TNPSC Thervupettagam

தடுப்பூசி வரும்வரை...

May 21 , 2024 230 days 190 0
  • பொதுவாக பருவமழைக் காலத்தின்போதும், அதன் பின்னரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படும். ஆனால், தமிழகத்தில் நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன்னரே டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், மதுரை, அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
  • ‘ஏடிஸ் எஜிப்டி' வகை கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. ‘ஃபிளாவிவைரஸ் நோய்க்கிருமியை' கொண்டிருக்கும் ஏடிஸ் வகை கொசுக்கள் கடிக்கும்போது மனிதர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. டெங்கு பாதிப்பு கொண்ட மனிதர்களைக் கடிக்கும் கொசுக்கள், பிற மனிதர்களைக் கடிக்கும்போது அவர்களுக்கும் பாதிப்பு பரவுகிறது.
  • பருவநிலை மாற்றம், நகரமயமாக்கல், திட்டமிடப்படாத திடக்கழிவு மேலாண்மை, நகர்ப்புற கட்டுமானப் பணிகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அனைத்துப் பருவங்களிலும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மே, ஜூன் மாதங்களில் டெங்கு பாதிப்புகள் மிகக் குறைவாக இருப்பதும், பருவமழை தொடங்கிய பின்னர் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பதும் தரவுகள் தெரிவிக்கும் செய்தி.
  • மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் 2021-ஆம் ஆண்டில் 1.93 லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 346 பேர் உயிரிழந்தனர். 2022-இல் பாதிப்பு 1.33 லட்சமாக குறைந்தது. 303 பேர் உயிரிழந்தனர். 2023-இல் 94,198 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 91 பேர் உயிரிழந்தனர். 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பாதிப்பு பாதியாக குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
  • தமிழக சுகாதாரத் துறை தகவலின்படி மாநிலத்தில் 2023-ஆம் ஆண்டு 8,953 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். நிகழாண்டு மே வரையிலேயே சுமார் 4,000 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக கடந்த ஜனவரியில் சுமார் 1,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
  • தற்போது டெங்கு பாதிப்பு அதிகரிப்பைத் தொடர்ந்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது. காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடுவோரின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும்; டெங்கு உறுதி செய்யப்பட்டால் அதுதொடர்பான தகவல்களை சுகாதாரத் தளத்தில் பதிவேற்ற வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து டெங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்; கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை முன்னெடுக்க வேண்டும்; குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிப்பதையும், குழாய் நீர்க் கசிவைக் கண்காணிப்பதும் அவசியம்; ரத்த வங்கிகளில் போதிய எண்ணிக்கையில் ரத்த அலகுகள் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை வழங்கியுள்ளது.
  • அரசுத் தரப்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது ஒருபுறம் இருந்தாலும், டெங்கு பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு பொதுமக்களிடம் இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமாகிவிடுகின்றனர். உடனடியாக மருத்துவரை அணுகாமல் சுய மருத்துவம் செய்துகொள்வது, பாதிப்பின் தீவிரத்தை அறியாமல் இருப்பது போன்றவைதான் உடல்நல பாதிப்பில் சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது; சில நேரங்களில் மரணத்தையும் விளைவிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
  • அதிக காய்ச்சல், கடும் தலைவலி, கண்களுக்குப் பின்புறத்தில் வலி, மூட்டு வலி, வாந்தி, தோல் தடிப்புகள் போன்றவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
  • குழந்தைகள், இளம் வயதினருக்கு போதிய அளவிலான அறிகுறிகள் தெரிவதில்லை. அதனால், சாதாரண காய்ச்சல் அல்லது வைரஸ் தொற்று எனத் தவறாகப் புரிந்துகொண்டு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்துவிடக் கூடாது.
  • தேங்கி நிற்கும் மழைநீர் ஏடிஸ் வகை கொசுக்களின் முக்கிய உற்பத்தி கேந்திரமாக கூறப்படுகிறது. வீடுகளில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், தூக்கி வீசப்படும் குடிநீர் பாக்கெட்டுகளில் தேங்கியிருக்கும் தண்ணீரிலும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகின்றன. ஆதலால், வீடுகளிலும், வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • வீடுகளில் இருக்கும்போதும், வெளியில் செல்லும்போதும் உடலை நன்கு மூடும் ஆடைகளை அணிந்து செல்வதன் மூலம் கொசுக் கடியிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். தூங்கும்போது கொசு வலை, கொசு விரட்டிகளைப் பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். குறிப்பாக, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
  • உலகில் டெங்கு பாதிப்புக்கு என இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான ஆராய்ச்சிகளில் மருந்து நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 2026-ஆம் ஆண்டு வாக்கில் டெங்கு தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை வருமுன் காப்பதே சிறந்தது...

நன்றி: தினமணி (21 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories