- ஒரு தலைமுறைக் காலமாக, கணித்தமிழ்த் துறையில் பங்கேற்பாளராகவும் பார்வையாளராகவும் பயனாளியாகவும் ஒருங்கே இருந்துவரும் என்னைப் போன்றவர்களுக்கு, சென்னையில் பிப்ரவரி 8-10, 2024 இல் தமிழ் இணையக்கல்விக்கழகம் நடத்தும், ‘பன்னாட்டுக் கணித்தமிழ் 2024 மாநாடு’ என்பது வெறுமனே தொழில்நுட்ப நிகழ்வு அல்ல; அது கணித்தமிழ் என்னும் ஒரு மொழிப் பேரியக்கத்தின் தொடர்ச்சி. தமிழன்னையை அவள் சீரிளமைத் திறன் வியந்து வாழ்த்த மேலும் ஒரு வாய்ப்பு.
- 30 ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் கணிப்பொறியே அதிசயமாக இருந்தது. அதன் திரையில் தமிழ் எழுத்துகள் மின்னியபோது அது பேரதிசயமாகத் தோன்றியது. இணையமும் மின்னஞ்சலும் பிறந்தபோது தமிழ் சீக்கிரத்திலேயே அதற்குள்ளும் நுழைந்துவிட்டது. 80களிலேயே கணிப்பொறியில் தமிழ் நுழையத் தொடங்கியிருந்தாலும், 90களில் தனியாள் கணினிகளின் (personal computers) வரவுக்குப் பிறகே அது பரவலானது.
- ஆனால், அந்தக் கணித்தமிழ் சாராம்சத்தில் பல்வேறு ‘தனித்தமிழ்’களால் பிரிந்தும் இருந்தது. ஊடக நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், பதிப்பு நிறுவனங்கள், டிடிபி நிறுவனங்கள் போன்றவற்றில் அப்போது பலவிதமான எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன.
- எழுத்துருக்களை உருவாக்கிய நிறுவனங்கள் தங்கள் சொந்த நலனுக்காகத் தனித்தனியான எழுத்துருக் குறியீட்டு முறைகளையும் (character encoding systems) விசைப்பலகை வடிவமைப்புகளையும் (keyboard layouts) உருவாக்கியிருந்தன. ஒரு கணிப்பொறியில் உள்ளிட்ட ஆவணத்தை மற்றொரு கணிப்பொறியில் பார்க்க வேண்டுமென்றால், இரு கணிப்பொறிகளிலும் ஒரே தமிழ் மென்பொருள் இருந்தால்தான் முடியும்; ஒருவர் நியூ ஜெர்சியிலிருந்து அனுப்பிய மின்னஞ்சலை மதுரையில் திறந்து படிக்க வேண்டும் என்றால், இருவர் கணினியிலும் ஒரே எழுத்துரு இருந்தாக வேண்டும் என்கிற சூழல் இருந்தது.
- இப்படிப்பட்ட நிலையில்தான், கணித்தமிழின் கதை தொடங்கியது. இந்தத் தனித்தனி முறைகளுக்கு மாறாக எல்லாக் கணிப்பொறிகளிலும் ஒரே மாதிரியாகத் தமிழை உள்ளிடவும் பார்க்கவும் ஒரே மாதிரியான உள்ளீட்டு முறையை உருவாக்குவது என்பதுதான் தொடக்க காலச் சவால். இந்தத் தரநிர்ணயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகச் சில முயற்சிகள் எடுக்கப்பட்டன.
- 1995இல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி முயற்சியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிலும் இது மையக் கருப்பொருளாக இருந்தது. இக்காலகட்டத்தில் நான் பணியாற்றிய ‘இந்தியா டுடே’ இதழில் முதல் தலைமுறை கணித்தமிழ் சிக்கல்கள் குறித்து 1996இல் ஒரு செய்திக்கட்டுரையை எழுதியிருந்தேன். அக்கட்டுரையின் தலைப்பு: ‘தகவல் நெடுஞ்சாலையில் தமிழ் மாட்டுவண்டி’.
கணித்தமிழின் இளமைக் காலம்
- 1997இல் சிங்கப்பூரில் பேராசிரியர் நா.கோவிந்தசாமி நடத்திய ‘தமிழ் நெட் 97’ இவ்விவகாரத்தைப் பன்னாட்டுத் தமிழர்களின் கூட்டு முயற்சியாக மாற்றியது. பிறகு 1999இல், தமிழ்நாடு அரசு, அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதியின் நேரடி வழிகாட்டலில், ‘தமிழ் இணையம் 99’ பன்னாட்டு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, இப்பிரச்சினையில் முதல் தீர்வு எட்டப்பட்டது.
