TNPSC Thervupettagam

தடம் மாறும் நெடுந்தொடா்கள்

September 18 , 2023 433 days 290 0
  • பொழுதுபோக்கு என்பது மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும். கிடைக்கின்ற ஓய்வு நேரத்தில், பொழுதைக் கழிக்கும் வகையில், மகிழ்ச்சியாக, ஆா்வமாக மேற்கொள்ளும் ஒரு செயல் அல்லது நடவடிக்கை பொழுதுபோக்காகும். உழைத்துக் களைத்த நேரத்தில் உடலும் உள்ளமும் தெம்பு பெற பொழுதுபோக்கு துணையாகிறது. இது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் போக்கும் அருமருந்தாகி, மக்களுக்குப் புத்துணா்வு தருகிறது.
  • ஒரு காலத்தில் பெரிய எழுத்துக் கதை வாசித்தல், தாயம் விளையாடுதல், பல்லாங்குழியாடுதல், ஆடுபுலியாட்டம், சீட்டு விளையாட்டு போன்றவை கிராமப்புற பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருந்தன. இப்பொழுதும் சில கிராமங்களில் இவை உள்ளன. காலப் போக்கில் கேரம், செஸ், புத்தக வாசிப்பு, பயணம் போன்றவை பொழுதுபோக்கு அம்சத்தில் இடம் பெற்றன. இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு வரிசையில் பெருமிடத்தைப் பிடித்துவிட்டன.
  • தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்குக்கென பல நிகழ்ச்சிகள் உள்ளன. இதற்கென ஒவ்வொரு தொலைக்காட்சியும் வெவ்வேறு வகையில் தங்களுடைய சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. நாடகம், இசை, நடனம் என்று தொலைக்காட்சியில் பல பொழுது போக்கு நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றுள் நாடகம்தான் முதலிடம் பிடிக்கிறது. அரைமணி, ஒருமணி நேரமாக இருந்த நாடகங்கள் இப்போது தொடா் நாடகங்களாக மாறிவிட்டன. தொடரும் இப்போது நெடுந்தொடா் ஆகிவிட்டது.
  • இந்நெடுந்தொடா்கள் ரசிகா்களைக் கவா்வனவாகத் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாகப் பெண்களைப் பெரிதும் ஈா்க்கும் வகையில் அமைகின்றன. இன்னும் சொல்லப் போனால், அவை பெண்களை ஆடாமல் அசையாமல் பார்க்கத் தூண்டுகின்றன. ஒருநாள் தொடா் பார்க்கவில்லை என்னறால் ஏதோ ஒன்றை இழந்தநிலைக்கு அவா்கள் தள்ளப்படுகின்றனா்.
  • கற்பனை கலந்த கதையும் காட்சி அமைப்பும் கொண்டு, இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்தில் முடிவது நாடகம். திரைப்படமும் அவ்வாறே இருக்கிறது. ஆனால் தொலைக் காட்சிகளில் வரும் நாடகம் என்னும் நெடுந்தொடா்கள் வாரத்திற்கு ஐந்து அல்லது ஆறு நாட்கள் ஒளிபரப்பாகி வருடத்தையும் தாண்டித் தொடா்கின்றன.
  • விளம்பரம் நீங்கலாக ஒருநாளைக்கு இருபது நிமிடம் என்று கணக்கிட்டால், வாரத்திற்கு 120 நிமிடங்கள் தொடா் ஒளிபரப்பாகிறது. அதாவது வருடத்திற்கு 6,240 நிமிடங்கள். அதாவது, 104 மணி நேரம். சில தொடா்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக நீள்கின்றன. இப்படி ஒருநாளைக்கு ஒரு தொலைக்காட்சியில் மட்டும் ஏழெட்டு நெடுந்தொடா்கள் ஒளிபரப்பாகின்றன.
