகவோ இருந்தால், அதன் ஒரு பகுதியைக்கூட ஆய்வுக்கூட சோதனைகளுக்காக ‘மாதிரி’யாக எடுத்துக் கொள்ளலாம். மத்திய கண்காணிப்பு ஆணையர், தேர்தல் ஆணையர்கள், தகவல் தெரிவிக்க வேண்டிய ஆணையர்கள் பதவிகள் ஏன் காலியாக இருக்கின்றன; நாடெங்கிலும் எத்தனை துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை என்றெல்லாம் கேட்டுகூட அந்தந்தத் துறைகளை முடுக்கிவிட முடிகிறது.
மன்மோகன் அரசின் பெருமிதம்
  • மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த தன்னுடைய பெருமிதங்களில் ஒன்றாகப் பறைசாற்றிக்கொண்ட இச்சட்டமே பின்னர் அந்த அரசின் பல்வேறு தவறுகள், ஊழல்கள் வெளியே வரவும் காரணமாக அமைந்தது. இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியாக ஒருபுறம் இது பார்க்கப்பட்டாலும், இன்னொருபுறம் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தாங்கள் தகவல் கேட்கும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்ற நிலையை உருவாக்கிய இச்சட்டத்தைச் சங்கடமாகவே பார்த்துவந்தனர்.
  • தகவல் அறியும் சட்டம் இயற்றப்பட்டது முதல் சுமார் 70 லட்சம் பேர் நேரடியாக அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதிகார வர்க்கத்தை எப்படி இந்தச் சட்டம் அச்சுறுத்திவந்தது என்பதை இச்சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல்களை வெளிக்கொணர்ந்த தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்களில் 80-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்துள்ளனர் என்ற தகவலின் வாயிலாகவே புரிந்துகொள்ளலாம். ஓரளவுக்கு அரசாங்கத்தை நேர்மையாகவும் அச்சத்துடனும் செயல்பட வைத்திருக்க உதவும் சட்டம் இது. தகவல் உரிமைச் சட்டத்துக்கு விதிவிலக்கான துறைகளும் பிரிவுகளும் இருந்தன. நாட்டின் பாதுகாப்பு தொடர்பானவை, வெளியுறவுக் கொள்கைகள், அறிவியல்-தொழில்நுட்ப ஆராய்ச்சிகள், அணு மின்சக்தித் திட்டங்கள், மிகவும் ரகசியம் என்று அரசு கருதும் பிற தகவல்கள் போன்றவற்றைத் தருவதற்கு விலக்கு தரப்பட்டிருந்தது. ‘மிகவும் ரகசியம்’ என்ற விலக்கைப் பயன்படுத்தி, நிறைய விஷயங்களில் ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொள்ள முற்பட்டதும் நடந்தது. நாடு மேலும் ஜனநாயகமாக வேண்டும் என்றால், இச்சட்டத்தை மேலும் வலுவாக்க வேண்டும் என்று ஜனநாயகச் செயல்பாட்டாளர்கள் கோரிவந்தனர். ஆனால், இந்திய அரசு அதை மறைமுகமாக முடக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.
திருத்தமும் அபாயமும்
  • அரசு கொண்டுவந்திருக்கும் திருத்தமானது, மத்தியில் முதன்மைத் தகவல் ஆணையர், மாநிலங்களில் தகவல் ஆணையர்களின் பணிக்காலம், ஊதியம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது; நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி, முதன்மைத் தகவல் ஆணையரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் அல்லது 65 வயது வரை இவற்றில் எது முந்தையதோ அதுவரையில் தொடரும். மேலும், முதன்மைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களுக்கு முறையே தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியம் வழங்கப்பட வேண்டும். “இந்தத் திருத்தம் தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படைகளை மாற்றவில்லை. ஊதியம், பணிக்காலம் தொடர்பானது மட்டுமே. இதில் எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று விவாதத்தில் ஆளுங்கட்சியினர் பேசினர். ஆனால், மறைமுகமாக அது அச்சட்டத்தின் அடிப்படையிலேயே கைவைக்கும் விளையாட்டுதான்.
  • முதன்மைத் தகவல் ஆணையர்களாகவும் தகவல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்படப்போகிறவரின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றை மத்திய அரசே நிர்ணயிக்க இந்தச் சட்டத் திருத்தம் வழிவகுப்பதால், ‘இனி தாங்கள் பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் எப்படிச் செயல்பட வேண்டும்; ஆளும் ஆட்சியாளர்களுக்குக் கோபம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டால் என்ன விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்?’ என்பதெல்லாம் நியமிக்கப்படுபவர்களுக்குக் குறிப்புணர்த்தப்பட்டுவிட்டது. பதவிக்காலம் மட்டுமல்லாமல் ஊதியமும் மத்திய அரசின் முடிவுப்படியே என்பதால், மத்திய முதன்மைத் தகவல் ஆணையர் மட்டுமல்ல; மாநில தகவல் ஆணையர்களும் தங்களுக்கான ரொட்டியைத் தரும் கை எது என்று புரிந்து நடப்பார்கள்.
கூட்டாட்சி மீதான தாக்குதல்
  • இன்னொரு முக்கியமான விஷயம் - மாநிலத் தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், அவர்களின் ஊதிய நிர்ணய அதிகாரத்தையும் மத்திய அரசு தன் வசம் எடுத்துக்கொண்டிருப்பது, மாநில அரசுகளின் அதிகாரத்தில் கைவைக்கும் அப்பட்டமான முயற்சி. மாநில அரசை இந்த விஷயத்தில் முடமாக்குவதுடன் மாநில அரசுடனான உறவைப் பொருத்து இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் மத்திய அரசு மறைமுக விளையாட்டில் ஈடுபட முடியும்.
  • கூட்டரசுக் கொள்கையை இந்த அரசு திரும்பத் திரும்பப் பேசினாலும், அது வெற்று முழக்கம்; டெல்லியில் முழு அதிகாரக் குவிப்பையே இந்த அரசாங்கம் முழுமையாக விரும்புகிறது; அதை நோக்கியே எல்லா நடவடிக்கைகளும் அமைகின்றன என்பதையே இது திரும்பச் சொல்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (24-07-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories