- சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் தடகளத்தில் ஒருவரும் பதக்கம் வென்றதில்லை என்கிற குறையை டோக்கியோ ஒலிம்பிக்கில் போக்கிய நீரஜ் சோப்ரா, மீண்டும் ஒரு பெருமையை இந்தியாவுக்குத் தேடித் தந்திருக்கிறார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியர்கள் தங்கம் வென்றதில்லை என்கிற பெருங்குறையையும் அவர் நீக்கியிருக்கிறார்.
- ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். அரங்கில் பதக்கம் பெறுவதற்காக நீரஜ் சோப்ரா தலைகுனிந்தபோது தேசமே தலை நிமிர்ந்தது.
தங்க மகன்
- உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம், தடகளத்தின் தங்க மகனாக அவர் மாறியிருக்கிறார். சர்வதேசத் தடகளத் தொடர்களில் தொடர்ந்து தங்கம் வென்றதன் மூலம் அது சாத்தியமாகியிருக்கிறது.
- 2016 தெற்காசிய விளையாட்டில் தங்கம், 2017 ஆசிய விளையாட்டில் தங்கம், 2018 காமன்வெல்த்தில் தங்கம், 2018 ஆசிய விளையாட்டில் தங்கம், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், 2022 டைமண்ட் லீக் தொடரில் தங்கம், 2022 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, 2023இல் தங்கம் எனப் பதக்கங்கள் அவருடைய கழுத்தை அலங்கரிக்கின்றன.
- சர்வதேச தடகளக் களத்தில் எந்தவொரு இந்திய வீரரும் இதுவரை தொடாத உயரம் இது. கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டிகளில் முதல் மூன்று இடங்களுக்குள் நிறைவு செய்து உறுதியான வீரராக நீரஜ் உருவெடுத்திருக்கிறார். தற்போதைய வெற்றியின் மூலம் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் நீரஜ் தகுதி பெற்றுள்ளார். உலகத் தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதி நாளில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றிவாகை சூடிய நீரஜ், இந்தியக் கொடியை ஏந்தியபடி அரங்கைச் சுற்றி வந்தார்.
- உலகமே அவரை உற்றுநோக்கிய அந்தத் தருணத்தில், தொலைவில் நின்றுகொண்டிருந்த வெள்ளிப் பதக்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நடீமை அழைத்து வெற்றியை அவரோடு சேர்ந்துக் கொண்டாடினார். அவரும் கொண்டாட்டத்தில் இணைந்துகொண்டார். போட்டியில் 88.17 மீட்டர் தொலைவுக்கு நீரஜ் ஈட்டியை எறிந்திருந்தார். அர்ஷத் 87.82 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்திருந்தார். எல்லைகள் கடந்து அன்பையும் சகோதரத்துவத்தையும் நீரஜ் வெளிப்படுத்துவது இது முதல் முறையல்ல.
தனி ஒருவன்
- இன்றைய நிலையில் இந்திய விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் அவர், விளையாட்டை வெறும் போட்டியாக மட்டும் பார்க்காமல், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சக வீரர்களுக்காகவும் குரல் எழுப்பியிருக்கிறார். பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிராக நாட்டின் தலைநகர் டெல்லியில் போராடியதை எளிதில் மறந்துவிட முடியாது. சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இந்தப் போராட்டத்துக்கு ஆதரவுக் குரல் தந்த இந்திய விளையாட்டு வீரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
- இதில் முதன்மையானவர் நீரஜ். “நமது வீரர், வீராங்கனைகள் நியாயத்துக்காக வீதியில் இறங்கிப் போராடுவது என்னைக் காயப்படுத்துகிறது. இனி இதுபோன்ற சம்பவம் நடக்கவே கூடாது. நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ட்வீட்டியிருந்தார். நீரஜின் இந்த ஆதங்கம் அதிகாரிகளை அசைத்துப்பார்க்காவிட்டாலும், அவரை முன்மாதிரியாகக் கொண்ட பல இளம் வீரர்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாகவும் அமைந்தது.
- 2023 உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிப் போட்டிக்கு மூன்று இந்தியர்கள் தகுதி பெற்றிருந்தனர். நீரஜ் மட்டுமல்லாமல் கிஷோர் குமார், டி.பி மனு ஆகியோரும் இதில் அடக்கம். சக நாட்டவர்களாக இருந்தாலும் போட்டியாளர்தானே என நீரஜ் நினைத்திருக்கவில்லை. ஹங்கேரி செல்வதற்கான விசா பெறுவதில் கிஷோர் குமாருக்குச் சிக்கல் ஏற்பட்டபோது தாமாக முன்வந்து உதவினார் நீரஜ்.
- தனது ட்வீட்டின் மூலம் இப்பிரச்சினையை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்ற அவர், கிஷோர் குமாருக்கு விசா கிடைக்க வழிவகுத்தார். விளையாட்டைத் தாண்டிய நல்லிணக்கத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் நீரஜ் இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்மாதிரி.
நன்றி: இந்து தமிழ் திசை (01– 09 – 2023)