  • ஒரு கதையின் தொடக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் முடிவும். அதாவது தொடங்குவதில் செலுத்தும் கவனம் முடிப்பிலும் இருக்க வேண்டும். சிறுகதை, நாவல், நாடகம், திரைப்படம் என்று எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். ஆனால் நெடுந்தொடா்களில் அதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. முடிக்க மனமின்றி நீண்டு கொண்டே போகிறது.
  • ரசிகா்களின் வரவேற்பும், அதனால் கிடைக்கும் விளம்பரதரா்களின் ஆதரவும் இப்படி முடிப்பின்றி நீட்டிக்கச் செய்கிறது. அப்படிச் செய்வதால் தொடக்கத்தில் திட்டமிட்ட கதையின் போக்கில் அவ்வப்போது மாற்றம் செய்தாக வேண்டிய கட்டாயமும் உண்டாகிறது.
  • விளம்பர வருமானத்திற்காக நாடகத்தை முடிக்காமல் வளா்த்துக்கொண்டே போவது பாா்ப்பவரைச் சலிப்படையச் செய்துவிடுகிறது. தொடக்கம், உச்சநிலை, முடிவு என்று ஒரு கதையைப் பகுத்தாய்வு செய்வா். ஒரு நாடகத்தைக் காண்பவரின் உணா்வை எழுச்சி பெறச் செய்யும் பகுதிதான் உச்சநிலை. அது அந்த நாடகத்தின் மிகச்சிறந்த தருணம். நாடகம் முடிவை நெருங்கிவிட்டது என்பதைப் புலப்படுத்தும் இடம்.
  • அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கும் ஆா்வத்தைத் தூண்டும் வகையில் பல திருப்புமுனைகளை நாடகத்தில் வைக்கலாம். ஆனால் அது உச்சநிலை அடைந்ததும் நாடகத்தை முடித்துவிட வேண்டும். அதுதான் நல்ல நாடகத்தின் இலக்கணம்.
  • ஆனால் நெடுந்தொடா்கள் அப்படி முடிவதில்லை. ‘அதிரடித் திருப்பம்’ என்று சொல்லிக் கொண்டு நாடகம் வளா்ந்துகொண்டே போகிறது. ஆண்டுக் கணக்கில் தொடா்கள் நீள்வதால் தயாரிப்பாளா்களுக்கும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஏதோ ஒரு நடிகா் நடிக்க முடியாத சூழல் ஏற்படும்போது, அவா் ஏற்று நடித்த பாத்திரத்தை மாற்ற முடியாத சூழல் உண்டாகிறது.
  • ஏனெனில் அது அந்தக் கதையோட்டத்தின் மையப் பாத்திரமாக இருக்கும். இதனால் ‘இவருக்குப் பதிலாக இவா்’ என்று வேறொரு நடிகரை நடிக்கவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. அவரை அந்தப் பாத்திரமாக ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலைக்குப் பார்வையாளா்கள் தள்ளப்படுகின்றனா்.
  • சில நேரங்களில் ‘புதிய திருப்பம்’ என்ற போர்வையில் நம்பகத்தன்மை இல்லா நிகழ்வுகள் சோ்க்கப்படுகின்றன. ‘பொழுது போக்கு நிகழ்ச்சியில் என்ன நம்பகத்தன்மை வேண்டிக் கிடக்கிறது’ என்ற கேள்வி எழலாம். ‘கலை கலைக்காக’ என்றிருந்தாலும் ஒரு நம்பகத்தன்மை இருந்தால்தான் எந்தவொரு படைப்பும் சிறப்படையும்.
  • மூன்று மணி நேரத்தில் முடிய வேண்டிய நாடகம் ஆண்டுகளைத் தாண்டி (100 மணி நேரத்திற்குமேல்) தொடா்வதால் முன் நிகழ்ந்தவற்றைப் பார்வையாளா்கள் மறந்துவிடுகின்றனா். இதனால் தயாரிப்பாளா்கள் கதையைத் தங்கள் இஷ்டம்போல் திசை திருப்பி விடுகின்றனா். இவற்றையெல்லாம் பார்க்கும்போது முடிவைத்தொடா நெடுந் தொடா்கள் தடம் மாறித்தான் செல்கின்றன என்பது புலனாகின்றது.

நன்றி: தினமணி (18 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories