- தங்கத்தின் விலை பண வீக்கம் காரணமாகவும், சர்வதேச அளவிலான மாற்றங்களின் காரணமாகவும் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கடுமையாக அதிகரித்துவருகிறது. வரலாறு காணாத அளவில் உயர்ந்து இப்போது பவுனுக்கு ரூ.260 அதிகரித்து ரூ.52,360-ஐ எட்டியிருக்கிறது. இதற்கு மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதுதான் பரவலான எதிர்பார்ப்பு.
- அமெரிக்காவின் பெடரல் வங்கி தன்னுடைய வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில் இந்தியச் சந்தையில் தங்கத்துக்கான கேட்பு குறைவது ஒருவகையில் நல்லதும்கூட! இதனால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறையலாம் என்பது ஆறுதல்.
- கடந்த ஆண்டில் (2023) முந்தையஆண்டைவிட தங்கத்தின் நுகர்வு 3 % குறைந்திருக்கிறது. அக்டோபர், டிசம்பர் பண்டிகை காலத்திலும் அதற்கு முந்தைய ஆண்டைவிட 4 % குறைந்து காணப்பட்டது. திருமண நிகழ்வுகள் குறைவாக இருப்பதால், ஜனவரி, மார்ச் காலாண்டில் தங்கத்துக்கான நுகர்வு குறைவாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.
- கோடைக்காலத்தில் தங்கத்தின் மீதான கேட்பு அதிகரிக்கும். அதனால் விலை உயர்வது இயற்கை. உலகில் தங்கத்தின் இரண்டாவது பெரிய சில்லறைச் சந்தையாக இந்தியா இருக்கும் நிலையில், தங்கத்தின் விலை ஏனைய பொருள்களின் விலைவாசியையும் கட்டாயம் பாதிக்கும். ஊரகப் பகுதிகளின் வருவாய் அதிகரிப்பின் மூலம்தான் அதிகரித்த நுகர்வால் ஏற்படும் தங்கத்தின் விலை உயர்வை ஈடுகட்ட முடியும்.
- அன்றைய துருக்கியின் பகுதியான லிடியாவில் குரோசஸ் மன்னரின் காலத்தில் கி.மு. 561}இல் முதல்முதலில் தங்க நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எல்லா சொத்துகளையும்விட உலகில் அதிகமாகப் பரிமாற்றம் செய்யப்படும் பொருளாகத் தங்கம் திகழ்கிறது. அமெரிக்காவின் பங்குச் சந்தைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான வர்த்தகம் தங்கத்துக்காக நடைபெறுகிறது என்பது ஆச்சரியப்படுத்தும் உண்மை.
- அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. செலாவணிகள் (கரன்ஸி) மத்திய வங்கிகளின் தேவைக்கேற்பவும் அறிவிப்புக்கேற்பவும் அச்சடித்து அதிகரிக்க முடியும். தங்கம் அப்படியல்ல.
- தங்கத்தைத் தோண்டியெடுப்பது மிகவும் சிரமமானது. தங்கத்தின் கனிம வளம் குறைந்துவரும் நிலையில், தங்கத்தின் உற்பத்தி மேலும் கடினமாகியிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக தங்கத்துக்கான வருடாந்திரத் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி நிலவுகிறது. ஏறத்தாழ 25 % முதல் 30% வரை ஏற்கெனவே இருக்கும் தங்கத்தை உருக்குவதன் மூலம்தான் தங்கத்தின் கேட்பு ஈடுகட்டப்பட்டு வருகிறது.
- இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு உலகின் வர்த்தகச் செலாவணியாக அமெரிக்க டாலர் உயர்ந்தது. இப்போதும் கூட உலகின் வர்த்தகமும் நிதிப் பரிமாற்றமும் பெரும்பாலும் டாலரில்தான் நடைபெறுகின்றன. சோவியத் யூனியனின் வீழ்ச்சி, பனிப்போர் முற்றுக்கு வந்தது ஆகியவற்றால் டாலரின் நிலைமை மேலும் வலுப்பெற்றது.