- ‘.டாம்’, ‘.டாப்’ என்கிற இரு எழுத்துருக் குறியீட்டு தரநிர்ணயங்களையும், ‘தமிழ்99’ என்கிற விசைப்பலகை தரநிர்ணயத்தையும் தமிழ்நாடு அரசு உருவாக்கியது. அந்தமாநாட்டின் முக்கிய விளைவுகளில் ஒன்று, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (இப்போது தமிழ் இணையக் கல்விக்கழகம்) அமைக்கப்பட்டதாகும். இதே காலத்தில் உருவான யுனிகோடு அனைத்துலகக் குறியீட்டு முறையிலும் தமிழுக்கான உரிய இடத்தை உறுதிசெய்வதற்கும் அரசு தலையிட்டது.
வளர்ந்து செழித்த மின்தமிழ்
- இந்த முயற்சிகளின் விளைவாக 2000க்குப் பிறகு தொடக்கத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. முதலாவதாக, பல தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியில் கணிப்பொறி சார்ந்த மொழி ஆய்வுகள் பல நடைபெற்றன. கலைச்சொல்லாக்க அகராதிகள் வெளியிடப்பட்டன.
- அதற்கு வெளியே, மைக்ரோசாப்ட், கூகிள் போன்ற மென்பொருள் நிறுவனங்களும் நோக்கியா போன்ற கைபேசிக் கருவி நிறுவனங்களும் தங்கள் மென்பொருள்களை இந்திய மொழிகளுக்குக் கொண்டுவர முயன்றபோது, இந்திக்கு அடுத்ததாகத் தமிழில்தான் அவற்றை உள்ளூர்மயமாக்கின.
- பொதுமூல மென்பொருள்களும் ‘விக்கிப்பீடியா’ போன்ற பொதுநிலைத் தளங்களும் அதிகரித்தன. உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடத்திவந்த தமிழ் இணைய மாநாடுகளும் தமிழ்நாட்டில் கணித்தமிழ்ச் சங்கத்தின் முயற்சிகளும் தமிழுக்கு வலுசேர்த்தன.
- இந்தக் காலத்தில் மென்பொருள்களுக்கான மொழிபெயர்ப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருந்த நான், இந்நிறுவனங்களுக்காகச் சேவை அளித்ததன் மூலமாகக் கணித்தமிழ் முயற்சிகளின் தாக்கத்தை நேரடியாக உணர்ந்தேன். அதன் தொடர்ச்சியாக ‘காலச்சுவடு’ இதழுக்கு 2006இல் இந்தப் புதிய போக்குகள் குறித்து ஒரு கட்டுரை எழுதியபோது, அதற்கு நான் வைத்த தலைப்பு: ‘தகவல் நெடுஞ்சாலையில் தமிழ் டவுன் பஸ்’.
இணையத்தில் தமிழ் பெருவளர்ச்சி
- 2010 வாக்கில் பொதுவாகவே இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒன்று, சமூக ஊடகத்தின் வருகை; இரண்டாவது, திறன்பேசி. கணித் தொழில்நுட்பம் மேஜையிலிருந்து உள்ளங்கைக்கு மாறிவிட்டது. குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து சாதாரண மனிதர்களிடம் கருவிகள் சென்றன.
- அதன் பயன்பாடுகள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் மாறிவிட்டன. லட்சக்கணக்கானவர்கள் ஃபேஸ்புக்கிலும் வலைப்பதிவுகளிலும் தமிழிலேயே தகவல்களை உள்ளிடத் தொடங்கினர். யூடியூபிலும் வேறு இணையதளங்களிலும் தமிழில் பயனடைந்தனர்.
- 2016இல் கூகிள் நிறுவனமும் கேபிஎம்ஜி நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில், இந்தியாவில், இணையத்தில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை இந்திய மொழிகளின் பயன்பாடு விஞ்சிவிட்டது என்கிற புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. இணையத்தில் இந்திய மொழிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டியது. மொழிவாரியாகப் பார்த்தால், இணையத்தில் இந்திய மொழிகளுக்கான பயனர் ஏற்பளவு (adoption level) தொடர்பான புள்ளிவிவரத்தில், 42 சதவீதத்துடன் தமிழ்தான் முதலிடத்தில் இருந்தது.
- இதற்கு நாம் அதற்கு முன்பு 20 ஆண்டு காலமாகச் செயல்பட்ட கணித்தமிழ்ப் பற்றாளர்களுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் நன்றி கூற வேண்டும். இக்காலத்தில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு பேசியபோது, அந்த உரைக்குத் தலைப்பாக நான் வைத்தது: ‘தகவல் நெடுஞ்சாலையில் தமிழ் மெட்ரோ’.