- சமீபகாலமாக டாலர் சில பிரச்னைகளை எதிர்கொள்கிறது. அதற்கு மாற்று தேடுகின்றன பல நாடுகள். குறிப்பாக, ஈரான், ரஷியா ஆகியவற்றின் மீது பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்ததைத் தொடர்ந்து, வர்த்தகத்துக்கு மாற்று வழிகளை அந்த நாடுகள் தேடத் தொடங்கியிருக்கின்றன.
- 2022}இல் டாலரில் முதலீடு செய்திருந்த ரஷியாவின் சொத்துகள் அனைத்தையும் அமெரிக்கா முடக்கியது. உக்ரைன் போரைத் தொடர்ந்து, அமெரிக்கா எடுத்த அந்த முடிவால் ஏனைய பல நாடுகளும் நிமிர்ந்து உட்கார்ந்தன. டாலரில் செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பானவை அல்ல என்கிற அச்சம் எல்லா நாடுகளுக்கும் உருவாகியிருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் முதலீடு என்று அவை தங்கத்தை அடையாளம் காணத் தொடங்கியிருக்கின்றன.
- உலகத் தங்கக் குழுமம், சர்வதேச மத்திய வங்கி ஆகியவை ஆண்டுதோறும் சராசரியாக 500 டன் தங்கம் வாங்குவது வழக்கம். 2022}இல் அது ஆயிரம் டன்னாக அதிகரித்தது. 2023}இலும் அதே நிலைமை தொடர்ந்தது. இந்த அதிகரிப்பும்கூட கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை கூடி வருவதற்கு காரணம்.
- பாரம்பரியமாகவே விலைவாசிக்கு பாதுகாப்பாகத் தங்கம் இருந்துவருகிறது. விலைவாசி அதிகரிக்கும்போது, அதற்கேற்ப தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் என்பதால் அதில் மக்கள் நம்பி முதலீடு செய்கின்றனர். பங்குச் சந்தை உள்ளிட்ட ஏனைய முதலீடுகள் விலைவாசி அதிகரிக்கும்போது, மதிப்பு குறைவது வழக்கம் என்பதால் தங்கம் வழங்கும் பாதுகாப்பை வேறு எந்த ஒரு முதலீடும் வழங்குவது இல்லை.
- முதலீடாகத் தங்கத்தின் தேவை பொதுவாகவே இருந்தாலும் கூட அதன் மிக அதிகமான பயன்பாடு நுகர்வோர் விரும்பும் ஆபரணங்கள்தான். மொத்தத் தங்கக் கேட்பில் பாதிக்குப் பாதி ஆபரணத்துக்காகப் பயன்படுத்தப்படும் தங்கம் என்று தெரிகிறது.
- இந்தியாவும் சீனாவும்தான் மிக அதிகமாக ஆபரணத்துக்காகத் தங்கம் பயன்படுத்தும் நாடுகள். சீனாவில் வசதி படைத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவிலும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதற்கு சீனாவிலும், இந்தியாவிலும் இருக்கும் பணக்காரர்கள்தான் முக்கிய காரணம் என்றும் அவர்கள் ஆபரணங்களாகவும், தங்கக் கட்டிகளாகவும் சேமித்து வைக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- அரசு ஆணைகளின் மூலமும், ரிசர்வ் வங்கியின் தேவைக்காகவும் செலாவணிகளை அச்சடித்துவிடலாம். அவற்றின் மதிப்பு நிரந்தரமானது அல்ல. அதனால்தான் தங்கத்துக்கான கேட்பும் விலையும் குறைவது இல்லை. தங்கம் தங்கம்தான். அதற்கு நிகர் வேறு ஒன்றும் இல்லை!
நன்றி: தினமணி (05 – 04 – 2024)