- செயற்கை நுண்ணறிவு யுகத்துக்குத் தயாராதல்: காலம் மீண்டும் ஒரு திருப்பத்தை நோக்கி நகர்ந்தது. 2016க்குப் பிந்தைய ஆண்டுகளில் தொழில்நுட்ப உலகில் மற்றுமொரு பெரும்புரட்சி தொடங்கியது: செயற்கை நுண்ணறிவுப் புரட்சி. செயற்கை நுண்ணறிவுப் புயல் வீசத் தொடங்கிவிட்டதை யாரும் மறுக்க முடியாது. அந்தப் புயலின் மையமாக இருப்பது மொழித் தொழில்நுட்பம்தான்.
- இந்நிலையில், மொழிசார் தரவுகளும் புதிய உள்ளடக்கத்தை உருவாக்குவதும் ஓப்பன்ஏஐ, மைக்ரோசாப்ட், கூகிள், மெட்டா போன்ற நிறுவனங்களின் கைகளுக்குள் சென்றுகொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தத் திடீர் மாற்றம் மொழி இனச் சமூகங்களுக்கு வாய்ப்புகளையும் சவால்களையும் ஒருசேரக் கொண்டுவருகின்றன. தமிழை எடுத்துக்கொண்டால், இனி சாட்ஜிபிடி எழுதுவதுதான் தமிழ், கூகிள் மொழிபெயர்ப்பதுதான் மொழிபெயர்ப்பு, அல்லது நாளை மெட்டா பேசுவதுதான் உச்சரிப்பு என்று ஆகிவிடக்கூடிய நிலைக்கு வந்திருக்கிறோம்.
- கணித்தமிழின் முதல் இரண்டு காலகட்டங்களில் நாம் எதிர்கொண்ட சவாலைவிட இது பெரியது. அது மட்டுமல்ல, உலகம் இதுவரை எதிர்கொண்ட தொழில்நுட்பச் சவால்களிலேயே மிகப் பெரியதாகச் செயற்கை நுண்ணறிவு பார்க்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் நமது மொழியின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். ஆனால், அந்த மொழியின் மீதான சொந்தமும் உறவும் நமக்கு எப்படி இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
- ஆனால், எதிர்மறையாக மட்டுமே இவற்றைப் பார்க்கத் தேவையில்லை. தமிழர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஏற்கெனவே முன்னிலையில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தொழில்முனைவுப் புரட்சி தொடங்கியுள்ள இந்நேரத்தில், தமிழ்நாடு அரசு உதவிசெய்தால் மிகப்பெரிய தரவுக் களஞ்சியங்களோடும் கணிப்பொறித் திறன்களோடும் இந்த உலகுக்குத் தேவையான செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை உருவாக்கும் வல்லமை நமக்கும் இருக்கிறது.
அதைத் தமிழுக்குப் பயன்படுத்தவா முடியாது
- தமிழ்நாடு தனக்கெனப் பொதுவாகவும் தமிழுக்கெனச் சிறப்பாகவும் செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளை உருவாக்கிக்கொள்வதற்கான காலமும் வந்துவிட்டது. அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.
- இந்தத் தருணத்தில்தான் செயற்கை நுண்ணறிவு உலகின் சவால்களுக்கு ஏற்ப நாம் வாய்ப்புகளையும் அபாயங்களையும் பேச வேண்டியுள்ளது. ‘Pots to Bots’ என்ற சொற்றொடரோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மாநாடு, நமது அந்தச் சவால்களை எதிர்கொள்ள நமக்கு உதவக்கூடிய அறிவாளர்களையும் திறனாளர்களையும் உலகெங்கிலிருந்தும் அழைத்திருக்கிறது.
- கணித்தமிழ் வரலாற்றில் கருணாநிதி நடத்திய 1999 மாநாடு சுமார் 20 ஆண்டு காலம் நமக்கு ஒளிவிளக்காக இருந்தது என்றால், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் இந்த மாநாடும் புதிர்மயமான வருங்காலத்துக்குள் நாம் தைரியமாக நுழைய வழிவகுக்கக்கூடும். அப்படி நடந்தால் அது கணித்தமிழின் வேகத்தை, தமிழின் வேகத்தைப் பல மடங்கு கூட்டும். எந்த அளவுக்கு? இந்தக் கட்டுரையின் தலைப்பை மீண்டும் வாசியுங்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 02 – 2024)